LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Monday, May 31, 2021

கண்காட்சிப்புத்தகங்கள் - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 கண்காட்சிப்புத்தகங்கள்

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)
புத்தகங்களை வாங்குகிறவர்கள் எல்லோருமே படிக்கிறார்களா….
முதலிலிருந்து கடைசிவரை படிப்பார்களா…….
முதல் இடை கடைப் பக்கங்களில் அங்குமிங்குமாய்
சில பக்கங்கள் படிப்பவர்கள் _
மூடிய புத்தகம் மூடியேயிருக்கும்படி
அலமாரியில் பத்திரப்படுத்திவிடுபவர்கள் _
எல்லோரும் வாசகர்கள் தானே
என்றெண்ணி அமைதிகொள்ளுமோ புத்தகங்கள்….
சாலையோரம் நின்றுகொண்டிருக்கும் தேரனைய காரில் சாய்ந்து
தன்னை கோடீஸ்வரனாகக் காண்போர், காண்பிப்போர்
எங்கும் உண்டுதானே?
இருள்நிழல் படர்ந்த ஒதுக்குப்புறத்திற்காகவே கோயிலுக்குச் செல்லும் காதலர்களைப்போல
எந்தக் கண்காட்சியிலும் நுழைபவர் உண்டுதானே.
காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் நூல்களை பார்த்தபடியே
காலார நடக்கவும்
காண்டீனில் காப்பி குடிக்கவும்
நாலாறு பேர்களைப் பார்த்து நன்றி பகரவும்
நமுட்டுச் சிரிப்பு சிரிக்கவும்
வெளியாகும் நூலுக்காய் ஆசிரியர் பெருமைப்படவும்
ஆசிரியல்லாத சிலர் பொறாமைப்படவும்
அதற்கும் இதற்கும் எதற்குமாக……
பத்தரைமாற்றுத்தங்கமெனக் கூசாமல் பித்தளையைப் பேசி
நுழைவாயிலில் திரைநாயகர்களுக்கு ஈடாக ’கட் அவுட்’கள் காணக்கிடைக்கும்...
புத்தகக்கண்காட்சிக்கு
அழையாத விருந்தாளியாக வருகைதரும்
அரும்படைப்பாளிகளும் உண்டு!
இயற்கையழகே மேல் எனப் பேசி
உதட்டுக்கும் கன்னங்களுக்கும் கவனமாக சாயம் பூசி
பவனி வரும் சிற்றிதழ்ப் பெரும்படைப்பாளிகளும் உண்டு.
புத்தகங்களால் வளரும் அறிவு விவரமானதும்
வைரஸ் போன்றதும்……
புத்தகங்களை அடையாள அட்டைகளாக்க எத்தனையெத்தனை அட்டைக்கத்திகளால்
போர்வியூகங்கள் அமைக்கப்படுகின்றன .இந்தத்
தாற்காலிக சாம்ராஜ்யத்தில்…..
பல நூல்களின் ஆழம் அதை வெளியிடும் அரசியல்வாதிகளால்
திரைக்கலைஞர்களால் அளந்துதரப்படுகின்றன
அவர்கள் அந்தப் புத்தகங்களைப் படித்திருப்பார்களா
என்ற கேள்வி கேட்கப்படலாகாததாய், பதிலுக்கப்பாற்பட்டதாய்
அந்தரத்தில் அலைந்துகொண்டிருக்கிறது….
ஆத்மார்த்தமாய் புத்தகங்களை நேசிக்குமொரு ஏழை வாசகர்
வாசிக்க விரும்பும் புத்தக விலை
விவாகரத்து கோரும் அன்பு மனைவியின் நினைவுத்துயரமாக
நண்பனின் ‘காணாமல் போன பக்கங்கள்’ பெயரிலான 21ம் என்ணிட்ட அரங்கில்
தன் புத்தகம் அடுக்கில் வைக்கப்படாமல்
பெஞ்சின் கீழ் ஒடுங்கிக் கிடப்பதைப் பார்த்து
ஒரு இளம் படைப்பாளியின் கண்ணில் துளிர்க்கும் நீர்
காற்றில் கரைந்து போகும்;
கூடவே அவன் கைவசமிருந்த துளி நம்பிக்கையும்.
அரங்கில் வந்திருக்கும் பார்வையாளரிடம்
‘இவர் தான் ஆசிரியர், இவருடைய புத்தகங்கள் இதோ இருக்கின்றன”
என்று அரங்குவைத்திருப்பவர் சொல்வதைக் கேட்கும்போதே
அங்கிருக்கும் நூலாசிரியர் பிச்சைக்காரராக உணரத்தொடங்கிவிட
அதைக் கேட்டும் கேளாதவாறு
அந்தப் பார்வையாளர்கள் நகரும்போது
நிச்சயமாகத் திருவோட்டின் பாரம் அவர் அடிமனதில் இறங்கிவிடுகிறது.
ஆனாலும் அரங்கின் நுழைவாயிலில் ஆறேழு பேர் நின்று உன்னிப்பாய்க் கேட்க
தன் கவிதையை மனமொன்றி வாசிக்கும் நேரம்
ஒரு கவி மனதில் அந்த ஒவ்வொருவரும் ஒரு நூறாயிரம் பேராய்
பல்கிப் பெருகுவதையும் அண்டசராசரமெங்கும் அவருடைய கவிதை வரிகள்
அதிர்வுகளை உண்டாக்கி ரீங்கரிப்பதையும்
இல்லையென்றாக்க இங்கே யாரால் முடியும்!
எப்படியிருந்தாலும் _
புத்தகக் கண்காட்சிக்குச் செல்கிறவர்கள் எல்லோரும் புத்தகங்களுக்காகப் போகிறார்கள் என்பதை
புத்தகங்களே நம்புவதில்லை.
’பருவம் வந்த அனைவருமே காதலிப்பதில்லை’ என்னும் சந்திரபாபுவின் குரல்
இந்த இடத்தில் பொருத்தமாக இருக்குமா, அல்லது அபசுரமாக ஒலிக்குமா?
சரியாகத் தெரியவில்லை.

No comments:

Post a Comment