அடியாழம்
‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)
உண்மை சுடும் என்றார்கள்
உண்மை மட்டுமா என்று உள் கேட்டது
உயர உயரப் பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகுமா
என்றார்கள்
எதற்கு ஆக வேண்டும் என்று உள் கேட்டது.
ஊரோடு ஒத்துவாழ் என்றார்கள்
யாரோடுமா – அது எப்படி என்று உள் கேட்டது.
காரும் தேரும் வேறு வேறு என்றார்கள்
நான் சொன்னேனா ஒன்றேயென்று
என்று உள் கேட்டது.
மௌனம் சம்மதம் என்றார்கள்
உனக்கா எனக்கா என்று உள் கேட்டது.
முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்றார்கள்.
முற்பகல் செய்தா பிற்பகல் விளைகிறது என்று உள் கேட்டது.
தர்க்கம் குதர்க்கம் என சொற்கள் சரமாரியாக சீறிப்பாய
அர்த்தம் அனர்த்தத்தை
அசைபோட்டபடி
உறக்கத்தில் ஆழத் தொடங்கியது உள்.
No comments:
Post a Comment