LIFE GOES ON.....

LIFE GOES ON.....
Showing posts with label ரிஷி(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள். Show all posts
Showing posts with label ரிஷி(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள். Show all posts

Thursday, June 9, 2022

PEEPING TOMகளும் பூமிஜா(சீதா)ப் பிராட்டியும் - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 PEEPING TOMகளும்

பூமிஜா(சீதா)ப் பிராட்டியும்

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)


இரவுபகலாய் இடையறாப் பட்டிமன்றங்கள் நடந்துகொண்டிருக்கின்றன.
ஐந்து நட்சத்திர விடுதிகளின் அகன்ற கூடங்களில் ஒன்றில்
ஆரண்யமாய் ஆங்காங்கே ‘பேப்பர் மஷாய்’ மரங்கள் நட்டுக் கட்டமைக்கப்பட்ட அரங்கொன்றில்
ஆன்றோரென அறியப்பட்டோர் அவைகளில்
அடுக்குமாடிக்கட்டிடத்தின் மொட்டைமாடிப் பந்தலில்
இலக்கியப் பெருமான்களுக்கிடையே
இணையவழிகளில் _
இன்னும்
ஆர்ட்டிக் அண்டார்ட்டிக் துருவப் பிரதேசங்களிலும்
புவியின் தென் அரைக்கோளப்பிரதேசங்களின்
பெங்குவின்களைப் பார்வையாளர்களாகக் கொண்டும்
‘சீதை இராவணனோடு உறவுகொண்டாளா?
கொண்டாள்!
கொண்டாளே !!
கைத்தட்டல் விண்ணைப் பிளந்தது
[அது பதிவு செய்யப்பட்ட கைத்தட்டல் என்பது
பாவம் நிறைய பேருக்குத் தெரியாது]
தன்மானத்திற்கு இழுக்கு என்றானபோது
காதலித்த ராமனையே உதறிவிட்டுச்சென்றவள்
கடத்தியவனையா வரிப்பாள்?
விஜய் Zee Sun இன்னும் நான் பார்க்காத சேனல்களின்
மெகாத்தொடர்களில்
நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய்
மாமியார் நாத்தனார், முதலாளி தொழிலாளி
மூத்த அண்ணன் இளைய அண்ணன்
வில்லியும் நல்லவளும்
ஐந்து வயதுச் சிறுமியும்
அடுத்த நாள் பிறக்கப்போகும் குறைப்பிரசவக் குழந்தையும்
மாறி மாறிச் செய்யும்
வகைவகையான சத்தியங்கள்
சடங்குகள் குறிபார்த்தல், சகுனம் பார்த்தல்
இத்தியாதிகளுக்கிடையிலிருந்து ஒரு பூக்குழியைத்
தேர்ந்தெடுத்து
கோயில் வாசலில் பரத்தி
அதில் நடந்து தன் பத்தினித்தனத்தை
நிரூபிக்கச் சொல்லும்
மெத்தப் படித்தவர்கள் மிட்டா மிராசுதாரர்கள்
மெகாத்தொடர் மாண்பாளர்களை
மெல்ல ஒரு பார்வை பார்த்து
மேலே நடக்கிறாள் பூமிஜா.
மனம்நிறை மணாளனுக்கு நிரூபிக்கவோ
மக்களுக்குப் புரியவைக்கவோ
-ஒரு முறை நெருப்பில் இறங்கி
மீண்டாயிற்று…..
முறைவைத்து மனம்பிளந்து பார்த்தவர்களாய்
மறுபடி மறுபடி
கடத்தியவனை மருவியவளாய்க்
காட்ட முனையும் குணக்கேடர்களுக்காய்
அவள் வனத்தில் தீ மூட்டினால்
அது தன்னை மட்டுமல்லாமல்
அன்னை நெருப்பையே அவமதிப்பதாகும்.
அவள் அறிவாள்தானே?
அடுத்த விளம்பரதாரர் யார் மாட்டுவார் என்று
ஆலோசித்தபடி
அய்யனார் சிலையின் காலடியில்
வில்லனும் நல்லவனும் சேர்ந்து
மெகாத்தொடர் கதாபாத்திரங்களில் ஒருவரை
(குத்துமதிப்பாக அந்தத் தங்கையாக இருக்கலாம்
அல்லது தாத்தாவாக இருக்கலாம்)
கொலைசெய்வது குறித்து காரசாரமாக
கீழ்ஸ்தாயியில் வாக்குவாதம் நடத்திக்கொண்டிருக்கும்
அரைத்தமாவுக் காட்சிகளைக்
கச்சிதமாய் வழித்தெடுத்துமுடித்துவிட்டு
வெளியேறும்போது படக்குழுவினர்
கன்னத்தில் போட்டுக்கொண்டபடி
அல்லது கிண்டலாய்ச் சிரித்தபடி
'பொறுப்புத்துறப்பு' என்ற நொறுக்குத்தீனியை
சுவைக்கத்தொடங்கியதைக் கண்டு
துன்பம் வரும் வேளையிலே சிரிக்கப் பழகியவளாய்
புன்னகைக்கிறாள் பூமிஜா.


Tuesday, January 25, 2022

கவிதையாதல் - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

  கவிதையாதல்

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)


நாடுமல்ல காடுமல்ல நான் கவிதை
யென்றது;
நரி காகம் கதையல்ல நான் கவிதை
யென்றது;
நான்குவரித் துணுக்கல்ல நான் கவிதை
யென்றது;
நீள நீள மறுமொழியல்ல நான் கவிதை
யென்றது;
நிறையக் கேட்டுவிட்ட தத்துவமல்ல நான் கவிதை யென்றது;
நான்குமறைத் தீர்ப்பல்ல நான் கவிதை யென்றது;
நான்கு பழமொழிகளின் திரட்டல்ல நான்
கவிதை யென்றது;
நச்சென்ற எதிர்வினையல்ல நான் கவிதை யென்றது;
நாக்கால் மூக்கைத் தொடுவதல்ல நான் கவிதை
யென்றது;
நாய்வால் நிமிர்த்தலல்ல நான் கவிதை யென்றது;
நன்றியுணர்வோ நபும்சகமோ அல்ல நான் கவிதை யென்றது;
நகையின் இருபொருளுணர்த்தலல்ல நான் கவிதை யென்றது
நல்முத்துமணியணிக்கோலமல்ல நான் கவிதை
யென்றது
நவரத்தின மயிற்பீலியல்ல நான் கவிதை
யென்றது
நட்சத்திரங்களின் எண்ணிக்கையல்ல நான் கவிதை யென்றது
நிலவின் துண்டங்களல்ல நான் கவிதை யென்றது
நல்லது நல்லது சொல் சொல் இன்னும் சொல்
என்றதற்கு
’ந’விலேயே வரிகளெல்லாம் தொடங்குவதல்ல கவிதை யென்றது சொல்லிச் சென்றது.
நாணித் தலைகுனிந்தென் கவிதை (நற்)கதி யிழந்து நின்றது.

நீளாதிநீளங்களும் நீக்குபோக்குகளும் ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 நீளாதிநீளங்களும் நீக்குபோக்குகளும்

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)
இதுவரை எழுதப்பட்ட சிறுகதைகளிலேயே
மிகவும் நீளமானது எழுதப்பட்டிருப்பதாக
புதிய மோஸ்தரில் விளம்பரம் தரப்பட்டிருந்தது.
சிலர் மர ஸ்கேலை எடுத்துக்கொண்டனர்
சிலர் இரும்பு ஸ்கேலை எடுத்துக்கொண்டனர்.
சிலர் ‘இஞ்ச் டேப் எடுத்துக்கொண்டார்கள்
சிலர் கையால் முழம்போட முடிவுசெய்தார்கள்.
ஆளாளுக்கு ஒரு அளவுகோலை எடுத்துக் கொண்ட பின்
அதி கவனமாக அளந்தார்கள் அந்த ஒரேயொரு கதையைத்
திரும்பத்திரும்ப.
அவர்களுடைய அளவுகோல்கள் காட்டும்
வேறுபட்ட அளவுகளை
அவற்றின் வித்தியாசங்களை
அளவுகோல்களின் அளக்குங் கைகளின்
வேறுபட்ட நீளங்களை
ஆக்ரோஷமாய் அதி துல்லியமாய்
ஆங்காங்கே அடைமொழிகளோடும்
மேற்கோள்களோடும்
அழுத்தமாய்ச் சுட்டிக்காட்டியவாறிருந்தார்கள்.
ஸ்கேலும் இஞ்சுடேப்பும் ஸ்டேஷனரி கடைகளில்
அமோக விற்பனையாக
அலங்காரப் பொருளாகவோ ஆய்வுக்கான கருப் பொருளாகவோ
அந்தஸ்துக்கான ஆஸ்தியாகவோ பந்தோபஸ்துக் கான முன்னேற்பாடாகவோ
முகக் கவசமாகவோ மார்பில் பூணும் கேடயமாகவோ
மண்டைக்குப் பின்னாலான ஒளிவட்டமாகவோ
அந்தக் கதை குறித்த கட்டுரை யெழுத
அதியதிவேகமாக விலைகொடுத்து
வாங்கிக்கொண்டிருப்பவர்களின்
வாதப்பிரதிவாதங்களில் _
காலம் எழுதிய கதைகளையெல்லாம்
ஒன்றுவிடாமல் படித்தவர் யாரென்ற விவரமும்
காலத்தினாற் செய்யப்பட்ட அதி நீளக் கதை
யெதுவென்ற விவரமும்
கதை யென்ற ஒன்றுண்டு என்ற விவரமும்
வெகு நேரத்திற்கு முன்பே
காணாமல் போயிருந்தன.

அழகென்ப….. ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 அழகென்ப…..

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)
பார்க்கும் கண்களில் பாய்ந்திறங்கிப்
பதுங்கிக்கொள்ளும் அழகு
போகப்போக அசிங்கமாக
அதிசயமாக
ஆனந்தமாக
ஆக்கங்கெட்டதாக
ஆயிரமாயிரம் PERMUTATIONS AND COMBINATIONS இல்
அன்றாடம்
கலங்கித் தெளிந்துகொண்டிருக்கும்
காணும் கண்கள்
காலத்தின் கைகளாக......

அவரவர் முதுகு ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 அவரவர் முதுகு

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)

தன் முதுகை(த்)தான் பார்த்துக்கொள்ள முடியாதா என்ன?
சிறிய ஆடியொன்றைக் கையில் பிடித்து வாகாய்
முதுகுக்குப்பின் கொண்டுபோகலாம்.
அல்லது பெரிய ஆடியொன்றின் முன்
முதுகைக் காட்டிக்கொண்டு நின்று
கழுத்தை வளைத்துப் பார்க்கலாம்.
இப்போதெல்லாம் நம் அலைபேசியைக் கொண்டு
புகைப்படம் கூட எடுத்துவிட முடியும்.
சின்னத்திரையில் வரும் பெண்கள் அணியும் சட்டைகளில்
என்னமாய்த் தெரிகிறது முக்காலுக்கும் மேலான வெற்று முதுகு!
வீட்டிற்குச் சென்று
மெகாத் தொடரில் தான் நடித்த காட்சியை
மீண்டும் ஓட விட்டு
தன் முதுகை நன்றாகவே பார்த்துக்கொள்ளலாம்.
கைகளுக்கும் கழுத்துக்கும் போடுமளவு
நேர்த்தியாய் மேக்கப்
முதுகுப் பகுதிக்குப் போடப்படுவதேயில்லை.
எப்படியிருந்தாலும், நம் முதுகைப் பார்ப்பதற்கு
கொஞ்சம் பிரயத்தனப்பட வேண்டியிருக்கிறது.
அடுத்தவர் முதுகைப் பார்ப்பதற்கு
அது தேவையில்லை…….
ஆனால் _
முதுகுகள் பெரும்பாலும் மேலாடையால்
மறைக்கப்பட்டிருக்கின்றன.
அம்மணமாயிருந்தாலும் அதன் தோலுமொரு
ஆடையாய்....
இன்னும்
எலும்புக்கூடு, முதுகுத்தண்டு, எத்தனையெத்தனையோ
நரம்பிழைகள்,
ரத்தநாளங்கள், பிசகிய வட்டுகள் ஒன்றிரண்டு.
எண்ண எல்லாருடைய முதுகுகளும் என்னுடையதாய்
என்னுடைய முதுகு எல்லோருடையதுமாய்…
எந்த முதுகைத்தான் முழுமையாகப் பார்க்கமுடிகிறது….
அப்படியே பார்க்கக் கிடைத்தாலும்
அழுக்கு ஒட்டிக்கொண்டிருக்கிறதே என்று தட்டிவிட்டால்
அது என் முதுகும் என் கையுமெனில்
சுளுக்கிக்கொள்ளும் சாத்தியமுண்டு.
என் கையும் இன்னொருவருடைய முதுகுமெனில்
எனக்கு அடிவிழக் கூடும்
என் முதுகும் இன்னொருவருடைய கையுமெனில்
அதுவே இன்னும் பலமாக விழும்…..
எந்தவொரு முதுகிலும் கட்டாயமாய் பதிந்திருக்கும் _
பேயறை அறைந்த பாறாங்கல் கைகள் ஏற்படுத்திய
வலிகள் மட்டுமல்ல
ஏதோவொரு நாளில் வருடிய விரல்களும்,
ஏகாந்தத்தில் பரிவோடு சாய்ந்துகொண்ட தலையின்
சுருள்முடிப்பிரிகளும்கூட.
அடிதாங்கி போலும் தற்காப்புக்கவசம் போலவும்
பிடிமானமாயிருக்கும் திரு முதுகைக் காணக்
கண்கோடி வேண்டுமென்று
இருந்தாற்போலிருந்தொரு பாடல்
உள்ளுக்குள்ளிசைக்க _
அதைக் கேட்டுக் குலுங்கிச் சிரிக்கிறது
அவரவர் அடியாழத்திருக்குமொரு
அடி முடி காணா திரு முதுகு.
.

Monday, November 29, 2021

அண்மையும் சேய்மையும் - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 ண்மையும் சேய்மையும்

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)
இடையிடையே கிளைபிரிந்தாலும்
இந்த வாழ்வை ஒரு நீண்ட பயணமாகவே
பார்த்துப் பழகியிருந்தது
பேதை மனம்.
அதற்கான வழியின் அகலநீளங்களை
அளந்துவிடக்
கைவசம் தயாராக வைத்திருந்தது
எளிய கிலோமீட்டர்களை.
பத்துவருடங்களுக்கு முன்
நற்றவப்பயனாய்
பறவைபோல் வாராவாரம் சிறகுவிரித்துச்
சென்றடைந்த இடங்களும்
சந்தித்த சகபயணிகளும்
இன்று
ஏழு கடல் ஏழு மலை தாண்டியிருப்பதாய்
எட்டிப்போய்விட
தாற்காலிகக் குடியிருப்பாய் நகரும்
ஆட்டோக்கூட்டுக்குள்
பத்திரம் தொலைத்துச் சென்றவாறு
ஆயாசத்தில் அலைக்கழியும்
நேரம்
அறிவுக்குப் புலப்படும்
வயதின் அளக்கமாட்டா
தொலைதூரம்.

குழந்தையின் சச்சதுரக் கப்பல்களும் சூறையாடுங் கடற்கொள்ளைக்காரர்களும் - ரிஷி(லதா ராமகிருஷ்ணன்) -

           குழந்தையின் சச்சதுரக் கப்பல்களும்

சூறையாடுங் கடற்கொள்ளைக்காரர்களும்

 

ரிஷி

(லதா ராமகிருஷ்ணன்)

(28.11.2021 தேதியிட்ட திண்ணை இணைய இதழில் வெளியாகியுள்ளது)

ண்கள் மின்னும் சின்னக்குழந்தை யது

எண்ணிக்கையிலடங்காத வருடங்கள் அதன் வயது.


ச்சதுரங்களாகக் கப்பல்களை வரிகளில் உருவாக்கி

சில பல மனங்களில் கடல்களைக் கிளர்த்தி யது

ஓட்டிக்கொண்டிருந்தபோது

போகிறவர் வருகிறவரெல்லாம் கைப்போன போக்கில்

சின்னதாயும் சிதறுதேங்காயை வீசிப்போட்டுச் 

சிதறடிக்கச் செய்வதாயும்

குட்டிவிட்டுச் செல்வார்கள்.


சிலர் முதுகில் தட்டிக்கொடுக்கும் வீச்சில்

குழந்தையின் சின்ன தேகம் அதிர்வதைப் பார்த்து

அப்படி மகிழ்ந்து சிரிப்பார்கள்.


ரு தேக்கரண்டி நீர் சிற்றெறும்புக்கு நதியா கடலா

எப்படித் தத்தளிக்கிறது….


குழந்தையின் கன்னத்தில் வலிக்கக் கிள்ளுபவர்கள்

அதை எப்போதும் கொஞ்சலென்றே சாதிக்கிறார்கள்.


செல்லமே கொல்லும் வலி தரும்போது

கோப அறை குழந்தைக்குக் உயிர்வலியன்றி வேறென்ன?


குழந்தை பேசுபொருளாகும்,

ட்ரெண்டிங்கில் இடம்பெறும்

ஒருநாள்

அவர்கள் குழந்தையையும் அதன் சச்சதுரக் கப்பல்களையும்

அவை மிதக்கவென அது தன்னந்தனியே எப்போதும்

ஊற்றெடுக்கச் செய்துகொண்டிருக்கும்

சிற்றோடைகளையும்

சமுத்திரங்களையும்

தங்கள் குழுப்பெருமையைக் கொண்டாடுவதற்கான

இன்னொரு இனத்தை இழிவுபடுத்துவதற்கான

கச்சிதமான கருவியாகப் பயன்படுத்த வேண்டி

சொந்தங்கொண்டாடத்தொடங்குவார்கள்.


ப்பொழுதும் அவர்களுடைய இறுக்கமான அணைப்பிலிருந்து

திமிறிக்கொண்டிருக்கும் குழந்தை.

 

Friday, October 22, 2021

துளி பிரளயம் - ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)

 துளி பிரளயம்

ரிஷி
(லதா ராமகிருஷ்ணன்)

திடீர் திடீரெனத் தளும்பும் மனம்...
சில சமயம் லோட்டா நீராய்
சில சமயம் வாளி நீராய்
சில சமயம் தண்ணீர் லாரியாய்
சில சமயம் ஆடிப்பெருக்கு காவிரியாய்
சில சமயம் சமுத்திரமாய்….
ஐஸ்கட்டிக்கடலாய் உறைந்திருக்கும்
நேரமெல்லாம்
அடியாழத்தில் தளும்பக் காத்திருக்கும்
லாவா....

Tuesday, September 14, 2021

அவரவர் அடர்வனம் - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 அவரவர் அடர்வனம்

‘ரிஷி’

(லதா ராமகிருஷ்ணன்)

FORWARD செய்யப்பட்ட மின்னஞ்சலொன்றின் வரவில்

அனுப்பியவரின் நலம் அறிந்து

நிம்மதி யுறும்

மனம்

தனக்கெனப் பிரத்யேகமாயொரு வரியுமற்ற

அதன் வெறுமையில்

வெந்து தணிந்தவாறிருக்கும்

தினம்...

 

  ***