பிரார்த்தனை
‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)
நடுநிசியில் நட்டநடுவீதியில்
தன்னந்தனியாய் நின்றுகொண்டிருக்கும் சின்னஞ்சிறுமி உணரும்
அநாதரவில் அதிபயத்தில்
இருளைத் துளைத்துக்கொண்டு வரும்
மின்மினியின் துளி ஒளி
கருமையைப் பன்மடங்கு அதிகரிப்பதாய்……
முதுகுப்பக்கம் ஏதோ மூச்சுக்காற்று படர
திரும்பிப்பார்த்தால்
அத்தனை உயரமாய் குத்திக்கிழிக்கவரும்
வாட்களனைய நீண்ட தந்தங்களோடு
காட்டுயானையொன்று நிற்கக் கண்டு
வீறிடாமல் என்ன செய்வாள்.
சித்திரக்கதைப் புத்தகத்தில் வரும் யானையே
சிரித்துவிளையாடத்தக்கது.
வழிதவறி வந்துவிட்டாளா இந்த வனாந்திரப் பிரதேசத்துக்கு?
தொலைந்துவிட்டாளா, தொலைத்துவிட்டார்களா?
தொலைதலும் தொலைத்தலுமே வாழ்வெனும்
பேருண்மையை எட்ட
இன்னும் எத்தனை தொலைவு அழுதுகொண்டே கல்தடுக்கி முள்குத்தித் தட்டுத்தடுமாறிசெல்லவேண்டுமோ
இந்தக் குட்டிப்பெண்....
கரிய பெரிய இருளில் சிறுமியின் விசும்பல்
பசும்புல் மீது பதிந்த காலடியோசையாய்
அவளைச் சுற்றிலும் படர்ந்துள்ள
சன்ன வெளிச்சமொரு ஒளிவட்டமாக,
ஆகட்டும் சிறுமி
இறக்கைகள் தரித்த தேவதையாக…….
No comments:
Post a Comment