LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Tuesday, September 14, 2021

அவரவர் அடர்வனம் - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 அவரவர் அடர்வனம்

‘ரிஷி’

(லதா ராமகிருஷ்ணன்)

FORWARD செய்யப்பட்ட மின்னஞ்சலொன்றின் வரவில்

அனுப்பியவரின் நலம் அறிந்து

நிம்மதி யுறும்

மனம்

தனக்கெனப் பிரத்யேகமாயொரு வரியுமற்ற

அதன் வெறுமையில்

வெந்து தணிந்தவாறிருக்கும்

தினம்...

 

  ***

 

 

Sunday, September 12, 2021

பாரபட்சங்கள் படைப்பாளுமைகள் பரிந்துரைகள் பேரிலக்கியங்கள்...... ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 பாரபட்சங்கள் படைப்பாளுமைகள் பரிந்துரைகள் பேரிலக்கியங்கள்......

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)

*12 செப்டம்பர் தேதியிட்ட பதிவுகள் இணைய இதழில் வெளியாகியுள்ளது

குழந்தைக் கிறுக்கல்கள்
தந்தைக்குக் காவியமாக_
ஞானத் தந்தைக்கு
ஆழமற்ற கிணற்றுக்குள்ளிருந்து
உபதேசிக்கக் கிடைத்த
அரிய வாய்ப்பாக _
காயத்ரியின் மழலைப்பேச்சு
மந்திரமாக உச்சரிக்கப்பட்டு
உருவேற்றப்பட்டுக்கொண்டிருக்கும்
சூழல்….
பழகப் பழகப் பழகிவிடக்கூடும்
இதுவே பேரிலக்கியம் என்ற
.புரிதலும்…..
இருந்தாலும்
மழலை மாறும் விழிகளில்
விரியும் வானம்
ஒரு நாள் தெளிவாக்கும்
பரிந்துரையில் பிறப்பதல்ல பேரிலக்கியம்
என்று.
அது தன்னிலிருந்து கிளர்த்தெழுமொரு
காட்டுச்செடி,
மனிதநேயம்பாற்பட்ட மலைப்பிரசங்கங்களுக்கும்
மலைப்பிரசங்கங்களுக்கப்பாலான
மனிதநேயங்களுக்கும் இடையே
மறைந்தோடும் ஜீவநதியென
அம்மணம் மீறிய ஆன்மாவொன்று
அன்போடு சொல்லக்கேட்டு _
முயல் ஆமை முயலாமை ஊடாய்
வழியேகும் படைப்புவெளியில்
வளர்ந்த மகள் நடைபழக
நாலிலே ஒன்றிரண்டு பலித்திட
வழியுண்டு.


அமரத்துவம் - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 அமரத்துவம்

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)
*12 செப்டம்பர் தேதியிட்ட பதிவுகள் இணைய இதழில் வெளியாகியுள்ளது)

”அவரைத் தெரியுமா உங்களுக்கு?”
நன்றாகவே தெரியும்”
”அவரை நேரில் பார்த்திருக்கிறீர்களா?”
”பலமுறை பார்த்திருக்கிறேன்”.
”அவரோடு பேசியிருக்கிறீர்களா?"
"நிறையவே பேசியிருக்கிறேன்".
எப்போதுவேண்டுமானாலும் அழுதுவிடுவதாய்
எதிரே நிற்கும் இளைஞன் கண்களில்
தழுதழுப்பு…..
காணக்கிடைக்காத கொள்ளையழகு!
கோடிசூரியப் பிரகாசம் பிரசன்னம்
சிரிப்பில் மலர்ந்த அவன் கன்னக்குழியில்!
ஒரு கணம் தனது ஆதர்ஷப் படைப்பாளியை
நானாகக் கண்டு உருகிநின்றவன்
அன்பின் உச்சத்தில் தன் சட்டைப்பையில்
வைத்திருந்த
ஐந்து ரூபாய் ஜெல் பேனாவை எடுத்து
என்னிடம் கொடுத்தபோது
நடந்த உருமாற்றம் வார்த்தைக்கு அப்பாற்பட்டது.
வருகிறேன் என்று சொல்லிச் சென்ற அவன் குரலில்
மறுபடியும் பிறப்பெடுத்த அந்தப் படைப்பாளி
திரும்பவும் ஏன் அதே ஒண்டுக்குடித்தன வீட்டிலேயே
அத்தனை அருமையான கதைகளை எழுதிக்கொண்டிருந்தார் என்பதைத்தான்
என்னால் புரிந்துகொள்ளவே முடியவில்லை.

புத்துயிர்ப்பு - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

  புத்துயிர்ப்பு

‘ரிஷி’

(லதா ராமகிருஷ்ணன்)

*12 செப்டம்பர் 2021 தேத்யிட்ட பதிவுகள் இணைய இதழில் வெளியாகியுள்ளது.

மரணத்திற்கு அப்பாலுள்ள மிக கனத்த இருட்சுவரை
ஒருமுறையேனும்
வலுகொண்ட மட்டும் உந்தித் தள்ளி
ஒருபுறமாய் ஒதுக்கி விலக்கி
மறுபுறமுள்ள தரமான தமிழ்ப்படைப்பாளிகள் சிலரைக்
கைப்பிடித்து அழைத்துவந்து
அவர்களுடைய ஆக்கங்கள் உண்டாக்கும் தாக்கங்களை
இன்று சிலர் அத்தனை ஊக்கத்தோடு பேசிக்கொண்டிருப்பதைக்
கேட்கச்செய்யவேண்டும் என்ற
தீரா ஆசை
ஆறாக் காயமாய் வலித்தாலும்
பரவாயில்லையென் றதை தினம்
சாம்ஸன் தலைமுடியாய் தனக்குள் வளரவிட்டவாறிருக்கும்
ஆன்ற வாசக மனம்.