இருத்தலியல்
வருடக்கணக்காக அந்தக் காரை ஓட்டிக்கொண்டிருந்தான் அவன்.
மறுபடியும் மறுபடியும் அதை தலைமுதல் கால்வரை துடைத்து மெருகேற்றுவான்.
அதன் கண்ணாடிப் பளபளப்பில் தன் முகம்
அதி கம்பீரமாகத் தெரிவதாகத் தோன்றும் அவனுக்கு.
நகரின் வீதிகளில் வழுக்கிக்கொண்டுசெல்லும்போது
கார் தேராக மாறி அவனை அரியணையில் அமர்த்தும்.
அப்போதெல்லாம் மாதம் மும்மாரி பொழியும்
அவன் திருநாட்டில்
உணவு உடை உறையுள் இல்லாத யாருமே இருக்கமாட்டார்கள்.
அப்படியே போர்வீரர்களும் போருக்கான தேவையும்.
இனிவரக்கூடிய எதிரிகளை வீழ்த்தும் வியூகங்கள் கார்ச்சக்கரங்களில் பொறிக்கப்பட்டிருக்கக்கூடும் என்று ஒரு நாள் அவன் கனவில் சித்தர் சுவடி வாசித்தார்.
தூங்குவதற்கு முன் அவன் பார்த்த தொலைக்காட்சி மெகாத்தொடரில்
ஒரு பெண்சித்தர் பாத்திரம் இடம்பெற்றிருந்தது காரணமா, தெரியவில்லை..
முதலாளி ஷாப்பிங் மாலுக்குள் சுற்றிக்கொண்டிருக்க
காரின் பின்னிருக்கையில் அரைவிழிப்போடு குட்டித்தூக்கம் போடுபவன்
இல்லாள் மடியில் கிடப்பதாக நெகிழ்ந்துபோவான்.
காரின் கதவுகளை யாரேனும் அதிரத் திறந்தாலோ அறைந்து மூடினாலோ
யாருமறியாமல் அவர்களுக்கு அவன் அளிக்கும் சாபங்கள்
அவர்களைச் சுற்றிச் சூழ்ந்து என்னென்ன இன்னல்களை ஏற்படுத்தினவோ – யாருக்குத் தெரியும்.
தெரியும் அவனுக்கு காரின் பெட்ரோல் பசி.
ஒருபோதும் காரைப் பட்டினி கிடக்க விடமாட்டான்.
காரின் கலங்கிய கண்களை, கடும்பசியால் வாடிய வதனத்தைக் காணப்பொறாத அவன்
முதலாளி தர மறந்துவிடும் சமயங்களில் தன் கைக்காசை போட்டு அல்லது கடன் வாங்கியாவது காரில் பெட்ரோல் நிரப்பிடுவான். பிறகே பணம் வாங்கிக்கொள்வான்.
காரின் மீது சூரியக்கதிரொளி படரும் நேரத்தையும், சூரியக்கதிரின் நீளத்தையும், அடர்த்தியையும் பார்த்தாலே சரியான நேரம் தெரிந்துவிடும் அவனுக்கு.
அதன் வெளியுறுப்புகளும் மறைவுறுப்புகளும் அவனுக்கு அத்துப்படி.
ஒரு கட்டத்தில் அதைத் தனதாகவே பாவிக்கத் தொடங்கினான்.
முதலாளிக்கு பதவி உயர்வோடு மும்பைக்கு மாற்றலாக,
மூன்றுமாதச் சம்பளத்தொகையோடு வீடுதிரும்பிய வனின் கனவில்
‘என்னை ஏன் உன்னோடு கூட்டிச்செல்லவில்லை?’ என்று திரும்பத்திரும்பக் கேட்டபடி
அவன் காலடியில் கேவிக்கொண்டிருந்தது கார்.
No comments:
Post a Comment