பத்தரைமாற்று முத்திரைக்கவி
(லதா
ராமகிருஷ்ணன்)
அங்கிங்கெனாதபடி.
அனைத்திலும் யாரோவொரு பிரமுகருடன் தனக்கிருக்கும்
பரிச்சயத்தை நெருக்கத்தைப் பறைசாற்றுவதாய்
புன்னகைத்தவாறு.
நேற்றைய இன்றைய நாளைய அரசியல்வாதிகள்,
நடிகர்கள்;
நியூஜிலாந்து அயர்லாந்து மெக்ஸிகோ மாலத்தீவு என
ஒன்று பாக்கியில்லாமல்
அயல்நாடுகளைச் சேர்ந்த படைப்பாளிகள்….
வழுவழு பக்கங்களாலேயே உயர்தரமானதாக்கப்பட்ட
அறுவை இலக்கிய ஆங்கில இதழ்;
முடிவற்று வெறுப்புமிழ்வதே புரட்சியென
உருவேற்றிக்கொண்டிருக்கும்
மாதமொருமுறை இதழ் _
எல்லாவற்றிலும் அவர்
சிலவற்றில் கோபமாய்
சிலவற்றில் சோகமாய்
சிலவற்றில் சாந்தமாய்
சிலவற்றில் ஆவேசமாய்
சிலவற்றில்
தலையை சிலுப்பிக்கொண்டு
சிலவற்றில்
(அட்டை)மலையை உலுக்கிக்கொண்டு
பத்தரைமாற்று முத்திரைக்கவியின் படங்கள்
எத்தனையெத்தனையோ……
எதிலுமேயில்லை
சத்தமில்லாமல் மொத்தமாய்
அவரைப் பிரிந்துவிட்ட கவிதை.
No comments:
Post a Comment