LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Saturday, October 26, 2019

ஒலியும் ஒளியும் - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

ஒலியும் ஒளியும்
‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)

(* ‘தனிமொழியின் உரையாடல்’ தொகுப்பிலிருந்து)


காதில் பஞ்சடைத்து
இருந்தவிடம் விட்டு இம்மியும் நகராமல் தெருத்தெருவாய்ப்
போய்க்கொண்டிருக்கிறேன்
பை நிறைய பஞ்சை தோளில் சுமந்தபடி....
பட்டாசுச் சப்தம் பயமுறுத்த
தேம்பியழும் குழந்தைகளுக்கெல்லாம்
நான் தரும் மிக உன்னதமான அன்பளிப்பு
அதுவாகவே யிருக்கும்.
சிறுவயதில் நடுநடுங்கிக் கண்ணீர் விட்டு
நகைப்புக்காளாகி செவிபொத்தி,
புத்தாடையோடு பதுங்கியிருப்பேனாம்
குளியறையில்.
கிண்டல் குட்டு கிள்ளு - எல்லாமே
என் மேல் அக்கறை கொண்டோரின் எதிர்வினைகளாக....
ஒருபோது பாவம் பார்ப்பார்கள்;
ஒருபோது பிடித்திழுத்துவந்து
வெடிக்கப்போகும் பட்டாசின் எதிரில் நிறுத்துவார்கள்.
பின்னேகிக்கொண்டே போனதில்
ஒருமுறை புது கவுன் விளக்கில் பற்றிக்கொண்டுவிட-
சில வெடிகள் தரையைப் பிளந்து
என்னைக் குற்றுயிராக்கிவிடும்.
அவற்றிலிருந்து கிளம்பும் நெருப்பு என்னைத்
தீக்கிரையாக்கிக்கொண்டேயிருக்கும்.
பூக்குத்தியும் ஒருநாள் டமாரென வெடித்து
உருமாறிவிட்டது நான் வெறுக்கும் பட்டாசாய்.
அப்போதெல்லாம் தீபாவளிக்கு முன்னும் பின்னும்
பதினைந்து இருபது நாட்கள்போல்
பாழும் நரகத்துள் வறுபட்டுக்கொண்டிருப்பேன்
கொதிக்கும் எண்ணெயில்.
(இப்போது அப்படியில்லை என்றாலும் -
எல்லா விழாக்களிலுமே வெடிகள் தவிர்க்கமுடியாத
அங்கமாகிவிட்டன......
வெடிகுண்டுகளும் கூட)
வலிதாங்கு சக்திபோல் ஒலிதாங்கு சக்தியும்
எல்லா மனிதர்களுக்கும் ஒருபோல் இருப்பதில்லை…..
இப்போதும் அந்த ஒளி, ஒலி கதிகலங்கச் செய்கிறது.
எனில், இயல்பாய் காதில் பஞ்சடைத்துக்கொள்ள
என்னால் முடிகிறது.
அதில் அவமானமடையத் தேவையில்லை என்ற உண்மை
ஆழப் படிந்துவிட்டது மனதில்.
அன்பிற்குரியோரே, ஆன்றோரே - சான்றோரே
உங்கள் இல்லங்களில் அருகிலுள்ள வீடுகளில்
வெடிச்சப்தம் கேட்டு விதிர்த்து அழும் சிறுமி / சிறுவன் இருந்தால்
கடிந்து கொள்ளாதீர்கள்;
அடிக்காதீர்கள்.
அடடா பயந்தாங்கொள்ளி என்று எள்ளிநகையாடி
அவமானத்தில் அவர்களைக் குன்றிப்போகச் செய்யாதீர்கள்;
குறைமனிதராய் அவர்களை உணரச் செய்யாதீர்கள்.
அவர்களுடைய குட்டிக்காதுகளில் சின்னப் பஞ்சுருண்டையை
செருகிக்கொள்ள அவர்களை அனுமதியுங்கள்;
அருகிருக்கும் முதியவர்களுக்கும் நோயாளிகளுக்கும்கூட
மிக இதமாயிருக்கும்.
இதோ, இந்தக் கவிதைப்பையிலிருந்து வேண்டுமட்டும்
பஞ்சைப் பிய்த்தெடுத்துக்கொள்ளுங்கள்.

பாவமும் பாவமன்னிப்பும் - ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)

பாவமும் பாவமன்னிப்பும்

ரிஷி

(லதா ராமகிருஷ்ணன்)
(* ’தனிமொழியின் உரையாடல்’ தொகுப்பிலிருந்து)

குழந்தைகளிடம் என்னவென்று மன்னிப்பு கோருவது?
நாம் கண்கலங்கினால் சட்டைநுனியால்
கண்களைத் துடைத்துவிடக்கூடும்….
கைகூப்பினால் முகம் மலர பதிலுக்குத் தங்கள்
சின்னக்கைகளைச் சேர்த்துக் குவிக்கக் கூடும்.
மண்டியிட்டால் சக குழந்தையாய் நம்மை பாவித்து
வாய்நிறைய சிரிக்கக்கூடும்….
நெடுஞ்சாண்கிடையாகக் காலடியில் விழுந்தால்
தவறி விழுந்துவிட்டோமோ எனப் பதறி
தாங்கிப் பிடிக்கத் தாவிவரக்கூடும்…..
அதுவும் _
அடிபட்ட குழந்தைகளிடம் எப்படி மன்னிப்பு கோருவது _
அவர்களின் வலிகளை வாங்கிக்கொள்ள வழியில்லாது?

உயிர்வலி - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

உயிர்வலி

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)

(* சமர்ப்பணம்: ஆழ்குழாய்கிணறில் விழுந்து உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கும் குழந்தை சுஜித் வில்சனுக்கு.




அபயம் கேட்பதாய் தலைக்குமேலே உயர்ந்திருக்கின்றன
அந்தக் குட்டிக்கைகள்;

பூமிக்கு வந்த இரண்டு வருடங்களிலேயே
வாழ்வின் அடியாழ அந்தகார இருளைப்
பார்க்க நேர்ந்துவிட்ட
அந்தப் பிஞ்சுமனதை என்ன சொல்லித் தேற்றுவது?
எப்படி மன்னிப்புக் கேட்பது?
அந்தப் பூவடம்பில் இன்னமும் தொக்கிநிற்கும்(?)
வாழ்வுச்சூட்டை எப்படிக் காப்பாற்றுவது?
ஒரு குழந்தையில் தெரியும் பல குழந்தைகளின்
ஒடுங்கிய உடலங்களை
தினந்தினம் எதிர்கொண்டு பதறும்
மனம்
நொறுங்கிச் சிதறும்.