கவிதையும் சொல்லியும்
‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)
மிக மிகப் பொருத்தமான சொற்களால்
நிரம்பியிருந்தது.
விழவுக்கும் எழவுக்குமான
குழவிக்கும் கிழவிக்குமான வேறுபாட்டைக்
கைபோனபோக்கில் காற்றில் பறக்கவிடும்
எழுத்தல்ல
அழுத்தமாகச் சொல்லமுடியும்
ஆகச் சிறந்த கவிதைகளில் அதுவுமொன்று.
மனதை நெகிழ்த்தி
மிக இலகுவாக உள்ளுக்குள் ஊடுருவிச்சென்று
அங்கிருக்கும் உயிருக்கும் ஆன்மாவுக்கும்
’சார்ஜ்’ செய்கிறது; ’டாப்-அப்’ செய்கிறது
அங்கே ஒலித்துக்கொண்டேயிருக்கும் அழைப்புகளுக்கு ‘அலோ அலோ’ என்று ஒருகையோசையாய் அலறிக்கொண்டேயிருப்பதைத் தாண்டி
அவற்றைக் காதாரக் கேட்டு பதிலளிக்கச் செய்கிறது.
பாலைவனத்தில் கால்கடுக்க நடந்துகொண்டிருக்கும் நேரம்
திடீரென எதிரே குளிர்பானப் புட்டிகள் வரிசையாக வரிசையாக வண்ணமயமாக வைக்கப்பட்டிருக்கும்
அடுக்கொன்று தென்படுவதாய்…..
உடுக்கையிழந்தவன் கைபோல என்றுகூடச் சொல்லமுடியும்.
எல்லாமிருந்தும்
உருகியுருகி வாசித்துக்கொண்டிருக்கும் நேரமெலாம்
இரண்டறக் கலக்கவொட்டாமல் உறுத்திக்கொண்டே யிருக்கிறது
உண்மையெனப் பொய் பரப்பி யக் கவி
உதிர்த்துக்கொண்டிருக்கும் கொச்சைமொழிக்குப்பைமன
வெறுப்புப்பேச்சு.
No comments:
Post a Comment