LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Saturday, June 6, 2015

இன்மையின் இருப்பு {சமர்ப்பணம் : தாத்தாவுக்கு}காலத்தின் சில தோற்ற நிலைகள் - 10

கவிதை                
இன்மையின் இருப்பு
{சமர்ப்பணம் : தாத்தாவுக்கு}

காலத்தின் சில தோற்ற நிலைகள்
ரிஷியின் 4ம் கவிதைத் தொகுப்பு


 வெளியீடு: காவ்யா பதிப்பகம். 2005



ஆறடி ஆகிருதியின் திடகாத்திரம்
1500 டிகிரி செண்டிகிரேட் நெருப்புப் பிழம்புக்குள் செலுத்தப்பட்டு
சிறிதுநேரம் வரை சலனமற்றிருந்தது ஆகாயம்.
பின், போக்கியின் வழியாய் சன்னமாகக் கிளம்பத் தொடங்கியது புகை.
உள்ளே உடல் இறுதியாக ஒருமுறை துடித்தெழுந்து
அடங்கிக்கொண்டிருக்கும்.
வெப்பத்தில் விரியும் எலும்புகள் வெளியே துருத்திக்கொண்டு வருவதுபோல்….
எங்கு இடம்பிடிக்கும் ஒரு நூறாண்டும், கூட மூன்றாண்டுகளுமான
அந்த வாழ்வின் நிலவறைகளிலிருந்த எல்லாமும்….?
திருத்தமாய் நினைவடுக்குகளில் வரிசைப்படுத்தி
வைத்திருந்த அந்தப் பள்ளிப்பாடல்கள்;
ஷேக்ஸ்பியர் வாசகங்கள்;
கிரிக்கெட், கால்பந்து, டென்னிஸ் புள்ளிவிவரங்கள்,
சில வார்த்தைகளால் வரவான தழும்புகள்,
சார்புநிலை கொண்டுவந்து சேர்த்த சலிப்பும் இழப்புகளும்,
உறவுகளின் மீது தேக்கிவைத்திருந்த பிரியம்,
ஒருபோது தாக்கியிருந்திருக்கலாகும் காமத் தினவு,
ஆட்கொண்ட வேட்கைகள், தேட்டங்கள்,
பல தலைமுறைகளின் ஞாபகப் பெருந்திரள்,
நனவோடை வண்டல், அக்கக்கோ பறவையின் தனிமை,
பொக்கைவாய்க்குள் புதைத்துவிட்ட சொல்லும் பொருளும்
பிறவும்….

ருள் மனம் மீட்சியற்று சிதறும்
இருளின் ஆழத்திலிருந்து எதிரொலிக்கிறது
“அக்கா” என்று அன்போடு என்னை அழைக்கும் குரல்….


0







காலத்தின் சில தோற்ற நிலைகள் 6 - 9 - ரிஷி(லதா ராமகிருஷ்ணன்)

காலத்தின் சில தோற்ற நிலைகள்
(ரிஷியின் 4ம் கவிதைத் தொகுப்பு) [வெளியீடு: காவ்யா பதிப்பகம். முதல் பதிப்பு 2005


கவிதை 6 - 9

















6. பெரியவர்களுக்கான குழந்தைக் கதை


ஏழு கடல்களையும் ஏழு மலைகளையும் எப்படியோ கடந்தாகிவிட்டது.
வழியில் எதிர்ப்பட்ட விஷங்கக்கும் பாம்பை வாய்கிழித்தாகிவிட்டது.
முட்ட வந்த காட்டெருமையின் கொம்புகளை முறித்தாயிற்று.
புதைகுழிக்குள் கழுத்தளவு காணாமல் போய் பிழைத்தெழுந்தாயிற்று.
வழுக்குப்பாறை உச்சிமீதிருக்கும் வீடடைந்து
உள்ளிருந்த இருபது அறைகளையும் துருவிப் பார்த்ததில்
இல்லாத இருபத்தோராவது அறைக்கூண்டில் அடைபட்டிருந்த
கிளியின் எதிரிலிருந்த கிண்ணத்து அரிசிமணிகளில்
சரியானதைப் பொறுக்கியெடுத்து அதைத்
தரையில் தேய்க்கத் தேய்க்க
கிளியுருவி லிருந்த அரக்கன் தலை சாய்ந்தது.
கூடவே அவள் தலையும்…..






7. நீளந்தாண்டுதல்



அதிகமாகிக்கொண்டே போகும் இடைவெளி.
ஊக்கமருந்து சாப்பிட்டுப் பெறும் வெற்றி
வெட்கக் கேடு.
வலு குன்றாதிருக்கலாம் கால்க ளெனில்
வாழ்க்கை ‘நீளந்தாண்டுதல்’ அல்லவே.





8. இரவின் ஏழு மலைகள்

இரவின் பிடியில் நான் தப்பித்தலின்றி
புறத்தே கப்பிக் கிடக்கும் இருள்
அகத்துள்ளும் தப்பாமல் கள்ளுண்டவன்போல்
அனத்திக்கொண்டிருக்கும் நினைவின் மண்டையில்
அழுத்தித் தேய்க்க இருக்க லாகுமோ
ஓர் அபூர்வத் தைலம் பயணம்
ஏழு கடல் ஏழு மலை தாண்டி யேக
வழியற்று எதையும் உறுதியாக மொழியக்
கழியா கையறு நிலையில் காலம் எனை
யின்னும் சில காதங்கள் தொலைவாக்கிடு முன்
அண்மையை இழுத்துப் பிடிக்கும் வண்ணமாய்
உருக்கொள்ளு மிவ் வரிகளுக்கா யருகில்
பொறுமையாய் காத்திருக்கும் தற்காலிகச் சாவு.



9. ஈர்ப்புவிசையும், இலையின் அசைவும்

கரடுமுரடான செங்குத்துப் பாறையதன் பிளவொன்றில் துளிர்த்திருந்தது அந்தச் சிற்றிலை.
கதிரொளியில் துலங்கும் அதன் நரம்புகளில்
பாறையின் தடித்த வரிகள் பிணைந்திருக்கக் காணும்.
அத்தனை சன்னமான தளிரின் அடிப்பாகம் ஒற்றைப்புள்ளியில்
இறுகப்பற்றியிருக்கும் பாறை மீது
காற்றின் ஒவ்வொரு அசைவுக்கும்
படீரென மோதிக்கொள்ளும் இலையில்
பொத்தல்கள் சேகரமாகியபடி….
மென்மையாக முடியாமலும், வழுவழுப்பாக வழியில்லாமலும்
தன் போக்கில் பாறை….
வந்து வந்து மோதுகையில் தளிரை முத்தமிட்டோ புண்ணாக்குகிறது….?
தெளிவான பதிலற்ற கேள்வியும் வந்து வந்து மோத
மேலும் புண்ணாகியபடி, விட்டு விலகாதவாறு
காற்றின் விசையில் அசைந்து மோதிய
பாறையின் கரடுமுரடுகளில்
பின்னும் நெருங்கிப் பதிந்துகொள்ளும்
இலை
அலைக்கழிந்தவாறு…..



0

Friday, June 5, 2015

சிறுகதை அருங்காட்சியகம்

சிறுகதை

அருங்காட்சியகம்

‘அநாமிகா’

[லதா ராமகிருஷ்ணன்]

( * பன்முகம்  ஜூலை – செப்டம்பர், 2003 இதழில் வெளியானது)




னாதி காலம் தொட்டு அது இருந்துவருவதாகக் கூறினார்கள். ’அதென்ன ‘அனாதி காலம்?’ அதற்கென்று ஒரு கணக்கு வழக்கு இல்லையா’ என்றால் ”அதெல்லாம் சரிவரத் தெரிந்தவர் யார்தான் இருக்க முடியும்? அனாதி காலம் என்றால் அநாதி காலம். அவ்வளவுதான்,” என்று கூறி முடித்துக்கொண்டார்கள். இல்லை, ‘அதுவா முக்கியம்…. இந்த அருங்காட்சியகத்தின் சிறப்பு அது எத்தனை காலம் முந்தையது என்பதில் இல்லை. அது எல்லாக் காலத்திற்குமானது என்பதிலும், எப்போதும் புராதனமாகாதது என்பதிலும்தான் இருக்கிறது என்று எரிச்சலோடு தெளிவுபடுத்துவதாய் காட்டினார்கள்.

அருங்காட்சியகத்தின் தனித்தன்மை அதன் சுவர்களி லிருந்தே பிடிபடலாயிற்று. கருஞ்சிவப்பு நிறத்தில் சாயம் தீட்டப்பட்டிருந்த சுவர்களில் குறுக்கும் நெடுக்குமாக மெலிந்தும் தடிமனாயும் ஒரு பிரத்யேக வலைப்பின்னல் அமைப்பாகக் காணப்பட்டவை உண்மையான மனித நரம்புகளும், இரத்தநாளங்களும்தான் என்று சுற்றுலா வழிகாட்டி குறிப்பிட்டபோது நம்பமுடியாத அதிர்ச்சி ஏற்பட்டது. ‘அப்படியென்றால்…. ஒருவேளை அந்தச் சுவர்களின் சாயம்….’ தன்பாட்டில் மனதில் ஒரு உள்ளுணர்வு குமிழ, ‘இதென்ன அபத்த எண்ணம்’ என்று அறிவைக்கொண்டு அசட்டை செய்ய முயன்றாலும் முடியாமல், திகிலுடன் அண்ணாந்து பார்க்க, “ஆம், உங்கள் ஊகம் சரிதான்,” என்று உடனடியாகக் கூறினார் வழிகாட்டி. 

“அது அசல் மனித ரத்தம்தான்.” அனிச்சையாக முகத்தை மூடிக்கொண்ட கைகளின் விரலிடுக்குகள் வழியாய் ஆங் காங்கே கீற்றுகளாய் கசிந்துகொண்டும், கோடுகளாய் வழிந்துகொண்டும் இருப்பதைக் காண முடிந்தது.

குமட்டலெடுத்தது. இது என்ன குரூரம்…? போரில் வெற்றிவாகை சூடியவன் தோற்ற எதிராளியைக் குத்திக் கிழித்ததோடு திருப்தியடையாமல் அவனுடைய தலையை வாளில் செருகி ஊர்வலம் வருவானாமே…. அப்படி வந்து வந்து அலுத்துப்போய் புதிதாய் வேறு ஏதாவது செய்யவேண்டும் என்று இவ்விதமாய் வெற்றியைக் கொண்டாட ஆரம்பித்தார்களோ….’

“இது வேறுவகையான போர்” என்று இடைமறித்தார் வழிகாட்டி. “இதம் வழிமுறைகளும் விதிமுறைகளும், அவ்வளவு ஏன், போரில் தான் வஞ்சகமாய்க் கொல்லப்பட்டுக்கொண்டிருப்பதே சம்பந்தப்பட்டவருக்கு இறுதிக்கணங்களில்தான் தெரியக் கிடைக்குமாம்….”

“புரியவில்லை”

“தாஜ்மகால் என்பதைக் காதல் சின்னமாக எடுத்துக் கொண்டால் இதை ‘தாஜாமகால்’ அல்லது ‘அ-தாஜ்மகால்’ எனலாம்.”

“ஆனால், தாஜ்மகாலே உண்மையில் காதல் சின்னம் இல்லையே….”

“நமக்கு ஏதாவது ஒரு சின்னம் காதலுக்குத் தேவைப் படுகிறது. வேறு எதுவும் கைவசம் இல்லை. எனவே, தற்சமயத்திற்கு தாஜ்மகாலையே காதல் சின்னமாகக் கொள்வோம்.”

“சென்னைப் பொருட்காட்சி சாலையில் இருந்த, இப்போது பகுதி பகுதியாக வெட்டி வேறொரு மாநிலத்தில் ஒட்டிவைக்கப்படப்போகும் அந்த ‘நகல்’ தாஜ்மகாலை நாம் சின்னமாக்கிக்கொண்டால் இன்னும் பொருத்தமாயிருக்கும்.”

“தாஜ்மகாலை நாம் காதல் சின்னமாகக் கொண்டால், அதில் அசல் என்று ஏதேனும் இருக்கிறதா என்ன?”

“இருப்பதாகவும் வைத்துக்கொள்ளலாமே…. சரி, இந்த விவாதம் நீண்டுகொண்டே போகும். நீங்கள் இந்தத் ’தலபுராணத்தை’க் கூறுங்கள்-” கடுப்பாக ஒலித்த என் குரலை அவர் உற்றுக்கேட்டவாறிருந்தார்போல் காணப் பட்டார். சில நிமிடங்கள் மௌனமாக நின்றிருந்தார்.

பின், “இங்கே பாருங்கள்” என்று கூறியவாறே சுவரின் மீது ஒன்றிரண்டு இடங்களில் கை பதித்துக் காட்டினார். அவர் கையை மீட்ட போது அவர் கைப்பதிவு கண்ட இடத்தில் மனித இதயம் துடித்துக்கொண்டிருப்பது தெரிந்தது. உடலில் நடுக்கம் பரவியது.

“அது ஆணின் இதயமா? பெண்ணின் இதயமா?”

“பெயர்களிலும், பிறப்புறுப்புகளிலும்தான் அந்த பேதங்க ளெல்லாம். இதயத்தில் ஆணென்ன, பெண்ணென்ன….”

“அப்படியென்றால்…?”

“ஏதொன்றும் காயப்படும், காயப்படுத்தும். அழும்; அழ வைக்கும். உடைக்கும், உடைபடும். இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம். இருவர்க்கிடையேயான உறவில் இந்த இருதரப்புகளும் கட்டாயம் இருக்கும். இருபாலரும், இரு நிலைகளிலும்  இடம்பெறக்கூடும்.”

வழிகாட்டி பெருமூச்செறிந்ததில் சுவர் மீது கண்ட இதயப் பதிவில் புதிதாய் சில ரத்தக்குமிழ்கள் கொப்பளித்தன.

“சரி வாருங்கள், உள்ளே போகலாம்.”

சில அடிகள் முன்னே சென்றவர், நான் தயங்கிநிற்பதைப் பார்த்து முறுவலித்தார். “பயப்படாதீர்கள், சீரான தரையில்தான் நடப்போம், சடலங்கள் மீது அல்ல!”

அவர் சொன்னதுபோல் தண்ணெனக் குளிர்ச்சி பொருந்திய சமதரையில்தான் நடந்தோம். அது ஒரு நீண்ட கூடம். மேற்கூரை மிக உயரத்தில் இருந்தது. கூடத்தின் இருமருங்கும் ஆளுயரக் கண்ணாடிப் பெட்டிகள் நீள் செவ்வக வடிவில் செங்குத்தாய் நின்று கொண்டிருந்தன. ஒவ்வொன்றின் உள்ளேயும் ஒரு மனித உடல். உடல் என்றால் இறந்த உடல் அல்ல. உயிரோ டிருக்கும் உடல். ஒவ்வொரு முகமும் ஒரு விவரிக்கவியலா வலியில் கோணியிருந்தது; சுருங்கியிருந்தது; வீங்கி யிருந்தது. சில முகங்களின் கண்களிலிருந்து கன்னங்கள் வழியாய் ஒரு நீண்ட வெட்டுப்பிளவு காணப்பட்டது. கண்கள் உயிரோடிருக்க, தேகம் ஒரு கையறு நிலையில் உறைந்திருந்தது.

“அன்பின் வழி நேரும் அலட்சியம், அவமானம், நம்பிக்கை துரோகம், அடிப்பதாய் வீசப்படும் வார்த்தைப் பிரயோகம் முதலியவை மனித மனதால் தாங்கமுடியாமல் போகும்போது இந்த உறைவுநிலை சம்பவிக்கிறது. அப்படித் தாக்குண்டவர்கள் அதற்குப் பிறகு ‘இருந்தும் இல்லாதவர்’களாகிவிடுகிறார்கள். உயிர்ச்சவமாயிருக் கும் அத்தகையோர் பற்றித் தகவல் தரப்பட்டால் இங்கி ருந்து ஆட்கள் போய் எங்கள் பிரத்யேக வண்டிகளில் அவர்களைக் கூட்டிக்கொண்டுவந்து இங்கே இப்படி நிறுத்திவைப்போம்.”

“பிரத்யேக வண்டிகள் என்றால்…?”

“தாங்கமுடியாத அளவு அன்பினால் விளையும் அலட்சி யமும், அவமானம், துரோகம், துக்கம் போன்றவற்றால் தாக்குண்டவர்களை இந்த வண்டிக்குள் ஏற்றும்போது அந்த உச்சபட்சத் தாக்குதல் சொல் வடிவிலான நினைவாய் அவர்களுடன் ஏறிக்கொள்கிறது. இங்கே, இந்தப் பெட்டிகளைப் பாருங்கள். இதில் ஏதாவது வழக்கத்திற்கு மாறாகத் தென்படுகிறதா உங்களுக்கு? உற்றுப்பாருங்கள்.”

உலோகத் தன்மையுடன் இருந்த அந்தக் குரல் வசியம் செய்வதாய் தலையசைத்தார். “இந்தக் கண்ணாடிகள் வழக்கமான கண்ணாடிகளல்ல. மனித உடம்பின் நிணநீர்களிலிருந்து உருவாக்கப்பட்டவை. ஹிட்லரின் வதை முகாம்களிலும், அதற்குப் பிறகான ஏராளமான சின்ன, பெரிய இனக்கலவரங்கள், சாதிச் சண்டைகள் மற்றும் பெரும் போர்களிலெல்லாம் இறந்துபட்டு அனாதைப்பிணமாக கூட்டுச்சிதையேற்றப்படுபவர்களை, அதிகாரிகள் சென்ற பிறகு, நெருப்பணைத்து வெளியே இழுத்துவந்த உடலங்களின் உறைவுநிலையைத் தற்கா லிகமாகப் போக்கி உள்ளோடும் நீர்களை மீண்டும் ஓட வைத்து அவற்றை வெளியே குடுவைகளில் சேகரித்து, அவற்றில் சில துளிகள் காற்றையும், காலத்தை யும்,காதலையும் ஒரு குறிப்பிட்ட விகிதாச்சாரத் தில் சேர்த்து இருளுக்கே உரிய அதிவெப்ப நெருப்பில் கொதிக்க வைத்து உருவாக்கிய கண்ணாடி இது. இன்னும் சில விஷயங்களும் சேர்க்கப்படும். எல்லாவற் றையும் சொல்லிவிட்டால் பின் ஆளுக்கொரு அருங்காட்சியகம் என்று ஏற்படுத்திக்கொண்டுவிடக் கூடும். பின், இங்கே யார் இத்தனை அதிகக் கட்டணம் கொடுத்துப் பார்க்கவருவார்கள்….?

“அதுவும் சரிதான். நான் துருவிக் கேட்கப்போவதில்லை. இந்தக் கண்ணாடியின் பிரத்யேகத் தன்மைக்கும், இந்தப் பெட்டிகளின் கதவின்மைக்கும் என்ன தொடர்பு?”

“அப்படிக் கேளுங்கள். நல்லவேளை, காதல் இன்னமும் உங்களை முழுமுட்டாளாக்கிவிடவில்லை.”

“அதில் ஆனந்தப்பட ஒன்றுமில்லை. எல்லா உறவுக ளிலும் முட்டாளாக இருப்பதுதான் சௌகரியம்.”

“சொரணையில்லாமல் இருப்பதும்.”

“தோ-தோ-நாய்க்குட்டியாக”

“தூக்கமின்மையில் தூங்கி…”

“தொலைபேசி அழைப்பிற்காய் தவம் செய்து…”

“நிஜம் போலும் பொய் பேசி.”

“பூசனைகள் செய்து…”

”வாசனை புனைந்து…”

“ஹப்பா, கவிதையிலேயே இந்த பூசனை, வாசனை நடையைக் கைகழுவியா யிற்று. நீ பேச்சுவழக்கிலும் அதைப் பிடித்துத் தொங்கிக்கொண்டிருக்கிறாயே!”

“எதையேனும் பிடித்துத் தொங்கிக்கொண்டிருக்கத்தானே வேண்டியிருக்கிறது…”

“எத்தனை காலம்தான் தொங்க முடியும்?”

பேசிக்கொண்டே போனதில் ஏதோ ஒரு கட்டத்தில் அது தனிமொழியா, உரையா டலா என்று குழம்பிப்போனது. எதிரே கண்ட காலிப் பெட்டியின் கண்ணாடிப் பரப்பில் ஏதோ அலைவு கண்டதுபோல் தோன்றியது.

“அங்கே பாருங்கள், அந்த அலைவு தெரிகிறதா? அதுதான் பெட்டிக்குள் போவதற் கான வழி அல்லது திறப்பு. உங்களுடைய கேள்விகளும் என்னுடைய பதில் களும் அல்லது என்னுடைய கேள்விகளும் உங்களுடைய பதில்களாகவும் இருக்கக்கூடிய இந்த உரையாடலின் ஊற்றுக்கண் உங்கள் மனதில் ஊறியிருக்கும் துக்கம். இந்தத் துக்கத்தின் உச்சப்புள்ளிக்குக் காரணமான சம்பவம் அல்லது வார்த்தைகளை நீங்கள் மீண்டும் பேசிக் கொண்டே வந்தால் உள் மனதின் வலி தாங்கமுடியாத உச்சத்தை எட்டும் கணம் இந்தக் கண்ணாடிச் சுவரில் ஒரு பெரிய திறப்பு ஏற்பட்டு உங்களை உள்வாங்கிக் கொள்ளும்….”

அந்த வசியக்குரல் எனக்கு அச்சமூட்டியது. ‘இது என்ன பயித்தியக்காரத்தனம்…. இந்த மனிதனின் மோடி மஸ்தான் பேச்சை யார் நம்புவார்கள்…’

என் மனதைத் துல்லியமாகப் படம்பிடித்துப் புன்முறு வலித்தார் அவர். “நான் சொல்வதை நீங்கள் நம்பவில்லை யல்லவா? என்னால் நிரூபிக்க முடியும். ஆனால், அதற்கு நீங்கள் ஒத்துழைக்க வேண்டும்.”

“சொல்லுங்கள், நான் என்ன செய்யவேண்டும்?”

“உங்களுடைய துக்கத்தின் அந்தத் தாங்கமுடியாத கட்டத்தை உருவாக்கிய உரையாடலை நீங்கள் ஞாபகப் படுத்தி மீண்டும் ‘ஓரங்க நாடகம்’போல் பேசவேண்டும்.”

எத்தனை தாங்கமுடியாத கட்டங்கள்…. பாதி கற்பனை யாகவும் பாதி நிஜமாகவும் எட்டியவை…. கயிற்றரவாய் மனதை கிலி பிடித்தாட்டும் அந்தக் கேள்வி… “உனக்கு நான் காதலியா, இல்லை, வெறும் ‘கான்க்வெஸ்ட்’ (conquest) மட்டும்தானா?”

….” கன்க்வெஸ்ட் என்றால் உன்னைவிட அழகான வேறு எத்தனையோ பெண்களை என்னால் கைக்கொண்டிருக்க முடியும்.”

“இந்த பதில் எனக்கு நிவாரணமளிக்கும் என்று நீ நினைக் கிறாயா?”

“நீ எனக்கு நேர்ந்த ஒரேயொரு காதலி என்று என்னால் பொய் சொல்ல முடியாது. ஆனால், என்னுடைய முதன் மைக் காதலிகளில் நீயும் ஒருத்தி.”

“கான்ஸலேஷன் ப்ரைஸ் தருகிறாய். கூடவே, கங்கிராட்ஸ் சொல்லவேண்டுமே! எனக்கு அந்த ஷர்மிலி பட காதலன்தான் ஆதர்ஷம். தன் காதலியின் முகம் தவிர மீதிப் பெண்களின் முகங்களெல்லாம் வெறும் பலூன் மொந்தைதான் அவனுக்கு!”

“நீங்கள், பெண்கள் எல்லோருமே மிகையுணர்ச்சிக் காரர்கள்; தொட்டாற்சுருங்கிகள்!”

“நீ தொட்டு நான் என்றாவது சுருங்கியிருக்கிறேனா? அபூர்வமாக மட்டுமே நீ தொடுகிறாய் என்பதுதானே என் நஷ்டக்கணக்கு”

“அது ஐயாவோட மகிமை!”

“நீ இப்படி மார்தட்டிக்கொள்வது என்னை இன்னும் அவமானப்படுத்துகிறது. வேண்டாம், ப்ளீஸ்…”

“ஹா, ப்ளீஸ் என்ன “ஸ்பெல்லிங்’, சொல்லு பார்க்க லாம்?”

“Please.”

’அட, இப்ப சரியா சொல்றியே. ஆனா, உன் கட்டுரை யிலே தப்பா எழுதியிருந்துதே! PLESEன்னு அதில் இருந்ததை சுதாதான் பார்த்துச் சரிசெய்தாள்.”

“சுதா?”

”என்னுடைய கஸின். அவளுக்கு என் மேல் ஒரு ‘இது’. யாரு புதுவரவுன்னு உன் கட்டுரையைப் படிச்சுக்கிட்டே கேட்டா! PLESE”ன்னு எழுதியிருந்ததைப் பார்த்து விழுந்து விழுந்து சிரிச்சா…”

“நீயும் சிரிச்சே இல்லியா?”

“பின்னே!”

“எனக்குத் தெரிந்தவரை நீ ’ஸென்ஸிடிவ் ஹ்யூமன் பீயிங்’ தான் ஆனால், இந்த உன்னுடைய கேலியிலும் கெக்கலிப் பிலும் நீ கொடூர அரக்கனாக மாறியிருப்பது உனக்குத் தெரியவில்லையா…. நான் அலுத்துவிட்டேன் என்றால், அதை எடுத்துச் சொன்னால் போதாதா… ஒரு காற்றிழை போல் நான் தடமின்றி போயிருப்பேன். இப்படி, சமயம் கிடைத்தபோதெல்லாம் அடித்துத் துரத்தவேண்டுமா….? உன்னிடம் மட்டும்தான் இப்படி ‘வாலாட்டிக்கொண்டிருக் கும் நாய்க்குட்டியாக நான் பின்னோடிவருகிறேன் என்று உனக்குத் தெரியாதா? உன் எட்டியுதைக்கும் கால்களில் மிதிபடவேண்டியது தான் என் தகுதியா? அவமானம் எப்படி அன்பாகும்… ஏதோவொரு எல்லைமீறிய இழப்புணர்வு என்னை முழுவதுமாக விழுங்கித் தீர்த்துக் கொண்டிருக்கிறதே… நான் அழக்கூடாது…. அழுதால் அது என்னை நான் மேலும் அவமானத்திற்கு ஆளாக்கிக் கொள்வதாகும்… என் அன்பின் தெரிவு எனக்கு அவமா னத்தை வரவாக்குவதாக இருக்கலாகாது…. எது கயிறு….? எது வரவு…? எத்தனைக் கையறுநிலையில் என்னைக் கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறாய்…. நீ என்னை நேசிக்கிறாய்தானே…? இல்லையா….? ஆமாமா….? சரியாகக் கேட்கவில்லை…. சத்தமாகச் சொல்…. இல்லை, நெஞ்சையெல்லாம் கிழித்துக்காட்ட வேண்டாம்… உன் வார்த்தை போதும்… நான் நம்பு கிறேன்… நம்ப முயல்கிறேன்… நான் உனக்குத் தேவை தானே….? இல்லை, அன்பைப் பிச்சையாகப் போட்டிருக் கிறாயா…? ஐயோ, அதை மட்டும் செய்யாதே… நான் உயிரோடு இறந்துவிடுவேன்…”

அந்த வார்த்தைகள் என் ஆன்மாவிலிருந்து வெளிக் கிளம்பிய கணம் யாரோ என்னைச் சடாரெனப் பற்றி யிழுப்பதுபோல் உணர்ந்தேன். மறுகணம், நான் அந்தக் கண்ணாடிச்சுவருக்குள்ளாய் பெட்டிக்குள் நுழைந்து கொண்டிருந்தேன். நான் உள்ளே வலியில் கோணிய முகத்துடன் உறைவுநிலைக்கு வரவும், அந்தக் கண்ணா டிச் சுவரில் எற்பட்ட திறப்பு மூடிக்கொள்ளவும் சரியாக இருந்தது!

மறுபடியும் வெளியே வர என்ன செய்வது என்று புரியாமல் வழிகாட்டியை நோக்கியதில், அவன் நிதான மான விரைவுடன் நானிருந்த பெட்டியை விட்டு விலகிச் சென்றுகொண்டிருப்பது கண்டது. ஒரு பார்வைக்கு அந்த மனிதனுடைய முதுகுப்புறம் மிகப் பரிச்சயமான ஒரு தேகவடிவமைப்பில் தெரிய, இன்னுமொரு உச்சத்தை எட்டியது வலி.



Ø       

















மற்றும் சிலதிறவாக் கதவுகள் _ ’ரிஷி’யின் 3ம் கவிதைத் தொகுப்பு கவிதைகள் 41 _ 45

மற்றும் சிலதிறவாக் கதவுகள்  _ 
’ரிஷி’யின் 3ம் கவிதைத் தொகுப்பு


கவிதைகள்   41 _  45




41.உயிர்நிலை

எழுந்த சமாதிக்குள்
விழி பிதுங்க
மூச்சடைக்க
அதுநாள் நுகர்ந்த வசந்தம்
நெஞ்சு ஊற
நினைவு மீற
தந்ததும் கொண்டதும்
சந்திர சூரியனாக
ஏறிய தேரின் கால்கள்
ஏறிய தேர்க்கால்களாக _
எல்லாம் சுபாவம்….
தின்னத் தீருமோ கொன்ற பாவம்?




42. கொதிகலன்

மண் தின்று சென்ற வண்ணம்.
சோற்றுக்கப்பால் நூற்றுக்கணக்கான பசிகள்.
தோற்றுத் திரும்பும் காற்றின் வசியம்.
நேற்றின் நெருஞ்சிகளில் குருதி கசிந்தபடி.
நெருப்புக் கம்பியாய் சிரசில் சொருகும் சூரியன்
முள்ளெடுக்கும் முள்ளாய் கும்பியாற்ற,
மிதியடிகளைத் துறந்து உச்சிவெயிலின் மிச்சத்தையும்
உள்வாங்கிக்கொள்ளவேண்டும்போல்…..



43. அமரத்துவம்

காலத்தின் கடைசிப் படிக்கட்டில் நின்றவாறு
கடலையே அவதானித்துக்கொண்டிருந்தாள்
அந்த தேவமகள்.
இருகைகளின்  பக்கங்களில் தொய்ந்துகிடந்தது
இயக்கம்.
என்ன வேண்டும் என்று வினவிவரச் சொல்லி
கடல் முன்னுந்தியது அலைகளைக் கனொவோடு.
முகமன் கூறிய நீர்ச்செல்வங்களை
மெல்ல வருடியது அவள் புன்முறுவல்.
அகமகிழ்ந்து தட்டாமாலையிட்டுத் திரும்பின அவை
ஏதும் கேட்காமலே.
எட்டா உயரத்திலிருக்கும் தொடுவானம்
மட்டுமீறிய அன்பில் முதுகு வளைந்து
நடுக்கடலை உச்சிமோந்தது.
பரவிய பரிதிக்கிரணங்கள் வயதின் ரணங்களாற்ற
காலாதீதக் கரையில்
நிச்சலனம் உறைய சித்தித்திருந்த புத்துடலில்
சிறகுகளாகியிருந்தது கத்துங்கடல்!

(* பத்மினி Madamக்கு)





44. ஊழியம்

பொற்கிழிகளை யளித்துப் புதுவயல்களைப்
பரிசிலாக்கி
‘போய் வா பால்வெளி’க்கென
வரமளித்த அரசிக்கு
வந்தனம்
வெண்சாமரம்
வைராபரணம், வழிபாடு
வைபோகம்….
பயணப் பொதி சுமந்து
பயனாளியையும் சுமந்து
அயராமல் கொதிவெயிலில்
வெறுங்கால் நடை பழகும் ஏழைச்
சிறுவனின் பாசம்
விசு வாசமெல்லாம்
எழுதப்படாது போகும்.

 




45.சுமை

சம்மதத்திற்கு அறிகுறியாகா மௌனத்தில்
உறை நெஞ்சின்
அடியாழ வீதியில் போட்டுடைக்க லாகா
பானை நிறைய யோனிகளோடு
வீடடைந்துகொண்டிருக்கிறாள்
தானழிந்த நளாயினி.




சிறுகதை: பலிக்கத்தான் பிரார்த்தனைகள்_’அநாமிகா’ (லதா ராமகிருஷ்ணன்)

சிறுகதை:

பலிக்கத்தான் பிரார்த்தனைகள்

_’அநாமிகா’
(லதா ராமகிருஷ்ணன்)

[* கணையாழி, செப்டம்பர் 2004 இதழில் வெளியானது]





பலிக்கத்தான் பிரார்த்தனைகள் என்று சொல்லலாமா? தெரிய வில்லை. ஆனால் அப்படியான நம்பிக்கையில் தான் மனிதர்கள் தொடர்ந்து பிரார்த்தனை செய்து கொண்டிருக்கிறார்கள்.....

 பல்வேறுவிதமான பிரார்த்தனை கள்.....

 நானும் பிரார்த்திக்காத நாளில்லை. என்னால் மட்டும் பிரார்த்தனையைச் செய்ய முடிவதைப் போல் ‘சாமி’யையும் செய்ய முடிந்திருந்தால் அப்படி நான் சிருஷ்டித்திருக்கக் கூடிய சாமி ஒளிவேகத்தில் எல்லோருடைய பிரார்த்தனைகளையும் நிறைவேற்றிக் கொடுத்திருப்பான். முக்கியமாக, என்னுடைய பிரார்த்தனையை. ஆனால், என்னால் செய்ய முடிந்தது பிரார்த்தனை மட்டும்தான் என்பதால் தனக்குத்தானே பேசிக்கொண்டு தெருவெல்லாம் திரியும் என் பிள்ளையை பெற்ற வயிறு எரிய பார்த்துக் கொண்டிருக்கத்தான் முடிந்தது.

“ஆளு பாக்க எத்தனை ‘ஜம்’னு இருக்காண்டி! இப்படி கிறுக்கனா இல்லாம இருந்தா வசமா ‘கனெக்‌ஷன்’ கொடுத்திருக்கலாம்!”

இரண்டு பெண்கள் என் மகனை சுட்டிக்காட்டிப் பேசி கிளுகிளுத்துச் சிரித்த னர். எந்த சினிமாவிலேயிருந்து கிடைத்த வசனமோ, இல்லை, இதுங்க கிட்டேயிருந்து எந்த சினிமாவுக்கு இந்த வசனம் வரமாகக் கிடைக்கப் போகிறதோ…. சினிமாவுக்கோ…. மெகா சீரியல்களுக்கோ….

அடுத்த வீடு, பக்கத்து வீடு, எதிர்வீட்டிலிருந்தெல்லாம் தொலைக்காட்சி சீரியல்களின் மும்முனைத் தாக்குதல். ஆனால், என் மகன் நடத்தும் ‘தனி மொழி’ உரையாடல்களில் அவற்றின் சுவடே இருக்காது. அப்படியிருந் தால் தான் அவன் ஒரு ‘மெகா சீரியலு’க்கான கதை-வசனத்தை உரத்த குரலில் உருவாக்கிக்கொண்டிருக்கிறான் என்று கித்தாய்ப்பாய்க் கூறிக்கொள்ள லாமே… 

அவனுடைய ‘தனி மொழி’ உரையாடல்களெல்லாம் முழு முற்றாய் வேறு விதமாயிருக்கும்… ஒரு நாள் ஹிட்லரிடம் பேசிக்கொண்டு போவான்… “வதைமுகாமில் உன் சக மனிதர்களை விஷவாயுவால் கொன்றாயே – நீயெ ல்லாம் நாகரீக மனிதனா? வெட்கமாயில்லை உனக்கு…”  இன்னொரு நாள் டினோசரிடம் பேட்டியெடுத்துக்கொண்டிருப் பான்… “உன்னுடைய தோற்றம் உனக்குத் திருப்தியளிக்கிறதா? இல்லை, மானைப் போலவோ, மயிலைப் போலவோ இல்லையே என்று வருத்தப்படுகிறாயா?” 

இரவில் சில சமயங்களில் தனது தலையணையில் தன் தலை பதிந்திருந்த இடம் போக மீதமுள்ள வெற்றிடத்தை வாஞ்சையோடு தடவிக்கொடுத்த வாறே, “எனக்கு மட்டும் மாயாஜால வித்தை தெரிந்தால் உனக்கு வேண்டிய அளவு காரெட் உண்டாக்கித் தருவேன், மை டியர் ஃப்ரெண்ட் முயல்குட்டி, பச்சை, மஞ்சள், ஊதா, நீலம், எல்லாக் கலர்லேயும் வட்டமா, சதுரமா, முக்கோணமா எல்லா ஷேப்லேயும் செஞ்சு தருவேன். கவலைப்படாதே. நான் சீக்கிரமே மாயாஜால வித்தையிலே மாஸ்டராகி உனக்கு வேண்டிய தையெல்லாம் கொண்டாந்து தாரேன் இப்ப சமத்தா தூங்கு பாக்கலாம்….”

மௌனமாக அவனைப் பார்த்துக்கொண்டே உட்கார்ந்திருப்பேன். தலைய ணையை நீவி விட்டுக்கொண் டிருக்கும் அவனுடைய விரல்களினூடாய் ஒரு குட்டி முயல் புன்சிரித்துக்கொண்டிருப்பதைப் போல் சமயங்களில் பிரமையேற்படும். பயமாயிருக்கும்.

பதினேழு வயது வரை நன்றாகத்தானிருந்தான். இந்த ‘நன்றாக’ என்ற வார்த்தை ஏனோ அபத்தமாகவே ஒலிக்கிறது எப்போதும். நேரிடையாகவும் மறைமுகமாகவும் மனிதர்களைக் கொன்று குவிப்பவர்களெல்லாம் ‘நல்ல’ மனநிலையில் இருக்கிறார்கள் என்றுதானே நாம் இன்றுவரை பாவித்துக் கொண்டிருக்கிறோம். சக மனிதனை சுரண்டிச் சாப்பிட்டுக் கொழிப்பவர் களையெல்லாம் ‘சுத்த’ சுவாதீனமுள்ளவர்களாய், ஏன், சமர்த்தர்களாய்க் கூட பாவித்துக்கொண்டுதானே இருக்கிறோம். 

என் பிள்ளை அவனுக் கென்று ஒரு உலகத்தை சிருஷ்டித்துக்கொண்டு அதில் அவன் பாட்டுக்கு பேசிக்கொண்டே சஞ்சாரம் செய்தால் மட்டும் அவன் ‘பித்துக்குளி’யாகிவிடுவது எப்படி? அந்த சாதிக்கலவரத்தில் அவனு டைய ‘சகா’ உயிரொடு எரிக்கப்பட்டதைப் பார்த்த அன்றிலிருந்துதானே இவன் இப்படி ஆனான்… எரித்தவன் ஜாமீனில் வந்துவிட்டான். அவனுடைய அராஜகத்திற்காக என் பிள்ளை இப்படி சிலுவை சுமக்கிறான்… ஜாமீனில் வந்தவன் தன் பங்காளியை ‘பினாமி’யாக்கி தங்கள் சாதியின் தன்மானம் காக்க ஒரு தனிக்கட்சியை ஆரம்பித்தான். அவனுடைய அக்கிரமத்தால் மனம் பேதலித்த என் பிள்ளை ‘ATLAS SHRUGGED’ கணக்காய் இந்த உலகத்தை வெறுத்து ஒரு தனியுலகத்திற்குள் வசிக்கத்தொடங்கிவிட்டான். அந்த அக்கிரமக்காரன் மூளை பிசகாதவன் என்றால் என் பிள்ளை மகான்….

ஆனால்… இப்படியெல்லாம் தர்க்கம் செய்தால் என் மகனைப் பற்றிய சோகத்தால் அவனைப் போலவே எனக்கும் புத்தி பேதலித்துப்போய் நான் புலம்பிக்கொண்டிருக்கிறேன் என்கிறார்கள். தர்க்க நியாயத்தைப் புலம்ப லாக்க இவர்களுக்கு சொல்லியா தர வேண்டும்…’

திடீரென்று, அவ்வப்போது என் பிள்ளையைப் போலவே அக்கம்பக்கத்தில் சிலரும் தனக்குத்தானே பேசிக்கொண்டுபோவதைப் பார்க்க முடிந்தது. ஆச்சரியமாக இருந்தது. பட்டாசு வெடிச்சத்தம் பேதுறுத்த, “நான் மட்டும் இந்தியாவின் பிரதம மந்திரியானால் பட்டாசுத் தடைச் சட்டம் கண்டிப்பா கொண்டுவருவேன்,” என்று பதினான்கு, பதினைந்து வயது விடலைப் பையனாக சமூகத்தின் கண்களில் எல்லோரையும்போல் இருக்கும்போது என் மகன் சொல்வானே, அது ஞாபகம் வந்தது. என் மகன்தான் ‘நார்மல்’ என்ற நிலை ஏற்படவேண்டும் என்று வாய்விட்டு வேண்டிக்கொள்வேனே – அந்த என் இரவுநேரப் பிரார்த்தனைக்கு விடிவுகாலம் பிறந்துவிட்டதா?

இன்னொரு பயமும் எழுந்தது. ‘ஒருவேளை என்னுடைய பையனுடைய ‘தனியுலக சஞ்சாரம்’ ஒருவித தொற்றுநோயாக எல்லாவிடத்திலும் பரவி விட்டதா? சட்டத்தின் முன் குற்றவாளிகளாகிவிடுவோமோ நாங்கள் இருவரும்….?

அதை ‘செல்ஃபோன்’ என்று பிறர் விளக்கக் கேட்டபோது வியப்பாக இருந் தது. என்ன பொருத்தமான பெயர் வைத்திருக்கிறார்கள்! சென்றுகொண்டே ஃபோன் பேசுவதால் செல்ஃபோனோ! அதில் பேசிக்கொண்டே போனவர்கள் எதிரே ஆள் இருப்பதுபோலவே பாவித்து கை கால்களை ஆட்டி ஆயிரம் முகபாவங்கள் மாற்றி, அழுது, சிரித்து அமர்க்களம் செய்தார்கள்!

என் பிரார்த்தனை ஏறக்குறைய பலித்துவிட்டதாய் உணர்ந்தேன். அணிந் திருந்த ஒரேயொரு தங்கச் சங்கிலியை விற்று செல்ஃபோன் வாங்கினேன். அன்று இரவு முழுக்க அந்த செல்ஃபோனினால் என் மகனுக்கு என்னென்ன விதமான இடையூறுகள் ஏற்படும் என்று ஏகப்பட்ட சாத்தியங்களை யோசித்துப் பார்த்தேன். ‘கை போன போக்கில் எண்களை அழுத்த, பொறுக் கித்தனம் செய்வதாய் அடி வாங்கக் கூடும். உதாரணத்திற்கு, 100 என்ற எண்ணை அழுத்தி ஏதாவது சொல்லப்போக, ஸ்டேஷனில் பின்னியெடுத்து விடுவார்கள். இவன் தான்பாட்டுக்கு ஏதாவது வார்த்தைகளை செல்ஃபோ னில் சொல்ல, அதைத் தீவிரவாத சதித்திட்டத்திற்கான சங்கேதச் சொல் லாக்கிக்கொண்டு சமூக விரோதிகள் இவனைச் சிக்கவைத்துவிடலாம். இப்படியாக….

இரவு பத்து மணிக்கு மேல், தூங்கிக்கொண்டிருக்கும் பிள்ளைக்குத் தொந்தரவு இல்லாமல் கிளம்பி, வெளிப்புறமாய்க் கதவைப் பூட்டி, மாணிக் கத்தைத் தேடிக் கிளம்பினேன். முன்னாள் ஃபோன் மெக்கானிக். வேலையிலிருந்து ஓய்வு பெற்று இரண்டொரு வருடங்கள் ஆகியிருக்கும்.

     “என்னா ஸிஷ்டர், எனி ப்ராப்ளம்?”

அந்தக் கேள்வியில் தொனித்த உண்மையான அக்கறையில் கண் கலங்கி விட்டது.

     “அடடா, அழுவாதே ஸிஷ்டர், உன் மகன்தான் உண்மையான                        தேவகணம்.  இந்த உலகத்துடைய அல்பத்தனங்கள் அவனை எந்த         விதத்திலேயும் பாதிக் காது. அவனை அவன் உலகத்துல ஜீவிக்க வுட்டுடு.       அதுதான் அவனுக்கு சந்தோஷம். நாளுக்கு ஒரு வெட்டு, குத்து, வன்முறை,   வெவகாரம்…. அவன் நார்மலானா இன்னும் துக்கம்தான் படுவான்.     இன்னும் பேதலிச்சுத்தான் போவான். வேண்டாம். அவனை இப்பிடியே     விட்டுடு….”

    “அவனைச் சரியாக்க முடியாதுன்னுதான் டாக்டரும் சொல்றாங்க.”

    “சரியாக்கறதுன்னா என்ன அர்த்தம்னே புரியலை ஸிஷ்டர். நடக்கறதை          யெல்லாம் பாத்தா மனசுக்கு ரொம்ப பேஜாரா இருக்குது.”

     “உங்க உதவி தேவை.”

    “சொல்லு ஸிஷ்டர். என்னா, நம்மால வானத்தை வில்லா வளைக்கவோ,      இல்லை, அம்மா புடவை மாதிரி மடிக்கவோ முடியாது… மத்ததெல்லாம்        முடியும்! நீ தயங்காம கேளு!”

கேட்டது கேட்டபடி செய்துகொடுத்தார். செல்ஃபோனின் உட்பகுதியிலிருந்த நுண்பொறிகளையும், மயிரிழைக் கம்பிகளையும் அவர் கைகள் சிற்பியின் லாவகத்துடன் கையாண்டுகொண்டிருப்பதை மௌனமாகப் பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தேன்.

அரைமணி நேரத்தில் கையில் கொடுத்துவிட்டார்!

சொப்புவிக்கிரமாகத் தோன்றிய செல்ஃபோனைக் கையிலெடுத்துக் கொண்டு மனதின் அடியாழத்திலிருந்து மாணிக்கத்திற்கு நன்றி தெரிவித்து விட்டுக் கிளம்பி வந்து, வீட்டின் பூட்டைத் திறந்துகொண்டு உள்ளே நுழைந்தபோது மகன் பாதி தூக்கத்தில் விழித்துக்கொண்டு, “பூ பூவா பறந்துபோகும் பட்டுப்பூச்சி அக்கா…. நீ பளபளன்னு போட்டிருப்பது யாரு கொடுத்த சொக்கா?” என்ற சினிமாப்பாடலைப் பாடி வெற்றுவெளியில் அண்ணாந்து குசலம் விசாரித்துக்கொண்டிருந்தான்.

மெதுவாக அவன் கையில் அந்த செல்ஃபோனைக் கொடுத்தேன். “உன்  ஃப்ரெண்ட்ஸ்கூட எல்லாம் நீ இதிலே பேசலாம் செல்லம்! வீட்ல இருக்கிறப்போ, வெளியில போறப்போ எல்லாம் இதை காதிலே அழுத்தி வச்சுக்கிட்டு அடுத்தவருக்கு அதிகம் கேட்காதபடி மெதுவா பேசிக்கிட்டே போகணும் தெரிஞ்சுதா?”

கண்கள் விரியப் பார்த்தான். “இதுக்குள்ள யாரெல்லாம் இருக்காங்க?”

     “யார்யாரெல்லாம் உனக்கு ஃப்ரெண்டோ அவங்கள்ளாம்!”

     “குட்டி முயல்?”

     “உம்!”

    “கரடி?”

    “உம்!”

   “டினோசார்?”

   ”டார்ஜான்?”

   “ராபின்ஹூட்?”

   “சிட்டுக்குருவி?”

எல்லாக் கேள்விகளுக்கும் என் பதில் ‘ஆமாமா’க இருந்ததில் அளவிட முடியாத மகிழ்ச்சி என் பிள்ளைக்கு.

‘உன்னை யானை மேல உக்காத்தி காடு முழுக்க சுத்திக் காண்பிக்கிறேன் அம்மா” என்று உறுதிமொழி தந்துவிட்டு உறங்கத் தொடங்கினவனை பார்த்தது பார்த்தவாறு அமர்ந்திருக்கிறேன்.

ஒருநாள் விடியலில் கண்டிப்பாக வாசல் கதவு தட்டப்படும்.

திறந்தால் குட்டி யானையும் டினோசரும் கரடியும் முயலுமாய் கூட்டமாக வந்திருக்கும் _ என் பிள்ளையைப் பார்க்க….

பலிக்கத்தான் பிரார்த்தனைகள்…..



Ø