LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Tuesday, December 3, 2019

கண்ணோட்டம் ’ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)


கண்ணோட்டம்

ரிஷி

(லதா ராமகிருஷ்ணன்)




காதுகளும் நாசியுமாகத் 
தாங்கிப்பிடித்திருக்கும்
மூக்குக்கண்ணாடி உதவியோடு
சில பல மின்விளக்குகளின் உதவியோடு
என்னால் பார்க்க முடியும்;
படிக்க முடியும்


ஆனால்,எனக்கு பானை செய்யத் தெரியாது.
பாடத் தெரியாது.
பறவைகளின் மொழியைப்
புரிந்துகொள்ளவியலாது.
பல காதங்கள் நடந்துசெல்ல முடியாது.
பகலவனை அண்ணாந்து பார்த்து
சரியான நேரத்தைக்கணித்துச்
சொல்லவியலாது.
பசியில் வாடும் அனைத்துயிர்களுக்கும்
அட்சயபாத்திரமாகவியலாது.

பார்ப்பதால் எனக்குப்பார்க்கத்
தெரியுமென்று
நிச்சயமாகச் சொல்லவியலுமா என்ன?

பார்வைகள் ஆயிரம் எனில்
எனக்குத் தெரிந்தவை
பத்துக்குள் தான் இருக்கும்.....

அவருக்குப் பார்க்கமுடியாது;
ஆனால் பாடத் தெரியும்;
அற்புதமாக கிடார் வாசிக்கத் தெரியும்;
அவர்கள் வீட்டுப்பூனையிடம்
அவர் எப்படி அளவளாவுவார் தெரியுமா!

அந்தத் தெருமுனையிலிருக்கும் ஜூஸ் கடையில்
அவர் முப்பது ரூபாய் ஜூஸ்
குடிக்கும்போதெல்லாம்
அந்தக் கடைப்பையன்கள்
அத்தனை நேர்மையாகப் பிழிந்துதரும்
ஒன்றரை கோப்பை பழச்சாறில்
அரைகோப்பையை
தொலைதூர ஊரிலிருந்து வந்து
வேலைபார்த்துக்கொண்டிருக்கும்
தன் தம்பியொத்த சிறுவனுக்கு
அத்தனை அன்போடு தந்துவிடுவார்.

பார்க்கவியலாத தன்னைப் பார்த்தபடி
பேசும் மனிதரின்
மனதிலோடும் வரிகளை மிக நன்றாகவே
படித்துவிட முடியும் அவரால்.

பார்வைகள் ஆயிரமும் அவருக்கு
அத்துப்படியில்லையாயினும்
அறுபதாவது பரிச்சயமுண்டு கண்டிப்பாய்.

அதற்கும் மேல்

அம்மா அப்பாவிடம் அன்பாக
நடந்துகொள்ளத் தெரியும்;
அடுத்தவர் மனம் நோகாமல்
மாற்றுக்கருத்துகளை முன்வைக்கத்
தெரியும்.
அவ்வளவாகத் தன்னைப் பொருட்படுத்தாத
சமூகத்தின் அறியாமையை
மன்னிக்கத் தெரிகிறது;
மறந்துவிடக்கூட முடிகிறதுஅவரால்.

சுருக்கமாகச் சொல்வதென்றால் _
அவரால் பார்க்கமுடியவில்லையெனில்
அவரைப்போலவே என்னாலும்;

என்னால் பார்க்கமுடியுமெனில்
பார்த்தபடியேதான் அவரும்.


ON THIS DAY 3RD DECEMBER - INTERNATIONAL DAY OF THE DIFFERENTLY-ABLED....





The Differently Abled || A Heart Touching Short Film