அன்பின் விலை
ரிஷி
யாருமே சொல்லாதவொரு காரோப்ளேன் கதை சொன்னான் –
பேரானந்தமாயிருந்தது குழந்தைக்கு.
சீராட்ட அதன் கையில் சில
புலிப்பஞ்சவர்ணக்கிளி யளித்தான்.
கலகலவென்று கைகொட்டிச் சிரித்தது பிள்ளை.
விண்ணோக்கிப் பாயுமொரு ஆறு பாரு
என்று காட்டினான்.
கண்விரியக் கண்டுகளித்தாள் குட்டிமனுஷி.
குழந்தைக்கு அவனை மிகவும் பிடித்துவிட்டது.
யார் தனக்கு சாக்லேட்டுகள் தந்தாலும்
அதில் அதிகம் அவனுக்கென எடுத்துவைத்து
குறைவாய் தன் வாயில் போட்டுக்கொண்டது.
அவனுடைய தொண்டைக்குள் இறங்கும் இனிப்புச் சுவை
குழந்தை வாயில் அமுதமாய் ருசித்தது.
அவன் ஒரு புகைப்படக்காரன்.
புதுப்புது கதை சொல்லி பிள்ளைக்கு சிநேகக்காரனானான்.
படிப்படியே பிள்ளையின் உலகமே அவனாகிப் போனதை
அவன் அறிவானோ, அறியானோ…..
’உயிர்ப்பின் சாரம்’ என்ற தலைப்பில்
அகில உலக புகைப்படப் போட்டிக்கு அனுப்ப வாகாய்
குழந்தையைப் பலகோணங்களில் படம்பிடித்துக்கொண்டான்.
வந்த வேலை முடிந்தபின் விடைபெறவேண்டியதுதானே.
குழந்தையை ஒருமுறை தூக்கிக் கொஞ்சி
’போய்வருகிறேன், சாக்லேட் வாங்கிவருவேன்.’ என்றான்.
’சாக்லேட் வேண்டாம் -நீ சீக்கிரம்வந்தால் போதும்’ என்று
உதடு பிதுங்கச் சொல்லிக் கையசைத்தது குழந்தை.
முதற்பரிசு கிடைத்தபின் ஒருமுறை திரும்பிவந்தான்
வேறு பல குழந்தைகளோடு சேர்ந்து நின்று
ஸெல்ஃபி எடுக்கும்போது
இந்தக் குழந்தையையும் அழைத்தான்.
பத்தோடு பதினொன்றாகப் பிடிக்காமல்
அழுதபடி மறுத்துவிட்ட குழந்தை
தன்னோடு மட்டுமே பேசும் கரடி பொம்மைக்குக் கதைசொல்ல
மரநிழல் தேடிச் சென்றது.
அடுத்த புகைப்படப்போட்டிக்குத் தயாராகச் சென்றுகொண்டிருக்கும்
அவன் தோள்பையில் கனத்துக்கொண்டிருக்கின்றன
காட்பரீஸ் சாக்லெட்டுகள்.