ஒரு குரலை ஒடுக்குவதற்கான வழிகள்
‘ரிஷி’
தொலைக்காட்சிப் பெட்டிக்குள்ளிருந்தெழும் மிகையுணர்ச்சி வசனங்களின் ஒலிகூட்டிவிடவேண்டும்.
உடனே விரைந்தோடி வாங்கவரும்படி வீறிட்டுக்கொண்டிருக்கும் விளம்பரங்களை நம்புவது உத்தமம்.
உண்மைக்காக அலறிக்கொண்டிருக்குமொரு குரலுக்குரிய முகத்தில்
கண்மையோ, கரியோ, தாரோ கொண்டு கருப்பைத் தீற்றிவிடவேண்டும்.
துடைத்தெடுக்க நேரமெடுக்கும்படியாக அழுத்தமாக அப்புவது
எப்பொழுதுமே நேரிய பலனளிக்கும்.
அதைவிட எளிதாக, அக்குரலை நகலெடுத்துப் பேசிக்காட்டி அதன் உள்ளடக்கத்தை நகைச்சுவையாக்கிவிடலாம்.
நம்மூரில் மட்டுமல்ல எங்கேயுமே நகைச்சுவைக்கு மவுசு அதிகம்தான்.
ஒற்றைக்குரல்தானே என்று சற்றே அலட்சியமாயிருந்துவிட்டால் ஆபத்து.
அற்றைத்திங்களில் அப்படியிருந்தது அதன்பிறகு பெருவெள்ளமாகப் பீறிட்டதெல்லாம் வரலாறு.
சற்றைக்கொருதரம் முற்றுப்புள்ளிவைக்க மறக்கலாகாது.
குரலின் நிறபேதங்களாக தங்களுக்குத் தோன்றியவற்றையெல்லாம்
தொல்பொருளாராய்ச்சி முடிவுகளாகத் தரத் தெரியவேண்டும்.
குறிப்பிட்ட ஒரு குரலை ஒடுக்குவது அறச்செயலெனவும்
குரலின் பொருளில் சாரமிருந்தாலும் அதன் தொனி அரதப்பழசு என்பதாய்
பெரிய பெரிய வார்த்தைகளில் பூடகமாய்ப் பேசவேண்டும்.
கவிதையில் இருண்மையைப் பழிப்பது வேறு.
காற்றுள்ளபோதே தூற்றிக்கொள் என்பார் காற்றைத்தூற்றுவதாகக் கூறு
முடிந்தால் வழக்குப் போடப் பாரு.
சேற்றில் முளைத்த செந்தாமரையென்று சொல்லாமல்
சொல் செந்தாமரை முளைத்த சேறு.
சிற்றுலா வருமோ இனி மாடவீதியில் தேரு ….
_ இன்னும் நூறு நூறு
சம்பந்தமில்லாமல் பேசி சத்துள்ளதைப் பேசுவதை
வெத்துக்குரலாக்கி மொத்தமாய் வீசியெறியக்
கற்கவேண்டும் கசடற.
சிதறுதேங்காயைக்கூடப் பொறுக்க விடலாம்
உண்மைக்காய் கதறுங்குரலை
ஒரு கணமும் பிறர் உற்றுக்கேட்பதைப் பொறுத்துப்போகலாகாது.
இறுதிமுயற்சியாக, அல்லது, இடையிலேயே கூட
உறுத்தும் குரலை அறுத்தெரியவேண்டியது அவசியம்.
ரகசியமாகவோ அல்லது பட்டப்பகலிலோ
அதன் குரல்வளையை இறுக நெரிக்கவேண்டும்.
உயிர் பிரியாமல் பார்த்துக்கொள்வது முக்கியம் –
கொலைக்குற்றத்திற்கு ஆளாகிவிடக்கூடாதல்லவா….
இதுபோலுமிங்கே இருத்தலியல்.
இன்னும் நீண்டுகொண்டே போகும் பட்டியல்.
No comments:
Post a Comment