LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Saturday, February 16, 2019

மலையும் மலைமுழுங்கிகளும் - 1 - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

மலையும் மலைமுழுங்கிகளும் 1
ரிஷி
(லதா ராமகிருஷ்ணன்)

{சமர்ப்பணம்: அர்ப்பணிப்பு மனோபாவத்தோடு ஒருவர் மேற்கொண்ட புத்தகப்பணியின் பயனை அடிப்படையாகக் கொண்டு இலக்கிய உலகில் இடம்பிடித்த பின் ஏறிய ஏணியை எட்டியுதைக்க சதா கால் அரிப்பெடுத்துக்கொண்டிருப்பவர்களுக்கு}



யாருமே நுழையமுடியாத அடர்ப்பெருங்காட்டிற்கப்பால் 
ஆகாயமளாவ
அடிக்கு அடியிருந்த வழுக்குப்பாறைகளெங்கும்
படர்ந்திருந்தன பலவகை முட்கள்.


கைக்காசை செலவழித்து, மெய்வருத்தம்
பாராதொழித்து
உயிரைப் பணயம் வைத்து
கயிறு அறுந்துவிழுந்தபோதெல்லாம்
காற்றை இறுகப்பிடித்துக்கொண்டு
உள்ளங்கைகளெங்கும் சிராய்த்துக்
குருதி பெருக
உடலின் அயர்வில் உயிர் மயங்க
மலையை வாகாய் சீரமைத்ததோடு
படிக்கட்டுகளையும் செதுக்கி முடித்தான்.


ஆர்வமாய் ஏறியவர்கள்
சிகரம் தொட்ட பின் சுற்றிலும் பார்த்தால்
காணக்கிடைத்ததெல்லாம் சொர்க்கம்!


நறுமணப்பூக்களும்
மூலிகை மரங்களும்
அதியமான் நெல்லிக்கனிகளாய்க் கிடந்தன!


அரிய புள்ளினங்கள்!
பரவும் தரிசனப் பேரொளி!


மாற்றான் சிந்திய வியர்வையில்
முன்னேறுவது எப்படி என்று
முப்பதே நாட்களில் கற்றுக்கொள்வதில்
கைதேர்ந்த சிலர்
விறுவிறுவென ஏறத்தொடங்கினார்கள்.


எல்லாவற்றையும் செல்ஃபியில்
சிக்கவைத்ததோடு
அருமருந்து மூலிகைகளையும்
அள்ளித்திணித்துக்கொண்ட பின்
கடைவிரிக்கத் தோதான இடத்தைக்
கச்சிதமாய்க் கணக்குப் பண்ணியவாறே
கீழிறங்குகையில்
காலந்தாக்கி சற்றே உடைந்திருந்த
ஒரு படிக்கட்டு முனையை
கவனமாய்ப் படம்பிடித்துக்கொண்டார்கள்.


கடைசிப்படியில் காலைவைத்ததுமே
கூவத்தொடங்கினார்கள் –
கேவலம் ஒரு படிக்கட்டைக் கூட
சரியாகக் கட்டத் தெரியவில்லை யென்று.


இன்னொருவன் மாங்குமாங்கென்று
உழைத்து
முதுகுடையத் தாங்கிப்பிடித்து
நிமிர்த்தி நிற்கவைத்த மலையைத்
தமக்கு வெள்ளிக்காசு தரும் சுற்றுலாத்தலமாக
மாற்றிக்கொண்டதோடு நில்லாமல்
மலையபிமானத்தோடு நடந்துகொண்டவனை
வசைபாடும் வித்தகம்
சில மெத்தப்படித்த மேல்தாவிகளுக்கே உரிய
’ஹை_ஃபை’ வர்த்தகம்.


அதுபற்றியும் பேசுமோ என்றேனும்
அவர்களின் ஏதாவதொரு 'பென்னம்பெரிய' புத்தகம்….?

Thursday, February 14, 2019

மலையும் மலைமுழுங்கிகளும் - 2 - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

மலையும் மலைமுழுங்கிகளும் - 2


ரிஷி
(லதா ராமகிருஷ்ணன்)


{சமர்ப்பணம்: அர்ப்பணிப்பு மனோபாவத்தோடு ஒருவர் மேற்கொண்ட புத்தகப்பணியின் பயனை அடிப்படையாகக் கொண்டு இலக்கிய உலகில் இடம்பிடித்த பின் ஏறிய ஏணியை எட்டியுதைக்க சதா கால் அரிப்பெடுத்துக்கொண்டிருப்பவர்களுக்கு}



எத்தனை நாட்களுக்குத்தான்
எட்டியுதைத்துக் கொண்டேயிருப்பீர்கள் 
ஏறிவந்த ஏணியை?


நூலேணியாக இருந்திருப்பின்


கால்சிக்கித் தலைகீழாகி 
நீங்கள் உருண்டுபுரண்டிருக்கக்கூடும்.


மரத்தாலானது என்றால் 
நீங்கள் உதைக்கும் உதைக்கு
அதன் கட்டைகள் சில உடைந்தும் 
கயிறு பிரிந்தும்
தெறித்துவிழுந்து 
கடைசிப் படியில் நீங்கள் 
கிடக்கநேர்ந்திருக்கும் இதற்குள்.

ஆனால், வெறும் ஏணியல்ல அது – 
மலை.

அற்பர்களின் காணெல்லைக்கப்பாலிருக்கிறது 
அதன் தலை.

காசின் சுவடறியாது அதன் விலை 
என்பதே என்றுமான உண்மைநிலை.

இது வெறும் எதுகை-மோனை யில்லை.

அந்தரவெளியே அதன் தஞ்சமாக -
கிருஷ்ணகல்யாணக் கச்சேரிகளுக்கும்
பொச்சரிப்புகளுக்கும்.
என்றுமிருந்ததில்லை பஞ்சம்.

உங்களால் உய்த்துணரவியலா 
ஓராயிரம் சிலைகள்
அதனுள் 
உயிர்த்தெழக் காத்திருக்கின்றன.

எத்தனைதான் எட்டியுதைத்தாலும் 
முட்டிமோதினாலும்
நொறுங்கிமுறியப்போவது 
உங்கள் எலும்புகளே 
என்பதைக்கூட உணரமுடியாத அளவு
அத்தனை வீராதிவீரர்களா நீங்கள்?

கோராமையாக இருக்கிறது.

எட்டியுதைக்க மட்டுமே பணிக்கும் 
உங்கள் கால்களை 
நீங்கள் உண்மையிலேயே மதிப்பவராயிருந்தால்
கட்டப்பாருங்கள் அவற்றின் உதவியோடு _

குட்டிக் குன்றையாவது.

*

Wednesday, February 13, 2019

துளிஞானம் ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

துளிஞானம்
ரிஷி
(லதா ராமகிருஷ்ணன்)


குறையென்றால் குறைக்கவும்
கூட்டென்றால் கூட்டவும்
கைவசப்படவில்லை
காலமும்
கவிதையும்.

இல்லாதிருக்கும்….. ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)


இல்லாதிருக்கும்…..
ரிஷி
(லதா ராமகிருஷ்ணன்)

 
பாழுங்கிணறின் ஆழம்
புலிவாய்ப் பெரும்பிளவு
ஆயிரங்குளவிக்கொட்டு
பலிபீடம்
உருள்தலை
பசித்தவயிறு
பிரார்த்தனையின்
எட்டாத் தொலைவு
சுட்ட சட்டியை விட்டுவிடாக் கை
மைபோட்ட வெற்றிலை காட்டும்
முகம்
கொடூரப் பேயாட்டம்
கூர்தீட்டிய வாள்
முனைக் குரல்வளை
காணாமல் போன குழந்தையின்
விசும்பல்தடம்
உள்ளிழுக்கும் நச்சுப்புதர்க்காடு
ஓடுடைந்த வீட்டிலிறங்கும் கருநாகம்
காகத்தின் எச்சம் மண்டையை எரிக்கும்
கண்கிழித்துருவாகுமொரு கனவு
எனக்கென வந்த நிலவு
தேய்வழிச்செலவு
உண்ண உணவு அருந்த நீர்
சுவாசிக்கக் காற்று சிறகடிக்க வானம்
செரிமானமாகா அவமானம்
இருந்தும்
அதிரூபம்
அருமருந்து
அன்றாடம்
ஆயினும்
அதிசயம்
ரகசியம்
சொல்லும் கிளிப்பிள்ளை
சொக்கத்தங்கம்
சூக்குமக்கவிதை
சிதம்பரம்.


கவியும் கவிதையும் வாசகரும் வாசிப்பும்


கவியும் கவிதையும் வாசகரும் வாசிப்பும்

 லதா ராமகிருஷ்ணன்
ஒரு கவிதை கவி மனதில் எப்படி உருவாகிறது? மனதிலிருந்து தாளில் வரிகளாகும் போக்கில் அதில் நேரும் மாற்றங்கள் என்னென்ன? அவற்றில் பிரக்ஞாபூர்வமாக நேரும் மாற்றங்கள், கவியறியாமல் நேரும் மாற்றங்கள் என்னென்ன? இதையெல்லாம் தன் ஒரு கவிதையை முன்வைத்து கவிஞர் கள் எழுதினால் உண்மையான கவிதையார்வலர்களுக்கு (கவிஞர்களும், வாசகர்களே) அவற்றிலிருந்து நிறைய வழிகள் கவிதைக்குள் கவியுலகில் நுழைய ஏதுவாய் புலப்படலாம்.

ஒரு கவிதையை கவி என்ன நினைத்து எழுதினாரோ அதேயளவாய் ஒரு வாசகர் உள்வாங்குவது சாத்தியமா? அது அவசியமா? ஆனால். ஒரு கவிதை அது என்ன நினைத்து எழுதப்பட்டதோ அதற்கு நேர்மாறான அர்த்தத்தை ஒரு வாசகர் மனதில் தந்தால் அது கவியின் தோல்வி என்றோ வாசகரின் தோல்வி என்றோ கொள்ளவேண்டுமா?
கவிதையின் அத்தனை வார்த்தைகளும், வரிகளும் ஆற்றொழுக்காய் முற்றான ஒற்றை அர்த்தத்தை தரவேண்டியது அவசியமா? அகல்விரிவான விவாதங்களுக்கு உள்ளான, உள்ளாகிவரும் கேள்விகள் இவை.
ஒரு கவிதை தனக்குப் புரியவில்லை என்பதால் அது கவிதையேயில்லை என்று சொல்பவர்களிடம் நாம் விவாதித்துப் பயனில்லை; விவாதிக்கவேண்டி யதில்லை. ஆனால், உண்மையான ஆர்வத்தோடு, கவிதை புரியவில்லையே என்று வருத்தப்படும் வாசகர்களை அப்படி கடந்துசென்றுவிட இயலாது; அப்படிச் செய்யக்கூடாது.
இந்த நோக்கில் எனக்குப் புரியும் அளவில் சில பிடித்த கவிதைகளைத் தந்து அதில் எனக்குக் கிடைத்த அர்த்தத்தை தரத் தோன்றுகிறது.

முதலில்விளையாடும் பூனைக்குட்டிஎன்ற தலைப்பிலான கவிதை:

.நா.சு ( ‘எழுத்து’, ஏப்ரல் 1959(.நா.சு கவிதைகள் (சந்தியா பதிப்பகம் – 2002) தொகுப்பிலிருந்து

விளையாடும் பூனைக்குட்டி
மல்லாந்து படுத்துக் கால்நீட்டிக்

குறுக்
கிக்கயிற்றின் துணியைப் பல்லால்கடித் திழுத்துத்
தாவி எழுந்து வெள்ளைப் 
பந்தாக
உருண்டோடி கூர்நகம் காட்டி
மெலிந்து சிவந்த நாக்கால்
அழுக்குத் திரட்டித் தின்னும்
பூனைக்குட்டி _
என்னோடு விளையாடத் தயாராக
வந்து நின்று, என் கால்களில் உடம்பைச்
சூடாகத் தேய்த்துக்கொண்டு நிமிர்ந்து
அறிவு ததும்பும் கண்களுடன் என்னைப்
பார்க்கிறது. அப்போது நான்
சிலப்
பதிகாரம் படித்திருந்து விட்டேன்.
பின்னர்
நான் அதை விளையாட
மியாவ் மியாவ் ஓடி வா
என்று கூப்பிடும் போது நின்று
ஒய்யாரமாக ஒரு பார்வையை என்
மேல் வீசிவிட்டு மீன் நாற்றம்
அடிக்கும் கொட்டாவி விட்டுக்கொண்டே
அடுப்படியிலே போய்ச் சுருண்டு படுத்துக்கொள்கிறது
பூனைக்குட்டி.


கவி பூனையைப் பற்றித்தான், பூனையின் இயல்பை மட்டும்தான் எழுதினாரா? அல்லது, பூனை ஒரு குறியீடா? கண்ணில் பட்டு மனதைக் கவர்ந்த ஒரு காட்சியைக் கவிதையாக்குதல் நடப்பதுதான். .நா.சுவின்கூஃபிஎன்ற அவருடைய வளர்ப்புநாயைப் பற்றிய கவிதை மிகவும் பேசப்பட்ட கவிதை.
ஆனால், இந்தக் கவிதையை வெறும் காட்சிப்படுத்தலாக மட்டுமே அந்தக் கவி எழுதியிருப்பாரா?
ஒரு வாசகராக எனக்கு இந்தக் கவிதை தரும் அர்த்தாக்கங்கள் அனைத்தும் கவி வழியானதா? என் மனம் வழியானதா?
கவிதை காட்சிப்படுத்தும் பூனைக்குட்டி மல்லாக்கப் படுப்பதும், காலை நீட்டுவதும், கயிறு நுனியை இழுப்பதும்எல்லாமே அது இயல்பாகச் செய்வதா? அல்லது கவிதைக்குள்ளிருப்பவரின் கவனத்தைக் கவரச் செய்கிறதா?
அப்படி கவனத்தை எதற்குக் கவரவேண்டும்? அன்போடு முதுகை வருடித்தருவார் என்ற எதிர்பார்ப்பிலா? குடிக்கப் பால் தருவார் என்பதற்கா?
அறிவு ததும்பும் கண்களோடு பூனை பார்ப்பதாகச் சொல்லும் கவி அப்போது நான் சிலப்பதிகாரம் படித்திருந்துவிட்டேன் என்கிறார். இதில் சிலப்பதிகாரம் என்ற நூலின் பெயர் ஒரு நூல் என்ற அளவில் இடம்பெறுகிறதா? அல்லது, குறிப்பாக எதையேனும் உணர்த்துகிறதா?
அறிவுததும்பும் கண்களைக் கொண்ட பூனை என்ற விவரிப்பு எனக்கு சென்னையில் வெள்ளம் வந்தபோது ஐந்துநாட்கள் முதல் மாடி நெருங்கு மளவு வந்துவிட்ட நீரைப் பார்த்துக்கொண்டே மொட்டைமாடிக்குச் செல்லும் படிக்கட்டுகளில் இருந்தவண்ணம், கீழே தரைபெயர்ந்தால் என்னாவது என்று திரும்பத்திரும்ப எழும் நினைப்பை வலுக்கட்டாயமாகத் தள்ளிவிட்டபடி நின்றுகொண்டிருந்ததை நினைவுபடுத்துகிறது.
அதுவரை பூனையைப் பற்றி நான் பெரிதாக நினைத்ததில்லை. ஆனால், அந்த வெள்ளத்தில் ஒரு பூனை தன்னந்தனியாகத் தன்னைக் காத்துக் கொள்ளப் போராடிக்கொண்டிருந்ததைப் பார்த்தோம். வெள்ளத்தின் உயரம் ஏற ஏற அது ஜன்னல், ஜன்னலின் மேற்புறம் இன்னும் மேலே என்று தாவிக்கொண்டே யிருந்தது.
வெள்ளத்தில் அடித்துக்கொண்டுவரும் கட்டை, பலகையைப் பார்த்தால் அது பாதுகாப்பானதா என்று ஒற்றைக்காலை வைத்துப் பார்த்து பின் வேண்டா மென்று முடிவெடுக்கும். காப்பாற்ற வந்தவர்களை யும் அது நம்பவில்லை. இறுதியில், கீழே தரைக்குப் பத்தடி உயரத்தில் இருந்தது ஒரே பாய்ச்சலில் ஒரு பெரிய மரத்தின் மீதும் அங்கிருந்து மொட்டைமாடிக் கும் குதித்தது. மூக்கில் ரத்தம். எங்கள் வீட்டுக்குப் பக்கத்து வீட்டில் ஒரு சிறுமி இருந்தாள். நாங்கள் மருந்து போட்டோம். "பூனைக்கு எத்தனை புத்தி பார்!" என்றால்என் ஃப்ரெண்ட்ஆயிற்றேஎன்று முகத்தில் மகிழ்ச்சி பளபளக்கச் சொல்வாள்.
அதன்பின் வேறு வாடகைவீட்டுக்குப் போகும் வரை அதை மதிப்பார்ந்த உறவாக பாவித்து சாப்பாடு, பால் வைப்பது வழக்கமாகியது. உடல்நிலை சரியாகி, ஊரில் நீரும் வடிந்த பிறகு பூனை வரும், சாப்பிடும், சற்று நேரம் மாடிப்படிக்கட்டில் தூங்கும், பின் போய்விடும்.
அன்பு என்ற பெயரில்என்னைக் கொஞ்சு என்னைக் கொஞ்சுஎன்று கெஞ்சாது. ஒரு சரிநிகர்சமானமான மனப்பாங்கில் அது நடந்துகொண்டது நெகிழ வைத்தது. வீட்டை காலிசெய்தால் அது என்னாகும் என்றெல்லாம் மனம் அலைபாய்ந்தது. அதற்கு என்ன தெரிந்ததோ, நாங்கள் காலிசெய்வதற்கு மூன்று நாட்கள் முன்பிருந்து அது எங்கள் வீட்டுக்கு வருவது நின்றுவிட்டது.
.நா.சுவின் இந்தப் பூனைக்குட்டி அதையெல்லாம் நினைவுக்குக் கொண்டுவருகிறது. ஒரு கவிதை நமக்குப் பிடித்துப்போவதற்கான காரணங்களில் ஒன்று இந்தவிதமான association of ideas என்று சொல்லலாம்.
ஆனால், கவிதையின் மையப்புள்ளி எது? கவிதைக்குள்ளிருக்கும் நபர் சாவகாசமாய்ப் படித்து முடித்து தன் கவனத்தை பூனைமீது திருப்பும்போது அது தனக்கான இரையைத் தேடிக்கொண்டு(மீன் நாற்றம் அடிக்கும் கொட்டாவி விட்டுக்கொண்டே) உண்டுமுடித்து அடுப்படியிலே போய்ச் சுருண்டு படுத்துக்கொண்டுவிடுகிறது. அப்படியென்றால் அந்தப் பூனைக்குட்டி அவரிடம் வந்தது சாப்பாட்டுக் காகவா? அது அவரோடு விளையாடத் தயாராக இருந்ததே? அறிவு ததும்பும் கண்களோடு அவரைப் பார்த்ததே! அவருடைய கால்களில் உடம்பைச் சூடாகத் தேய்த்துக் கொண்டதே!
பூனைக்குட்டியாய் காலையே சுத்திக்கொண்டி ருக்காதேஎன்று வேலையிலிருக்கும் தாய் தன் கவனத்தை ஈர்க்க முயலும் குழந்தையிடம் சொல்லக் கேட்டிருக்கிறேன். கணவன் அல்லது மனைவி தன் இணை குறித்து மூன்றாமவரிடம் வேடிக்கையாய் முன்வைக்கும் சில விமர்சனங்கள் அந்த இணையை எத்தனை குன்றிப்போகச் செய்யும் என்பதையும் நாம் பார்த்திருக்கலாம்.
பக்கத்தில் இருப்பதுதானேதன்னுடையதுதானே என்று பாராமுகமாய் இருந்துவிட்டால் பின் எந்த அன்பும் அதேயளவாக இருக்காதுபோய்விடும். காலைச் சுற்றிவரும் பூனைக்குட்டி கூட, ஒரு கட்டத்திற்குப் பின் தன் பாட்டில் சென்றுவிடும். தனக்கான இரையைத் தேடக் கற்றுக்கொண்டுவிடும்.
ஏதொன்றையும் நாம் உண்மையிலேயே மதித்தால் அது எதுவாக இருந்தாலும், யாராக இருந்தாலும் உரிய கவனம் தந்து, கவனிப்பு தந்து நடத்தவேண்டியது / நடக்கவேண்டியது அவசியம்.
உங்கள் அன்புக்குரியவரை நேசித்தால் மட்டும் போதாது. அவர்களுக்காக நேரம் ஒதுக்குங்கள். அவர்களிடம் அவர்களை நீங்கள் பொருட்படுத்து வதை வெளிப்படுத்துங்கள்; அவர்கள் உங்களுக்கு முக்கியம் என்பதைப் புலப்படுத்துங்கள். தொலைக் காட்சி நிகழ்ச்சி பாணியில், குதித்துக் கூச்சல் போட்டு அல்ல. அன்பைத் தெரிவிக்க வழிகளா இல்லை?
கணவனோ, காதலியோ, தாயோ, நண்பரோ, பிள்ளையோ - Take it for granted ஆக உங்கள் அன்பிற்குரியவரை பாவிக்காதீர்கள், நடத்தாதீர்கள். மோப்பக் குழையும் அனிச்சம் முகம் திரிந்து நோக்கக்குழையும் விருந்து என்றார் வள்ளுவர். விருந்தினரே அப்படியென்றால் நெருங்கிய உறவு உங்கள் பாராமுகத்தால் எத்தனை காயப்பட்டுப் போவார்கள்? நம்மைப் பிறர் அப்படி நடத்தினால் நம் மனம் எத்தனை உள்ளாழ வலியை உணரும்?
.நா.சுவின் பூனைக்குட்டி கவிதையைப் படிக்கும்போதெல்லாம் இந்தவிதமான என்ணங்கள் தவறாமல் ஏற்படும். நாளை மறுநாள் Valentine’s Day. .நா.சுவின் இந்தக் கவிதையிலுள்ள பூனைக் குட்டியை நினைவில் கொள்வோம். தவறவிடும் தருணங்கள் திரும்பக் கிடைக்காது என்ற புரிதலோடு வாழ்க்கையை, உறவுகளை அணுகப் பழகுவோம்.