குகைமனம்
சில குகைகளுக்கு வாயில்போல் திறப்பு இருக்கும்
உள்ளே சற்றே அகன்றிருக்கும்
சில குகைகள் மலைகளில்
சில கடலாழங்களில்
சுற்றிலும் சூழ்ந்திருந்த நீர் உள்ளே வரா
நதியடி பாறைப்பிளவுக் குகையொன்றில்
பதுங்கியிருந்த சேங்கள்ளனை
உடலெல்லாம் எண்ணெய் தடவி அவன் கையிலகப் படாமல்
சிறைப்பிடித்த தன் பாட்டனாரின் பெருமையை
இன்னும் அவ்வப்போது என் தாய் சொல்லக் கேட்டுக்கொண்டிருக்கிறேன்.
சில குகைகளுக்குள் சூரியக்கதிர்கள் உள்நுழையும்
சிலவற்றில் அனுமதி மறுக்கப்படும்.
உள் அப்பிய இருட்டில்
அடுத்த அடியில் அதலபாதாளம்போல்
அச்சம் நிறைந்ததில் அரைக்கணம் விக்கித்துநின்று பின்
ஆர்வம் அதைவிட நிறைக்க அடியடியாய் நகரும் கால்களில்
இடறாத பொருளெல்லாம் இடறும்போல்
படக்கூடும் நீண்டகைகள் பொக்கிஷப்பெட்டகம் மீது
ஐயோ காலைச்சுற்றுவது என்ன கந்தல் கயிறா? கருநாகமா?
காட்டுராஜாவின் உறுமலா அது? அல்லது நான் மூச்சுவிடும் ஓசையா?
இருளின் ஒளியில் எனக்குத் தெரியக்கூடும் இருபுறமுமான இறுகிய பாறைச்சுவர்களில் இல்லாத சித்திர எழுத்துகள்.
குகையின் மறு ஓரம் யாரேனும் சங்கிலியால் பிணைக்கப்பட்டிருக்கிறார்களோ?
எத்தனை காலமாய்?
ஒருவேளை சற்றே எக்கினால் மேற்புறம் என் தலை தொடும் இடத்தில்
தேவதையொன்று எனக்காகத் தன் இறக்கைகளைக் கழற்றிவைத்திருக்கலாம்.
தேடிப்போகாமலேயே குகைகளுக்குள் புகுந்துபுறப்படும் வாழ்வில்
தேடித்தேடிச் சரண்புகும் குகைகளாய் கவிதைகள்.
No comments:
Post a Comment