LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Wednesday, May 23, 2018

ஒரு மொழிபெயர்ப்பாளரின் வாக்குமூலம் - லதா ராமகிருஷ்ணன்

ஒரு மொழிபெயர்ப்பாளரின் வாக்குமூலம் 

()

சொல்லவேண்டிய சில

 லதா ராமகிருஷ்ணன்

 

என்னுடைய மொழிபெயர்ப்புநூலான ஜாக் லண்டனின்  A PIECE OF STEAK (ஒரேயொரு இறைச்சித்துண்டு) குறு நாவலில் இடம்பெறும் என்னுரை – 

                                                 _லதா ராமகிருஷ்ணன்

(*தனி நூலாகவும், அமேஸான் மின் - நூலாகவும் வெளியாகியுள்ளது)

 

வணக்கம். அமெரிக்க எழுத்தாளர் JACK LONDON எழுதிய A PIECE OF STEAK என்ற சிறுகதை (குறுநாவல் என்றும் சொல்லலாம்) என் மொழிபெயர்ப்பில் வெளியாகி யுள்ளது.

 

 பல வருடங்களுக்கு முன்பு இந்தக் கதையை கவிஞர் வைதீஸ்வரன் கொடுத்து என்னை மொழிபெயர்க்கச் சொன்னார். மொழிபெயர்த்து முடித்து ஒரு சிற்றிதழாளரிடம் அனுப்பிவைத்தேன். அது வெளியா கவேயில்லை. அதற்குப் பின், வீடு மாற்றும்போது தொலைந்துவிட்டது என்று அந்த இதழின் ஆசிரியர்உரிமையாளரிடமிருந்து தகவல் தெரிவிக்கப்பட்டது. என் மொழிபெயர்ப்புப் பகுதியை நகலெடுத்து வைக்கவில்லை. இப்போது மீண்டும் மொழிபெயர்த்து முடித்தேன். ஒருவகையில் இதுவும் நன்மைக்கே என்று தோன்றுகிறது.

 

குத்துச்சண்டைக் களத்தில் சாம்பியனாக விளங்கிய ஒருவர், அந்த நாட்கள் போய் விட்ட நிலையில், அந்த இளமை போய் விட்ட நிலையில், இன்று பந்தயத்தில் தோற்போம் என்று நிச்சயமாகத் தெரிந்தும் தோற்பவனுக்குக் கிடைக்கும் சிறு தொகைக்காக குத்துச்சண்டைப் பந்தயத்தில் கலந்து கொள்வார். பந்தயத்தின் போதும், அதற்கு முன்பும் பின்பும் அந்த குத்துச் சண்டை வீரரின் மனவோட்டத்தை பிரதி பலிக்கும் கதை இது. இதைப் படித்த போதும், மொழிபெயர்த்தபோதும் எனக்குப் பிடிபடாத பல வாழ்க்கைத் தத்துவங்களை கதையிலிருந்து கவிஞர் வைதீஸ்வரன் அடையாளங் காட்டிய போது பிரமிப்பாக இருந்தது.

 

இந்தச் சிறு மொழிபெயர்ப்பு நூலுக்கு நான் எழுதியுள்ள சிறுஎன்னுரைஇது. வழக்கமாகசொல்ல வேண்டிய சிலஎன்று தலைப்பிடுவது வழக்கம். ஒரு மொழி பெயர்ப்பாளரின் வாக்குமூலம் என்றும் இதைச் சொல்லலாம் என்று தோன்றுகிறது.

 

1980களில் அநாமிகா என்ற பெயரில் சிறுகதைகளும், ரிஷி என்ற பெயரில் கவிதைகளும், .ரா என்ற பெயரில் கட்டுரைகளும் எழுத ஆரம்பித்தவள் தற்செயலாகத்தான் மொழிபெயர்ப்பாளராக மாறினேன். நான் ஆங்கில இலக்கியம் படித்திருந்ததும் இலக்கிய ரசனை கொஞ்சம் இருப்பதாக அடையாளங்காணப்பட்டதும் ஒரு காரணமாக இருக்கலாம்.

 

நான் பணி செய்துவந்த அலுவலகத்தில் சமூகப் பிரக்ஞை மிக்க தொழிற் சங்கத்தினர் புதிதாகப் பணிக்கு சேருபவர்களில் சிந்திக்கத் தெரிந்தவர் களை, எழுத்தாற்றல் மிக்க வர்களை எல்லாம் எளிதில் அடையாளங் கண்டுவிடுவார்கள். அவர்களிடம் தாம் நம்பும் சித்தாந்தங் களினூடாய் சமூகப் பிரக்ஞையை விதைக்கத் தொடங்குவார் கள். நட்பு பாராட்டுவார்கள்.

 

அதே சமயம், அவர்களுடைய சிந்தனைப்போக்கிலிருந்து சற்றே விலகி சிந்தித்தால் உடனேஅமெரிக்க அடிவருடிஎன்ற பட்டம் கிடைத்துவிடும்! அப்படி ஆத்மார்த்தமாகவே நம்புகிறார்களா, அல்லது ஆளை ஒடுக்கும் ஆயுதமாக அந்த அடைமொழி யைப் பயன்படுத்துகிறார்களா என்பது இன்று வரை தொடரும் கேள்வி. அதை யெல்லாம் மீறி நட்பு பாராட்டுவதும் அக்கறை காட்டு வதும் இயல்பாக நடந்து கொண்டிருக்கும்.

 

1990களில் பாட்னாவில் பெண்களுக்காக நடத்தப்பட்ட மாநாட்டில் பார்வை யாளராக பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது. மொழிபெயர்ப்பின் தேவையை உணரச் செய்த தருணங்களில் அதுவும் ஒன்று. பெண் முன்னேற்றத்திற் காகக் களப்பணியாற்றிவரும் எழுத்தறிவற்ற பெண்கள் தங்கள் அனுபவங் களை இந்தியிலும் தமிழிலும் மலையாளத்திலும் கன்னடத்தி லும் எடுத்துச்சொல்ல அவற்றை சம்பந்தப்பட்ட பிராந்திய மொழிகளும் இந்தியும் ஆங்கிலமும் தெரிந்தவர்கள் அமர்வுகளின் இடைவேளைகளின் போது மொழிபெயர்த்து (முக்கியமாக சாராம்சத்தை எளிய மொழி வழக்கில்) மற்றவர்களுக்கு எடுத்துரைக்க வேண்டும். அங்குதான் மொழி பெயர்ப்பின் சமூகரீதியான பயனைப் புரிந்துகொள்ள முடிந்தது.

 

(அத்தகைய மொழிபெயர்ப்புப் பணியே அதிகாரத்தைக் கையிலெடுத்துக் கொள்வதாகச் சிலரிடம் செயல்படுவதையும் பின்னர் பலமுறை பார்க்க நேர்ந்திருக்கிறது.)

 

இலக்கியத்திலும் அப்படித்தான். நான் மதிக்கும் நட்பினர் தமிழில் அறிமுகப் படுத்தப்படவேண்டிய எழுத்தாக்கங்களாக, புனைவு─–புனைவல்லாதது என இரண்டு பிரிவிலும் தருவதை அவர்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்க நான் தமிழில் மொழி பெயர்த்துத் தர ஆரம்பித்தேன்.

 

 எழுத்தாளர்கள் கோபிகிருஷ்ணனும் ஸஃபி யும் ANTI-PSYCHIATRYஐப் பற்றி என்னிடம் கொடுத்த மொழிபெயர்ப்புப் பிரதிகளை மொழிபெயர்த்துக் கொடுத்திருக்கிறேன். அவர்கள் மூலம்தான், அவர்கள் தந்த பிரதிகளின் மூலம்தான் உளவியல் சார்ந்த விஷயங்கள், அரசியலை நான் தெரிந்து கொண்டேன்.

 

அப்படித்தான், சில நண்பர்கள் மூலம் உலக இலக்கியப் படைப்புகள், போக்குகள் சிலவும் அறிமுகமாயின. அப்படி ஒருவர் மூலம் அறியக் கிடைத்த உலகத்தரமான படைப்பை இன்னொருவர் மொழிபெயர்க் கச் சொல்லும்போது அதை ஆர்வத்துடன் செய்திருக்கிறேன். ஆனால் அப்படிச் செய்தது முதலில் அந்தப் படைப்பாளியை எனக்கு அறிமுகப் படுத்திய நட்பினருக்கு உவப்பாக இருப்பதில்லை என்பதை (சம்பந்தப்பட்ட படைப்பை, படைப்பாளியைப் பற்றி அவர்களால் எழுதப்படும் கட்டுரைகளில் என் மொழிபெயர்ப்பைப் பற்றி எந்தக் குறிப்பும் இருக்காது!) போகப்போகப் புரிந்துகொள்ள நேர்ந்திருக்கிறது.

 

ஒரு படைப்பாளியின் படைப்புவெளியை முழுவதும் வாசித்து அறிந்திருந் தால் மட்டுமே அந்தப் படைப்பாளியின் எழுத் தாக்கங்களைச் செம்மையாக மொழி பெயர்க்க முடியும் என்ற கருத்து சிலரால் முன்வைக்கப்படும்போது, ‘அப்படியெனில் என்னிடம் ஏன் அந்த மொழிபெயர்ப்புப் பணியைத் தந்தார்கள், அந்த உலகத் தரமான படைப்பாளியை முழுவதுமாக நான் வாசித்திருப்பதான பாவனையை நான் கைக்கொள்ள வேண்டும், கைக்கொள்வேன் என்று எதிர்பார்த்தார் களா அல்லது என்னை sort of errand boy(or girl, to be more precise!) என்ற ரீதியில் மட்டுமே பணித்தார்களா என்ற கேள்வி எழுவதைத் தவிர்க்கமுடிய வில்லை.

 

சிலர் தாங்கள் அறிமுகப்படுத்தும் உலகத்தரம் வாய்ந்த படைப்புகள், படைப்பாளிகள் மேல்  அத்தனை உடைமையுணர்வோடு நடந்துகொள்வ தையும் பார்த்திருக்கிறேன்.

 

வேறு சிலர் அந்நியமொழியிலிருந்து நேரடியாக தமிழில் மொழிபெயர்க்கப் படும்போது மட்டுமே மூலமொழிப் படைப்புக்கு நியாயம் செய்ய முடியும் என்று மேடைக்கு மேடை முழங்கக் கேட்டிருக்கிறேன். ஒரு வகையில் அது உண்மையே என்றாலும் இன்னொரு வகையில் அதுவோர் reductionist theory ஆகச் செயல்படுவதையும் காணமுடிகிறது.

 

என்னளவில், மொழிபெயர்ப்பின் மூலம் நான் கற்றுக்கொள்கிறேன் என்பதே உண்மை.  நான் மதிக்கும் சிலர் தமிழில் மொழிபெயர்க்கப்படவேண்டியதாக ஒரு பிரதியை என்னிடம் தரும்போது அப்படித் தருபவர்மேல் எனக்குள்ள நம்பிக்கை, அபிமானம் காரணமாக அந்தப் பணியை மேற்கொள்வது வழக்கம்.

 

சில பிரதிகளை மொழிபெயர்க்க மறுத்ததும் உண்டு. பாலியல் பலாத் காரத்திற்கு ஆளாகும் பெண் ஒருத்தி அதில் ஆழ் மனதில் பரவசமடை கிறாள் என்பதாய் விரியும் ஒரு பிரதியை மொழிபெயர்த்துத் தரும்படி என்னிடம் கேட்கப்பட்டபோது அதைப் படிக்காமலேயே மறுத்திருக்கிறேன். ஒரு பெண்ணின் ஒழுக்கத்தைக் கொச்சைப்படுத்துவதாய் அமையும் வசைச் சொல், மாற்றுத்திறனாளியை மதிப்பழிக்கும் வசைச்சொல்லை அப்படியே மூல மொழியிலிருந்து மொழிபெயர்ப்பதை கூடுமானவரை தவிர்த்திருக் கிறேன். அது சரியா, தவறா என்ற கேள்வி மனதில் எழுந்துகொண்டே யிருந்தாலும்.

 

மொழிபெயர்ப்பாளர் சங்கத்தில் அங்கம் வகித்தபோது மொழிபெயர்ப்பின் அரசியல் குறித்து நிறைய விவரங்களை அறிந்துகொள்ள முடிந்தது. போலவே, அத்தகையஅரசியல்அங்கும் நிலவியதையும் பார்க்க முடிந்தது.

 

ஒரூமுறை தமிழின் குறிப்பிடத்தக்க திரைப்பட இயக்குனர் ஒருவர் இளம் நடிகை ஒருவர் மேடையில் ஆங்கிலத்தில் பேசிய தற்கு மிகக் கடுமையாக அந்தப் பெண்ணைக் கண்டித்தார். ஆனால், அந்த மனிதர் எல்லா மேடைகளி லும் தப்பும் தவறுமாக ஆங்கிலம் பேசாமல் இருக்கவே மாட்டார். ஆங்கிலம் என்பதுகூட அதிகாரத்தைத் தக்க வைத்துக்கொள்ளும் தந்திரமாக மற்றவர்களுக்கு மறுக்கப்பட்டுக்கொண்டிருக்கும் நிலையையும் அதிலுள்ள அரசியலையும் (both literal and symbolic) நாம் கவனத்தில் கொள்ளவேண்டிய, கவனப்படுத்த வேண்டிய தேவையிருக்கிறது என்றே எண்ணுகிறேன்.

 

நம்முடைய கண்ணோட்டங்கள், கோட்பாடுகளைக் கணக்கிலெடுத்துக் கொள்ளாமல்பீச்சாங்கை வீச்சாகப் புறக்கணித்து, கேலியாகப் பார்த்து, எள்ளிநகையாடிஆனால், இவர்களின் உழைப்பைப் பயன் படுத்திக் கொள்ளலாம்என்ற உத்தியோடு எனக்கு மொழிபெயர்ப் புப் பணிகளைத் தருபவர்களையும், என் மொழிபெயர்ப்புகளை வெளியிடக் கேட்பவர்க ளையும் உரிய நேரத்திலோ, அல்லது காலதாமதமாகவோ அடையாளங் கண்டு அவர்களுக்கு என் மொழிபெயர்ப்புகளைத் தர மறுத்திருக் கிறேன்.

 

சிறுபத்திரிகை ஒன்றில் மொழிபெயர்ப்புக் கென தரப்பட்ட பிரதிகளை யெல்லாம் செய்து கொடுப்பதை வழக்கமாகக் கொண்டிருந்த நிலையில் ஒருமுறை அதன் ஆசிரியர் முன்வைத்த கருத்து ஒன்றை மறுதலித்து நான் அனுப்பிய எதிர்வினை பிரசுரிக்கப்படவில்லை. (அதைப் பிரசுரித்து என் நிலைப்பாடு சரியில்லை என்று அம்பலப்படுத்தியிருந்தால் அது வேறு விஷயம்.) மீண்டும் அதே கேள்வி எனக்குள்Am I an errand boy?(or errand girl, to be more precise?) அதற்குப் பிறகு அதே சிற்றிதழ்க் காரர் சில பிரதிகளை மொழிபெயர்த்துத் தரும்படி கேட்டபோதுநான் உங்கள் எடுபிடி யல்லஎன்று காட்டமாகக் கூறி காலத்திற்கும் அவருடைய விரோதியா னேன். (அது குறித்து கவலை ஏதுமில்லை)

 

கவிஞராக இருப்பதை விட, கதாசிரியராக இருப்பதை விட மொழிபெயர்ப் பாளராக இயங்குவதில் சீரான வருமானம் கிடைக்க வழியுண்டு என்று தெரிந்துகொள்ள நேர்ந்ததெல்லாம் சமீபகாலமாகத்தான். 2005இல் அரசு வேலையை விட்ட பிறகு, பணியிலிருந்தபோதே நிறைய விடுப்பு எடுத்திருந்ததால் முழு ஓய்வூதியம் கிடைக்காதுபோக, கிடைத்தது வீட்டு வாடகைக்கே போதாது என்ற உண்மையின் பின்னணியில் இலக்கிய மல்லாத நிறைய பிரதிகளை தமிழிலும் ஆங்கிலத்திலும் மொழிபெயர்த்து வருமானமீட்டுவது தொடங்கியது.

 

இலக்கு வாசகர்களையும், கையிலுள்ள பிரதியில் இலக்குவாசகர்களிடம் எதை முதன்மையாகக் கொண்டுசெல்லவேண்டும் என்பதையும் கருத்தில் கொண்டே நம் மொழிநடை அமையவேண்டும் (குறிப்பாக, புனைவல்லாத பிரதிகளை மொழிபெயர்ப்ப தில்) என்பது புரிந்தது.

 

1980களின் பிற்பகுதியில் எழுத்தாளர் .நா.சுவின் குறிப்பொன்றை குமுதம் இதழில் பார்த்து அவருடைய கையெழுத்துப் பிரதிகளை எழுதித் தருவதிலும், அவர் சொல்லச் சொல்ல எழுதுவதிலும் என்னாலான உதவிகளைச் செய்துதரும் ஆர்வத்துடன் அவரைப் போய்ப் பார்த்தேன்.

 

 அப்போது மயிலையில் தங்கியிருந்ததால் முடிந்தபோதெல்லாம் இரவுப் பணி முடித்த கையோடு காலையில் அவருடைய வீட்டிற்கும் செல்வேன். அவர் ஆங்கிலத்தில் எழுதியிருந்த புதினம் அவதூதரை தமிழில் மொழி பெயர்க்குமாறு என்னிடம் கொடுத்த போது என் மொழித்திறனைப் பார்ப்பதற்காக அப்படிச் செய்கிறார் என்று நினைத்துக் கொண்டேன். என் மொழிபெயர்ப்பை செம்மை செய்து தன் பெயரில் வெளியிட்டுக்கொள்ளப் போகிறார் என்றே நினைத் தேன். சரியாக மொழிபெயர்க்க வராத வார்த்தை களை முடிந்த அளவு தமிழில் மொழிபெயர்த்து மூல வார்த்தைகளை அவற்றின் அருகிலேயே அடைப்புக்குறிகளுக்குள் தந்தேன். ஆனால் அந்த மொழி பெயர்ப்பை என் பெயரிலேயே நான் தந்த மாதிரியே பிரசுரித்து விட்டார் .நா.சு. அடைப்புக்குறிகளுக்குள் ஆங்கில வார்த்தைகள் தரப் பட்டிருந்தது அரிசியில் நெல் நெரடுவதுபோல் இருப்பதாக திரு.கோவை ஞானி அவர்கள் குறிப்பிட்டது சரியே என்று உணர்ந்தேன். மேலும், இப்படி சரிவரத் தெரியாத வார்த்தைகளையும் அடைப்புக்குறிகளுக்குள் தருவதன் மூலம் மொத்த புத்தகமுமே இப்படித்தான் தோராயமாக மொழிபெயர்க்கப் பட்டிருக்கிறது போலும் என்ற எண்ணம் வாசக மனங்களில் ஏற்பட்டுவிடும். ’இனி நம் மொழிபெயர்ப்பை இறுதிவடிவமாகத்தான் எவரிடமும் தர வேண்டும் என்று எண்ணிக் கொண்டேன்.

 

சிறந்த படைப்பு என்று நண்பர்களால் பரிந்து ரைக்கப்பட்டு மொழி பெயர்ப்புக்குத் தரப்பட்ட பிரதிகள் எனக்கு ஒரு வாசகராக ஏமாற்ற மளித்த தருணங்களும் நிறையவே உண்டு. இருந்தும், முடித்துக்கொடுத்து விடுவேன்.

 

ஒரு படைப்பின் மிகத் தரமான இரண்டு மொழிபெயர்ப்பு கள் எதிரெதிர் அர்த்தங்களைத் தருவதாக அமையக் கூடுமென்பதை அன்னா அக்ம தோவாவின் ஒரு கவிதைக் கான இரண்டு ஆங்கில மொழிபெயர்ப்புகள் உணர்த்தின. அது குறித்து என் அன்னா அக்மதோவா கவிதை மொழி பெயர்ப்பு நூலில் எழுதியிருக்கிறேன்.

 

சில சமயம் ஒருவருக்கு ஒரு விஷயம் குறித்த ஆழ்ந்த அறிவு இருக்கும். அதை மொழிபெயர்ப்பதற்கான போதிய மொழிப் புலமை இருக்காது. எனக்கு சம்பந்தப்பட்ட விஷயம் குறித்து எதுவுமே தெரியாது. அம்மாதிரி சமயங்களில் மொழிபெயர்த்தவர் நான் என்று குறிப்பிடாமல் அந்தப் பிரதிகளை தமிழ் அல்லது ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துக் கொடுத்த துண்டு. சிநேகத்திற்காகவும், சன்மானத்திற்காகவும்.

 

ஆனால், ஒரு சமயம் தன் பெயரைக் குறிப்பிட்டு ஒரு பதிப்பகம்(அந்தப் பெயரை மறந்துவிட்டேனே என்று பின்னர் பலமுறை வருந்தியிருக்கிறேன்) முனைவர் பட்ட ஆய்வேட்டை செய்துதரச் சொல்லி கேட்ட போது மேற் குறிப்பிட்ட மாதிரி மொழி பெயர்க்கச் சொல்வதாய் எண்ணினேன். அடுத்து, ஆய்வு சம்பந்தமான புத்தகங் களையெல்லாம் அனுப்பித்தருவதாக மறு முனை கூறிய போதுதான் அந்த ஆய்வேட் டையே தயாரித்துத் தரச் சொல்கிறார்கள் என்பது புரிந்தது. அதிர்ந்துபோய், ’அது தவறல்லவா. இப்படி முனைவர் பட்டம் வாங்குகிறவர் மாணாக்கர்களுக்கு எப்படி சீரிய முறையில் பாடம் கற்பிக்க முடியும் என்று கேட்டதற்குஇத்தகைய தார்மீக நியாயக் கேள்விகளையெல்லாம் கேட்கக் கூடாதுஎன்று எனக்கு அறிவுரை சொன்னார்கள்! அந்த வேலையை நான் ஏற்றுக்கொள்ளவில்லை. அதில் எனக்கும் நஷ்டமில்லை, அவர்களுக்கும் நஷ்டமிருந் திருக்காது!

 

தமிழ்க்கலாச்சாரத்தை உலக அரங்கில் பீடமேற்றப் போவதாக சொல்லிக் கொள்ளும் வெளிநாட்டுக்காரர் ஒருவர் அவ்வப்போது தரும் -புனைவுப் பிரதிகளை ஆங்கிலத்தில் செய்துதருவேன். ஆரம்பத்தில் நான் கேட்கும் நியாயமான ஊதியத்தைத் தந்தவர் ஷார்ட்ஸ் அணிந்த தமிழ்ப்பெண்ணை மணந்துகொண்ட பிறகு நான் அதிகமாக சன்மானம் கேட்கிறேன் என்று தொடர்ந்து சொல்ல ஆரம்பித்தார். தமிழ்ப்பெண் ஷார்ட்ஸ் அணிவது பற்றி எனக்கு ஒன்று மில்லை. ஆனால், தனக்குத் தெரிந்த அரை குறை தமிழில் அந்தப் பெண் என் மொழிபெயர்ப்பைக் குதறுவது தாளமுடியா மல் போயிற்று. அதைவிட மோசம், ஒரு நாள் முழுக்க அவர்கள் வீட்டில் மொழி பெயர்த்தபடி, மொழிபெயர்ப்பதை கணினி யில் தட்டச்சு செய்தபடி இருந்த என்னிடம்தமிழ்க்கலாச்சாரக் காவலரான அந்தப் பெண் ஒரு வாய் தண்ணீர் வேண்டுமாவெனக் கேட்கவில்லை. பிறகொரு சமயம் மொழி பெயர்ப்புக்கு நான் கேட்பது அதிகம் என்று சொன்னபோது, ’என் வேலைக்கான ஊதியத்தை நான் தான் நிர்ணயம் செய்ய வேண்டும், நீங்களல்ல, அந்நிய நாட்டு நன்கொடைகள், மான்யத்தொகை எல்லாம் வாங்குவது போதாதென்று உங்களிடம் பயில வருபவர்களிடம் இத்தனை அதிகக் கட்டணத்தொகை வாங்குவது நியாயமா என்று என்னாலும் கேட்கமுடியும்என்று கூறி என்றைக்குமாய் அவர்களிடமிருந்து விலகிக் கொண்டேன்.

 

ஒருமுறை இறக்குமதி செய்யப்பட்ட பிரம்மாண்டமான காரில் வந்திறங்கிய அரசியல் பிரமுகர் எனக்குப் பரிச்சயமான எழுத்தாளர் பரிந்துரைத்ததாகச் சொல்லி அவர்களுடைய கட்சிசார் கையேடு ஒன்றை ஆங்கிலத்தில் செய்துதரச் சொன்னபோது மரியாதை நிமித்தம் முதலில் செய்து கொடுத்து பின்நான் அரசியல் கட்சிசார்ந்த மொழிபெயர்ப்புவேலைகளை தொடர்ச்சி யாக செய்ய இயலாதுஎன்று தெரிவித்துவிட் டேன். கோடியில் புரள்பவர்க ளிடமிருந்து எனக்கான மீதித் தொகை ரூ.2000 இன்று வரை வந்தபாடில்லை.

 

இலக்கிய நண்பரொருவரின் பெயரைச் சொல்லி (அந்த நண்பருக்கு இந்த ஆசாமியைத் தெரியவே தெரியாது என்று பின்னர் தெரியவந்தது) குழந்தைகளுக்காகத் தான் எழுதிய கதைகளடங்கிய நூலை ஆங்கிலத் தில் மொழிபெயர்த்துத் தர வேண்டும் என்று கேட்டுக்கொண்டார் ஒருவர். மொத்தம் ஆறாயிரம் ரூபாய் கேட்டு ரூ.3000 முன்பணமாகப் பெற்று மொழிபெயர்க்கத் தொடங்கினேன். வெகு சாதாரணமான கதைகள். ‘நகைச்சுவை என்ற பெயரில்குழந்தை மூத்திரம் குடித்தது, பீயைத் தின்றதுஎன்றெல்லாம் எழுதியிருக்கிறீர் களே, இது Hygiene senseக்கு எதிரானதல்லவா என்று அவரிடம் கேட்காமலிருக்க முடியவில்லை. ”எப்படி மாத்தினா நல்லாயிருக்கும்னு நினைக்கிறீர்களோ அப்படியே செய்யுங்கள் அம்மாஎன்று சொன்னார். அப்படி வெகு சில மாற்றங்களை மட்டுமே செய்தேன்.  மின்னஞ்சலில் மொத்தக் கதைகளையும் மொழிபெயர்த்து அனுப்பிவைத்த பின் மீதி மூவாயிரத்தைக் கேட்டால்உங்கள் மொழி பெயர்ப்பை என் பப்ளிஷர் பிரசுரிக்க மாட்டே னென்கிறார்என்றார். நீங்கள் கேட்டீர்கள், நான் மொழிபெயர்த்துக் கொடுத்தேன். இதில் பப்ளிஷர் எங்கிருந்து வந்தார்?” என்று கேட்டதற்குநீங்க என்னம்மா என் கதைகளை மொத்தமா மாத்திப்பிட்டீங்களேஎன்று மீதிப் பணத்தை தர மனமில்லாத தன் கயமையை மறைக்க நீதிமானாய் என்னைக் குற்றஞ்சாட்டினார்!

 

தெரிந்தவர் ஒருவர் கேட்டுக்கொண்டதற்கிணங்க நூல் ஒன்றை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துக் கொடுத்தேன். நான் கேட்ட தொகை          ரூ. 8000. சம்பந்தப்பட்ட நூலைத் தமிழில் எழுதியவர்  ரூ 5000 தந்தார் என்று என்னிடம் மொழிபெயர்க்கச் சொல்லிக் கேட்டுக்கொண்ட  நபர் கூறினார். அவர் யார் என் வேலைக்கான ஊதியத்தை நிர்ணயிக்க, ரூ.8000ற்கு அவர் ஒப்புக்கொண்டதால்தானே செய்தேன் என்று சொன்ன போதுநான் வேறுவிதமாய் (அதாவது, மேலான விதத்தில்) மொழிபெயர்த்திருப் பேன்என்றவிதமாய்  கூறக்கேட்டு திகைப்பாயிருந்தது. அந்த நூலின் ஆசிரி யரைத் தொலைபேசியில் தொடர்புகொண்டபோது நீங்கள் நேரில் வந்து என்னோடு அமர்ந்து மொழிபெயர்ப்பில் திருத்தம் மேற்கொள்ள வில்லையே என்றார். ”நான் உங்கள் செயலாளரல்ல, மொழிபெயர்ப்பாளர்என்று சொல்லி அழைப்பைத் துண்டித்தேன்.

 

பெயர்களைக் குறிப்பிடாமல்கிசுகிசுபாணியில் நான் விவரங்களைச் சொல்வதாக சிலர் நினைக்கக்கூடும். இங்கே பெயர் கள் முக்கியமில்லை. ஒரு மொழிபெயர்ப்பாளர் எதிர்கொள்ளவேண்டியிருக்கும் இடர்ப்பாடுக ளும், மதிப்பழிப்புகளுமே நான் முக்கியமாகச் சுட்ட முனைந்தது என்பதா லேயே சம்பந்தப்பட்ட பெயர்களைத் தவிர்த்திருக் கிறேன்.

 

முன்பணம் வாங்கிக்கொண்டு நான் இன்ன மும் முடித்துக் கொடுக்காத சில மொழி பெயர்ப்புப் பணிகளும் உண்டு. அவற்றை இந்த வருட இறுதிக்குள் முடித்துக்கொடுத்து விடுவேன். என் மீது நம்பிக்கை வைத்து பொறுமை காத்த அந்தத் தோழர்களுக்கு என் மனமார்ந்த நன்றி.

 

நூறு புத்தகங்களுக்கு மேல் எழுதியும், மொழிபெயர்த்தும் இருக்கும்          திரு. பசுமைக்குமார் என்னை அழைத்துக் கொண்டுபோய் நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத்தில் சேர்த்து விட்டார். கடந்த எட்டுவருடங்களுக்கும் மேலாக வீட்டிலிருந்தபடியே அந்த நிறுவ னத்திற்கு மொழிபெயர்ப்பு, பிழைபார்ப்பு, சுயமாய் குழந்தைக்கதைகள் எழுதுதல் ஆகிய பணிகளில் ஈடுபட்டுவந்தேன். உரிய ஊதியமும் மரியாதையும் கொடுத்து என்னை நடத்திய அந்த நிறுவனத்திற்கு என் நன்றி என்றும் உரியது. இப்போது அதிலி ருந்தும் விலகிவிட்டேன். வீட்டிலிருந்த படியே மொழிபெயர்ப்புப் பணியில் ஈடுபட எண்ணம். பார்க்கலாம்.

 

தமிழிலிருந்து ஆங்கிலத்தில் எழுத்தாளர் ஜெயகாந்தனின் 20க்கு மேற்பட்ட நூல்களை மொழிபெயர்த்துள்ள, நவீன தமிழ்க்கவிதை களை மூன்று தொகுப்புகளாக ஆங்கிலத் தில் மொழிபெயர்த்து வெளியிட்டுள்ள, சங்கப் பெண் கவிஞர்களின் கவிதைகளை, பாரதியாரு டைய கவிதைகளின் பெரும்பகுதியை ஆங்கிலத்தில் வெளியிட் டுள்ள, சமூக-இலக்கியம் சார்ந்த கட்டுரை கள் ஏழெட்டுத் தொகுப்புகள் வெளியிட் டுள்ள, உலகப்புகழ் பெற்ற நூலான டாக்ரர் மணி பௌமிக்கின் THE CODE NAME GOD மிக நேர்த்தியாக தமிழில் மொழிபெயர்த்துள்ள டாக்டர் கே.எஸ்.சுப்பிரமணியனிடம். அவருடைய படைப்புகளை பிரதியெடுக்கும், கணினியில் தட்டச்சு செய்து தரும் பணியில் இயங்கிவருகிறேன். உரிய சன்மானமும் மரியாதையும் கிடைக்கிறது. ஒவ்வொரு சொல்லையும் பார்த்துப்பார்த்துச் செதுக்கி அயராது மொழிபெயர்ப்புப் பணியில் ஈடுபட்டிருக்கும், தன் ஆங்கில மொழி பெயர்ப்புக்குக் கிடைக்கும் சன்மானத்தை மூல ஆசிரியருக்கே தந்துவிடும், வலது கை தருவது இடதுகைக்குத் தெரியாத அளவில் பலபேருக்கு பலவிதங்களில் உதவிவரும் டாக்டர். கே.எஸ்-இன் சமூகம் சார், இலக்கியம் சார், மொழி சார் பங்களிப்பு மிகவும் குறிப்பிடத்தக்கது.

 

வேறு சில நிறுவனங்களுக்கும் சிறுவர்களுக் கான புத்தகங்கள் எழுதிக் கொடுத்திருக்கிறேன்; மொழிபெயர்த்துக் கொடுத்திருக் கிறேன்,. குழந்தை களுக்கு எழுதப்படும், மொழிபெயர்க்கப்படும் கதைகள், பிற எழுத்தாக்கங் களில் மொழிப்பிரயோகம் சார்ந்து, கருத்து சார்ந்து நிறைய மாற்றங் கள் தேவை என்பதை உணரமுடிந்தது. எடுத்துக்காட்டாக, எழுபது வயதான பணியாளரும் பெரும்பாலான சிறுவர் கதைகளில்அவன்’, ’நீஎன்பதாக ஒருமையிலேயே குறிப்பிடப்படுகிறார். மாற்றுத் திறனாளிகள் நகைச் சுவைப் பொருளாக்கப்படுகிறார்கள், தலை யில் வலிக்க வலிக்கக் குட்டுதல், தடுக்கிவிழச் செய்தல் போன்ற வன்முறையார்ந்த செயல் களெல்லாம் வேடிக்கையான நிகழ்வுகளாக முன்வைக்கப்படுகின்றன.

 

எட்டு, பத்து வருடங்களுக்கு முன்பு சென்னையிலுள்ள கல்லூரி ஒன்றில் ஆங்கில இலக்கிய மாணவிகளுக்கு மொழிபெயர்ப் புக்கான பட்டயப்படிப்பு வகுப்புகள் ஒரு வருடகாலம் எடுக்க நேர்ந்தது. சரளமாக ஆங்கிலத்தில் பேசவேண்டும், அதற்கு நான் உதவ வேண்டும் என்பதே அந்த மாணவி களின் எதிர்பார்ப்பாக இருந்தது. ஆனால், துறை ஆசிரியர்கள் அப்படிச் செய்தால் அது தங்கள் பணியை விமர்சனத்துக்குள்ளாக்கும் என்று கூறினர். நான் வைத்த தேர்வில் ஒரு மாணவி இருபது பக்கங்கள் விடைகள் அளித்திருந்தாள். அந்த அளவுக்கு அவளுக்கு பாடங்கள் புரிந்திருந்தன. ஆனால் ஒரு வாக்கியம் கூட விளங்கிக்கொள்ளக் கூடிய சரியான ஆங்கிலத்தில் அமையவில்லை என்பதைக் கண்டு அதிர்ச் சியாக இருந்தது. நான் அப்பழுக்கற்ற ஆங்கிலப் புலியொன்றும் அல்ல. இருந்தும் மொழிபெயர்ப்போடு ஒவ்வொரு வகுப்பிலும் ஆரம்பத்தில் 20 நிமிடங்கள் போல் ஆங்கில மொழியைப் பேசுவதற்கும் அவர்களுக்கு என்னாலான அளவு கற்றுத் தந்தேன்.

 

அந்தக் கல்லூரியில் பணிபுரிந்த ஒரு வருடத்தில் மொழிபெயர்ப்பு தொடர்பான ஏராளமான நூல்கள் ஆங்கிலத்தில் படிக்கக் கிடைத்தன. வெளிநாட்டவர்களும், வட நாட்டவர்களும் எழுதியவை. அவற்றில் தரப்பட்டிருக்கும் எடுத்துக்காட்டுகள்கூட நமக்குப் பிடிபடாமலிருக்கும் வாய்ப்புகள் அதிகம். அந்த நூல்களில் விவாதிக்கப் பட்டிருந்த மொழிபெயர்ப்பு சார்ந்த பல கருத்தியல்கள், கோட்பாடுகள் மொழி பெயர்க்கும் சமயம் என் மனதிலும் ஏற்பட்ட வையே. ஆனால், அவை மொழிபெயர்ப்புக் கோட்பாடுகளாக ஆவணப்படுத்தப்பட்டுள்ள விவரம் தெரிந்திருக்கவில்லை. மொழி பெயர்ப்பு வழிமுறைகள் ஒன்றிற்கு மேற் பட்டவைகள் இருப்பதையும் அறிந்து கொள்ள முடிந்தது.

 

தமிழைப் பொறுத்தவரை மொழிபெயர்ப்பு, மொழிபெயர்ப்பாளர்களின் அணுகுமுறைகள், இயங்குமுறைகள் போன்றவற் றைப் பேசும் நூல்கள் வெகு சிலவே உள்ளன. எழுத்தாளர்-மொழிபெயர்ப்பாளர் அமர்ந்த்தா வின் முயற்சியில் தமிழில் மொழிபெயர்ப்புப் பணியில் ஈடுபட்டு வரும் சிலர் அது குறித்த தங்கள் அனுபவங்களைப் பற்றி எடுத்துரைக்கும் கட்டுரைக ளடங்கிய தொகுப்புகள் இரண்டுமொழிபெயர்ப்புக் கலைஇன்று’, ’மொழிபெயர்ப்புதற்காலப் பார்வைகள்’ – நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்) வெளியாகியுள்ளன. பூரணச்சந்திரன் அவர்க ளுடைய நூல் ஒன்று வெளியாகியுள்ளது. நானும் நான் சார்ந்துள்ள பார்வையற்றோர் நன்னல நிறுவனமான வெல்ஃபேர் ஃபவுண் டேஷன் ஆஃப் தி ப்ளைண்ட் அமைப்பின் நிறுவனத் தலைவர் அமரர் ஜெயராமன் (பார்வையிழப்பை மீறி கல்வி பயின்று பல வருடங்கள் தாம்பரம் கிறித்துவக் கல்லூரியில் ஆங்கிலப் பேராசிரியராகப் பணிபுரிந்த வர்) அவர்களும் இணைந்து மொழிபெயர்த்த இணைய இதழ் மியூஸ் இந்தியாவின் மொழிபெயர்ப்புச் சிறப்பிதழில் வெளிவந்த கட்டுரைகளின் தமிழாக்கம் (மொழிபெயர்ப் பின் சவால்கள்சந்தியா பதிப்பகம்). இன்னும் சில வெளிவந்திருக்கக்கூடும். எனில், இதுபோன்ற கட்டுரைத் தொகுப்புகள் இன்னும் பல வரவேண்டும்.

 

கோட்பாடுகளின் அடிப்படையில் மொழி பெயர்க்கவியலாது என்பதும் போகப்போகத் தெரிந்தது. ஒவ்வொரு பிரதிக்கேற்பவும் நம் மொழிபெயர்ப்பு அணுகுமுறை மாறுவதும் உண்டு. ஒரு பிரதியை மொழிபெயர்த்து முடிக்க கைவசமுள்ள கால அவகாசத்தைப் பொறுத்தும், ஒரு பிரதியை மொழிபெயர்ப்பதன் நோக்கம், மற்றும் இலக்குவாசகர் களைப் பொறுத்துகூட மாறும்.

 

புனைவிலக்கியங்களைப் பொறுத்தவரை, மூலப்பிரதியில் மொழிநடைக்கு முக்கியத் துவம் தரப்பட்டிருந்தால், அல்லது மூலப் பிரதி ‘complex’ நடையில் எழுதப்பட்டிருந் தால் மொழிபெயர்ப்பில் அந்த நுட்பத்தைக் கொண்டுவர முயற்சி செய்வேன். பிரதியை ஒரேயடியாக எளிமைப்படுத்தி விட மாட்டேன். மேலும், சிலர் மூலப்பிரதி சாதாரண மான நடையில் எழுதப்பட்டிருக்க மொழி பெயர்ப்பில் அதை மேம்படுத்தவேண்டும் என்று எதிர்பார்ப்பார்ப்பதும், அது மொழி பெயர்ப்பாளரின் பொறுப்பு என்பதாய் கோருவதும் உண்டு. என்னளவில், அது மொழி பெயர்ப்பாளரின் வேலை யல்ல. அதேபோல், உரையாடல்களையும் அவற்றிற்குரியதாக தமிழிலி ருந்து எந்தப் பேச்சுவழக்கை எடுத்தாள்வது என்று பிடிபடாமல் செந் தமிழிலேயே (வழக்கமாகக் கையாளும் வரிவடிவத் தமிழில்) மொழி பெயர்க்க நேர்கிறது. வட்டார வழக்குகள் அதிகமாக உள்ள பிரதியை மொழிபெயர்ப்பது மிக மிகக் கடினமானது.

 

ஒரு மொழிபெயர்ப்பாளராக மூல ஆசிரியரிடம் எனக்கு ஒருவித love-hate relationsip தான் நிலவும். மூலப்பிரதி மிக நன்றாக இருந்தால், அடப்பாவி மனுஷா (அல்லது மனுஷீ!) என்னமா எழுதியிருக்கிறார்நம்மாலெல்லாம் இப்படி எழுத முடிவதே யில்லையேஎன்ற பொறாமை. அல்லது, சாதாரண எழுத்தாகப் புலப்பட்டால், ‘சே, வருமானத்திற்காக, அல்லது, நண்பர் கள் கேட்டுக் கொண்டார்களேயென்று இந்ததிராபைஎழுத்தையெல்லாம் மொழி பெயர்க்க வேண்டியிருக்கிறதேஎன்ற எரிச்சல்.

 

அதேசமயம், மொழிபெயர்க்கும் போது மூலப்பிரதி யிலிருந்து கொஞ்சம் விலகியே இயங்கவேண்டியிருக்கும். அதிலேயே அமிழ்ந்துவிட்டால் வேலை நடக்காது!

 

மூலப்பிரதியை மொழிபெயர்ப்பதில் மொழி பெயர்ப்பாளர் தன் விருப்பம் போல் liberty எடுத்துக்கொள்வது மிகவும் தவறு. அதேசமயம், சில இடங்களில் மொழி பெயர்ப்பாளர் தன் discretion பயன்படுத்த வேண்டிய தும் அவசியமாகிறது. மூலப் பிரதியில் ஒரு வரி தரும் உட்பொருளை அழுத்தமாக எடுத்துக்காட்ட மொழிபெயர்ப்பாளர் தனது மொழியாக்கத்தில் ஓரிரு வார்த்தைகளைக் கூடுதலாகச் சேர்க்க வேண்டிவரலாம். வாக்கிய அமைப்புகளை இலக்குமொழிக்கேற்ப மாற்ற வேண்டிவர லாம். இதையெல்லாம் குற்றமாகப் பேசி னால் எந்த மொழிபெயர்ப்பாளரும் இயங் கவே முடியாது. எடுத்துக்காட்டாக, இந்தக் கதையில் Youth will be served என்ற வரி முத்திரை வாசகமாக வரும். இதைஇளமைக்கே எல்லாம் என்று மொழி பெயர்த்திருக்கிறேன். இது சரியில்லை என்று இந்த வாசகத்திற்கான தங்கள் மொழிபெயர்ப்பை முன்வைப்ப வர்கள் உண்டு. அத்தகையோரிடம் வாதாடிப் பயனில்லை.

 

நான் ஏற்கெனவே குறிப்பிட்டதுபோல் வார்த் தைத் தேர்வும், அவற்றை வரிசைப்படுத்தலும் தான் ஒரு மொழிபெயர்ப்பா ளரின் தனி அடையாளம். அதில் அர்த்தப் பிழை இருந்தால் சுட்டிக்காட்டலாம்.. ஆனால்நான் சொல்லும் வார்த்தைகளை, நான் சொல்லும் விதமாய் வரிசைப்படுத்தி னால்தான் நீங்கள் நல்ல மொழிபெயர்ப்பாளர் என்று சிலர் கூறுவதைக் கேட்கநேரும்போது வேடிக்கையாகவுமிருக்கும்; வருத்தமாகவும் இருக் கும்.

 

பழமொழிகள், ஒரு மொழியில் புழங்கும் சொற்றொடர்கள் ஆகியவற்றை இன்னொரு மொழிக்குக் கொண்டுவரும் போது அவற்றின் உள்ளர்த்தம், குறிப்பைப் புரிந்து கொண்டு அவற்றையே சரியாக இலக்கு மொழியில் தர வேண்டும் என்ற ஒரு பார்வையும், நம் மண்ணுக்குஏர்றதான பழமொழிகள், சொற்றொடர்களைப் பயன் படுத்தவேண்டும் என்றும் இருவேறு பார்வைகள் புழக்கத்திலிருக்கின்றன. உமர் கயாம் (ஆங்கில மொழிபெயர்ப்பில்) A Book Of Verse என்று சொல்லியிருந்ததைகையில் கம்பன் கவியுண்டுஎன்று கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையின் மொழிபெயர்ப்பில் படித்தபோது, கம்பன் மீது அன்பும் மரியாதையும் இருந்தாலும், ‘எனக்குப் பிடித்த கவிதைத்தொகுப்பைத் தீர்மானிக்க இவர் யார்?’ என்று கோபம் வந்தது.

 

பிறமொழிப் படைப்புகளைத் தமிழில் கொண்டுவரும்போது, ’அதைத் தமிழ்ச் சூழல் மயமாக்கவேண்டும்என்ற வொரு கருத்தும், ’அப்படிச் செய்ய லாகாது, அந்தப் படைப்புகளில் புனைகதையம்சங்களோடு அந்நிய மண் சார்ந்த வாழ்வியல் விவரங்க ளையும் நாம் தெரிந்துகொள்கிறோம்மொழிபெயர்ப்பைத் தமிழ்ச்சூசுழல் மயமாக் கினால் அது முடியாமலாகி விடும், அதற்கு நாம் தமிழில் எழுதப்பட்ட புனைவிலக் கியங்களைப் படித்தால் போதுமேஎன்ற பார்வையும் உண்டு.என்னைப் பொறுத்த வரை இந்தப் பார்வைபொருள்பொதிந்ததே. அதே சமயம், புனைவிலக்கியம் என்பதே பிரதானமாக மானுட வாழ்க்கைக்கூறுகளை - Unity in Diversity and Diversity in Unity அடிக்கோடிட்டுக் காட்டுவன என்பதால், வெறும் அந்நிய மண் சார்ந்த விவரக் குறிப்புகள் நிரம்பியதாக மட்டும் ஒரு மொழியாக்கம் இலக்குமொழியில் அணுகப்படலாகாது; நின்றுவிட லாகாது. அதைத் தாண்டி, ‘வாழ்வோட்டம்இயல்பாக விரவியிருப்பதும் அவசியம்.

 

பிறமொழியிலான ஒரு புனைவிலக்கி யத்தை அது முன்வைக்கும் வாழ்வீர்ப்பு காரணமாய் நான் (அல்லது என் நட்பினர்) தமிழில் மொழிபெயர்க்க விரும்பும்போது (மொழிபெயர்க்கும்படி என்னைக் கேட்டுக் கொள்ளும்போது) அந்தப் பிரதியில் சில பொருட்கள், தின்பண்டங்கள் அன்னபிற எனக்குத் தெரியாதவையாக இருந்தால், அவை பிரதியின் கதை யோட்டத்திற்கு அத்தியாவசியமானதாய் அமைந்திருந்தால் அவற்றிற்கான சரியான தமிழ்வார்த்தையை பல்வேறு வழிகளில் கண்டுபிடிக்கப் பிரயத் தனப்பட்டு, அவ்வாறு கண்டுபிடிக்கப்பட்ட சரியான தமிழ்ப்பதத்தைப் பயன் படுத்துவேன். அப்படியில்லாமல் வெறுமே வந்து போகிறதென்றால் அத்தனை மெனக்கெட மாட்டேன். எடுத்துக்காட்டாக, மூலப் பிரதியில் ஒரு இனிப்புப் பண்டம் குறித்த பெயர் அல்லது குறிப்பு இடம்பெறுகிற தெனில், அதைத் தின்று கதாநாயகன் இறந்துபோகிறான் என்பதுபோல் அது கதை நகர்வுக்கு முக்கியக்காரணியாக இருந்தால் அது என்ன மாவில், என்ன எண்ணெய்யில் செய்யப்பட்ட தின்பண்டம், வெல்லத்தில் செய்யப்பட்டதா, சர்க்கரையில் செய்யப்பட்டதா என்றெல்லாம் பார்த்துப் பார்த்து மொழி பெயர்ப்பேன். கதாநாயகனும் அவனுடைய காதலியும் ஒரு சிற்றுண்டி சாலையில் அதை சாப்பிட்டுவிட்டுப் போவதாக போகிறபோக்கில் சொல்லப் பட்டிருந்தால், வெறுமேஒருவகை இனிப்புப் பண்டத்தைச் சாப்பிட்டார்கள்என்று எழுதிவிடுவேன். இந்த discretion ஒரு மொழிபெயர்ப்பாளருக்குத் தேவை என்று நினைக்கிறேன்.

 

என் மொழிபெயர்ப்பில் நம்பிக்கை வைத்து சிலர் தந்திருக்கும் ஐந்தாறு நூல்களை மொழிபெயர்த்து முடிக்க வேண்டும். பின், தமிழிலிருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பதை மட்டுமே மேற்கொள்ளவேண்டும் என்று எண்ணியிருக்கிறேன். இதில் வாழ்க் கைச் சூழல் சார், உரையாடல் சார் மொழி பெயர்ப்புச் சிக்கல்கள் குறைவு என்று தோன்றுகிறது.

 

ஒரு மொழிபெயர்ப்பில் தவறிருந்தால் சுட்டிக்காட்டுவதில் தவறில்லை. ஆனால், மூல ஆசிரியரை மதிப்பழிப்பதில் மொழி பெயர்ப்பாளருக்கு ஏதோ ஆதாயம் கிடைப்பது போல், மொழிபெயர்ப்பாளருக்கு உள் நோக்கம் கற்பித்துப் பேசுவது சரியில்லை. ஒருவருடைய மொழிபெயர்ப்பில் குறை காண்பதற்கு வாசகருக்கும் ஒரு தகுதி வேண்டும். அப்படியில்லாமல் சிலர் சகட்டுமேனிக்கு மொழிபெயர்ப்பாளர்களை மட்டந்தட்டுவதும், மதிப்பழிப் பதும் வருத்தமளிக்கிறது. இத்தகையோர், பெரும்பாலும், பெருந்தொகையை மான்யமாக, நன்கொடையாகப் பெற்று உலக இலக்கியங்களை மொழி பெயர்ப்பவர்கள், தங்களுடைய மொழிபெயர்ப்பே அப்பழுக்கற்றது என்று வலியுறுத்துபவர்கள், பெரிய பதவிகளில் இருக்கும் எழுத்தாளர்கள்மொழிபெயர்ப்பாளர்கள், பிறர் கைகளால் மொழிபெயர்ப்பு செய்பவர்கள், போன்றவர்களிடம்வேலை காட்டுவதில்லை. அவர்களுடைய மொழி பெயர்ப்பைத் தங்கள் திறனாய்வுக்குட்படுத்த முன்வருவதில்லை என்பதை யும் பார்க்க முடிகிறது.

 

சில மாதங்களுக்கு முன் ஃபேஸ்புக்-இல் நான் மொழிபெயர்த்த THE ROYAL GAME என்ற குறுநாவலின் மொழிபெயர்ப்பு குறித்து ஒருவர் கிசுகிசு பாணியில் மதிப்பழித்துப் பேசியிருந்தார். சதுரங்க விளையாட்டு குறித்த தனது ஆய்வின்(?) ஒரு பகுதியாக இலக்கியத்தில் அது குறித்து எழுதப்பட்டிருப்பதைத் தேடியபோது என்சொதப்பலானமொழிபெயர்ப் பைப் படிக்க நேர்ந்ததாகவும், சதுரங்க விளையாட்டின் அரிச்சுவடி கூட தெரியாதவர்கள் ஆங்கிலம் ஒரே காரணத்திற்காக இத்தகைய இலக்கியப் படைப்பு களை மொழிபெயர்க்க முற்படுவது அராஜகம் என்றவிதமாகவும் கருத்துரைத்திருந் தார். அவர் மேற்கோளாகக் காட்டியிருந்த பத்தி என் மொழிபெயர்ப்பே மோசமானது என்பதை உட்குறிப்பாகச் சுட்டுவதாக இருந்தது. ஆனால், அவர் மேற்கோள் காட்டியிருந்த ஆங்கில மொழி பெயர்ப்பும் நான் மொழிபெயர்க்க எடுத்துக்கொண்ட ஆங்கில மொழி பெயர்ப்பும் வேறுவேறு. அதை நான் சுட்டிக்காட்டியபோது தன் தவறுக்காக வருத்தம் தெரிவிக்க மனமில்லாமல்இந்த ஒரு சொற்றொடரை நீங்கள் சரியாக மொழிபெயர்த்திருக்கிறீர்களா என்ப தைச் சொல்லுங்கள், பிறகு மேற்கொண்டு பேசலாமேஎன்று (ஏதோ நான் அவரு டைய அங்கீகாரத்திற்காகக் காத்துக்கொண்டிருப்பதைப்போல்) அவர் எழுதியிருந் ததைக் கண்டு what abject insolence என்று எண்ணிக்கொண்டேன். மொழிபெயர்த்து பத்து வருடங்களுக்கு மேலான நிலையில் என் கையெழுத்து பிரதி கைவசமில்லாத நிலை.  தவிர, இத்தகையோரைஊக்கு விக்கும்பெருந்தலைகளும் இங்கே உண்டு என்பதை நான் அறிந்தே யிருக்கிறேன்.

 

மொழிபெயர்ப்பாளர்கள் மீது சிலருக்கு என்னதான் வெறுப்போ தெரிய வில்லை. அத்தனை வன்மமாக 200 பக்க மொழி பெயர்ப்பில் ஒரு வரி மொழி பெயர்ப்பில் குறை கண்டுபிடித்து அதை அம்பலப்படுத்துவதாக எழுதி மொழிபெயர்ப்பாளரை மதிப்பழிப்பதில் குறியாக இருக்கிறார்கள்.

 

மூல ஆசிரியரை விட அவருடைய படைப்பாக்கங்களின் மீது அதிகமான உடைமையுணர்வு கொண்டிருக்கும் சில இலக்கியவாதிகள்-கம்-மொழி பெயர்ப்பாளர்கள் சில ரும் இத்தகைய மதிப்பழிப்புச் செயல் பாடுகளை முன்னின்று நடத்துகிறார்கள், அல்லது மறைவாக நின்று நடத்துகிறார்கள்.

 

மோசமான மொழிபெயர்ப்புகள் கண்டிப்பாக விமர்சிக்கப்படவேண்டியவை தான். ஆனால், மேலோட்ட மாக ஒன்றிரண்டு வரிகளை மேற்கோள் காட்டி ஒரு 200, 300 பக்க மொழிபெயர்ப்பு நூல் முழுவதுமே மோசம் என்பதான எண்ணத் தைத் தோற்றுவிப்பது எந்தவகை யில் நியாயம்?

 

ஒரு மொழிபெயர்ப்புநூலில் இரண்டு குறைகளை முனைப் பாகச் சுட்டிக் காட்டுவோர் அதிலுள்ள இரண்டு நல்ல மொழிபெயர்ப்பு வரிகளைச் சுட்டிக்காட்ட முன்வருவதில்லை. ஏன்?

 

ஒன்று அந்த நூலிலிருப்பதாக அவர்கள் சுட்டும் பிழைகளை அவர்களிடம் வேறொருவர் சொல்லித்தந்து எழுதவைத்திருக்கவேண்டும். அல்லது, சம்பந்தப் பட்ட விமர்சகர் மொழிபெயர்ப்பாளரைக் குறைகாணும் ஒரே நோக்கத்துடன் அவருடைய மொழிபெயர்ப்புப் பிரதியை அணுகியிருக்க வேண்டும்.

 

நேரடியாக ஆங்கிலத்தில் எழுதப்படாமல் வேறொரு மொழியில் எழுதப் பட்ட மூலநூலின் ஆங்கில மொழிபெயர்ப்பிலிருந்து தமிழில் மொழி பெயர்க்கப்பட்ட நூலை விமர்சிக்கும்போது குறைகூற தாங்கள் சான்றாக வைத்திருக்கும் ஆங்கில மொழிபெயர்ப்பைத் தான் அதைத் தமிழில் மொழிபெயர்த்தவரும் தன்னுடைய மொழிபெயர்ப்புக்குப் பயன்படுத்தினாரா என்பதை அறிந்து கொள்வதும், அதைத் தன் விமர்சனத்தில் தெரியப்படுத்து வதும் அவசியம். ஆனால், ஒரு மொழிபெயர்ப்பை குறை கூறவென்றே விமர்சனம் செய்பவர்கள் இந்த விஷயத் தைத் தெளிவுபடுத்துவதேயில்லை.

 

ஒரு தமிழ் மொழிபெயர்ப்பில் குறைகாண்பவர்கள், குறிப்பாக, அதை வெளிச்சம் போட்டுக் காட்டுவதிலேயே குறியாக இருப்பவர்கள் குறைந்தபட்சம் அது குறித்து சம்பந்தப்பட்ட மொழிபெயர்ப்பாளரின் தரப்பு நியாயத்தை அல்லது விளக்கத்தைக் கோரவோ, அதைக் கேட்டறிந்து வெளியிடவோ முன்வருவதில்லை.

 

தடாலடியாய் ஒரு மொழிபெயர்ப்பாளரை ஒற்றை வரியை மேற் கோள் காட்டித் தாக்குவதுதான் விமர்சனம் அல்லது திறனாய்வின் நேர்மையா?

 

(ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் அல்லது ஒரு குடம் பாலில் ஒரு துளி விஷம்போன்ற பழமொழிக ளெல்லாம் உரிய பதிலாகாது)

 

எந்தவொரு படைப்புமே விமர்சனத்திற்கு அப்பாற்பட்ட தல்ல. திறனாய்வும் விமர்சனமும்கூட.

 

நான் மொழிபெயர்த்திருக்கும் படைப்புகளைப் பொறுத்த வரை, நானறிந்த வரையில் அவற்றின் தமிழ்வெளியீட்டுரிமையை இன்னும் யாரும் வாங்க வில்லை. எனவே, யார் வேண்டுமானாலும் அவற்றை மொழி பெயர்ப்பு செய்து வெளியிடலாம். அதேசமயம், அவர்கள் சரிபார்த்துக்கொள்ளவும், மேம்படுத்தவும் ஏற்கனவே ஒரு மொழிபெயர்ப்பு இருக்கிறது என்பதும் மறுக்கமுடியாத உண்மை.

 

இவ்வாறு ஒருவரின் மொழிபெயர்ப்புப் பிரதியை ஓராண்டுகாலம் கையில் வைத்திருந்து பின் அதை அடிப்படையாகக்கொண்டு வேறொருவர் மொழி பெயர்த்த அதே கதைகளை வெளியிட்ட கதைகளும் தெரிந்ததே. தனிநபர் integrity இல்லையென்றால் என்னவேண்டுமானாலும் அக்கிரமம் செய்து மனசாட்சி உறுத்தலில்லாமல் வாழமுடியும்.

 

என்னுடைய மொழிபெயர்ப்பு அப்பழுக்கற்றது என்று நான் ஒருபோதும் பறையறிவித்துக் கொண்டதில்லை. ஏனெனில் அதில் உண்மையிருக்க வழியில்லை. He என்ற எளிய வார்த்தை அவனா, அவரா என்று திக்குமுக்காட வைக்கும் தருணங்களே அதிகம். சில வார்த்தைகளின் குறிப்பர்த்தம் தெரியாதுபோய்விடும். விபூதி அல்லது திருநீறு என்றே எனக்குத் தெரிந்திருந்த நிலையில் ஒருவர் நீறு என்று எழுதியிருந்ததை, அது அச்சுப்பிழை போலும் என்று நானாக எண்ணிக்கொண்டு நீரு என்பதாய் Water என்று மொழிபெயர்த்துவிட்டேன்!

 

ஒரு உலகத்தரமான இலக்கியப்படைப்பை மொழிபெயர்க்கும் உரிமையை வாங்கும் நிறுவனங்கள் அதன் ஒன்றுக்கு மேற்பட்ட மொழிபெயர்ப்புகளை யும் கொண்டுவர முன்வரலாம். அப்படிச் செய்தால் மொழிபெயர்ப்பு தொடர் பான தெளிவு, ஒப்புநோக்கல் வாசகருக்கு வாய்க்க வழியுண்டு.

உலகக்கவிதைகள் குறித்து உரையாற்ற நான் அழைக்கப்பட்டபோதெல் லாம் எனக்கு உலக இலக்கிய அறிவு கிடையாது என்று மறுத்தேயிருக் கிறேன். இல்லா ததை இருப்பதாகச் சொல்வதும், அந்தபாவ்லாவையே சதாசர்வகாலமும் நடை உடை பாவனைகளில் தரித்துக் கொண்டிருப்பதும் மிகவும் கொடுமையான விஷயம்; அது எனக்கு அவசியமுமில்லை.

சிற்றிதழாளர் ஒருவரிடம் ஒருமுறைஉங்கள் பத்திரிகை யில் நீங்கள் வெளியிடும் உலக இலக்கியங்களைத் தெரிவுசெய்வதில் யார் உங்களுக்கு உதவுகிறார்கள் என்று கேட்டபோது, ”எனக்கு ஆங்கிலம் தெரியாது என்று பழிக்கிறீர்களாஎன்று கடுங்கோபத்துடன் கேட்டார். “எனக்கு ஆங்கிலம் தெரியும். ஆனால், உலக இலக் கியம் தெரியாதேஎன்றேன். ஒரு பத்திரிகையை நல்ல முறையில் நடத்த உதவும் நண்பர்கள், சக இலக்கிய வாதிகளை அடையாளங்காட்டுவதில் எதற்குத் தயக்கம் என்று இன்றளவும் எனக்கு விளங்கவில்லை.


மொழிபெயர்ப்பு ஒரு கூட்டுமுயற்சி என்று சிலர் சொல்லக் கேட்டதுண்டு. அதில் உண்மையும் இருக்கலாம். எனில், என்னளவில் மொழிபெயர்ப்பைத் தனியாகத்தான் செய்கிறேன். ஓரிரு வார்த்தைகளில் உதவிய ஒருவர் வேறொருவரிடம்லதாவுக்கு நான் தான் முழுக்க முழுக்க மொழி பெயர்த்துக்கொடுத்தேன் என்று கூறியதாகவும் கேள்விப்பட்டிருக்கிறேன்!

மொழிபெயர்ப்புப் பிரதிகளுக்கு சீரிய முறையில் Editing தேவை என்று சிலர் சொல்வதிலும் உண்மை இருக்கலாம். அதேசமயம், அந்தஎடிட்டர்அதற்கான தகுதிவாய்ந்தவரா என்பதும் கணக்கிலெடுத்துக்கொள்ளப் பட வேண்டியது. ஒருமுறை நான் மொழிபெயர்த்த பிரதியை (அந்த நூல் இன்னும் வெளிவரவில்லை) ‘எடிட்செய்தவர் ஒரு திருத்தமாய்ஓர்மைஎன்ற வார்த்தையை என் பிரதியில் இடம்பெறச் செய்திருந்தார். ஆனால், நான் அந்த சொல்லைப் பயன்படுத்தியதே யில்லை என் மொழிபெயர்ப்பு களில். அது என்னை என் மொழிபெயர்ப்பி லிருந்தே அந்நியமாக உணரச் செய்தது.

ஒவ்வொரு படைப்பையும் போதிய கால அவகாசம் எடுத்துக்கொண்டு (இரண்டு மூன்று வருடங்கள் அல்லது எட்டு பத்து வருடங்கள்) மொழி பெயர்க்கும்போது மட்டுமே மூலப்படைப்புக்கு நியாயம் செய்ய முடியும் என்ற பார்வையும் முன்வைக்கப்படுவதுண்டு. (நல்ல மொழி பெயர்ப்பு வரவேண்டும் என்ற அக்கறையோடும், ஒரு வித reductionist approach ஆகவும்). அத்தனை நேரமெடுத்துக்கொண்டு செய்யும் வசதிவாய்ப்புகள் எல்லா மொழிபெயர்ப்பாளர்களுக்கும் அமைவதில்லை. அந்த அளவு நேரமெடுத்துக்கொள்வதாலேயே ஒரு மொழிபெயர்ப்பு தரமானதாக அமைந்துவிடும் என்று உறுதியாகச் சொல்வதற்குமில்லை. ஒவ்வொரு வரின் வேலைசார் ஒழுங்குமுறையும், தேவைகளும் ஒவ்வொரு மாதிரி. சில சமயம் ஒரு வேகமும் உத்வேகமுமாய் ஒரேவீச்சில் செய்துமுடித்தால் தான் உண்டு என்ற நிலை ஏற்படும். ஏற்கனவே குறிப்பிட்டதுபோல் ஒரு மொழிபெயர்ப்பாளரின் இருமொழிப் புலமையோடு அவருடைய தனிநபர் சார் integrityயும் சேர்ந்தே அவருடைய மொழிபெயர்ப்பின் தரத்தை உறுதி செய்கிறது.

என்னுடைய தமிழ்மொழிபெயர்ப்புகளை மீள்பிரசுரம் செய்வதில்லை என்ற முடிவுக்கு வந்திருக்கிறேன். பத்து பதினைந்து வருட இடைவெளியில் அவற்றை மீண்டும் வாசிக்கும்போது மொழிபெயர்ப்பு இன்னும் மேம்பட்டி ருக்கலாமே என்று தோன்றுகிறது. அதற்காக, அவற்றின் மொழிபெயர்ப் பையோ, மொழிபெயர்ப்பு மேம்படுத்தல் பணியையோ மீண்டும் மேற்கொள் ளும் மனநிலையு மில்லை.



ஆங்கிலத்தில் தமிழ்ப் படைப்புகளை மொழியாக்கம் செய்வதில் முனைப்பாக ஈடுபட விருப்பம். அதில் சூழல் சார், உரையாடல் சார் மொழிபெயர்ப்புச் சிக்கல்கள் ஒப்பீட்டளவில் குறைவாக இருப்பதாகத் தோன்றுகிறது.

 சமீபகாலமாக ஃபேஸ்புக் நட்பினரின் கவிதைகளை ஒரு வாசகராகத் தெரிவு செய்து அவற்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து என் முகநூல் பக்கத்தில் பதிவேற்றிவருகிறேன். நிறைவாக இருக்கிறது. இங்கும்மூலப் பிரதியின் உயிரை மொழிபெயர்ப்பு கொண்டுவர வில்லைஎன்று ஒற்றை வரியில் கருத்துரைத்து (அந்த வரியையும் ஆங்கிலத்தில் தப்பும்தவறுமாக எழுதுபவர்களும் உண்டு!) மொழிபெயர்ப்பாளரை விட தம்மைப் பெரிதாகக் காண்பிக்கப் பிரயத்தனப்படுகிறவர்கள் உண்டு தான். ஆனால், ஒப்பீட்டள வில் அத்தகையோர் குறைவு என்று தோன்றுகிறது!



மொழிபெயர்ப்பாளர் மேல் குறைந்தபட்ச மரியாதையும், மொழிபெயர்ப்பு நன்றாக அமையவேண்டும் என்ற அக்கறையும் கொண்டு ஒரு மொழி பெயர்ப்பிலுள்ள குறைகளை அடையாளங்காட்டுபவரின் தொனி வேறு; மொழிபெயர்ப்பாளரை மட்டந்தட்டுவதே குறியாக குறைகளைச் சுட்டிக் காட்டுபவரின் தொனி வேறு. எனவே, இந்த இரண்டிற்குமான மொழி பெயர்ப்பாளரின் எதிர்வினை யும் வேறாக இருப்பதே இயல்பு.

 

நான் மொழிபெயர்த்து புதுப்புனல் வெளியிட்ட ராஜ விளையாட்டு குறுநாவலில் சதுரங்க விளையாட்டு கதைப்போக்கோடு இரண்டறக் கலந்த அம்சமல்ல. ஆனால், A PIECE OF STEAK என்ற இக்கதையில் குத்துச்சண்டை கதையோட்டத்தோடு இரண்டறக் கலந்த அம்சம்.எனக்கு குத்துச்சண்டை பற்றி எதுவுமே தெரியாது. தொலைக்காட்சிப்பெட்டி வழியே அதைக் காணநேரும்போதெல்லாம் கண்ணைத் திருப்பிக்கொண்டு விடுவேன். ஆனாலும் இந்தக் கதையை மொழிபெயர்க்க விரும்பினேன். மொழிபெயர்த்தேன். குத்துச்சண்டை தொடர்பான என்னை  நிறையவே தடுமாறவைத்தன. அவற்றையெல்லாம் தாண்டி, அல்லது, அவற்றினூடாக இந்தக் கதை நம் முன் விரிக்கும் வாழ்க்கையின் தான் அதற்குக் காரணம். குத்துச்சண்டை வீரர்களை நகமும் சதையுமான சக மனிதர்களாய் நம் கண்முன் நிறுத்தும் கதை இது.



இந்தக் கதையின் கதாநாயகன் குத்துச்சண்டைவீரன். குத்துச்சண்டைக் களத்தில் அவன் எப்படி இயங்குகிறான் என்பது இதில் விவரிக்கப் பட்டுள்ளது. ஆனால், அதுவல்ல கதையின் அடிநாதம். குத்துச்சண்டை நகர்வுகளைப் பற்றித் தெரிந்துகொள்வதற்காக இந்தக் கதையைப் படிக்க வேண்டிய தேவையில்லை. அதற்கு எத்தனையோ -புனைவு நூல்கள் உள்ளன. எனக்கு குத்துச்சண்டை பற்றி எதுவுமே தெரியாது. ஆனாலும் இந்தக் கதையை என்னால் ரசித்துப் படிக்க முடிந்தது. இந்தக் கதை எனக்குப் பிடித்தது. எனக்குத் தெரியாத, நான் முரடனாக மட்டுமே பார்த்திருந்த குத்துச்சண்டைவீரர்களின் வாழ்வை, அதன் சோகங்களை, சிரமங்களை என்னால் இந்தப் புனைவிலக்கியத்திலிருந்து அறியமுடிந்தது.

 

பல வருடங்களுக்கு முன்பு கவிஞர் வைதீஸ்வரன் இந்தக் கதையைப் பற்றி எடுத்துக்கூறி மொழிபெயர்க்கும்படி கேட்டுக்கொண்டதற்கிணங்க இதை மொழிபெயர்த்தது எனக்கு மனநிறைவைத் தருகிறது. ஜாக் லண்டனின் பிற படைப்புகளை நான் படித்ததில்லை; குத்துச்சண்டை வீரர் யாரையேனும் சந்தித்து குத்துச்சண்டை குறித்த எல்லா விவரங்களையும் அறிந்துகொள்ள வேண்டும் என்று தோன்றவில்லை. அதைச் செய்ய முயலவில்லை.

A PIECE OF STEAK கதைநேரடியாக ஆங்கிலத்தில் எழுதப்பட்டது. Googleஇல் படிக்கக் கிடைக்கிறது. ஆங்கிலம் அறிந்தவர்கள் ஆங்கிலத்தி லேயே படித்துக்கொள்வதே மேல். மொழிபெயர்ப்பில் குறைகாணவேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் ஆங்கில மூலத்தை அருகில் வைத்துக்கொண்டு என் தமிழ் மொழிபெயர்ப்பை அலசியாராய முற்படும் அறிவுசாலிகளிடம் (பலநேரங்களில் இத்தகையோர் வேறு சில இலக்கியம் - மொழி சார் பெருந்தகைகளின் விசுவாசிகளாக இந்தஅகழ்வாராய்ச்சியனைய அலசல்பணியை மேற்கொள்வதும் நடக்கிறது.)



நான் வேண்டிக்கொள்வதெல்லாம் இதுதான்: இந்தக் கதையை நான் சரியாக மொழிபெயர்க்கவில்லை என்று தோன்றினால் யார் வேண்டுமானா லும் இதை இன்னும் திறம்பட மொழிபெயர்க்கலாம். இதுவரை யாரும் இந்தக் கதையின் மொழிபெயர்பு உரிமையை வாங்கியதாகத் தெரிய வில்லை. ஒரு பிரதிக்கு இரு மொழிபெயர்ப்புகள் இருப்பதில் தவறில்லை. அதன் மூலம் மொழிபெயர்ப்பு சார்ந்த ஒப்புநோக்கல், புதிய பார்வைகளைப் பெற வழி கிடைக்கும். அதே சமயம், ஏற்கெனவே  மொழிபெயர்ப்பு பிரதி இருக்கும்  மூலப்படைப்பின் இரண்டாம் மொழி பெயர்ப்பு முதல் மொழிபெயர்ப்பை அடிப்படையாகக் கொண்டு அதைவிட மேம்பட்டதாய் அமையும் வாய்ப்புகள் அதிகம் என்பதையும் நாம் மறக்கலாகாது.

A PIECE OF STEAK என்ற தலைப்பை ஒரேயொரு இறைச்சித்துண்டு என்று தமிழில் குறிப்பிட்டிருக்கிறேன். ஒரேயொரு என்பது தவறு என்று சிலர் வாதிடக்கூடும். குத்துச் சண்டைக்குப் போகுமுன் ஒரு இறைச்சித்துண்டு சாப்பிடக்கிடைத்தால் நன்றாயிருக்குமே என்று ஏங்கும் கதாநாயகனுக்கு அது கிடைக்காமல் போகும் மனவலியை அழுத்தமாக எடுத்துக்காட்ட ஒரேயொரு என்ற வார்த் தையே பொருத்தமானது என்று தோன்றியது.

 

STEFAN ZWEIGஇன் AMOK என்ற குறுநாவலுக்கு என் தமிழ் மொழிபெயர்ப்பில் ஆட்கொள்ளப்பட்டவன் என்று தலைப்பிட்டேன். அதற்கான காரணங்களை நூலின்சொல்லவேண்டிய சிலபகுதியில் விளக்கியிருக்கிறேன். இதை தவறு என்றும் அத்துமீறல் என்றும் சொல்பவர்களிடம் என்ன சொல்வது? எதற்குச் சொல்வது என்ற ஆயாசமே மிஞ்சுகிறது.

வார்த்தைத் தேர்வுகளில்தான் ஒரு மொழிபெயர்ப்பாளரின் தனி அடை யாளம் இருக்கிறது என்று தோன்றுகிறது. மொழிபெயர்ப்பை STANDARDIZE (ஒருபடித்தானதாக) ஆக்குவது அபத்தம், அசாத்தியம் என்று தோன்றுகிறது.

அடுத்தடுத்து மொழிபெயர்க்க நேரும் ஒரே கவிதையின் இரண்டு மொழிபெயர்ப்புகள் ஒன்றாக இருப்பதில்லை. ஒரு சமயத்தில் ஒரு கவிதையை அல்லது சில வரிகளை ஒருவிதமாக மொழிபெயர்த்துக் கொண்டிருக்கும்போதே அவற்றின் வேறுவகையான மொழிபெயர்ப்பு வடிவங்களும் மனதில் தோன்றியவண்ணமேயிருக்கும். மனசில்லா மன சோடு ஒரு மொழிபெயர்ப்பை மட்டும் வைத்துக்கொண்டு மனதிலோடும் மற்ற மொழிபெயர்ப்புகளைப் புறக்கணித்து முன்னேறியாகவேண்டும்.

மொழிபெயர்ப்புகளைப் படிக்க விரும்பும், முன்வரும் வாசகர்களுக்கு என் பணிவான வேண்டுகோள் இதுதான்: மூலமொழி தெரிந்தால் அதிலேயே படிப்பதே மேல். ஆங்கிலம் தெரிந்தால் ஆங்கிலத்திலேயே படிப்பதே மேல். அவ்வாறில்லாமல், தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட ஒரு படைப்பை வாசிப்பவர்கள், மொழிபெயர்ப்பாளர்களிடம் குறைகாண்பதையே நோக்க மாகக்கொண்டு அதை அணுகவேண்டாம், அப்படி அணுகுபவர்களின் அடியொற்றி அந்தப் படைப்பை வாசிக்க முற்படாதீர்கள்.


இதன் மறுமுனையாக, மொழிதெரியாத வாசகர்கள் தானே என்ற அலட்சியத்தோடு மூலப்படைப்பை தன் மனம்போன போக்கில் ஒரு மொழிபெயர்ப்பாளர் கையாளக்கூடாது என்பதையும் குறிப்பிட வேண்டும். குறைந்தபட்ச நம்பிக்கையுடனாவது ஒரு மொழிபெயர்ப் பாளரை அணுகுங்கள். அதற்கு அவர் உரியவராக இருக்கவேண்டும் என்பதும் இங்கே உட்குறிப்பு.

 

ஒரு மொழிபெயர்ப்பாலருக்கு அவசியம் இருக்கவேண்டிய அடிப்படை INTEGRITYயோடு இந்த மொழிபெயர்ப்பைச் செய்திருக்கிறேன். என் மொழிபெயர்ப்பு வாசகர்களுக்கு நிறைவைத் தந்தால் அதற்கு மூலப் படைப்பின் தரமும் ஆழமுமே காரணம். நிறைவான வாசிப்பனுபவத்தைத் தரவில்லையென்றால் அதற்குக் காரணம் மொழிபெயர்ப்பாளராகிய எனது போதாமையே என்று தெரிவித்துக்கொள்கிறேன். இது தன்னடக்கமல்ல என்றும் தெளிவுபடுத்திவிடுகிறேன்.




(2)

மொழிபெயர்ப்புத் திறனாய்வாளராக அறியப்படுவதற்கு 

ஒருவருக்கு இருக்கவேண்டிய முக்கியத் தகுதிகள்

 

(* முன்குறிப்பு:நியாயமானதகுதிவாய்ந்த விமர்சகர்கள் என்றுமே மதிக்கப்பட வேண்டியவர்கள்மதிப்புக்குரியவர்கள்இலக்கியம் சார்ந்தமொழி பெயர்ப்பு சார்ந்த  உண்மையான அக்கறையோடு அவர்கள் விமர்சனத்தை 

கண்ணியமாகமுன்வைக்கும் விதமே வேறு.இந்தக் கட்டுரை அவர்களுக் கானதல்ல)

 

மொழிபெயர்ப்பாளர்களின் 300 பக்கங்களில் 3 தவறுகளை, அதுவும் தப்புத் தப்பாய், சுட்டிக்காட்டுவதன் மூலமே மேதகு மொழிபெயர்ப்பு விமர்சகர் களில் முக்கியமான ஒருவராக வலம்வந்துகொண்டிருக்கும் பெருந்தகை ஒருவர் விரைவிலேயே மொழிபெயர்ப்பு தொடர்பான பல Ten Commandments – பிறப்பிக்கும் வாய்ப்புகள் தெளிவாகவே தெரிகின்றன. அவை குறித்த ஒரு Teaser:

 

 

(அ)

மொழிபெயர்ப்பாளர்களுக்கான அவருடைய

முதல் பத்துக் கட்டளைகள்:

 

1.  நீ 30 நூல்களை மொழிபெயர்த்திருந்தால் என்ன? 300 நூல்களை மொழிபெயர்த்திருந்தாலென்ன? அடிப்படை மரியாதை கூட இல்லாமல் நான் உன்னைக் கேள்வி கேட்டால் கையைக் கட்டிக்கொண்டு பதில் சொல்லக் கற்றுக்கொள். இல்லையென்றால், அடிப்படை முகாந் திரம் எதுவும் இல்லாமலேயே உன் மொழிபெயர்ப்பின் மீது சேறு வீசியடிக்க என்னால் முடியும். எச்சரிக்கிறேன்.

 

2.  Out of contextஇல் உன் வரிகள் சிலவற்றை எடுத்துக் காட்டி என்னை நல்ல மொழி பெயர்ப்புக்காக உயிரையும் கொடுக்கத் தயாராயிருக்கும் அப்பாவி வாசகராகவும் உங்களை (இல்லையில்லை உன்னை) மொழிபெயர்ப்புக் கலையைப் பழிக்கவந்திருக்கும் படுபாவியாகவும் மேடைக்கு மேடை முழங்க முடியும்.

 

     3.ஆம், அடிப்படை மரியாதையில்லாமல் உன் மொழி பெயர்ப்பைக் கொச்சைப்படுத்தி என் நிலைத்தகவலில் கிசுகிசுப்பேன். அதே மூச்சில் உனக்குநட்புக்கோரல்அழைப்பு அனுப்புவேன். மரியாதையாக ஏற்றுக் கொண்டால் பிழைத்தாய். இல்லையோ, முன்னிலும் கேவலமாக உன் மொழிபெயர்ப்புகளை மதிப்பழிப்பேன். நவ விமர்சகக் கலையின் நெறி இது. புரிந்து கொண்டால் உனக்கு நல்லது.

 

4.ஒவ்வொரு வரியை மொழிபெயர்ப்பதற்கு முன்பாகவும் என்னை தொலைபேசியிலோ, மின்னஞ்சலிலோ ஒப்புதல் கேட்கத் தவறாதே. மொழி பெயர்ப்பில் உனக்கு இருபது வருடங்களுக்கு மேல் அனுபவம் இருந்தால் என்ன? விமர்சனம் என்ற பெயரில் ஆள்காட்டி விரலை அப்படியும் இப்படியும் ஆட்டி, ஒற்றைப் புருவத்தைச் சற்றே உயர்த்தி உதடுகளுக்கிடையில் இளக்காரச் சிரிப்பொன்றை க்விக்ஃபிக்ஸ் போடாத குறையாய் நிலைத் திருக்கச் செய்து நான் மைக் முன்னே நின்றாலே போதும்உனக்கு சமாதிதான்.

 

5.  எனக்கு இருமொழிப்புலமை இருக்கிறதா என்றா கேட்கிறாய்? -– என்ன திமிர்? எனக்கு இருமொழிப்புலமை இருக்கிறதோ இல்லையோ உன்னை அறிவுகெட்ட அரைகுறை மொழிபெயர்ப்பாளர் என்று அவ்வப்போது முழங்க அரங்கங்கள் கிடைத்துவிடுகின்றன. அதுவே முக்கியம்.

 

6.  வேறு சிலரின் பெயர்களைச் சொல்லி அவர்களுக்கு விமர்சனம் செய்யும் தகுதி இருக்கிறதுஎனக்கு இல்லை என்கிறாயேபித்துக்குளி, தகுதி என்பது தானாக வருவதில்லை. நானாக எடுத்துக்கொள்வதுதான். நான் உன்னை மட்டமான மொழிபெயர்ப்பாளர் என்று பழிக்கலாம், மதிப்பழிக் கலாம்நீ என் விமர்சகத் தகுதியைப் பற்றிப் பேசினாலோ உன் ரியாக்ஷனை ஆக்ஷனாகக் காட்டி உன்னை ஆணவக்காரியாக அரை நொடிக்கும் குறைவான நேரத்தில் என்னால்ஃப்லிம்காட்டிவிட முடியும் தெரியுமா?

 

7.   நான் கவிதையை சிறுகதை என்று கூறலாம். குறுநாவலை நாவல் என்று கூறலாம். அது என் உரிமை. அதை நீ சுட்டிக்காட்டினாலோ, கேள்வி கேட்டாலோஉன் மொழிபெயர்ப்பை இன்னும் இரண்டு தட்டு தட்டுவேன். பார்க்கிறாயா?

 

8. நீச்சல்குளம் வரும் கதையை மொழிபெயர்க்கப் புகுமுன் நீச்சல் கற்றுக் கொண்டு வா. இதையே நீட்டித்தால்கொலை இடம்பெறும் கதையை மொழிபெயர்க்குமுன் ஒரு கொலை யாவது செய்துபார்.

 

9. நீ மொழிபெயர்க்க எடுத்துக்கொண்ட ஆங்கில மொழியாக்கமும், நான் உன் மொழிபெயர்ப்பைப் பழித்துரைக்க எடுத்துக்கொண்ட ஆங்கில மொழியாக்கமும் இருவேறு நூல்களாக இருந்தால்தான் என்ன? இதுக்குப் போயி அலட்டிக்கலாமா?

 

10.  சீட்டாட்டமே தெரியாமல் சீட்டாட்டம் பற்றிய நூலை மொழிபெயர்த்த தற்காய் உனக்கு மரணதண்டனை விதிக்கிறேன். அது சரி, உனக்கு சீட்டாட்டம் தெரியும் என்கிறாயேஎப்படி நம்புவது? வெறும் வாய் வார்த்தையாய் ஆர்ட்டின், க்ளாவர், ஸ்பேடு, டையமண்ட் என்று சொன்னால் ஆயிற்றா? உன் மண்டையை உடைத்து மூளையின் எந்த இடுக்கில் அவற்றின் பிம்பங்கள் நினைவலைகளாக அசைந்து கொண்டிருக் கின்றன என்று காட்டு பார்க்கலாம். அதன் பிறகு, உனக்கு சீட்டாட்டம் தெரியும் என்று ஒப்புக்கொள்வதைப் பற்றி யோசிக்க முடியலாம்.

 

 

 

)

 

திருமிகு மொழிபெயர்ப்புத் திறனாய்வாளர் தனக்குத் தானே தந்துகொள்ளும்

பத்துக் கட்டளைகள்:

 

[*நடுக்குறிப்பு: மற்றவர்களுக்குச் சொல்லித்தராமல் ரகசிய மாய் வைத்துக்கொண்டிருக்கும் விமர்சக சூத்திர முத்திரை வாசகங்களில் பத்தை  வழக்கம்போல் இன்றிரவும் உறங்கச் செல்லும்முன் தனக்குத் தானே உச்சாடனம் செய்துகொண்டார்பிறருடைய மொழிபெயர்ப்பைப் பிய்த்துப் பிய்த்தே திருமிகு திறனாய் வாளராகிவிட்டவர்:

 

1.அடிக்க அடிக்க அம்மியும் நகரும் என்ற பழமொழியை  நினைத்துப்பாரு.

அச்சுப் பிழைகளையும் மொழிபெயர்ப்புக் குறைபாடாக அடித்துக்கூறு..

 

2.        பெரிய பெரிய மான்யங்களெல்லாம் வாங்கி பெரிய பெரிய பதிப்பகங்கள் வெளியிடும் மொழிபெயர்ப் புகளை மறந்தும் விமர்சிக்க முற்படாதே. நடுநிலை யாளராகக் காட்டிக் கொள்ளத்தான் வேண்டு மென்றால் செல்லமாய்த் திட்டு; வலிக்காமல் இரண்டு தட்டு தட்டு. (உன் எழுத்துகள் அவர்களால் புத்தகமாக்கப்படலாம் ஒருநாள். ஆதலால், வாலைச் சுருட்டிக்கொண்டிருப்பதே புத்திசாலித்தனம்.)

 

3.அந்தக் குழு இந்தக் குழுவில் இருப்போரெனில் பதிப்பாளரையும் மொழிபெயர்ப்பாளரையும் பற்றி முடிந்தால் அடைமொழிகளிட்டுப் பாராட்டுஇல்லை வாயைப் பொத்திக் கொண்டு அடங்கியிரு. எந்தக் குழுவிலும் இல்லாதவரெனில் எட்டியுதைக்கத் தவறாதே.

 

4.சாமான்யர்கள் அண்டா குண்டா அடகு வச்சு கொண்டாரும் மொழி பெயர்ப்பு நூல்களைக்  குத்திக் குதறு. அவர்கள் கதறியழுது உன் காலடியில் விழவில்லையாயின் உணர்ச்சியற்ற துக்கிரி என்று கொக்கரி. ‘_ இது என்ன எழவு மொழிபெயர்ப்பு வரி? குடித்ததேயில்லை இப்படியொரு குமட்ட லெடுக்கும் காப்பி, எத்தனை கசப்பு, எத்தனை சிக்கிரி, எப்படித்தான் குடிப்பார் களோ வாசகர்கள்? இது லாகிரி யிழந்த மொழிசெய்துகொள்ளும் ஹரகிரி () ஹராகிரிஎன்று வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் எதுகை-மோனை யோடு காறித்துப்பிவிட்டு குரலெடுத்துச் சிரி. பெரிய திறனாய்வாளனாய் அறியப்பட்டு டுவாய். நினைப்பு தான் பொழப்பைக் கெடுக்கும் என்று அசரீரி போல் ஏதோ அடியாழ மனதிலிருந்து கேட்டால் புறக்கணித்து மேலே செல்.)

 

5.மற்றவர்கள் வருவார்கள் என்ற முன்னெச்சரிக்கை யோடு மூல நூலையும் மொழி பெயர்ப்புநூலையும் மேசை மீது அருகருகே வைத்துக்கொள்.

 

6.  மறவாதே ஆறேழு பூதக்கண்ணாடிகள் எப்பொழு தும் கையிலிருக்கட்டும். Said, told என்று சுலபமான இரண்டு சொற்களை மொழியாக்க நூலிலிருந்து எடுத்துக்கொண்டு சொன்னார் , கூறினார் இரண்டில் இது சரி அது சரியில்லை என்று பலவிதமாய்ப் பேசி, ஏசி மொழிபெயர்ப்பின் அக்மார்க் திறனாய்வாளராக உன்னை அடையாளம் காட்டிக்கொள்.

 

7.  மூலநூலையும் மொழிபெயர்ப்புநூலையும் நீ முழுவதும் படித்திருக்கிறாயா? ஒரு மொழியாக்க நூலுக்கு ஆங்கிலத்தில் பல மொழியாக்கங்கள் உண்டு அறிவாயா? அந்த மொழியாக்க நூல்களனைத்தையும் படித்திருக்கி றாயா? முக்கியமாக, மூல ஆசிரியரின் மற்ற நூல்களை யெல்லாம் படித்திருக் கிறாயா?’ என்று யாரேனும் எதிர்க்கேள்வி கேட்டால் அவரை விமர்சன விரோதி என்று அடையாளம் காட்டப்பார். ‘ வா சண்டைக்குஎன்று பின்வாங்கியபடியே வீரமுழக்கம் செய்.

 

      8.கையில் கிடைத்த அப்பாவி மொழிபெயர்ப்பாளர் மண்டை யைக் கால் பந்தாய் உருட்டிக்கொண்டே போ. இலக்கிய வுலகின் முடிசூடா விமர்சக ஒலிம்பிக்ஸ் வீரராய் சுலபமாய் அறியப்பட்டுவிடலாம்.

 

9.அறம் என்று ஒருவேளை மனசாட்சி முனகினால் அதைக் கழற்றி மரத்தடியில் எறிந்துவிட்டு மேலே செல்.

 

10.மொழிபெயர்ப்பு விமர்சகரென்றால் சும்மாவா? இல்லாத ஒளிவட்டத்தை ஆடியில் தினம் தலைக்குப் பின்னால் எல்லாநேரமும் இருப்பதாகக் காணும் இன்பம் _ அட, அம்மாவோ!

 

 

)

பத்துக் கட்டளைகள்சக விமர்சகர்களுக்கு

 

மற்றவர்களுக்குச் சொல்லித்தராமல் ரகசியமாய் வைத்துக் கொண்டிருக்கும் விமர்சக சூத்திர முத்திரை வாசகங்களிலி லிருந்து மொழியாக்க விமர்சகராக விரும்பும் பிறருக்கு போனால் போகட்டும் என்று எடுத்துக் கொடுக்கும் பத்துக் கட்டளைகள்:

 

1.ஒரு படைப்பாளியின் ஒரு படைப்பை மொழி பெயர்க்க அந்தப் படைப்பாளி எழுதியுள்ள மற்ற அத்தனை படைப்புகளையும் படித்திருக்கவேண்டும் என்பதோடு அவர் படைக்க நினைத்த படைப்புகளையும் படித்திருக்க வேண்டும் என்பது மொழியாக்கத்தில் ஈடுபடுவோ க் கான எழுதப்படாத விதி என்று முகத்தில் தீவிர பாவத்தோடு கூறவேண்டும். இதற்காக நிலைக் கண்ணாடி முன் நின்று நான்கைந்து நாட்கள் ஒத்திகை பார்க்க வேண்டியிருக்கும்.

 

2.அதுவே, ஒரு மொழிபெயர்ப்புப் பிரதியை விமர்சிக்க ஒருவருக்கு இருக்கவேண்டிய குறைந்தபட்சத் தகுதி யென்ன என்று யாரேனும்நாக்கு மேல பல்ல போட்டு’க் கேட்டாலோபதிலளிக்கத் தேவையில்லாத அரைக் கிறுக்கன் கேள்வியது என்பதுபோல் முகபாவம் தாங்கி அதைப் புறக்கணித் துச் செல். அடுத்த முறை (போயும் போயும்) உன்னிடம் திறனாய்வு குறித்த கட்டுரை எழுதச் சொல்லி கேட்கப்பட்டால் மறவாமல், மொழிபெயர்ப்புத் திறனாய்வு என்ற போர்வையில் மிக வன்மமாய், மிக வக்கிரமாய் அந்த மொழிபெயர்ப்பாளரை மட்டையடி அடி..

 

3.மொழிபெயர்ப்பாளரா மொழிபெயர்ப்புத் திறனாய்வா ளராயாரையாவது பட்டிமன்றம் நடத்த வைத்து அதில் நீ மொழிபெயர்ப்புத் திறனாய்வாளருக்கு சார்பாய் வாதிடு. முன்னூறு பக்கங்களில் எங்கேயாவது ஒளிந்திருக்கக் கூடிய ஒரு சில பிழைகளை அல்லது ஒரேயொரு பிழையை தேடிக் கண்டுபிடிப்பது என்றால் சும்மாவா? அதுவும் தவிர, பிழையில்லாததையும் பிழையாகத் திரித்துக் கூற ஒரு சாமர்த்தியம் தேவையல்லவா? அது உன்னிடம் இருக்கும்படி பார்த்துக்கொள்.

 

4.இப்பொழுதெல்லாம் இலக்கியவாதிகளை கௌரவிப் பதாய் நடத்தப்படும் பல விழாக்கள் உண்மையில் விழா நடத்துபவர்கள் மேல் வெளிச்சம் விழச் செய்வதற்காகவே நடத்தப்படு கின்றன என்பது வெட்டவெளிச்சமாகவே தெரிவதால் நான்குவார்த்தைகள் நல்லபடியாக விழாக் குழுவைப் பாராட்டிப் பேசுவாய் என்று தெரிந்தால் போதும்உனக்குக் கட்டாயம் சிறப்புரையாற்ற அழைப்பு விடுக்கப்படும். ஒரு பிரதி குறித்துத் திறனாய்வு செய்வதற்கான தகுது உனக்கிருக்கிறதா என்பதில் அக்கறை காட்ட மாட்டார்கள். எனவே, உன் பாடு கொண்டாட்டம்தான்.

 

5.வெட்ட வாகாய் ஒரு மொழிபெயர்ப்பாளர் தலையைக் கையோடு பொதிந்து கொண்டுபோ. ரத்தம் சொட்டச் சொட்டக் கொண்டுபோனால் மறுநாள் தலைப்புச் செய்தியாகிவிடுவாய். இப்பொழுதெல்லாம் கொலை காரர்களும் கொள்ளைக்காரர்களும் தானே அச்சு, ஒலிஒளி ஊடகங்களி லெல்லாம் அங்கிங்கெனாதபடி…… எனவே, உனக்குப் பேரும் புகழும் கிடைப்பது காலத்தின் கட்டாயத் தேவையாகிவிடும்

 

6.கழுவேற்றப்போகும் மொழிபெயர்ப்பாளர் மேல் கல்லடித்துக்கொண்டே எந்த மொழிபெயர்ப்பாளரின் கடைக்கண் பார்வை பட்டால் நல்லது என்று தோராய மாகக் கணக்கிட்டிருக்கிறாயோ அவருடைய மொழி பெயர்ப்பை ஆஹா ஓஹோ என்று புகழப் பழகவேண்டும். அதற்காக வாவது, சம்பந்தப் பட்ட மூலநூல்களின் அரை முக்கால் பக்கங்களை சிரமம் பார்க்காமல் படித்துக்கொண்டுவிடு. அப்படியே மொழிபெயர்ப்புநூலின் ஒரு சில பக்கங்களையும் படித்துக் கொண்டுவிடு.

 

7.கண்ணுக்குப் புலனாகும் அளவில் பிழைகள் இருப்பின்கப்பென்று பிடித்துக்கொள்அவற்றைக் கொண்டு மொத்த மொழியாக்கத்தையுமேகண்றாவிஎன்று அருவருப்பாக முகத்தைச் சுளித்துக்கொண்டு கரித்துக் கொட்டுவது எளிது.

 

8.அப்படி பிழையெதுவும் தெரியாவிட்டாலும் பரவாயில்லை – ’ஒரு மொழிபெயர்ப்பு இயல்பாக நகர வேண்டும், மூல நூலை நான் படிப்பது போன்ற உணர்வை எனக்கு ஏற்படுத்தவேண்டும்’, ’இரு கலாச் சாரங்களும் இரண்டறக் கலந்திருக்கும் (அல்லது கலந்திருக்காத) மொழிபெயர்ப்பே மேம்பட்டது’, என்று பொத்தாம்பொதுவில் சில வாசகங்களைக் கூறி அந்த மொழிபெயர்ப்பைவெத்துவேட்டாககையடித்து சத்தியம் செய்யாத குறையாக திரும்பத் திரும்பக் கூறலாம்முன்மொழிவது, வழிமொழிவது எல்லாப் பொறுப்புகளையும் சிரமேற் தாங்குபவராய்.

 

9.தமிழகமே கேட்கிறது, தமிழகமே அழுகிறது, இந்தி யாவே அஞ்சுகிறது, இகபரலோக மெல்லாம் கெஞ்சுகிறது என்பதாக ஒற்றை நபர் தன்னையொரு பிரபஞ்சமாக பாவித்துப் பேசுவது இப்பொழுதெல்லாம்ட்ரெண்டிங்ஆகியிருக்கிறதல்லவா. யார் இதற்காகரகசிய வாக்கெ டுப்புநடத்தி ஆதாரம் தேடப்போகிறார்கள்? அதனால் தைரியமாக அதைப் பின்பற்றி நாமும்இந்த மொழிபெயர்ப்பு அசிங்கமானது என்று ஆயிரமா யிரம் வாசகர்கள் ஆவேசப்படுகிறார்கள்என்றோஅத்தனை பக்கங் களும் குத்தம் குறை நிறைந்ததுஎன்றோ கைபோன போக்கில் எழுதிவிடலாம்; கம்பீரமாய் அரங்கில் வாசித்துக்காட்டலாம். சரியான ஏற்ற இறக்கங்க ளோடு குரல் கமறாமல் முன்கூட்டியே தண்ணீர் குடித்து, படித்தால் கண்டிப்பாகக் கைத்தட்டல் கிடைக்கும்.

 

     10.ஒரு வரியின் மொழிபெயர்ப்பு சரியில்லை என்று மட்டும் சொல். அதை எப்படி சரியாக மொழிபெயர்ப்பது என்று சொல்லிவிடாதே – (’அது எனக்குத் தெரியாதே, அதைச் செய்தால் நான் அம்பலப்பட்டுவிடுவேனேஎன்று நீ சொல்லாமல் சொல்வதை உன் முகமே காட்டு கிறது. ஆனால், அது அரங்கிலுள்ளோருக்கு அல்லது அச்சு ஊடக, கணினித்திரை வாசகர் களுக்குத் தெரிந்துவிடலாகாது. மொழிபெயர்ப்பு மேல் அத்தனை அபிமான முள்ள வராகக் காட்டிக்கொண்டேயிரு. ஆனால், மறந்தும் நீ ஒரு சிறுகதையைக்கூட, ஏன் சிறு கவிதை யைக்கூட மொழிபெயர்த்துவிடாதே. செய்தால், நீ இரக்கமற்றுக் கழுவேற்றிய மொழிபெயர்ப்பாளர்களின் ஆவிகள் கூட்டமாய் வந்து, உன் திறனாய்வு வார்த்தைகளைக் கொண்டே உன் தலையை சீவிவிடும் (சீவிவிடுமென்றால் சீப்பால் வாரிவிடுவதில்லை, வாளால் வெட்டிவிடுவது!) சாத்தியப்பாடுகள் அதிகம். ஆகவே ஆபத்தை விலை கொடுத்து வாங்காதே. அவ்வளவுதான் சொல்லமுடியும்.

 

 

3) எத்தனையாவது

எத்தனையாவதுஎன்ற தனித்துவமான தமிழ்ச்சொல்லை

தங்குதடையின்றி ஆங்கிலத்திற்குக் கடத்த எத்தனையோ முயன்றும் முடியவில்லை……

 

மொழிபெயர்ப்பாளர் மீண்டும் மீண்டும் முயன்றுகொண்டிருந்தார்.

 

சொல்சொல்லாய்ச் செதுக்கிச் செதுக்கி
கண்ணும் கையும் களைத்துப்போய்விட்டன.

 

வெண்சாமரம் வீசவோ விக்கலுக்கு நீர் தரவோ
வேந்தரா என்னவெறும் மொழிபெயர்ப்பாளர்தானே?

 

கனன்றெரியும் விழிகளில் குளிர்நீரூற்றிக்கொண்டு
தொடர்ந்தார் தன் தேடலை.

 

எத்தனையாவது முறையோ…..

 

ஏகாந்தமாய் எங்கோவொரு மலைமுகட்டோரம் அமர்ந்து

எழுதிக் கொண்டிருந்தவரை

என்ன எழுதிக்கிழித்துக்கொண்டிருக்கிறாய் வெண்ணைவெட்டி மொழிபெயர்ப்பாளரேஎன்று
பின்னிருந்தொருவன் கேட்டான்,

கையில் குண்டாந்தடியோடு.

 

எத்தனையாவது என்ற வார்த்தைக்கு ஆங்கில இணை தேடிக்கொண்டிருக்கிறேன், உங்களுக்குத் தெரியுமா?”
என்று ஆவலோடு கேட்டார் மொழிபெயர்ப்பாளர்.

 

எனக்குத் தெரிந்ததெல்லாம் ஏகதேசமா யொரு குறை கண்டுபிடித்து
எளிய மொழிபெயர்ப்பாளர் எவரையேனும் கழுவிலேற்றுவதுதான்.

அதிருக்கட்டும். இதற்கு பதில் சொல்
என்ன எழுதிக்கிழித்துக்கொண்டிருக்கிறாய்
இதை எப்படி எழுதுவாய் ஆங்கிலத்தில்?”

 

எழுதுவது தடங்கியதில் எரிச்சலுற்ற மொழிபெயர்ப்பாளர்
எப்படி யெழுதவேண்டுமோ அப்படி எழுதுவேன்”, என்றார்.

 

எப்படி - சொல் சொல்என்றான் வந்தவன், விடாமல்.

 

கையால் மையால்ஏன், காலால்கூட

 

என்ன நக்கலாஎங்கே காலால் எழுதிக்காட்டு பார்க்கலாம்.”

 

முதலில் நீ இந்த எத்தனையாவதை கையாலேயே ஆங்கிலத்தில்

மொழிபெயர்த்துத் தாயேன்தயவுசெய்து

 

அட பழிகாராவடலூர் வள்ளலாரைத் தெரியாமலிருக்கலாம்,

ஆனால், விண்ணைத்தொடும் மொழிபெயர்ப்பை?”

 

அது யாருடையது?”

 

என்னுடையது

 

எந்த நூலின் மொழிபெயர்ப்பு

 

என்றோ ஒரு நாள் செய்யநேர்ந்தால் அப்போது யோசித்தால் போயிற்று.”

 

அது சரிவடலூர் வள்ளலார் ஏன் வந்தார்?”

 

வடலூர்விண்வி - Wow! What a rhyme!  நிற்க, வழக்கமாக, வீட்டுக்குள்ளி ருந்தா மொழிபெயர்ப்பு செய்வது?

 

வேறு எங்கிருந்து?”

 

மூலப்பிரதியில் கடல் விரிந்திருந்தால் அதன் மேல் சப்பணமிட்டு அமர்ந்துகொண்டு
அதிலுள்ள நீர்த்துளிகளின் எண்ணிக்கையை சரிவரக் கணக்கிட்டு முடித்த பிறகே
அதை மொழிபெயர்க்க முற்படவேண்டும் நீ;

 

மூலப்பிரதியில் நாய் வந்தால் முதலில் நீ குரைக்கக் கற்றுக்கொண்டால்தான் மொழிபெயர்ப்பில் மேம்பட முடியும்;

 

மூலப்பிரதியில் விஷம் வந்தால் நீ குடித்தாகவேண்டும் அதன் மொழிபெயர்ப்பில் முழுமை பெற_”

 

மன்னிக்கவும் குறுக்கிடுவதற்கு”, என்று முனகினார் மொழிபெயர்ப்பாளர்: ”மரித்து விடுவேனே நான்அப்படிச் செய்தால்...”

 

அதனாலென்னசெத்தால்தான் சொர்க்கம்“No Pain, No Gain” என்று அசால்ட்டாகக் கூறியவனை

 

அப்படியானால் முதலில் நீஎன்று மலையுச்சியிலிருந்து பிடித்துத்தள்ளிவிட்டு

மறுபடியும் மொழிபெயர்க்க முனைந் தார்

எத்தனையாவதை.

 

 


No comments:

Post a Comment