LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Saturday, June 2, 2018

திக்குத் தெரியாத காட்டில்….. ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

திக்குத் தெரியாத காட்டில்…..
ரிஷி
(லதா ராமகிருஷ்ணன்)

நான்கைந்து வருடங்களுக்கு முன்
அந்த உண்மையைச் சொன்னவரை
நல்ல பாம்பு அடித்துப்போடவேண்டும் என்று
சீறிப் படமெடுத்தாடியவர்
இன்று அதையே
உலகெங்கும் முதன் முதலாய்
தன் உள்ளம் மட்டுமே உணர்ந்ததொரு
பேருண்மையாய்
உச்சஸ்தாயியில் முழங்கிக்கொண்டிருப்பதைப் பார்த்து
இன்று புதிதாய்ப் பிறந்தோம்என்பது இதுவல்லவே
என்று அரற்றிய பாரதியாரின் ஆவியை
வாணி-ராணி ராதிகாவின் மெகாத்தொடர் அடியாள்
பேயோட்டியின் உதவியோடு விரட்டிவிட்டதைப் பார்த்து
வெலவெலத்துப் போன நிஜப்பாம்பு
நந்தினி நாகினியாக மாறி
அங்கே இல்லாத புற்றுக்குள்ளிறங்கிச்
சுருண்டுகொண்டது..

















Friday, June 1, 2018

ஒரே ஒரு ஊரிலே……… ’ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)


 ஒரே ஒரு ஊரிலே………

’ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)


’யார் மணிகட்டுவது’ என்பதை
’யார் கட்டிவிடப்போகிறார்கள்’ என்றும்
’யாரும் கட்ட வரமாட்டார்கள்’ என்றும்
’யாராலும் கட்டிவிடமுடியாது’ என்றும்
பேர்பேராய்த் தந்த பொருள்பெயர்ப்பைப்
பெரிதும் நம்பிக்கொண்டிருந்த பூனை _


இரவுபகல் பாராது
விரும்பிய நேரமெல்லாம் பாய்ந்து பிடுங்கி
பற்களால் பெருங்கூர் வளைநகங்களால்
பிய்த்தும் பிறாண்டியும்
தானியங்கள் நிறைந்திருக்கும்
கோணிப்பைகள்
பால் பாக்கெட்டுகள்
அந்த அறையில்
சலவை செய்யப்பட்டு
அடுக்கிவைக்கப்பட்டிருக்கும்
புதுத்துணிமணிகள்
பார்த்துப் பார்த்து கவனமாய் எழுதிய
கவிதைகள்
கணக்குவழக்குகள்
பத்திரப்படுத்திய முக்கிய ஆவணங்கள்
போர்வைக்கு வெளியே நீண்டிருக்கும்
பிள்ளைகளின் கணுக்கால்கள்
பிறந்தகுழந்தையின் மென்கன்னம்
என கிழித்துக் குதறி ரத்தம் கசியச் செய்து
ரணகாயமுண்டாக்கிக்கொண்டிருந்தது
இத்தனை காலமும்……


எலிகளிடமிருந்து ஆட்களைக் காக்கும்
வீட்டுக்காவலனாய்
விட்டால் காட்டுராஜாவாகக்கூடத் தன்னை பாவித்துக்கொண்டிருக்கும்போலும்……


இன்று தன் கழுத்தில் மணி கட்டப்பட்டது எப்படி
என்ற விடைதெரியாமல் அது
நழுவிப் பம்மி இருள்மூலையில் பதுங்க _


’பாவம் பூனை, அதன் பிரியத்தைப் புரிந்துகொள்ள
மனமற்றோர் மாபாவிகள் என்று
’பிராணியெல்லாம் மனிதனுடைய கொத்தடிமைகளே’
என்று நித்தம் நித்தம் அத்தனை திராணியோடு
அடித்துப்பேசிக்கொண்டிருந்தவர்கள்
கோபாவேசமாக சீறத்தொடங்க _


பேய்மழைக்குக் குடை விரித்த பாங்கில்
வீடுகள் ஆசுவாசமடைய _


மணியோசைக்கு பயந்து பூனை
இருள்மூலையில் மலங்க மலங்க
விழித்துநிற்க_


இந்தக் கதையில் நீதி உண்டோ ?’
எனக் கேட்டவரிடம்
உண்டென்றால் அது உண்டு
இல்லையென்றால் அது இல்லைஎன்று 
வெறும் உருவகமாகிவிட்ட பூனை 
மனிதக்குரலில்மியாவ்விட்டு
மேலும் சொன்னது :
கற்க கசடற.

 Ø  

Thursday, May 31, 2018

மாறும் அளவுகோல்களும் மொழிப்பயன்பாடுகளும் ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

மாறும் அளவுகோல்களும்
மொழிப்பயன்பாடுகளும்

ரிஷி
(லதா ராமகிருஷ்ணன்)


இல்லை இல்லை எங்கப்பன் குதிருக்குள் இல்லை” 
என்று திரும்பத் திரும்பக் கூறத்தொடங்கிவிட்ட
வர்களைப்பார்த்தபடி 
குதிருக்குள் எட்டிப்பார்க்கச் 
செல்லத்தொடங்கிவிட்ட மக்களை _


மாக்கள் என்று சொல்லிவிட்டார் உங்களை
இனியும் பேசாதிருக்கப் போகிறீர்களா?” 
என்று கேட்டவர் அச்சு ஊடகங்களின் 
இரண்டறக் கலந்த அம்சமான அச்சுப் பிழைகளைச் 
சுட்டிக்காட்டுவதில் கைதேர்ந்தவர்.


அவருக்குத் தெரியும் மக்கள் மாக்களானது பிழை
பார்ப்பிலான விடுபடல் என்று
ஆனாலும் அது சொன்ன வாயின் 
மாலயத் தவறென்றுதிரும்பத் திரும்ப 
உருவேற்றிக்கொண்டிருப்பதோடு _

சுப்பர் என்று சொல்லாமல் சுப்பன் என்று 
பெயர் வைக்கச் சொன்னது 
என்னவொரு மரியாதைகெட்டதனம்
என்றுவேறு சொன்ன கையோடு _

அப்பர் என்னாமல் அப்பன் என்று நாங்கள் சொல்வது 
மரியாதைகெட்ட தனமல்ல 
மிகு அன்பில் விளைந்த உரிமை
என்று, கேளாமலே ஒரு விளக்கத்தை 
வைத்ததைக் கேட்டபடியே _


குதிரிருக்கும் இடத்தை 
மேலும் நெருங்கிக்கொண்டிருக்கும் மக்களை 
எப்படி தடுத்துநிறுத்துவது என்று புரியாமல் _


கடித்துப் பார்த்து கனியில்லை காயே என்று 
அத்தனை திமிராய் தன் கருத்தை யுரைக்கும் 
அந்த நாயே கல்லில் அடிபட்டுச் சாகும் தன் விதியை 
இப்படிக் குரைத்துக்குரைத்து எழுதிக்கொண்டாயிற்று 
என்றொருவர் அத்தனை பண்போடு தன் கருத்துரைக்க _

அதிகார வர்க்க அடிவருடி என்று அதி காரமாய் 
தப்புக்குறிபோட்டு ஆயிரம் முறை 
காறித்துப்பியும் ஆத்திரம் தீராமல் _

பன்றி பொறுக்கி நன்றி கெட்ட நாசப்பேயே நாலுகால் 
நரியை விடவும் நீசநெஞ்சக்கார ஆண்டையே 
இன்னும் நாண்டுகிட்டு சாகவில்லையா நீ 
பேண்டு முடித்தபின்னாவது போக உத்தேசமுண்டோ 
   முழக்கயிறு வாங்க?” வென 
நயத்தக்க நாகரிகமொழியில் 
மூத்திரத்தை சிறுநீர் என்றெழுதும் கவிதைவரிகள் 
காற்றில் பறந்துபோக 
வார்த்தைக்கற்களை வீசிக்கொண்டேயிருக்கும் 
படைப்பாளிகள் சிலரும் _

 ”உடை உடை யந்தக் கடைந்தெடுத்த நீச மண்டையை 
என்று
ஆன்றோர்கள்
ஆசிரியப் பெருமக்கள்
அரசியல்வாதிகள்,
இன்னும் இன்னுமாய் 
அத்தனை அமைதிப்புறாக்களைப்
பறக்க விட்டபடி யிருக்க


ஒவ்வொரு புறாவின் காலிலும் 
கூர் கத்தி
அரை ப்ளேடு,
பாட்டில் துண்டு
தகரத் தகடு, 
அமில பலூன்  என
பார்த்துப்பார்த்துக் கட்டப்படுவதை 
திரும்பித் திரும்பிப்
பார்த்தபடியே _

 மக்கள் இன்னுமின்னும் 
முன்னேறிக்கொண்டிருக்கிறார்கள்
குதிருக்குள் எட்டிப்பார்த்துவிட.



Ø