அண்மையும் சேய்மையும்
திக்கித்திணறிப் பேசிக்கொண்டிருக்கிறார்கள்….
அவர்தம் விழிகளிலிருந்து பெருகியோடும் கண்ணீர்
என்னை மூழ்கடித்துவிடுமோ என்ற பேரச்சத்தில்
அங்கில்லாத மரத்தில் நானறியாமலே ஏறி ஒண்டிக்கொள்கிறேன்.
கருத்தியலாய் மரணத்தை விவரிப்பதற்கும்
மனதளவில் இறப்பதற்கும் இடையே
தொலைதூரம் உண்டுதான்…..
சிறிது கவனமாய்ப் படிக்க
பிரித்தறிய முடியும்
என்றாலும்
தெளிவற்றுக் கலங்கியிருக்கும் தருணமொன்றில்
வரிகளில் இல்லாத வார்த்தைகளும்
வரிவரியாய்த் தெரிந்திருக்க
விலகிய கருத்து எது விலகாத கருத்து எது
என்று எதைக்கொண்டு அளப்பது?
ஊரும் பேருமறியா குற்றவாளிகளாகவும் நிரபராதிகளாகவும்
நாமெல்லோரும்……
யாரின் தீர்ப்புக்கும் காத்திராத காலம்
புனைந்துகொண்டேபோகிறது குமிழ்களை
கற்களை
கனவுகளை
கண்ணீர்த்துளிகளை
கவிதைகளை……….
No comments:
Post a Comment