காத்திருப்பு
அத்தனை ஆர்வமாய் சுழித்தோடும் அந்த ஜீவநதியில்
அதன் பெருவெள்ளத்தில்
அதற்குள் இரண்டறக் கலந்திருக்கும்
ஆயிரமாயிரம் மகா சமுத்திரங்களில்
அதிசயமாய் யாரேனும் நீந்தத்தெரிந்து
நீந்த முடிந்து
முங்கி முக்குளித்து முத்தெடுத்துவந்தால்
உடனே அதை சொத்தையென்று சாதிக்கும்
அவர்கள் காத்துக்கொண்டிருக்கிறார்கள் _
அஞ்சலிக் கட்டுரைகள் எழுதவும்
அஞ்சலிக் கூட்டங்கள் நடத்தவும்
அங்கேயும் அந்த நீரோட்டத்தை
அதன் சுழலை விசையை
அதன் நன்னீர்ச்சுவையை
மதிப்பழித்து
அதைக் குட்டையெனவும்
கழிவுநீர்த்தொட்டியெனவும்
இட்டத்துக்குச் சுட்டிக் காட்டவும்
பட்டம் கட்டவும்.
வற்றாதநதி வறண்டுபோனால்
அது நதியாக வாழ்ந்த காலம்
இல்லையென்றாகிவிடுமா என்ன?
நதிவாழ்வின் நிரூபணம் நம் கையிலா?
வற்றியநதிப்படுகை வெறும் பாலைவனமா
புவியியலும் இலக்கியமும் ஒன்றுதானா
உடற்கூராய்வு நிபுணர்களுக்கு
இலக்கியவெளியில் பஞ்சமில்லை.
வேறு சில வியாபாரிகளுக்கு
பொருள்களின் antique value
அத்துப்படி....
எத்தனையோ தடுப்புகளை மீறி
சிந்தாநதிதீரத்திற்கு வந்துசேர்ந்து
விழிகொள்ளாமல் வாசித்துக்கொண்டிருப்பவர்க்கு
நதிக்கடல்பெருகிக் கால்நனைய ஆன்மா குளிர_
கரைந்துருகும் மனதின் கரைகளெங்கும் சேர்ந்துகொண்டேயிருக்கின்றன
அழியாச்சொத்துக்களாய்
சொல்பொருள் நீர்மச்சலனங்கள்.
No comments:
Post a Comment