LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Saturday, July 27, 2013

நாள்கள் - ரிஷி(லதா ராமகிருஷ்ணன்)

               ரிஷியின் கவிதைகள்

நாள்கள்


1. ஒரு நாள்

ள்ளிரவைக் கடந்ததுமே விழிப்பு வந்துவிட்டது
கொள்ளிவாய்ப் பிசாசாய்.
கால்கள் சென்றன தம்போக்கில் கணினியை நோக்கி.
திரை யொளிரத் தொடங்குவதற்காய் காத்திருக்கும் நேரம்
 கரை மீறும் ஆத்திரம். 
பின், சுரங்கெட்ட பியானோ வாசிப்பாய்
விசைப்பலகை மீது தட்டத்தொடங்கும் விரல்கள் சில.
திறந்துகொள்ளும் இணைய இதழில் எழுதியுள்ளோர் பெயர்களைத்
துருவியாராய்ந்து தயாரித்துக்கொள்ளப்படும் ஹிட்-லிஸ்ட்’.
இவர் ஃபர்ஸ்ட், அவர் நெக்ஸ்ட்....
கதையோ கவிதையோ கட்டுரையோ-அட, உள்ளடக்கமோ சாரமோ  ஒரு பொருட்டில்லை யெப்போதும்   _
விருப்பம்போல் கருப்பொருளைத் திரிக்கத் தெரிந்தால் போதும் 
கொய்துவிடலாம் எளிதாய் வேண்டுமட்டும் தலைகளை....


2. இன்னொரு நாள்

ன்று இணைய இதழைத் திறந்ததும் இதயமே நின்றுவிட்டதுபோல்..
கதை கவிதை கட்டுரை யெதிலும் இடம்பெறவில்லை ஓரெழுத்தும்.
எல்லாம் வெள்ளைமயம்.
கொள்ளை போய்விட்டதே எல்லாம்.... அய்யோ,
இனி எதைச் சாட, எதைக் குதற…?  
_ரொம்பவே பதறித்தான் போய்விட்டார் பாவம்.
குய்யோ முறையோ வெனக் கூவத் தொடங்கியது உள்.
மறுகணம் பிறந்தது ஞானம். ஐயோடீ!
கைபோன போக்கில் பதிவு செய்யும் கருத்துக்கு
கதை கட்டுரையில் எழுத்துகள் இருந்தால் என்ன,
இல்லாவிட்டால்தான் என்ன?
ஆனபடியால் வழக்கம்போல்,
இல்லாத படைப்புகளையும்
சொல்லியடிக்கத்தொடங்கிவிட்டார்
வில்லாதிவில்லனார்;
பின்னூட்டப் பவர் ஸ்டார்‘!


3. அன்றொரு நாள் 

இலைகளை மட்டும் நேசிக்கும் வக்கிரப் பெருவழுதி என்று
தன்னை அடையாளப்படுத்திக்கொண்டான் அன்றொரு நாள்
அந்த நவீன தமிழ்க்கவிஞன்.

செலக்டிவ் அம்னீஷியாவில் தோய்த்தெடுக்கப்பட்ட சமகாலத் தமிழ்க்கவிதைச் சரித்திரத்திலிருந்து புறந்தள்ளப்பட்டான்.

கருத்துச்சுதந்திரம் என்ற பெயரில் அதையும் கேள்வி கேட்காமல் வெளியிட்டார்கள் தமிழிலக்கியத் தாளாளர்கள்.

அண்டசராசரமெங்கும் விண்டில கண்டு ஆனந்தமாய்த் திரியும் கவிமனதிற்கு அதெல்லாம் ஒரு பொருட்டா என்ன!

வாழ்ந்து மறைந்தவருக்கான உரிய மரியாதையோடு
அந்த வரலாற்றாசிரியர் குறித்து இதைச் சொல்லித்தான் ஆகவேண்டும்:

அவர் எழுதிய ஒரு கவிதையும் நினைவுகூரப்படுவதில்லை.

விலக்கப்பட்ட கனியான கவியிலிருந்து கிளர்ந்தெழும் வித்துகள் தமிழ்க்கவிதை வெளியெங்கும் பிறவிப்பெருங்கடலாய்!


4. என்றொரு நாள்

தக்க இடத்தில் தூய தமிழ்; தேவைப்பட்டால் சமசு[?]கிருதம்.

அரசுப்பணம் ஆயிரங்கோடி விரயமாகலாம், 2ஜி, கல்மாடி, நிலக்கரியில்.

ஆன்ற மொழிபெயர்ப்புப்பணிகளுக்குப் பயன்படலாமோ?  அநியாயம்.

ஆங்கிலப்புலமை யிங்கே யாருக்குமில்லை; தான் பெற்ற இன்பத்தை ஊருக்குக் கைமாற்றும் மாண்புடையோர் இல்லவே யில்லை.
என்றவாறு புறப்படும் வன்மம்நிறை வசவுகள்.

இங்கே உழைப்புக்கேற்ற ஊதியமின்றி பிழைத்துவரும் இனம் படைப்பாளிவர்க்கம்.

இதை எள்ளிநகையாடுவோரை உன்மத்தர் என்னாமல் வேறென்ன சொல்லியழைக்க?

விடங்கக்கும் நாகங்களைக் கண்டால் விலகிவிட வேண்டுமா? நையப்புடைத்துவிட வேண்டுமா?

ஐயம் தீர்ந்தபாடில்லை.

என்றொரு நாள் எழுத ஆரம்பித்த கவிதை.

நீளும் இன்னும்.


 5. முன்பொரு நாள்

சிலருக்கு பெயர் சிலருக்கு செயல், சிலருக்கு உவமை
சிலருக்கு கயமை;
சிலருக்கு குறியீடு சிலருக்கு குறைபாடு, சிலருக்கு பக்தி சிலருக்கு கத்தி;
சிலருக்கு பொறுப்பு சிலருக்கு வெறுப்பு, சிலருக்கு புனிதம் சிலருக்கு கணிதம்;
சிலருக்கு அறவியல் சிலருக்கு அரசியல், சிலருக்கு வாலிவதம் சிலருக்கு ஞானரதம்;
சிலருக்கு சுற்றுச்சூழல், சிலருக்கு கடல்வாணிபம்
காதலின் இலக்கணம், கேடுகெட்ட ஆணாதிக்கம்
உறவில் துறவு, துறவில் உறவு
அனர்த்தம், அண்டசராசரம் இன்னும் _

ஒரு சொல் ஒரு இல் ஒரு வில்லுக்கப்பால்
விரி பரிமாணங்கள்.....

அறிந்தவரையான க்வாண்டம் தியரிப்படி _
இருந்தேன் நானும்
வனவாச ராமன் வாழ்ந்துமுடித்த
முன்பொரு நாள்!

 
6. பின்பொரு நாள்

மரங்களிடமும் மனம்விட்டுப் பேசும் அன்புராமன்கள் -
மற்றவரெல்லாம் முட்டாளென் றேசும் அகங்கார ராமன்கள் -
பலராமன்கள் - பலவீன ராமன்கள் -

சொல்லிலடங்கா ராம ரகங்கள்......

அகமும் புறமும் செறிவடர்ந்து, திறந்தமுனைகளோடு
தன்னை வாசகப்பிரதியிடம் ஒப்படைக்கும் நவீன தமிழ்க் கவிதையாய்
கைத்தட்டலோ, கல்லடியோ சித்திரத்தன்ன செந்தாமரை மனம் படைத்த
ராஜாராமனின் கவித்துவம்
இத்தரையில் எத்தனையோ ஆண்டுகளுக் கொருமுறை பூக்கும்
குறிஞ்சிமலராய் புலப்படும்
பின்பொரு நாள்.

0


சாத்தானும் சிறுமியும் ’யூமா வாசுகி’யின் கவிதைத்தொகுப்பு குறித்து.... _ லதா ராமகிருஷ்ணன்

சாத்தானும் சிறுமியும்

யூமா வாசுகியின் கவிதைத்தொகுப்பு குறித்து....
_ லதா ராமகிருஷ்ணன்

[May. 18 2013இதழ் 26 மலைகள் இணைய தளத்தில் வெளியாகியுள்ள கட்டுரை]



கல்லூரி நாட்களில்தாகூரின் கீதாஞ்சலி கவிதை கவிதைத் தொகுப்பைப் பற்றிய தனது முன்னுரையில் W.B. யேட்ஸ் என்ற புகழ்பெற்ற கவிஞர், ‘பேருந்தில் பயணமாகும்போது கீதாஞ்சலிக்  கவிதைகளைப் படிப்பது தன் வழக்கம் என்றும் அப்படிப் படித் துக்கொண்டே வரும்போது ஒரு கட்டத்தில் தவிர்க்க முடியா மல் கண்களில் நீர் நிரம்பிவிடும் என்றும் எழுதியிருந்ததைப் படித்து, ‘இது என்ன மிகையான விவரிப்பு என்று மனதில் எதிர் வினையாற்றி அதைப் பொய்யென்று நிரூபிப்பதாய் பேருந்தில் கீதாஞ்சலி கவிதை களைப் படிக்கத் தொடங்கிஒவ்வொரு முறையும் அதேவிதமாய் கண்களில் நீர் நிறைந்துவிடும் ஒருவித மனம் வெளுத்தல்’ அனுபவத்தைப் பெற்றதுண்டு.

கவிஞர் யூமா வாசுகியின்  சாத்தானும் சிறுமியும்  கவிதைத்தொகுப்பைப் படித்தபோதும் அதேவிதமான நெகிழ்ச்சி யும் மனம் வெளுத்தலும்’ ஏற்பட்டது.

நவீன தமிழிலக்கிய வெளியில் கவிதைகதைகுழந்தை இலக்கி யம்மொழிபெயர்ப்பு என பல பிரிவுகளிலும் ஆரவாரமில்லாமல் தடம் பதித்திருப்பவர் தோழர் யூமா வாசுகி. கடந்த 20 ஆண்டு களுக்கும் மேலாக தொடர்ந்து இயங்கிவருபவர்தரம் நீர்த்துப் போகாமல் இயங்கிவருபவர்.

அவருடைய இரவுகளின் நிழற்படம்’, ‘என் தந்தையின் வீட்டை சந்தையிடமாக்காதீர்’ ஆகிய கவிதைத் தொகுப்புகளிலிருந்து  தேர்ந் தெடுத்த கவிதைகள் இடம்பெறும் இத்தொகுப்பு – சாத்தானும் சிறுமியும் – நம்மைச் சுற்றியுள்ள குழந்தைகளின் நலவாழ்வுக்காக மனமுருகஒரு ஆத்மார்த்தமான பிரார்த்த னையே போல் குரல் கொடுக்கின்றன.

 இந்தக் கவிதைகளில் இடம்பெறும் குழந்தைகளைஅவர்களின் அற்புதக் கனவுகளைஅவை குரூரமாகக் கலைக்கப்படும் அவ லத்தைகுழந்தைகளுக்கு நாம் அளித்திருக்கும் சீர் கெட்ட சமூகச் சூழலைஅதற்குள்ளாக குழந்தைகள் தங்களுக்கென்று கட்டி யெழுப்பிக் கொள்ளும் மாயக் கோட்டைகளைகுழந்தைகளின் பல முகங்களைசிரிப்பின் வாசனையைஅழுகையின் வேதனையை நாம் அன்றாடம் பார்த்துக்கொண்டிருக்கிறோம்அவற்றின் மத்தியில் தான் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.

ஆனால்நம்முடைய வாழ் வின் அவசரங்களில் அவற்றை நின்று நிதானித்து உள்வாங்கிக்கொள்ளப் பொழுதற்றுபொறுமை யற்றுகடந்துபோய்க் கொண்டேயிருக்கிறோம். அவ்வப்போது குற்ற வுணர்வின் கனம் தாங்க முடியாமல் போவதும் நடக்கிறது.

இத்தனை விஷயங்களையும் யூமா வாசுகியின் சாத்தானும்சிறுமி யும் நமக்கு மிக நுட்பமாகப் புலப்படுத்துகிறார்கள். குழந்தைக ளின்பெரியவர்களின் பல முகங்கள் இந்தக் கவிதை களில் துல்லியமாக வெளிப்படுகின்றன.

குழந்தைகளின் அண்மையில் குதூகலங்கொள்ளும் கவிமனம் அவர்களின் ஏமாற்றங்களிலும்காயங்களிலும் தீராத வலியுணர்கிறது.

 ‘பத்து வயது கூட நிரம்பாத மீனா பக்கத்து வீட்டில்

வேலைக்காரியாகப் பாடுபடுகிறாள்

 

அரைத்த மாவு நிரம்பிய வாளியை எங்கிருந்தோ

சுமக்கமுடியாமல் கொண்டுவருகையில்,

என் தங்கையாயிருந்து திருவிழா களித்து

பரிசுகளுடன் திரும்புவதாய் சமாதானங்கொள்வேன்

என்று தொடங்கும் தொகுப்பின் முதல் கவிதை தொடங்கி இறுதிக் கவிதை வரைபல்வேறு சமூக அவலங்களில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கும் குழந்தைகள் நம்மை மனசாட்சி யென்னும் நீதிதேவனின் முன்னிலையில் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தி மௌனமாய்க் கேள்வி கேட்கிறார்கள்தீர்ப்ப ளிக்கிறார்கள். சமயங் களில் நம்மைக்கைபிடித்து அழைத்துச் சென்று அவர்களுக்காகவும்நமக்காகவும் நம் கண்களில் நிறைந்து வழியும் கண்ணீரை அன்போடு துடைத்துவிட்டு அதியழகாய்ச் சிரிக்கிறார்கள்!

 பூமொழிமதுக்கடையில் உருளும் கோலிக்குண்டுகள்சாத்தானும் சிறுமியும்மாலை நேர வீடுஒரு மனிதன் முய லான போதுஈரம்மற்றும்தலைப்பிடப்படாத சில கவிதை கள் என இருபது இருபத்தியிரண்டு கவிதைகளைக் கொண்ட இந்தத் தொகுப்பில் அனாவசியம் அல்லது  மெலோடிராமா’ என்று சொல்லத் தக்க ஒரு வரியோவார்த்தையோ கிடையாது. நம் அடிமனதை ஊடுருவி மனம் வெளுக்க’ வழி செய்யும் கவிதைகள் இவை.

பஸ்ஸுக்குக் காத்திருக்கும் கூட்டத்திடையில்

உன் குழந்தை என் கால்களைத் தொட்டு

கை மலர்த்தும்படி செய்தாயே,

பரிதாபமாய் முகம் காட்ட அது அப்போது

எவ்வளவு பாடுபட்டது

அதைவிடவும் நீ என்னை

முகத்தில் உமிழ்ந்து கேட்டிருக்கலாம்

 _என்று கூறுவதிலுள்ள பரிதவிப்பை வாசக உள்ளம் ஒவ்வொன் றிலும் கண்டிப்பாக பரிவதிர்வை உண்டாக்கும்.

 ஏதொரு குழந்தையும்

எங்கோ கனவில் துடித்தழுதால்

எப்படிப் போய்த் தேற்றுவேன் கர்த்தரே

_ என்று எத்தனை கலங்கிப்போகிறது கவிமனம்! இந்தத் தொகுப்பி லுள்ள கவிதைகளை வாசிக்க வாசிக்க கவிமனதின் பரிதவிப்பு நம் மனதில் பாரமாய் இறங்கிக்கொண்டேபோகிறது. [இந்த மன பாரத்தை உணரவில்லையானால் நாம் மனிதனாயிருந்து என்ன பயன்?]

 ஆனால்இதே குழந்தைகளே கவிஞரின் மனபாரத்தை மயிலிற காக்கி விடுபவர்களாகவும் இருக்கிறார்கள்!

 ‘இன்றைய பகலெல்லாம்

சஞ்சலப்பட்டுக்கொண்டிருந்தவன் யார் என்று

அகால இரவுக் கனவில்

தேடியலைந்தது ஒரு குழந்தை.


  _ என்று தொடங்கும் கவிதை


  நீ தானே?” என்றது குழந்தை.

ஆம்!” என்றேன் நான்.

தூக்கச் சொல்லிக் கை விரித்தது.

அள்ளி அணைத்துக்கொண்டேன்.

கனவின் கடைசி நொடியில் ஒரே ஒரு முத்தம்.

விடிந்தது.

காலையில் மனம் தெளிந்திருந்தது

 என்று முடிகிறது.


ஓவியர் மணிவண்ணனின் கைவண்ணங்கள் யூமா வாசுகியின் கவிதைகளுக்கு உரிய மரியாதை செய்வதோடு தம்மளவில் தனிக் கவிதைகளாகவே விளங்குகின்றன எனலாம்! என்றாலும்குழந்தை களைப் பற்றிய கவிதைகள் இடம்பெற்றிருக்கும் தொகுப்பில் குழந்தைகளின் முகபாவங்களும்அசைவுகளும்இடம்பெற்றிருந் தால் நன்றாயிருந்திருக்கும் என்று தோன்றியது. அப்படி இருக்கலாகாது என்று பிரக்ஞாபூர்வமாகவே முடிவெடுத்திருக்கக் கூடும் கவிஞரும் ஓவியரும் என்றும் நினைக்கத் தோன்றுகிறது.

 தொகுப்பிற்கு எழுத்தாளர் கவின்மலர் அத்தனை அருமையான முன்னுரை எழுதியிருக்கிறார்! முன்னுரையின் அரசியல்’  குறித்து நிறைய எழுதலாம். ஆனால்கவின்மலரின் முன்னுரை அன் பும்தெளிவும் நிறைந்த ஒரு வாசக மனதிலிருந்து ஆத்மார்த்தமாக வெளிப்பட்டிருக்கிறது. 

 “உயிரை உலுக்கும் வரிகளை எழுதிவிட்டு யூமா வாசுகி அவர் பாட்டுக்குத் தன் வேலை யைப் பார்த்துக்கொண்டிருக்கிறார். எப்போதும் கிரீடத்தை கீழே வைக்காமல் சுமந்து கொண்டு திரிகிறவர்கள் இருக்கும் இச்சமூகத்தில் நான் எழுத்தாளன் என்கிற கர்வமோகவிஞன் என்கிற செருக்கோ அற்ற எளிமை யான மனிதராகவே எப்போதும் இருக்கும் யூமாவை வாழ்த்தும் தகுதி எனக் கில்லை. வாசிப்பின் மீது தீராத தாகத்தை ஏற்படுத் திய யூமா வாசுகி என்கிற அற்புத மனித ருக்குஅவருடைய எழுத்துக்குஅவர் அளித்திருக் கும் இந்தக் கவிதைத் தொகுப்பிற்குப் பரிசாக அல்ல…. கைமாறாகபெரும் அன்பும்முத்தங்களும் தவிர வேறெதுவும் கைவசம் இல்லைஎன்று கவின் மலர் முத்தாய்ப்பாக எழுதியுள்ள வரிகள் இந்தத் தொகுப்பை வாசிக்கும் ஒவ்வொரு வாசக மனதிலும் கண்டிப்பாக எதிரொலிக் கும்!

 

 

 

000

Friday, July 26, 2013

போகிறபோக்கில்….ரிஷியின் 8 _வது கவிதைத் தொகுப்பு

ரிஷியின் 8 _வது கவிதைத் தொகுப்பு
 போகிறபோக்கில்.


_ரிஷி

ஷாலினி புக்ஸ் ]


கவிதை என்பது இலக்கியத்தின் சபிக்கப்பட்ட பிரிவாகப் பார்க்கப்படும் கால கட்டம் இது. குறிப்பாக தமிழில். இலக்கியமே கவிதை வடிவில் இயங்கிவந்த மொழியிதில் இன்று அரசு நூலகங்கள் கவிதைத் தொகுப்பு களை பீச்சாங்கை வீச்சாக’ புற மொதுக்கி விடும் போக்கு நிலவுகிறது. [கடந்த சில வருடங்களாக அரசு நூலகங்களுக்கு புத்தகங்கள் வாங்கப்பட வில்லை என்று கேள்வி] இருந்தும் கவிதை எழுதுகிறவர்கள் எழுதியவாறே... வாசிப்ப வர்கள் வாசித்தவாறே....

அப்படி கவிதையில்- எழுதுவதிலும், வாசிப்பதி லும்  என்ன இருக்கிறது?

’கண்டவர் விண்டிலர்; விண்டவர் கண்டிலர்’

_ரிஷி


உள்ளே...

1   21 போகிற போக்கில்...
 22. மகிழ்ச்சியைத் தேடி.
23. தோட்டாக்களும் வெட்டரிவாளும் நாமும்
24. நிலாமுயலும் நாமும்




1.. போகிற போக்கில்....

1.
ஒருவர் ஒன்றை மொழிந்ததுதான் தாமதம்
அந்த இன்னொருவரின் கை
வழக்கம்போல் வீறிட்டெழுந்துவிடும்!
வெறிகொண்ட பரவசத்தில் அவர் உடல் துடித்தெழ
கூறப்பட்டதை தனக்குரிய விதத்தில்
பொருள்பெயர்த்துத் தந்துவிடும்
அவர் வாய்
பல வண்ணங்களில்
பிறழ்வாய்
பிறவாய்.

சகபயணிகளில் இது ஒரு வகை.
பரவலாய் காணக்கிடைப்பதுதான்.

ஒரு கேள்வியை இடைமறித்து
கச்சிதமாய் தவறான விடையளிக்கும்
பரிதாபத்திற்குரிய மே[ல்]தாவித்தனம்.

தம்மைக் கதிரோனாய்
 காவ்யாசானாய்
கருதிக்கொள்வதும் காட்டிக்கொள்வதுமாய்
இரவல் வெளிச்சங்கள் நம்மை வழிநடத்தப் பார்க்கும்.
விழிப்போடிருக்கவேண்டும்.

 2.
என்னுடைய எண்ணங்களை கைபோன போக்கில் வெட்டி
கண்ணுக்குப் புலனாகாத தட்டொன்றில் பரப்பி
நீட்டுகிறாய் என்னிடம்.
ஆப்பிள்துண்டுகளாகவோ ஆரஞ்சுச்சுளைகளாகவோ
ஆர்வம்பொங்க அவற்றை நான்
அள்ளியெடுத்துக்கொள்ளவேண்டும்,
அதற்காய் காலத்திற்கும் நன்றியோடிருக்கவேண்டும்
என்பது உன் எதிர்பார்ப்பு.
எனக்குத் தெரியும்தான்.
அவ்விதம் செய்யாவிடில்
என்னையோர் எதிர்மறை கிளர்ச்சியாளராய் குற்றஞ்சாட்டி
நடுவீதியில் நாயாய் கல்லடி படச்செய்வாய்.
அதுவும் தெரியும்தான்.
என்றாலும்
மாற்றுச் சிந்தனைகள் தரும்
காற்றும் ஒளியும் ஊற்றும்
என்னுள்ளே
முகிழ்த்து மலர்ந்து மணம்வீசிக்கொண்டிருக்க
உன்னை மறுத்து முன்னேகுவதே
`என் னுயிரின் உயிர்ப்பாய்.


3. 
அவருடைய கால்களில் அவர் நடந்துகொண்டிருந்தார்.
தேடிச் சென்று இடைமறித்த வித்தகர்
முன்னவரின் கால்களைப் போலவே தனக்கும்
பாதங்கள் இரண்டும் பத்துவிரல்களும்தான் என்றாலும்
அவர் போகும் தொலைவும்
தான் போகும் தொலைவும் ஒன்றல்ல என்றார்.
”கண்டிப்பாக. பயண இலக்குகளுக்கேற்ப வேறுபடும் தொலைவும்; மேலும்
தொலைவின் தொலைவு கிலோமீட்டர்களில் அடங்காதது”, என்று
முன்னவர் மொழிய
’விவரம் தெரிந்த ஆசாமிதான் போலும்’ என்று
வழிவிலகிச் சென்று விட்டார் பின்னவர்
பின்னங்கால் பிடரியில் பட ஓட்டமாய் ஓடி!

 4
குருவி தென்படாத இயற்கைச்சூழலினூடாய்
பயணித்துக்குக்கொண்டிருக்கும்போதும்
கவண்கல்லைக் கையிலெடுத்துக் குறிபார்த்துச் சென்றால்
கல் இடறி காலில் காயம்படத்தான் செய்யும்.
சுயநலம் கருதியேனும்
சகவுயிர்களை நல்லவிதமாக நடத்தப் பழகு.
’சகோதரத்துவம் மனிதரிடமே வராத போது
மிருகங்களிடம் எப்படி வரும்’ என்று எதிர்க்கேள்வி கேட்கிறயா?
பதில்சொல்லக் காத்திருக்கின்றன வழியெங்கும்_
புதைகுழிகளும் பேரழிவுகளும்.

5
கவியும் இருளில் சில சமயங்களில்
நிலாவாகிவிடுகிறேன் நான்!
இரு இரு 
கனிந்து மெழுகென உருகும் என்னிடம்
சந்திரனை இரவல் ஒளியாக உண்மையுரைத்து
எந்தப் புண்ணியமுமில்லை; புரிந்துகொள்.
ஒரு தண்ணணைப்பு அருள்பாலிக்க
பறக்கத் தொடங்குகிறேன்!
பரிகசிப்பதை சற்றே நிறுத்தி
முயன்று பார்.
மயிலாகிவிடக்கூடும் நீயும்!


 6.

நடக்கும் கால்களின் தாளகதியும்
ஓடும் கால்களின் தாளகதியும்
ஒருபோலல்ல.
புரிந்துகொள்ள
 நீ நடந்திருக்கவும் ஓடியிருக்கவும் வேண்டும்.
அல்லது, நடப்பவரை ஓடுபவரை பார்த்திருக்கவேண்டும்.
எதையுமே செய்யாமல் இயந்திரகதியில்
பரபரபர பப்பரவெனப் பயணமாகும் உனக்கு
பிடிபடுமோ இசையும் நடனமும்?

7

முன்னேகியவாறு இருப்பது மட்டுமே பயணம் என்று
சொன்னது யார்?
கைதவறிக் கீழே விழுந்துவிட்ட கைக்குட்டையைக் குனிந்து எடுக்க,
யதேச்சையாக அந்தக் குளத்தின் நடுவே தட்டுப்பட்ட
கண்கொள்ளாப் பூவை விழிவழியே போய் தீண்டிப் பரவசமாக,
என்றைக்குமாய் பிரிந்துசெல்பவர் முதுகை
இறுதியாய் இன்னொரு தடவை
இதயத்தில் பெருகும் வலியோடு பார்க்க,
தூர்த்துப்போய்விட்ட நீர்நிலையில்
வெள்ளம் பெருகிய நாளில்
மீண்டும் கால்நனைக்க,
அன்றொரு நாளின் ஆறாக்காதல் அரவணைப்பை
திரும்பவும்
அனுபவங்கொள்ள....
பின்னேகுவதும் பயணத்தின் ஓர் அம்சமாய்
ஊசலாடும் காலத்தின் ’பெண்டுலம்’ அசைந்தவாறு.

 8
கும்மிருட்டு.
குறுகலான பாதை.
இருமருங்கும் நெருஞ்சிமுட்ப்புதர்கள்.
கைவிளக்கைக் கொண்டுவராமல் போய்விட்டோமே
என்று கலங்கி நிற்கையில்
எங்கிருந்தோ வந்த மின்மினி
கண்ணிமைப்போதில்
சன்னமாய் ஆறின் பரிமாணங்களை
அளந்துகாட்டிவிடுகிறது!
சில நேரங்களில் நெருப்புக்கோழியும் கூட!!

9.
வலப்புறம் பிரம்மாண்டமான கோட்டையிருந்தது.
இடப்புறம் நீண்டு நெளிந்து சுழித்தோடிக்கொண்டிருந்தது ஆறு.
’எல்லா நீரும் ஒருபோல; எனில்,
ஒவ்வொரு கோட்டையும் தனித்தன்மையானது.
எனவே, கோட்டைக்குப் போய் பார்த்துவிட்டு வரலாம் என்றார் இவர்’.
பாரபட்ச சமூகத்தைப் பறைசாற்றுவதைத் தவிர
வேறென்ன உண்டு கோட்டையில்?
எனில், பிரதிபலன் எதிர்பாரா ஆறு
தியாகத்தின் மறு உருவம்; நிரந்தரத்தின் நிதர்சனம்!
இயற்கை நமக்களித்திருக்கும் மகோன்னத ஆடி!
இன்னும் என்னென்னவோ...
ஆற்றங்கரையில் அமர்ந்தாலே போதும்- வாழ்க்கை
பொருளுடைத்தாகும்’
என்றார் அவர்’.
பயணத்தையே வண்ணமயமாக்கிக்கொண்டிருக்கின்றன
கலைடாஸ்கோப் கோலங்கள்!

10
மலையிலும் சுவர்களிலும்
மின்சார ரயிலின் உட்புறங்களிலும்
கீறப்பட்ட பெயர்களை
சிரிப்பும் குறுகுறுப்புமாய்  வாசித்தவாறு
போய்க்கொண்டிருந்தனர் பயணியர்.
கவனமும் அக்கறையுமாய் தேடும் கண்களுக்கு
தட்டுப்படக்கூடும்
காற்றில் செதுக்கப்பட்டவையும்!
தென்றலும் புயலும் பேச்சும் மூச்சுமாய்
என் உன் வாழ்வெல்லாம்
காற்று வெளியிடை கண்ணம்மா....!

 11

தொடக்கப்புள்ளியிருந்து வெகுதூரம் வந்தாயிற்று-
போகவேண்டிய தூரம் அதிகம் என்ற தெளிவோடு.
சிறுகற்கள் மலைமுகடுகளாய் வழியடைத்த நிலை மாறி
பெரும்பாறைகளும் இன்று துகள்களாகிவிட்ட
ரசவாதம்!
கண்டவர் விண்டிலர்; விண்டவர் கண்டிலர்!!
புரியாமல்
கருத்துப்போர்வையில் கற்களைச் சுருட்டியெடுத்துவந்து
கைபோனபோக்கில் என் ஆறெங்கும் இறைத்துக்கொண்டிருக்கும் நீ
எப்போதுமே
ஐயோ பாவம்!

 12
உன் உன்னும் என்னும் முன்னும் பின்னும்
ஒடுங்கும் ஒருமைக்குள்
எதிர்வினைக்கும் அறவுரைக்கும் இடையே நிறையும்
அகழி மறைத்துக்
கவியும் காரிருள்.
என் என்னும் உன்னும் இன்னும்
என்னென்னவும்
புதிரவிழ்க்கும் எல்லையின்மைக்குள்
இல்லையாகிவிடும் உன் எல்லாமும்!

 13
இருந்தாற்போலிருந்து
ஒரு காலாதீதத் தூக்கத்திலிருந்து விழித்துக்கொண்டு
வேர்த்துவிறுவிறுவிறுத்துப் பாய்ந்துவந்து
வழியெங்கும் ஆர்ப்பரித்துக் கொட்டி முழக்குகிறது
அறியாமை புரையோடிய அந்த வரி:

”இருண்மை தமிழுக்குப் புதிதோ புதிது”

கேட்டு
சங்ககாலம் தொட்டு நவீன தமிழ்க்கவிதைவெளியெங்கும்
வாயார வயிறுகுலுங்க கவிகள் சிரித்துக்கொண்டிருப்பதைப் பார்க்க
எத்தனை மகிழ்ச்சியாயிருக்கிறது தெரியுமா?
காயப்படுத்தும் சூழலிலேயே வாழப்பழகியவர்கள்;
கழுவேற்ற மேடை வெகு பரிச்சயமானவர்கள்;
வதைமுகாம்களே வசிப்பிடமானவர்கள்
வடிகட்டிய பாழ் கண்டு
விழுந்து விழுந்து சிரிக்காமல் என் செய்வார்கள்?

இறந்துபோய்விட்டவர்களில் புதைக்கப்பட்டவர்கள்
கல்லறைகளில் புரண்டு சிரிக்க,
எரிந்துவிட்டவர்கள் திரும்ப எழுந்துநின்று
குதிக்கிறார்கள் ஹே, இது என்ன புதுக்கதை என்று!”

இருந்துவரும் கவிகளின் செவிப்பறைகளை அந்த உச்சபட்ச அபத்த வரி
சென்றடையும் நேரம்
நிச்சயம் சீறத்தொடங்கும் சில எரிமலைகள்.

சிறுமை கண்டு பொங்குவாய் வா வா வா!’

சொன்ன பாரதியாரை வெறும் பிரச்சாரக்கவி
என்பாரை
கல்லுக்குள் தேரை கவனித்து’க் கொள்ளும்.

 மெல்ல
சன்னமாய் என் காதுகளுக்குள்ளும் ரீங்கரிக்குமாறு
சில்வண்டிடம் வேண்டிக்கொண்டு
தொடரும் என் பயணம்.

 14
 சாலையோரங்களில் சில வீடுகள்
சிலவற்றில் வெளியே அமர்விடங்கள் உண்டு.
இளைப்பாற வரும் வழிப்போக்கர்கள் பலவகை.
அடுத்தவருக்கு இடம் தராமல் தம்மை விரித்துப் பரப்பிக்கொள்ளும் சிலர்
அதனாலென்ன பரவாயில்லை’ என்று தரையமரும் சகபயணியை
சீடராக வரித்துக்கொண்டு சிட்சையளிக்கப் புறப்பட்டுவிடுவார்கள்.
[பீடம் கிடைக்க வேறேது கதி?]
இதற்கு கால்வலியே மேல் என்று எழுந்துகொண்டுவிடுபவரை
வழிமறித்து பிடித்திழுத்து செவிப்பறை கிழியக்கிழிய
சொல்லித்தருவார்கள் -
’சொல்லும் சொல்’ பழகாதவர்கள்.

சொக்கப்பித்தளை யிளிப்பை
சொல்ல வல்லாயோ கிளியே...

   15
அன்பிற்காகும்;
அவதூறுக்காகும்.
ஆசுவாசத்திற்காகும்;
அக்கப்போருக்காகும்.
அறிவுக்கூடமாகும்;
அதிகாரபீடமாகும்......

அகழ்வாரைத் தாங்கும் நிலம்.

அதுதானோ திண்ணையும்?

 16
 செல்வழியெங்கும் பாய்ந்தோடிக்கொண்டிருக்கிறது
சிந்தா நதி யொன்று!
படகில்லை,
நீந்தத் தெரியாது,
சிறகில்லை,
பறக்கமுடியாது....
ஆனாலுமென்ன?
ஏழு கடல் ஏழு மலை தாண்டி
அந்தப் பச்சைக்கிளியைக் கண்டடைவதுதானே
வழிச்செலவின் வரவு
என்று
சுழித்தோடியவாறு அறிவுறுத்துகிறது ஆறு!

17
தெம்மாங்குப் பாட்டு தெரியாது.
கர்நாடக இசை படித்ததில்லை.
இந்துஸ்தானி, ஜாஸ், ராக், கஸல்
 என்று எத்தனையெத்தனை  உலகில்!
எதிலுமே பயிற்சியில்லை.
ஆனபோதும், குரலெடுத்துப் பாடவேண்டுமாய் எழும்
இந்தத் திருத்தினவை என்செய்ய....?
மெய்யோ பொய்யோ
உளதாம் குரல்வளம்;
உறுதியாய் கிளம்பும்தான் சுருதிபேதம்.
உச்சஸ்தாயியை எட்டமுடியாது;
பிசிறு தட்டும்.
நிச்சயமாய்த் தெரிந்தாலும்
இச்சமயம் வனாந்திரத்தில் எதிரொலிக்கும் குரலாய்
விரியும் இந்தப் பெருங்கனவை என்செய்ய?
பாடிவிடவேண்டியதுதான்!

 18
அதெப்படியோ தெரியவில்லை
அயர்வையெல்லாம் மீறி
அவ்வப்போது என் நடையொரு துள்ளலாக
மாறிவிடுகிறது!
தேர்க்கால்களாக
புரவிப்பாய்ச்சலாக
அவ்வளவு ஏன் 
சற்றுமுன்னர் தான் சிந்நேரம்
மின்னலாகியிருந்தேன்!

 19
 ”உனக்கு நீயே என்ன பிதற்றிக்கொண்டு போகிறாய்?
_தாழப்பறந்துவந்து அன்போடு என் தலைதட்டிக் கேட்டது கொக்கு.
”மழலைப்பேச்சு மற்றவருக்குப் புரியாது  மக்கு! மக்கு!”
என்று செல்லமாய் அதன் நீள்மூக்கை நீவிவிட்டபடி கூறினேன்.
இன்னுமா பாதைக்குப் பக்குவப்படவில்லை? என்று கடிந்துகொண்டது
கரையோர முதலை.
”காத்திரு” என்று வேண்டிக்கொண்டேன்.
’நாளை மற்றுமொரு நாளாகாத’ நாளில் தருவேன்
நல்லதோர் பதிலை.

 20
 அருகேயொரு வண்ணத்துப்பூச்சி பறந்துகொண்டிருக்கிறது-
அற்புதச் சிறகுகளோடு!
ஆனால், எனக்கு ஆறறிவு இருக்கிறது!.
அந்த அசோகமரம்தான் எத்தனை உயர்ந்தோங்கி
வளர்ந்திருக்கிறது!
ஆனால், எனக்கு ஆறறிவு இருக்கிறது.
வழியில் காணக்கிடைத்த ஆமையின் ஓடு
அத்தனை உறுதியானது!
ஆனால், எனக்கு ஆறறிவு இருக்கிறது.
கருங்கல்லின் சொரசொரப்பும் கூழாங்கல்லின் வழுவழுப்பும்
தொடுவுணர்வின் நல்வினைப்பயனாகிறது!
ஆனால், எனக்கு ஆறறிவு இருக்கிறது.
நாயின் மோப்பசக்தி எத்தனை நம்பிக்கைக்குரியது!
ஆனால், எனக்கு ஆறறிவு இருக்கிறது.
சிலந்திவலையின் தொழில்நுட்பம்
சொல்லிலடங்காது!
ஆனால், எனக்கு ஆறறிவு இருக்கிறது.
ஆனால்... ஆறறிவில் என்ன இருக்கிறது.....?

21
வீதியெங்கும் சிதறிக்கிடக்கின்றன _
 வெட்டரிவாள்கள்;
வறுமையின் பரிமாணங்கள்;
பாதிக்கால்கள்;
பலியான நீதிநியாயங்கள்
பிய்த்தெடுத்த நகக்கணுக்கள்;
பொய்த்துப்போன வாக்குறுதிகள்;
வெறியின் விரிவுகள்;
வேறுபலவும் நிரம்ப
உலர்ந்தும் உலராமலும் பெருகியவாறிருக்கும் குருதியில்
மொய்த்திருக்கும் ஈக்கள் நோய்க்கிருமிகளைப் பரப்பியவாறு...
கடந்துசெல்ல இயலவில்லை-
நினைப்பிலும் நடப்பிலும்.
பயணத்தில் இந்தக் கையறுநிலை நேராதிருந்தால்
எத்தனை நன்றாயிருக்கும்....
ஆறாது ஏங்கிச்சோரும் பித்துமனதைக்
 காக்க காக்க கவிதை காக்க.....

  22. தோட்டாக்களும் வெட்டரிவாளும் வாழ்க்கையும்

துப்பாக்கிகளிலிருந்து பீறிட்டுக்கிளம்பும் தோட்டாக்கள்
தினமும் என் வீட்டிற்குள் தெறித்துவிழுந்தவண்ணம்...
மக்பெத் மனைவி’ அல்ல என்றாலும்
என் மனமெங்கும் ரத்தக்கறை படிந்திருப்பதாய்
கழுவ இயலாது
நழுவ இயலாது
கொலைக்களங்களினூடாய், சடலங்களை
மிதித்தபடி
நகர்ந்துகொண்டிருக்கிறேன்.
நாளும் முதுகுகளின் பின்னாலிருந்து
சட்டென மேலெழும்பும்
வெட்டரிவாள்களின் வன்மத்தில்
மூச்சடைக்கிறது.
அத்தனை அந்நியோன்யமானவர்கள்
ஆளாளுக்கு நஞ்சூட்டி
அவதூறும் வஞ்சகமுமே வாழ்வாய்
அரிச்சுவடி கற்பிக்க...
எனக்கு நானே எதிரியாகிவிடுவேனோ என்று
ஒரே கலவரமாயிருக்கிறது.
நலிந்துகொண்டிருக்கிறது கலை,கலாச்சாரம்
கசடறக்கற்கவேண்டிய வாழ்க்கை
எல்லாம்...
நடுங்கும் மனதின் ஒரே நம்பிக்கையாய்
ரிமோட்’.


23. நிலாமுயலும் நாமும்

நிலவிலுள்ள முயலை இந்தக் குழந்தைகளுக்கு
நேயமுடன் அறிமுகப்படுத்த
யாருக்கும் ஆர்வமில்லை;
அவகாசமில்லை.
காத்திருக்காத காலத்தில் காத்துக்கொண்டிருக்கிறார்கள்
பிள்ளைகள்.

பெரியவர்களின் கைவிரல்களில் கசியக்கூடிய
அன்பின் கருணையை அறவே அகற்றி
ஆளுக்கொரு கழியை இறுகப்பிடிக்கச்
செய்திருக்கும்
கிராதகப்பேய்க்கு எத்தனையோ பெயர்கள்.

’தீதும் நன்றும் பிறர் தர வாரா’
_ அல்பகல் தாக்கும் தொல்பாடல் வரி.
இருந்தாற்போலிருந்து வெடித்துக்கிளம்பும்
பதுங்குகுழி.

அன்றாடம் உருக்கிக்கொண்டிருக்கின்றன
ஆர்க்டிக் துருவப் பனிப்பாறைகள்.
ஆழிப்பேரலையும் இங்கே
நகைச்சுவைப்பொருளாயிற்று.
அந்தக் குப்பைத்தொட்டியில் கிளறிக்கொண்டிருக்கும்
ஏழைச்சிறுமியின் உள்ளங்கையைப்
பதம்பார்க்கக் காத்துக்கிடப்பது
ஆணியோ, கண்ணாடித்துண்டோ,
தகரப்பட்டையோ...
அய்யோ...” எனப் பெருங்குரலெடுத்துக்
கதறவும் இயலாமல்
குரல்வளை நெரிக்கப்பட்டிருக்கும் நம்மில் யாருக்கும்
ஆர்வமில்லை
அவகாசமில்லை
நிலவிலுள்ள முயலை இந்தக்
குழந்தைகளுக்கு
நேயமுடன் அறிமுகப்படுத்த....

காத்திருக்காத காலத்தில் இன்னமும்
காத்துக்கொண்டிருக்கிறார்கள் குழந்தைகள்.

 24. மகிழ்ச்சியைத் தேடி...

ரம்பமும் முடிவும் காணலாகா வாழ்க்கையொன்று

என் கண் முன்.
அன்புமயமான அந்தத் தகப்பனின் கைபிடித்திருக்கும்
பிள்ளையோடு பிள்ளையாய் போகத் தொடங்குகிறேன்.
அவனை விட்டுப் பிரிந்துசென்ற மனைவியாகி
மீண்டும் அவனைத் தேடிவந்து முத்தமிடுகிறேன்.
அந்தக் கண்களில் குத்திநிற்கும் முட்களையெல்லாம்
வலிக்காமல் ஒவ்வொன்றாய் பிடுங்கியெறியும் வழிதான் தெரியவில்லை.
விரையும் வேகத்தில் ‘ராணுவ வீரனின் பொம்மை கைநழுவி
சாலை நடுவில் விழுந்து விபத்துக்குள்ளாக,
பேருந்திலிருந்து ஏங்கித் திரும்பும் சிறுவனின் விழிகளில்
நிறையும் நிராதரவில்குற்றவுணர்வில்உறவைப் பிரிந்த தவிப்பில்
இன்றும் நேற்றும் நாளையும் சிறைச்சாலையாகிவிடுகிறது உலகம்.

கிழ்ச்சியைத் தேடி மகனை தோள்மீது சுமந்தபடி

நாளெல்லாம் ஓடித் திரிகிறான் க்ரிஸ்.
தினமும் தங்கவும் தூங்கவும் இடமில்லாமல்
அறைதேடி அல்லாடும் வழியெல்லாம் சிலுவைகள்.
அவரவர் உலகங்களை அன்பிணைக்க
இரத்ததானம் அளித்துப் பெறும் பணத்தில்
மகனுக்கு விருந்தளித்து மகிழ்பவன் மீண்டும் ஓடுகிறான்.
வேலை கிடைத்த மகிழ்ச்சியில் மகனை மார்போடணைத்து
ராஜகுமாரனாக்குகிறான்!
அடுத்தவேளை சோறுக்கே வழியில்லாத நாளிலும்
ஆளரவமற்ற இரயில் நிலையத்தில்
மகனுக்காக
டினோசார் வாழும் காட்டையே நிர்மாணித்தவனாயிற்றே!

கோள்கள் எத்தனை?”

ஏழு
இல்லைஒன்பது வனராஜா யார்?”
கொரில்லா
இல்லைசிங்கம்

தந்தையின் கேள்விகளுக்கு தயங்காமல் பதிலளிக்கும் மகன்.

[தவறாய் இருந்தால்தான் என்ன!]

னில்அன்றொரு நாள் மகன் கேட்கும் கேள்வியில்

கதிகலங்கி நிற்கிறான் தந்தை:
அம்மா என்னால் தான் பிரிந்து போனாளா?”

இல்லைஅம்மா தன்னால் தான் போனாள்”.
”நீ விரும்பினால் குகைக்கே திரும்பிவிடலாம்”, என்று பரிவோடு

கூறுகிறது பிள்ளை.

வெறுமே கடற்கரைக்குச் சென்றோம்-

எல்லாவற்றிலிருந்தும் தொலைவாக;
ஏமாற்றத்திலிருந்து வெகுதொலைவாக…
என் வாழ்க்கையின் இந்தப் பகுதி
இந்தச் சின்னஞ்சிறு பகுதியே
மகிழ்ச்சியென்று அழைக்கப்படுகிறது”
என்கிறான் க்ரிஸ்.


ன்ன நடந்தாலும் சரிநீ செய்தது அற்புதமான காரியம்
நல்லபடியாக கவனித்துக்கொள் உன்னை”
என்றவரை
வேண்டி விரும்பி வழிமொழிகிறேன் நானும்.


காரணம் புரியாமல் விழிநிரம்பும் கண்ணீர்
க்ரிஸ்ஸுக்காகவும் எனக்காகவும் உங்களுக்காகவும்
கருணை செய்யட்டும் காலம்.
[* சமர்ப்பணம்: The Pursuit of Happy[i]ness திரைப்படத்திற்கும் அதில் நடித்த Will Smith மற்றும் அவருடைய மகன் Jade Smithற்கும்]