LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Friday, January 19, 2018

இன்னொரு வாழ்வு ’ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 இன்னொரு வாழ்வு
 ’ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)
 (*from my forthcoming 11th poem-collection எதிர்வினை)


வழிதவறி தொலைந்த குழந்தையாய்,
நம்பிக்கைத்துரோகத்துக்கு ஆளான
காதல்வயப்படவர்களாய்,
நாய்வாலின் நிமிராச் சுருளாய்,
மஞ்சளாகிக்கொண்டே வரும் இலையின்
அலைக்கழிப்பாய்,
மொழியறியாப்பாடலொன்றின்வழி யான
மனத்தளும்பலாய்
கண்முன்னே களவுபோகும் காலம் வரவாக்கும்
கையறுநிலையாய்
ஆழ்மனதில் குழம்பித்தவிக்கிறது
கவிதைபோல் ஒன்று.

v       

குற்றச்சாட்டல்ல கவிதை;
குறுக்குவிசாரணையல்ல.
கூண்டுக்கைதியல்ல கவிதை;
கடுங்காவல்தண்டனையல்ல.
வாதப்பிரதிவாதங்களல்ல கவிதை;
வழக்காடுமன்றமல்ல.
வாக்குமூலமல்ல கவிதை;
விலங்கிட்ட கரங்களல்ல.
முகமூடியல்ல கவிதை;
மூதுரைகளுமல்ல.
முத்துமணிவயிரமல்ல கவிதை
முழக்கயிறல்ல.
பகையல்ல கவிதை;
போருமல்ல;
வியூகமல்ல கவிதை;
வெற்றியுமல்ல.
விழவல்ல கவிதை;
விழிநீரல்ல;
வித்தகமல்ல கவிதை;
விளம்பரமல்ல…..

அரைத்தூக்கத்தி லாழ்ந்துபோன மனதில்
கணநேரக் கனவாய் கரையுமோர் அசரீரி:
உடல் பொருள் ஆனந்தி…..’


v 

உறக்கக் கரையோரம்
இருக்கும்போதும்
தண்ணீரில் மிதந்துவரும் புட்டியும்
அதனுள்ளிருக்கும் காகிதத்துண்டும்
தவறாமல் தெரிகிறது
விழிக்குள்ளான விழிகளுக்கு _
விரியுங் காட்சியின் கருணை
யருங் கவிதையாக.


v 

குறுக்கே மறிக்கும் உறக்கத்தை
கைகளால் சுருட்டியெடுத்துக்
கக்கத்தில் இடுக்கிக்கொண்டு
மனமும் விரலும் மணத்துயிர்க்க
மறுபிறவியெடுக்கவேண்டும் கவிதையில்


v 

முளைவிதை ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

                        முளைவிதை

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)
 (*From my forthcoming 11th poem-collection எதிர்வினை)

மனம் வனம்
பிருந்தாவனம்
பாலைவனம்
பச்சையம்
பளபளக்கும் கானலும்.
பூக்களுமிலைகளும்
குடுகுடுவென ஓடும் பிள்ளைகளும்
ஒட்டகங்களும்
சுட்டுப்பொசுக்கும் மணற்பரப்பும்
கனவேபோல் தட்டுப்படும்
காலடித்தடங்களும்
விடுபட்டுப்போனதா
லானதா
ஆகாமலானதா

கவிதை…..

மனக்கணக்கு ரிஷி(லதா ராமகிருஷ்ணன்)

மனக்கணக்கு
ரிஷி(லதா ராமகிருஷ்ணன்)
 (*From my forthcoming 11th poem-collection எதிர்வினை)


மொழிப்பகட்டல்ல கவிதை,
மொந்தைக்கருத்துக
ளல்ல ;
புதிர்விளையாட்டல்ல கவிதை,
பொய்புரட்டுகளல்ல;
சொற்தூவலல்ல கவிதை,
சொகுசுக்கார் பயணமல்ல;
தற்காப்புக்கவசமல்ல கவிதை,
தெனாவெட்டுத் திமிரல்ல;
எள்ளல் எகத்தாளமல்ல கவிதை,
ஏகபோக உரிமையல்ல;
கள்ளம் கபடமல்ல கவிதை,
காறித்துப்பலல்ல.
தெய்வமல்ல, தேவகணங்களல்ல கவிதை,
துர்தேவதைத்துக்கிரியுமல்ல;
வள்ளலோ பக்கிரியோ அல்ல கவிதை,
வரிக்கோடுகள் அல்லவேயல்ல;
மிச்சம் மீதியல்ல கவிதை,
அட்சயபாத்திரமல்ல ;
நட்பல்ல பகையல்ல கவிதை,
நல்லாசானுமல்ல;
நினைவின் நினைவல்ல கவிதை,
ஞாபகமறதி யல்ல;
நல்லதல்ல கெட்டதல்ல கவிதை,
நாலும் தெரிந்ததல்ல;
வாலுமல்ல தலையுமல்ல கவிதை,
வெட்டி முண்டமல்ல;
தண்டமோ அண்டமோ அல்ல கவிதை,
உண்ட சோறின் ஏப்பமல்ல.
சீப்பல்ல சிகையல்ல கவிதை;
மோப்பநாயுமல்ல;
இன்னுமுண்டு சொல்லச் சொல்ல
இன்னும் இன்னும் இன் _.
பின் என்னதான் கவிதை?
என்றெனக்குத் தெரியும் நாள்
So near yet so far.

Top of Form

Bottom of Form


உன்னதாற்புதம்! ரிஷி(லதா ராமகிருஷ்ணன்)

உன்னதாற்புதம்!
 ரிஷி(லதா ராமகிருஷ்ணன்)
(*From my forthcoming 11th poem-collection எதிர்வினை)


உன்னதத்தைக் கண்டதுமே உள்ளுணர்வுக்குத் தெரிந்துவிடும்.
உடனே உதறலெடுக்கத் தொடங்கும் முகமூடி மனிதர்களுக்கு.
உடனே அவசரக்கூட்டம் நடத்தி
‘மகோன்னதம் யாம்’ என்ற விளம்பரப் பதாகைகளை
மேற்கு, கிழக்கு, வடக்கு தெற்கெல்லாம்
நட்டுவைக்கும் ஏகோபித்த தீர்மானத்தை நிறைவேற்றிவிடுகிறார்கள்.
நாற்புறமிருந்து அதன்மீது காறித்துப்பவென்றே
நிதமும் நாலுபேரை வேலைக்கமர்த்திவிட்ட பிறகும்
நிம்மதியின்றி
அலைபாய்ந்தவண்ணமிருக்கும் அவர்கள்
அத்தனை வலிவேதனையிலும் அதெப்படி அழாமலிருக்கிறது இந்த உன்னதம்
என்ற ஆங்காரத்தில்
கூலிப்படையைக்கொண்டு அதை அடையாளமற்றுச் சிதைக்கப் பார்த்தார்கள்.
தக்க தருணத்தில் நல்லவர்கள் பார்த்துவிட்டதால்
ஒரு பல் உடைந்ததோடு தப்பித்துவிட்டது உன்னதம்.
தோல்வியைத் தாங்கமுடியாதவர்களாய்
ஓட்டைப்ப, ஓட்டைப்பல் அய்யய்யே ஓட்டைப்பல்
என்று உரக்கக்கூவி
‘பல்லிழந்த உன்னதம் பாவம் பரிதாபம்’
என்று எள்ளிநகையாடுபவர்களை
எட்டநின்று பார்த்தவாறு
வருத்தத்தோடு சிரித்துக்கொண்டிருக்கிறது

எல்லோருக்குள்ளுமிருக்கும் உன்னதம்.

மலையின் உயரம் ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)

மலையின் உயரம்
ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)
(* From my forthcoming eleventh poem -collection எதிர்வினை)



ஒருபோதும் மலைகளாக முடியாதவர்கள்,
மலைமேல் ஏறக்கூட முடியாதவர்கள்
மலையின் அடிவாரத்தில் நின்று அண்ணாந்துபார்த்தாலே
மளுக்கென்று கழுத்து சுளுக்கிக்கொள்கிறவர்கள்
மலையிலிருந்து உருளும் ஒரு கல்லைக் காட்டி
மலை மாபாதகம் செய்துவிட்டதாக 
மண்ணை வாரித்தூற்றுகிறார்கள்;
காலமெல்லாம் கையில் கற்களோடு
சுற்றிக்கொண்டிருப்பவர்கள்
பாவனைக் கண்ணீர் பெருக்கிக்
கருணைக்கடலாகிவிடுகிறார்கள்.
கனியிருப்பக் காய் கவரலாமோ என்ற குறட்பாவை
மேற்கோள் காட்டி கையோடு
தனித்துவமான தமது வசைபாடலை
ஒலிக்கச்செய்கிறார் கோரஸ்களோடு.
கலி முத்திப் போச்சுஎன்பதாய் கவனமாய்
நவீன தமிழில் கருத்துரைத்து
எலிப்பிள்ளை என்றுரைப்பார் கிளிப்பிள்ளையாய்
வலிய சிங்கத்தை.
எத்திசையிலும் அலைபாய்ந்திருக்குமவர் கண்கள்
பித்தளையாகக் காட்டி ஒரு ஒப்புநோக்கலில்
தன்னைப் பத்தரைமாற்றுத் தங்கமாகப் பறைசாற்ற
எங்கேனுமிருப்பாரோ இளிச்சவாயர்கள் என்று கண்காணித்தபடி.
ஒருவரிடம் காரியம் ஆகவேண்டியிருந்தால் அவரை ஆதரிப்பார்;
இன்னொருவரிடம் இன்னொரு காரியம் ஆகவேண்டியிருந்தால் 
அவரையும் ஆதரிப்பார்.
பாரபட்சமே நீதிநெறியாக
கையில் எப்போதுமிருக்கும் துலாக்கோல்
தட்டின் அடியில் ஒட்டிய புளியோடு.
எவரைப் பரிச்சயப்படுத்திக்கொண்டால் என்ன ஆதாயம்
என்ற மனக்கணக்கில்,
மருந்துக்கும் புத்தகங்களைத் தொடாமலேயே
சேருமிடம் சென்று வென்று கொன்று மென்று
பாஸ்மார்க், முதல் வகுப்பில் தேர்ச்சி, டிஸ்டிங்ஷன் 
தங்கப்பதக்கம் என்று படிதாவிப்படிதாவிச் 
செல்பவர்களுக்குத்தான்
குறிப்பாக மலையைக் கண்டால் வெறுப்போ வெறுப்பு.
தட்டாமாலை தாமரப்பூ சுத்திச்சுத்தி வந்தாராம்என்ற
குழந்தைக்குதூகலமாய்
விளையாட வாயேன்என்று வெள்ளந்தி பாவனையில் 
மலையை அழைப்பார்;
தலையைத் தழைத்தால் முகடு வெட்ட வாகாய்
வெட்டரிவாளை ஒளித்துக்கொண்டு.
இறங்கிவர மறுக்கும் மலையைப்
பெருமுதலாளி என்று பழிப்பார் _
இருபத்தியிரண்டு செல்லப்பிராணிகள் வைத்திருப்பார்.
இன்னும் என்னென்ன ரகங்கள் இங்கே என்றெண்ணி
புன்னகை பூக்கிறது
இயல்பே உயரமான மலை.
உயரேயிருந்து பார்க்க எல்லாம் தெரியும் மலைக்கு.
மலையை மடுவாக்கும் கனவைக்கூட நாம் கண்டுவிட இயலாது.
முன்னே நின்று நீ உறுமுவதெல்லாம்
முனகல் மட்டுமே மலைக்கு;
முட்டிமோதினாலோ சேதாரம் உன் தலைக்கு.


Top of Form