LIFE GOES ON.....

LIFE GOES ON.....
Showing posts with label ரிஷி(லதா ராமகிருஷ்ணன்)கவிதைகள். Show all posts
Showing posts with label ரிஷி(லதா ராமகிருஷ்ணன்)கவிதைகள். Show all posts

Monday, May 31, 2021

விட்டுவிடுதலையாகி…. ‘ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)

 விட்டுவிடுதலையாகி….

‘ரிஷி
(லதா ராமகிருஷ்ணன்)
அருவப்பெருங்கனவுகளைப் பலவர்ணக் காற்றாடியாக்கிப் பறக்கவிட்டு
அதன் நூலிழையைப் பிடித்தேறி ஆகாயத்தைத்
தொட்டுக் களித்து
பிரபஞ்சகானத்தைப் படித்துக் கற்றுப் பாடிப் பரவி
ஆனந்தத்தில் வாலைக்குழைத்தொரு பப்பிநிலவாய்
அடிவானத்தில் பட்டொளிவீசி
குட்டிமூக்கால் எட்டுத்திக்கு வாசனைகளையும் முகர்ந்து
உள்வாங்கி கள்வெறி கொண்டுயிர்த்த
மனதின்
வனப்பையெல்லாம் வரிகளாக்கிச் சிறகடித்துப்பறந்துபோனதொரு
சிட்டுக்குருவி
விட்டுவிடுதலையாகி நிற்கும் வெளியெங்கும்
கொட்டிக்கிடக்கும் நட்சத்திரங்களின்
அட்சரலட்சங்களை
என்றென்றும் எண்ணியவாறிருக்க
என்ன தவம் செய்தனையோ என் நெஞ்சே
என் நெஞ்சே……







Sunday, May 30, 2021

பிரார்த்தனை ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 பிரார்த்தனை

 

ரிஷி

(லதா ராமகிருஷ்ணன்)

 

நடுநிசியில் நட்டநடுவீதியில்

தன்னந்தனியாய் நின்றுகொண்டிருக்கும் சின்னஞ்சிறுமி உணரும்

அநாதரவில் அதிபயத்தில்

இருளைத் துளைத்துக்கொண்டு வரும்

மின்மினியின் துளி ஒளி

கருமையைப் பன்மடங்கு அதிகரிப்பதாய்……

முதுகுப்பக்கம் ஏதோ மூச்சுக்காற்று படர

திரும்பிப்பார்த்தால்

அத்தனை உயரமாய் குத்திக்கிழிக்கவரும்

வாட்களனைய நீண்ட தந்தங்களோடு

காட்டுயானையொன்று நிற்கக் கண்டு

வீறிடாமல் என்ன செய்வாள்.

சித்திரக்கதைப் புத்தகத்தில் வரும் யானையே

சிரித்துவிளையாடத்தக்கது.

வழிதவறி வந்துவிட்டாளா இந்த வனாந்திரப் பிரதேசத்துக்கு?

தொலைந்துவிட்டாளா, தொலைத்துவிட்டார்களா?

தொலைதலும் தொலைத்தலுமே வாழ்வெனும்

பேருண்மையை எட்ட

இன்னும் எத்தனை தொலைவு அழுதுகொண்டே கல்தடுக்கி முள்குத்தித் தட்டுத்தடுமாறிசெல்லவேண்டுமோ

இந்தக் குட்டிப்பெண்....

கரிய பெரிய இருளில் சிறுமியின் விசும்பல்

பசும்புல் மீது பதிந்த காலடியோசையாய்

அவளைச் சுற்றிலும் படர்ந்துள்ள

சன்ன வெளிச்சமொரு ஒளிவட்டமாக,

ஆகட்டும் சிறுமி

இறக்கைகள் தரித்த தேவதையாக…….

 

வலியின் நிறம் ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 வலியின் நிறம்

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)

சரேலென்று அத்தனை அகங்காரமாக
சிறிதும் ஒலியெழுப்பாமல் திரும்பிய கார்வண்டியின் சக்கரங்கள்
சிறுவனொருவனை ரத்தக்கிளறியாக்கிவிட்டுச் சென்றதைக்
காணப்பொறாமல் கண்டித்துப்பேசினால்
அதற்குள் அவனுடைய சாதியையும்
கார்க்காரனின் சாதியையும்
எப்படியோ துப்பறிந்து
அன்றொரு நாள் இன்னொரு காரோட்டி இன்னொரு சிறுவனை இப்படிச் சிதைத்தபோது யாரும் ஏதும் பேசாததற்குக் காரணம் அவன் வர்க்கத்தால் ஏழையென்பதும்
சாதியால் அடித்தட்டிலிருப்பதும்தானே
என்று ஏனையோரைக் குற்றவாளிகளாக்கித்
தங்களை உத்தமசீலராக்கிக் கொண்டுவிடுவது
எப்போதுமே எளிதாக இருக்கிறது சிலருக்கு.
இப்போதைய காரோட்டியின் செயலை பிறப்பின் பெயரால் சிலர் நியாயப்படுத்தத் தொடங்குகிறார்கள்.
பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாகும் பெண்களின் அகபுற வலிகளையெல்லாம்
அவரவர் கைவசமிருக்கும் இவையனைய எடைக்கற்களால்
அளந்துபார்த்துக் கடைவிரிக்கும் மொத்த வியாபாரிகளும்
சில்லறை வியாபாரிகளும் உண்டு
உலகமயமாக்கலுக்கு முன்பும் பின்பும்.
நலிந்தழிந்து இதோ
குற்றுயிரும் குலையுயிருமாகக் கிடக்கும் ஒரு சிறுவனின்
தலைமாட்டில் நின்றுகொண்டு
காலாதிகால வர்த்தமானங்களைப் பேசிக்கொண்டிருக்கிறார்கள்.
சிறுவன் இறந்துவிட்டால் இன்னும் நிறையப் பேச முடியும்.
ரணவலியின் மீதேறி நின்று வெறுப்புமிழ் பிரசங்கம் செய்தபின்
அங்கிருந்து ஒரே தாவலில் சென்றுவிடுவார்கள்
அவரவர் ‘IVORY TOWER'களுக்கு’




Tuesday, May 26, 2020

நோய்மை ‘ரிஷி’ - (லதா ராமகிருஷ்ணன்)


நோய்மை
ரிஷி

(லதா ராமகிருஷ்ணன்)

 அகன்று விரிந்த சாலையில் ஓரமாகக் கிடக்கும்
வறிய வாழ்வுகளைக்கண்டுங்காணாமல் விரைந்துகொண்டிருந்தவர்கள்தான் நாம்.
அடுத்தவரைக் குறைபேசியே
நம்மாலாகும் கடுகளவு சகமனிதக்
கடமையைக்கூடச் செய்யாமல்
காலெட்டிவைத்து அப்பால் போய்க்கொண்டிருக்கப்
பழகிவிட்டவர்கள்….
பாதிக்கப்பட்டவர்கள் பாவம் தாங்குவதில்
நடிப்புக்கு நோபெல் விருது இருந்தால்
அது கண்டிப்பாக நமக்குத்தான்.
ஆள்பவர்களையெல்லாம் ஆக்ரோஷமாகப்
பழிப்பதும் சபிப்பதுமே
நம் மனிதநேயத்தின்அக்மார்க்முத்திரையாக _
அதைத் ஸெல்ஃபி எடுத்துப்போடுவதைக் காட்டிலும்
ஆகப்பெரிய சமூகப்பணி இருக்கமுடியுமா என்ன?
ஒரு பேரவலத்தின் பிடியில் அகப்பட்டு
சிறிய அறையில் முடங்கிக்கிடக்கும் நேரம்
திரும்பத்திரும்ப துயருரும் வறியவர்கள்
சிறிய இன்னும் சிறிய சதுர,நீள்சதுரக் கண்ணாடிப்பெட்டிகளிலிருந்து
அத்தனை நெருக்கத்தில் கண்ணீர்பெருக்கும்போது
தன்னையுமறியாமல் மேலெழும்பும் மனசாட்சி
நம்மைக் குற்றவாளிக்கூண்டில் ஏற்றுகிறது.
அவசர அவசரமாக அதன் வாயை மூடி
பாதிக்கப்பட்டவராக நம்மை முன்னிறுத்தும் முயற்சியில்
உரக்கக் கூவுகிறோம்; கதறுகிறோம்
தாவி குதித்துத் தரையில் புரண்டு துடிக்கிறோம்;
தெரிந்தே பொய் பேசுகிறோம்.
பறந்துகொண்டிருக்கும் பணக்காரர்களால் வந்தது
இந்தப் பேரிடர்
என்று அடித்துச்சொல்கிறார் நம்மில் ஒருவர்
அடிக்கடி அவர் பல நாடுகளுக்குப் பறந்தவர்; பறந்துகொண்டிருப்பவர்;
பறக்கப்போகிறவர்
.