LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Saturday, May 9, 2026

நடுவில் நிறைய பக்கங்களைக் காணவில்லை - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 நடுவில் நிறைய பக்கங்களைக் காணவில்லை

‘ரிஷி
(லதா ராமகிருஷ்ணன்)


அவர் வாழ்ந்த காலத்திலிருந்து வெகுகாலம் கடந்து
அவர் கவிதைகள் பற்றி எழுதப்பட்டிருந்த
குறிப்பு
கட்டுரை
திறனாய்வில்
காணாமல் போயிருந்தது _
கையில் கிடைத்த தத்துவங்களை
சோழியாய் வரிகளில் சுழற்றி வீசி
யவர் தன்னை தீர்க்கதரிசிக் கவியாக நிலைநிறுத்திக்கொண்டது;
அன்பே சிவம் என்று ஒரு மேடையில் போதித்து
சிவம் சவம் என்று இன்னொரு அரங்கில் சாதித்தது;
தன் வீட்டின் பத்துக்குக் குறையாத அறைகளை பூதங்காத்தவாறும்
எந்நாளூம் நிலவறையில் நெல்மூட்டைகள்
பத்துக்குக் குறையாமல் வைத்திருந்தபடியும்
‘தனியொருவனுக்குணவில்லையெனில்
ஜகத்தினை அழித்திடுவோமை
தவறாமல் உணர்வெழுச்சிமிக்க ஏற்ற
இறக்கங்களோடு தழுதழுக்கும் குரலில்
தீ கலந்து பகர்ந்தது;
தந்த கோபுரத்தின் கண்ணாடி அறையுள்ளிருந்து கணினியைத் தட்டியவாறே
தன்னாலான கலவரத்தைத் தூண்டும்
சமூகப்பணி செய்துகொண்டிருந்த
அவர் தர்மசிந்தனையும்
தாராளமய நன்னெறியும்;
கழிபொழுதில் தனது மொழியாற்றலை
யெல்லாம்
குறிப்பிட்ட ஒரு தலைவரைப் பழிப்பதற்கே
செலவழித்த
அவரது மெச்சத்தகுந்த கூர்கவனமும்;
அழியாப்புகழ் பெற அவர் செய்த
அரசியலும்;
அவரிலிருந்து பெருக்கொடுத்தோடிக்
கொண்டிருந்த
பொல்லாப்பும் பொச்சரிப்பும்;
சிற்றெறும்பு கடித்ததைச் சிக்கெனப் பிடித்துக்கொண்டு
உச்சிமீது வானிடிந்து வீழுகின்றபோதிலுமான
’சிச்சுவேஷனை’ உருவாக்கி அவர் பாடிய
நவீன ஒப்பாரியில் அவர்
கச்சிதமாய் ஒளித்துவைத்திருந்த
நச்சுத்துப்பாக்கியும்;
அச்சச்சோ அராஜகம் என்று
பன்னிப் பன்னிச் சொன்ன அதே வாயால்
அதே விஷயத்தை ‘அதெல்லாம் வாழ்வில் சகஜம்’
என்று அடித்துச்சொன்னதும்;
ஒரு பத்தியில் தொற்றுநோயும் மறுபத்தியில் நடிகர் வெற்றிவேலுக்கான
’வாகைசூடி வா’ வாழ்த்துமாய்
பதிவுகளைப் பகிரும் வித்தகமும்;
எழுத்தின் நிறைமௌனத்தைக் கிழிக்கும்
வெற்றுமுழக்கங்களும்;
மற்றும்……….

QUOTABLE QUOTE


 

சொல்லத்தோன்றும் சில - லதா ராமகிருஷ்ணன்

 சொல்லத்தோன்றும் சில

லதா ராமகிருஷ்ணன்

என் டைம்லைன் என்னுடைய வெளி. என் வீட்டில் நான் செய்ப வற்றை யாரும் கேள்வி கேட்க முடியாது என்ற ரீதியில் சிலர் எழுதுவதைப் படிக்கும்போது வேடிக்கை யாக இருக்கிறது.

தன் வீட்டுக்கூரை மேல் ஏறி நின்று கொண்டு ஒருவர் தெருவில் போவோர் வருவோரை யெல்லாம் தூற்றிக் கொண்டிருந்தால், அல்லது தனது வீட்டின் ஒரு அறைக் குள்ளிருந்து ஜன்னல் வழியாக எதிர் வீட்டுக்காரரைப் பற்றி ஏளனமாகச் சாக்கிட்டுப் பாடிக் கொண்டிருந்தால்?
PUBLIC SETTINGS இல் இருந்துகொண்டு ஒருவர் பதிவிடு வதைப் படிப்பவர்களில் மாற்றுக்கருத்துரைக்க யாருக்கும் சுதந்திரம் உண்டு. FRIENDS SETTINGSஇல் இருந்தாலும் நட்பினர் எல்லாம் எல்லாக் கருத்துகளுக் கும் ஒத்துப்போக வேண்டும் என்ற அவசிய மில்லை. அத்தகைய எதிர்பார்ப்பு சரியில்லை.
LOCKED PROFILE வைத்திருப்பவர்கள் நட்பு அழைப்பைக் கொடுப் பது வினோதமாயிருக்கிறது. ஆனால், அவர்கள் நட்புவட்டத்தில் யாரேனும் அவர்களுடைய பதிவொன்றை பொது வெளியில் வைத்தால் அதுவும் விமர்சனத்திற்குட் பட்டதுதான்.
பீடத்திலேறி பிரம்மோபதேசம் செய்வதாய் கருத்துரைப்பவர் களுக் கும், ஒரு கருத்துக்கு எதிர்க்கருத்துரைப் பவர்களுக்கும், தங்கள் கருத்துகளும், அவற்றைச் சொல்லும் விதமும் தங்களை யும் அம்பலமாக்கிவிடும் என்ற புரிதல் மிக மிக அவசியம்.

திக்குத்தெரியாத காட்டில்……. ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 திக்குத்தெரியாத காட்டில்…….

ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)

திசை - 1
ரயில்வண்டிகள் வழக்கம்போல் ஓடத்தொடங்கும்.
விமானங்கள் பறக்கத்தொடங்கும்.
கொரோனாக் காலம் என்பது கடந்தகாலமாகும்.
கதைகளில், கவிதைகளில் திரைப்படங்களில் பட்டிமன்றங்களில் பேசுபொருளாகும்.
கேட்பவர்கள் பார்ப்பவர்களில் சிலர் சிரிப்பார்கள்;
சிலரின் முதுகுத்தண்டுகள் சில்லிடும்.
இனி வரலாகாத அந்த முப்பது நாட்கள் அல்லது மூன்று மாதங்களின் நினைவு தரும் இழப்புணர்வு
சிலருக்குப் பொருட்படுத்தத்தக்கதாய்
சிலருக்குப் பொருளற்றதாய்
அருகருகிருக்கும் இரு மனங்களின் இடைவெளி
அதலபாதாளமாயிருக்க வழியுண்டு என நினைக்கையிலேயே
அதன் மறுபக்கமும் எதிரொலிக்கும் மனதில்.
மீண்டும் மனிதர்கள் கூடிப்பழகுவார்கள்.
கூட்டங்கூட்டமாக திருவிழாக்களைக் கண்டுமகிழ்வார்கள்
குழந்தைகளை அழைத்துக்கொண்டு
கடற்கரைக்குச் செல்வார்கள்.
கொரோனாவை மீறியும் நீளும் காலம்
நெருக்கும் கூட்டமாய் உந்தித்தள்ள
இருபக்கமாய் பிரிந்துவிட்டவர்கள் இன்னமும் தேடித்திரிந்துகொண்டிருக்கலாம்.
திசை - 2
அந்த அநாமதேய பிராந்தியத்தில் தான்
சென்றிருக்கும் வீடு இருக்கிறது;
செல்லவேண்டிய வீடும் இருக்கிறது.
நிகழ்காலமும் எதிர்காலமும் இருமுனைகளாக
இடையே இருப்பவை ஒரு சில வீடுகளாக இருக்கலாம்
சில பல தெருக்களாக இருக்கலாம்
வீதிகளாக இருக்கலாம்
மீதமிருக்கும் கோபதாபங்களாக இருக்கலாம்
அநாமதேய பிராந்தியமென்றானபின்
அடுத்திருந்தாலும்
அந்த இரு வீடுகளுக்கிடையே
ஆயிரமாயிரம் மைல்களாக
அந்திசாயும் நேரத்தில்
எந்தப் பக்கம் திரும்புவது என்று தெரியாமல்
நின்றது நின்றபடி
தேடித்தேடி இளைத்திருக்கும்
ஏழை மனம்.
*
திசை - 3
பாதங்களுக்குப் போதிய பலம்வேண்டும்
திசையறியாத்த தொலைவின் காததூரங்களைக் கடக்க;
பழகவேண்டும் வழிகளில் தட்டுப்படும் இடர்ப்பாடுகள்….
காலணிகளை ஊடுருவி சுருக்கென்று குத்தும் கூர்கற்கள்;
தைக்கும் நச்சுமுட்கள்;
கண்ணீர் வந்தால் சற்றே இளைப்பாறுவதற்கு
நிழல் தரும் மரம் எங்காவது இருக்கும்
என்பதொரு நம்பிக்கை.
என்றாவதுதான் தட்டுப்படுமா நன்னம்பிக்கைமுனைகள்?
இப்போதெல்லாம் இரவில் வனவிலங்குகள் நடமாட்டம்
வாகனவீதிகளில் இருப்பதாகச் சொல்கிறார்கள்.
இத்தனையையும் கடந்து சென்றடையும் வீடு
பூட்டியிருக்க நேரலாம்
அல்லது தாளிடப்படலாம் வாசல்
ஈசலாய் எழுந்து மடியும் எண்ணங்கள் கட்டுச்சோறாய்
மனதிலொரு நெடும்பயணம் பொடிநடையாய்
நடந்தவண்ணம்
திசை – 4
இங்கிருந்து பார்க்க முட்டுச்சந்துபோல்தான் தெரிகிறது.
ஒருவேளை மறுமுனையில் திறப்பிருக்கலாம்.
இருபக்கமும் பாதை பிரியலாம்.
இதுபோல் நடந்ததில்லையா என்ன?
ஆனால்
இரு நான்கு வருடங்களுக்கு முன்பு நடக்கமுடிந்ததைப் போல்
இன்று முடிவதில்லை.
நினைத்தபோது கால்கள் தூண்களாகி
நிலமூன்றி நின்றுவிடுகின்றன
நகர்த்தவே சக்தியில்லாத நிலையில்
நெடுமரமாய் வேர்பிடித்திருக்கும் கால்கள் தன்னிலைக்குத் திரும்பக் காத்திருக்க நேர்கிறது.
இல்லை, சாம்சன் தலைமுடியாய் மீண்டும்
சக்தி திரண்டு
நிலத்தைப் பிளந்து தூண்களை வெளியே இழுத்து கால்களாக்கிக்கொள்ளும்படியாகிறது.
இதற்காகும் நேரம் பொதுவான காலக்கணக்கில் சேருவதில்லை.
அதிபிரம்மாண்டப் பெருங்காலம் அதன்போக்கில்
வருங்காலத்தை நோக்கிப் பாய்ந்தவண்ணமே.
அதன் சுழல்வேகத்தில் கழன்று மேலெழும்பும் கால்கள்
நடக்க முற்படுவதற்குள் இழுத்துச்செல்லப்படுகின்றன.
புயலடித்துத் தரைதட்டும் கப்பலாய்
அயல்வெளியில் கரைசேர்ந்து அரைமயக்கத்தில் துவண்டுகிடக்கின்றன.
கையறுநிலையில்……..
என்றும் சென்று சேருமிடம் சேர கால்களுக்குக்
கருணை காட்டவேண்டும் காலம்.

/2020, APRIL 27 - மீள்பதிவு//

என்றும்போல் இன்றும்…. ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 என்றும்போல் இன்றும்….

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)
கூட்டம் கூடிவிட்டது
நிறைய காசு சேர்ந்துவிடும் என்ற நம்பிக்கையில்
கைத்தட்டிப் போவோர் வருவோரை அழைத்துக்கொண்டிருந்தான்.
பொருதப்போகிறவர்களின் சுருக்கமான வரலாறுகளை
சொல்லத்தொடங்கினான்;
பெட்டிக்குள் இருக்கும் பாம்பும் கீரிப்பிள்ளையும்
பழக்கப்படுத்தப்பட்டிருக்கின்றன
பகைமை பாராட்டவும்.
*****
”ஆடுரா ராஜா ஆடுடா ராஜா” என்று குட்டிச்சாட்டையால் அடித்தபடி
குரலெடுத்துக் கூவிக்கொண்டேயிருந்தவனைக்
குரங்கு கோபத்தோடு பார்த்து அசையாமல் அமர்ந்திருக்க
”ஆடாதே படிடா குரங்கே”, ”ஆடாதே படிடா குரங்கே’
என்று அன்றாடம் அம்மையப்பன் கூவும் பாங்கில்
புத்தகமும் கையுமாய் மூலையில் ஒடுங்கியிருந்த சிறுவன்
ஆனந்தமாய் குதித்தாடலானான்.
*****
“One a penny two a penny hot cross bun”
என்று ‘ரைம்’ சொல்லிக்கொண்டிருக்கின்றன
சில குழந்தைகள்;
One part woman, two part woman என்று
பெண்ணியம் போற்றிக்கொண்டிருக்கிறார்கள்
சில கனவான்கள்.
*****
இவர் சொன்னால் கருத்துச் சுதந்திரம்;
அவர் சொன்னால் அடிப்படைவாதம்.
இவர் செய்தால் மனிதநேயம்
அவர் செய்தால் வணிகநோக்கம்.
இவர் மௌனம் மெச்சத்தகுந்தது
அவர் மௌனம் அச்சத்தில் விளைந்தது….
அகராதிபிடித்தவர்களின் அதிகாரக்கைகளில்
அடிமைகளாய் உழலும் சொற்கள்.
*****
உயிரோடிருக்கும்போதே தனக்கு அஞ்சலிக்கூட்டம் நடக்கவேண்டும்
என்று தன் இறுதி ஆசையை வெளியிட்டார்
கவிஞரொருவர்.
‘அவருக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை
கிடைக்கவில்லை
கிடைக்கவேயில்லை
என்று அதுநாள் வரை எதுவும் செய்யாதவர்கள்
ஒருவர் விடாமல்
தகர டப்பாவில் ஆளுக்கொரு அங்கீகாரத்தைப் போட்டுக் குலுக்கிய குலுக்கலில்
கலக்கமடைந்து பாதியிலேயே கிளம்பிப்போய்விட்டார்.
*****
சாலையோரம் குறிசொல்லிக்கொண்டிருந்தவள்
இன்னும் நாலைந்து மாதங்களில் உலகாள்வாய் நீ
என்று எல்லோருக்கும் சொல்வதுபோலவே சொல்லக் கேட்டுக்
கன்னங்குழியச் சிரித்துத்
தன் உள்ளங்கையுலகைத் திறக்கிறாள் சிறுமி.
*****
நிலா நகரும் காலத்தே ஒருநாளேனும் எனக்கு
இறக்கைகள் முளைக்கலாகாதா
என்று ஏங்கி யண்ணாந்து பார்க்கும்
என்னிடம்
அன்பொழுகச் சொல்கிறது மனம்:
“நானிருக்கிறேனே உனக்கு…”
//2017 - APRIL 26 - மீள்பதிவு//

கலைடாஸ்கோப் கவிதைகள் ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)

 கலைடாஸ்கோப் கவிதைகள்

ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)


1. ஒரு குரல்வளையின் மனம்

மனதைக் கொலைசெய்துகொண்டேயிருக்கப்
பிடித்தவர்
அதற்கான காரணங்களைக்
கண்டுபிடித்துக்கொண்டேயிருக்கிறார்.
கிள்ளலுக்கும் குரல்வளையை நெரித்தலுக்கும்
உள்ள வித்தியாசம்
நம் பார்வையில் தானே தவிர
உண்மையில் இரண்டும் ஒன்றே என்று
அத்தனை ஆணித்தரமாக வாதங்களை
முன்வைக்கிறார்.
அழகைப் போலவே வலியின் அளவும்
அவரவருக்கானது என்று
அவர் சொல்லும்போது
நெரிக்கப்பட்ட குரல்வளையிலிருந்து
எழும் பலவீனமான சிரிப்பு
அழுகையைவிட ஆயிரம் மடங்கு
அவலமாய்.
ஒரு குரல்வளையை அத்தனை சுலபமாக
நெரிக்கவேண்டிய அவசியமென்ன
என்று கேட்டவரிடம்
நான் கேட்டபோதெல்லாம் பாடவில்லை
யென்பதற்காக என்றவர் _
என்னை இப்படி நெரிக்கவைத்து
விட்டாயே என்று
நொடியில் பாதிக்கப்பட்டவராகி
துடித்துக்கொண்டிருந்த குரல்வளையை
அன்போடு கையில் தாங்கி
யழைத்துக்கொண்டு வந்து
குற்றவாளிக்கூண்டில் ஏற்றுவதைப்
பார்த்து _
தெறித்தங்கே விழுந்திருந்த
குரல்வளையின் மனம்
ஆற்றமாட்டாத துக்கம் பொங்கப்
புன்னகைக்கும்.
//2020, MAY 3 - மீள்பதிவு//

2. வார்த்தைகளின் வரையறைகளும் வரம்பெல்லைகளும்
/ஃபாசிசம் ஒழிக பாசிஸத்தை உயர்த்திப்பிடிக்கும் கட்சி ஒழிக/
/ஃபாசிசத்தை வேரறுப்போம் வாருங்கள்/
/ஃபாசிசம் நம்மை கூறுபிரிக்க விடலாமா கூறுங்கள்/
/ஃபாசிசம் தான் மட்டுமே சரியென்று நினைக்கும்/
/ஃபாசிசம் தன்னை மட்டுமே முன்னிறுத்த முனையும்/
/ஃபாசிசம் தனக்கு மட்டுமே எல்லாம் தெரியும் என்று காட்டிக்கொள்ளும்/
/ஃபாசிசம் தானே சரி, தான் மட்டுமே சரி என்று நீட்டிமுழக்கும்/
/ஃபாசிசம் எல்லோருமே தனக்குக் கட்டுப்படவேண்டும் என்று கட்டாயப்படுத்தும்/
/ஃபாசிசம் தன்னை எதிர்ப்போரை வெட்டி வீழ்த்தும்/
என்றெல்லாம் பகலிரவாய்
தான் நேசிக்கும் கட்சிக்காய் குரல்வளை முறிய
கூவித்திரிந்தவன்
மற்ற கட்சிகளையெல்லாம் ஃபாசிஸ்ட் கட்சிகள்
என்று ஏசியவாறிருந்தான்.
ஒருநாள்
கட்சியில் தப்பெனத் தனக்குப் பட்ட ஒன்றை மட்டும்
தட்டிக்கேட்டான்.
கட்சிநீக்கம் செய்யப்பட்டான்.
அப்பிய அப்பில் அதோ குப்புற விழுந்தவனின்
கிழிந்த வாயிலிருந்து ரத்தத்தோடு
வழிந்துகொண்டிருக்கிறது
சத்தமில்லாமல் ஃபாசிசம்..


3. ஆடுகளம்
அடுத்தடுத்துத் தொடர்ச்சியாய் வெற்றிகளைக் குவித்தும்
ஆட்டவீர்ர் முகத்தில் அதற்கான குதூகலமில்லை.
காரணங்கேட்டவரிடம் கூறினார்:
கோமாளிகளும் குயுக்திமூளைக்காரர்களும்
குரோதம் நிறை வஞ்சக நெஞ்சங்கொண்டோரும்
சிறுமதியாளர்களும்
செத்த உயிர் தாங்கியோரும்
சாக்கடையை சந்தனமணங்கமழ்வதாக சாதிப்போரும்
சக உயிரைப் பகடையாக்கும் சூதாடிகளும்
அபத்தப்பேச்சே அறிவுசாலித்தனமாய்க்கொள்வோரும்
அடிவாரத்தில் நின்றுகொண்டு மலைமுகடைப் பகடி செய்வோரும்
பட்டுப்பூச்சிக்கு மனிதனைப்போல் பாடவருமா என்று
முட்டாள்தனமாய் மார்தட்டிக்கொள்வோரும்
கட்டாயம் கெட்ட கெட்ட வார்த்தைகளால் திட்டுவேன்
என்று துண்டுபோட்டுத் தாண்டுகிறவர்களும்
உன்னதங்களை அடையாளங்கண்டு அங்கீகரிக்க மாட்டேன்
என்ற எழுதாச் சட்டத்தின்படியே செயல்படுகிறவர்களும்
எல்லோரையும் மட்டம்தட்டுவதையே காவியத் துணிச்சலாகக்
கட்டங்கட்டிக் காட்டுவோரும்
வெட்கங்கெட்டிருப்பதையே விவேகமாய்க் காட்டிக்கொள்வோரும்
நட்டுகழண்டதாய் நாலும் நவின்றுகொண்டிருப்போரும்
புட்டுபுட்டு வைப்பதாய் துட்டுவாங்கித் திட்டுவோரும்
காகித சிங்கம் புலி கரடி பாம்பாய்
சர்க்கஸ் முதலாளியாய் மிருகங்களாய்
சுற்றிக்கொண்டிருக்கும் சோப்ளாங்கிப் போட்டியாளர்களோடு
பொருதவேண்டியிருப்பது
வெற்றியின் குதூகலத்தைவிட
தோல்வியின் கையறுநிலையையே
அதிகம் உணரச்செய்கிறது.....


கவிஞரும் மொழிபெயர்ப்பாளரும் லதா ராமகிருஷ்ணன்

 கவிஞரும் மொழிபெயர்ப்பாளரும்

லதா ராமகிருஷ்ணன்

இலக்கு வாசகர்களைக் கருத்தில் கொண்டு, மொழிபெயர்க்கப் படும் என்ற அனுமானத்தில் எழுதப்படும் கவிதைகள் உண்டு.
ஆனால், என்னளவில், உண்மையான கவிஞர் ஒரு கவிதையை எழுதும்போது அதை யார் படிப்பார் கள் என்பதைப் பற்றியோ, அது மொழிபெயர்க்கப் படுமா என்பதைப் பற்றியோ எண்ணத்தலைப்படு வதில்லை.
ஏதோ ஒரு அழுத்தத்தை – அது ஆனந்தம் சார்ந்த அழுத்தமாக இருக்கலாம், அல்லது, ஆற்றாமை சார்ந்த அழுத்தமாக இருக்கலாம் – அல்லது ஒரு கணம் காட்டிய காற்றின் விசுவரூபத்தை எழுத்தின் மூலம் கல்லில் வடித்துவைக்க மனம் மேற்கொள் ளும் அசாத்தியமான அழுத்தமாக இருக்கலாம் – எதுவாக இருந்தாலும் இத்தகைய அழுத்தங்களே ஒரு கவிதை உருவாகக் காரணமாகிறது என்று கருதுகிறேன்.
மூல கவிதை இல்லாமல் அதற்கான மொழிபெயர்ப் புக்கு வழியேயில்லை.
ஒரு மொழியில் எழுதும் கவிஞர்கள் ஆங்கிலத் திலோ பிறவேறு மொழிகளிலோ தேர்ச்சி பெற்றிருப் பார்கள் என்று சொல்ல முடியாது; அதற்கான தேவை யும் இல்லை.
ஆனால், அவற்றைப் படிப்பவர்கள் ஆங்கிலமும் அறிந்திருந்தால் இத்தகைய நல்ல கவிதைகள் நம் மொழியில் வருவதை மற்றவர்களும் தெரிந்து கொள்ளவேண்டும், தெரிந்துகொள்ளட்டும் என்ற ஆர்வத்தில் தாம் படிக்கும் கவிதைகள் சிலவற்றை மொழிபெயர்க்கத் தொடங்குகிறார்கள்.
மிகச் சிறந்த கவிதைகள் மொழிபெயர்க்கப் படாமலேயே போகலாம். மொழிபெயர்ப்புக் குள் அடங்க மறுக்கலாம். மொழிபெயர்ப்பாளர்களின் இருமொழி சார் தேர்ச்சியின் வரம்பெல்லைகள், அவர்களுடைய தனிப்பட்ட விருப்பு வெறுப்புகள், அவர்களுக்குத் தரப்படும் பணியாக சில கவிதைகள் மொழிபெயர்க்கப் படவேண்டியிருப்பின் சம்பந்தப் பட்ட தேர்வாளர் அல்லது தேர்வுக்குழுவின் மனச்சாய்வுகள் என பல விஷயங்கள் மொழி பெயர்ப்பு சார்ந்து செயல்படு கின்றன.
தமிழே அறியாத அயல்நாடுவாழ் இளந்தலைமுறை யைச் சேர்ந்தவர் ஒருவர் தனது அப்பாவின் மேஜையில் இருந்த எழுத்தாளர் ஜெயகாந்தனுடைய புதினமொன் றின் ஆங்கில மொழிபெயர்ப்பைப் படித்து இத்தகைய அற்புதப் படைப்புகளெல்லாம் தமிழில் உள்ளனவா என்று வியந்ததாக மொழிபெயர்ப்பின் தேவை குறித்து தனது நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பின் முன்னுரை
யில் கருத்துரைத் திருந்தது நினைவுக்கு வருகிறது.
எத்தனை சிறந்த மொழிபெயர்ப்பென்றாலும் மூல மொழியிலிருந்து இலக்கு மொழிக்குப் போகும்போது தவிர்க்கமுடியாமல் சில இழப்புகள் நேரும் என்றும் மூல மொழியிலிருந்து ஆங்கிலத்திற்கு வந்து அதிலிருந்து தமிழுக்கு வரும்போது மேற்குறிப்பிட்ட இழப்புகள் இன்னும் அதிகமாகும் என்றும் கூறப் படுவது முற்றிலும் உண்மையே.
இத்தகைய போதாமைகள், இழப்புகள் தவிர்க்க முடியா தவை என்றாலும் அதற்காக ஒரு பிரதியை அலட்சிய மாக, அரைகுறையாக மொழிபெயர்ப்பது அநியாயம்.
ஒரு பிரதியின் மீதான அடிப்படை மரியாதையோடு,
அது மொழிபெயர்க்கப்பட வேண்டும் என்ற உண்மை ஆர்வத் தோடு பிரதியை மொழிபெயர்க்கும் மொழி பெயர்ப்பாளர்களும் உண்டு. ஒரு பிரதியை மொழி பெயர்த்துத் தருவதன் மூலம் மூல ஆசிரியருக்கு பெரிய உதவி செய்கிறோம், அதற்கு மூல ஆசிரியர் தனக்குக் கடமைப்பட்டவராக இருக்கவேண்டும் என்ற எண்ணத் தோடு செயல்படும் மொழிபெயர்ப்பாளர்களும் உண்டு.
ஆங்கிலம் தெரிந்த ஒரே காரணத்தால் மூல ஆசிரியரை விட தன்னை உயர்வாக, அதி உயர்வாக பாவித்துக் கொள்ளும் மொழிபெயர்ப்பாளர்கள் என்னளவில் கண்டனத்துக்குரியவர்கள்.
முன்பு, தமிழ்க் கவிஞர் ஒருவரின் கவிதைகளை நான் ஆங்கிலத் தில் மொழிபெயர்த்து அது நூல்வடிவம் பெறும் போக்கில் சம்பந் தப்பட்ட ஆங்கிலப் பதிப்பக ‘எடிட்டர்’ என் மொழிபெயர்ப்பு களை செம்மைப்படுத் துவதாகச் சொன்ன போது, நான் அதை ஏற்க மறுத்தேன். காரணம். அவருக்குத் தமிழே தெரியாது. அப்படியிருக்கும் போது அவர் எப்படி என்னுடைய மொழிபெயர்ப்புகளை செம்மைப்படுத்த முடியும்?
இப்படி, தனக்குத் தெரிந்த ஆங்கிலத்தின் அடிப்ப டையில் ஒரு மொழிபெயர்ப்பாளரின் ஆங்கிலத்தை மதிப்பழிக்க முயல்வோ ரும் உண்டு.
சிலர் கவிதை சார்ந்த, மொழிபெயர்ப்பு சார்ந்த உண்மை யான அக்கறையோடு மொழிபெயர்ப்பி லான குறைகளை எடுத்துச் சொன்னால் அதைக் கேட்டுக் கொள்வதில் எந்தத் தயக்கமும் ஒரு மொழிபெயர்ப்பாள ருக்கு இருக்க வேண்டியதில்லை.
ஆனால், பிழைகளைச் சுட்டிக்காட்டுவதில் பெரியமனிதத் தோரணை இருந்தால் அதற்கு சம்பந்தப்பட்டவர் தகுதியானவர் தானா என்று சரிபார்க்க வேண்டியது அவசியம்.
ஒரு முறை நுட்பமான கவிஞரொருவரின் கவிதையை மொழி பெயர்த்துப் பதிவேற்றியிருந்தேன். கவிஞரைப் பாராட்டும் வித மாய் ஒருவர் 'கவிஞரின் கவிதைகள் அதி உன்னதமானவை; அவற்றை மொழிபெயர்க்க முயல்வது அபத்தம். They are untranslatable' என்று ‘கமெண்ட்’ செய்திருந்தார். இத்தனை சிறப் பான கவிதையின் மகிமை தமிழறி யாத இலக்கிய ஆர்வலர்க ளுக்கும் தெரியவேண்டும் என்ற அவாவில்தான் மொழி பெயர்ப்பு முயற்சியை மேற்கொள்வதாகத் தெரிவித்து ’தனது கவிதையை மொழிபெயர்க்க வேண்டாமென்று கவிஞர் சொன்னால் நான் அதற்குக் கட்டுப்படுவேன்’ என்று அவருக்கு மறுமொழி அளித்தி ருந்தேன்.
தொழில்முறை மொழிபெயர்ப்பாளராக சில சமயம் வயிற்றுப் பிழைப்புக்காக சில மொழிபெயர்ப்பு வேலை களை – அ-புனைவுப் பிரதிகளை மொழி பெயர்க்கும் பணி _ ஒப்புக் கொள்ளும்போது, என்னுடைய மூலப் பிரதியை உங்கள் மொழி பெயர்ப்பில் மேம்படுத்தவும் என்று சில ‘பணம் கொடுக்கும் முதலாளிகள்’ அடிக் கோடிட்டுக் கூறுவதற்கு ‘அது என் வேலை யல்ல’ என்று மறுத்ததுண்டு.
உள்ளது உள்ளபடி மொழிபெயர்த்தல் – இதற்கு அர்த்தம் இரு மொழிகளிலும் உள்ள இலக்கண-இலக்கியார்த்த பிரத்யேகத் தன்மைகளைக் கணக்கி லெடுத்துக்கொள்ளாமல் மொழிபெயர்த் தல் என்பதல்ல. இந்தப் பிரத் யேகத் தன்மைகளைக் கணக்கில் எடுத்துக் கொண்டு, அதே சமயம் மூல கவிதை மொழியைக் கையாண்டி ருக்கும் விதத்தை யும் கணக்கில் எடுத்துக்கொண்டும் மொழி பெயர்ப்பதே. மூலப்பிரதியை மொழிபெயர்க்கும் போது ஒரேயடியாக, தன்னை இணை படைப்பாளி யாகக் கருதிக் கொண்டு மொழிபெயர்ப்பாளர் செயல் படுவது எந்தவிதத்திலும் சரியல்ல.
அதுவும், நவீன தமிழ்க்கவிதையைப் பொறுத்தவரை கவிஞர்கள் மொழியை, வார்த்தைகளை மிகுந்த கவனத் தோடு கையாள்கி றார்கள்; வரிசைப்படுத்துகிறார்கள்; பொருள்படுத்துகிறார்கள். பழைய ‘விக்டோ ரியன் ஆங்கில’த்தையே அடிப்படையாகக் கொண்டு இந்தக் கவிதைகளை மொழிபெயர்ப்பது அபத்தமாக இருக்கும் என்பதோடு இந்தக் கவிதைகளுக்கு எந்த வகையிலும் நியாயம் சேர்ப்பதாகாது.
ஆங்கிலத்தில் எழுதப்படும் நவீன கவிதைகளின் மொழி யும் விக்டோரியன் காலத்து ஆங்கில மொழியும் ஒன்றல்ல. மேலும், ஒரு மொழியின் இலக்கணத்தை அறிந்துகொள்ள அந்த மொழி யின் கவிதைகளைப் படிக்கவேண்டிய தேவையில்லை.
இலக்கணப்பிழைகளோடு எழுதப்படுவதுதான் கவிதைக்கு அழகு என்பதல்ல என் வாதம். ஆனால், கவிஞருக்கு, நவீன கவிஞருக்கு மொழி குறித்த உள் ளார்ந்த பிரக்ஞை இருக்கவே செய்கிறது. ஒருமை, பன்மை முதலான குழப்பங்கள் கவிதையில் தெரியா மல் நடைபெற வழியுண்டு. அதேயளவு, பிரக்ஞாபூர்வ மாகவே அவை ஒரு கவிதையில் இடம்பெறவும் வழியுண்டு.
ஆங்கில மொழிபெயர்ப்பில் இலக்கண சுத்தமான ஆங்கிலத்தை, ஆங்கில வார்த்தை, வாக்கியக் கட்ட மைப்புகளைப் பயன்படுத்து வதுதான் மேலான மொழிபெயர்ப்பு என்ற பார்வையை முன்வைப் பவர்களின் மொழிபெயர்ப்பில் மூல மொழியில் கவிஞர் பிரக்ஞா பூர்வமாக மேற்கொண்ட இந்த இலக்கணம் மீறிய வார்த்தை, வாக்கியக் கட்டமைப்புகள், பயன் பாடுகள் காணாமல் போய் விடும் வாய்ப்புகளே அதிகம்.
உதாரணத்திற்கு ’வருகிறேன் கொண்டு’ என்று கவிஞர் (பிரம்ம ராஜனின் ’பிரயாணத்திலிருந்து ஒரு கடிதம்’ கவிதை) பயன் படுத்தியிருப்பதில் ’ நான் கொண்ட வைகளை (அனுபவங் கொண்டவைகளை, உள்வாங் கிக் கொண்டவைகளை, எடுத்துக் கொண்டுவருகி றேன் – அனுபவங்கொண்டு, உள்வாங்கிக் கொண்டு, வருகிறேன் – எடுத்துக் கொண்டுவருகிறேன் என்ற அர்த்தங்கள் கூடுதல் துலக்கம் பெற வழியுண்டு. இதை இலக்கண சுத்தமாக கொண்டுவருகிறேன் என்ற பொருளில் I WILL BRING என்று மொழிபெயர்ப்ப தில் அந்த நுட்பங்கள் காணாமல்போய் விடுகின்றன. இதற்கு மொழிபெயர்ப்பு சற்று சிக்கலாகத்தான் அமையும். I WILL COME BRINGING, COME I WILL, BRINGING சரியல்ல.
ஒரு கவிதையின் முழுவாசிப்பில் வருகிறேன் கொண்டு எதைக் குறிக்கிறது என்று பார்த்து அதற்கேற்ப ஆங்கில வார்த்தைகளைத் தெரிவு செய்து வரிசைப்படுத்த வேண் டும்.
//மஞ்சளால் நிரம்பி வழியும்
காலைநேரத்தின் பாதைகளில்
தூரத்து மெல்லிய மெலோடி இசையொன்றுடன்
தன் வீட்டின் முகடுகளை பற்றி
சிறிதும் அலட்டிக்கொள்ளாத சிலந்திகள்
இரு புறங்களும்
குறுக்குமறுக்காக அலையாததால்
அமைதியாக இருக்கின்றது பாதை//
_ Ahamath M Sharif எழுதியுள்ள கவிதையின் ஆரம்ப வரிகள் இவை. கவிஞர் தன் மனதிலோடும் ஒருவகை முன்னுரிமைப் பிரக்ஞைப் படி ஒவ்வொன்றாக வரிசைப் படுத்துகிறார். இந்த முன்னுரிமை சார் வரிசையை ஆங்கில இலக்கணத்தை, மரபான ஆங்கிலக் கவிதை யைக் காரணங்காட்டி தனக்குத் தோன்றியவாறு மொழி பெயர்ப்பாளர் மாற்றுவது சரியில்லை என்றே தோன்றுகிறது.
இதற்கென மெனக்கெடுகிறவர்கள்தான் சீரிய மொழிபெயர்ப் பாளர்கள். மெனக்கெடவே மாட்டேன், குத்து மதிப்பாக கவிதை யைப் பொருள் கொண்டு, அந்தப் பொருளைக் குத்துமதிப்பாக பிரதிபலிக்கும் வார்த்தை களைப் பயன்படுத்தி சுத்தமான ஆங்கி லத்தில் மொழிபெயர்த் துத் தருவதே கவிஞருக்கும் இலக்கு மொழிக்கும் என் அளப்பரிய கொடை என்பதாக ஒரு மொழி பெயர்ப்பாளர் இயங்குதல் சரியல்ல.
உதாரணமாக மூலமொழியில் பாடபுத்தகம் (TEXT BOOK) என்றிருப் பது இலக்குமொழியில் TEXT (பிரதி) என்று தரப்படுதல் எப்படி சரியாகும்? இதுவே மேலான மொழிபெயர்ப்பு என்று திரும்பத் திரும்ப சிலரைக் கருத்துரைக்கவைக்கும் உத்தியைக் கையாண்டு சிலர் சாதிக்கப் பார்ப்பதும் நடக்கிறது. என்னளவில் இது சம்பந்தப்பட்ட கவிஞருக்கு இழைக்கப்படும் அநீதி.
ஒரே கவிதையை ஒன்றுக்கு மேற்பட்ட மொழி பெயர்ப்பாளர்கள் மொழிபெயர்க்கும் போது அவர்கள் தெரிவு செய்யும் வார்த்தை கள் வேறுவேறாக இருக்கும் வாய்ப்புகளே அதிகம்.
ஒரு கவிதையை ஒரு மொழி பெயர்ப்பாளரே இருமுறை மொழி பெயர்க்கும் போதுகூட இதுவே நேரும். அதே சமயம், வேறுவேறு வார்த்தை களைப் பயன்படுத்தி யிருந்தாலும் கவிதையின் பொருள் – நேரிடை யானதோ, பூடகமானதோ – அது மொழி பெயர்ப்பாள ரின் வாசகப்பிரதியாகவே இருந்தாலும் கூட (அதா வது, கவிஞரிடம் அவருடைய கவிதையின் பொருளைக் கேட்டு மொழிபெயர்க்காத போதும்) ஒரேயடியாக அர்த்தம் மாறிவிடலா காது.
அதேபோல், மூலமொழியில் பூடகமாக எழுதப் பட்டிருக்கும் கவிதை இலக்குமொழியில், அதாவது ஆங்கிலத்தில் ‘பொழிப் புரை’த்தன்மையோடு மொழி பெயர்க்கப்பட லாகாது.
A BOOK OF VERSE என்ற உமர் கய்யாம் கவிதையின் வரியை (ஆங்கி லத்தில் படித்த வரியை) கையில் கம்பன் கவியுண்டு என்று தமிழில் படிக்க நேர்ந்த போது கம்பன் மீதும் மொழிபெயர்ப்பாளர் கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை மீதும் மிகுந்த மரியா தையும் அபிமானமும் இருந்தாலும் என் கையில் கம்பன் கவிதைதான் இருக்கவேண்டும் என்று மொழிபெயர்ப்பாளர் எப்படி தீர்மானிக் கலாம் என்று கோபம் வந்தது எனக்கு.
ஒரு கவிஞருக்கு இலக்குமொழி (இங்கே ஆங்கிலம்) தெரியாததால் அவருடைய பிரதியை எப்படிவேண்டுமானாலும் மொழி பெயர்த்துவைக்கலாம் என்ற மனப் போக்கு ஒரு மொழிபெயர்ப் பாளருக்கு இருக்க லாகாது.

கவிஞர் மொழிபெயர்ப்பாளரை நம்பி தனது கவிதையை மொழி பெயர்க்க அவருக்கு அனுமதி தருகிறார். அந்த நம்பிக்கையை மொழிபெயர்ப்பாளர் காப்பாற்ற வேண்டும்.
தனது கவிதை சரியாக மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறதா என்று சரிபார்க்க கவிஞர் ஆங்கிலம் தெரிந்த வேறு சிலரை நாடும் போது அவர்களும் ஆங்கிலம் தெரிந்ததால் தம்மை கவிஞரைக் காட்டிலும் உயர்வானவராக பாவித்து ஆளுக்கொரு கருத்து ரைக்க வாய்ப்பி ருக்கிறது.
ஆங்கிலம் தெரிந்த ஒரே காரணத்தாலேயே தமிழ்-ஆங்கில மொழிபெயர்ப்பின் தரத்தைப் பேசத் தகுதியுடைய வர்கள் என்று நினைப்பவர்களும் இருக்கிறார்கள்.

அதே போல், ஒரு படைப்பாளியை மொழிபெயர்ப்பதா லேயே அந்தப் படைப்பின் இணை-படைப்பாளியாகவும், படைப்பாளி யை விட உயர்ந்த வராகவும் தம்மை பாவித்துக்கொள்ளும் மொழி பெயர்ப்பாளர்களும் இருக்கிறார்கள். இரண்டுமே சரியல்ல.
எனவே, இத்தகைய இக்கட்டுகளுக்கு ஆளாக்காமல் கவிஞருடைய WRITERLY TEXT(எழுத்தாளர் பிரதிக்கு முடிந்தவரை மொழிநடையிலும் அர்த்தாக்கத் திலும் மொழிபெயர்ப்பாளரின் வாசகப்பிரதி READERLY TEXT) ஒத்திருக்கும்படியாக மொழிபெயர்ப்பு அமைவதே தனது கவிதையை மொழிபெயர்க்க முழுமனதோடு அனுமதியளிக்கும் கவிஞருக்கு மொழிபெயர்ப்பாளர் செய்யக் கூடிய குறைந்தபட்ச நன்றி நவிலல்; பதில்மரியாதை.
இதன் காரணமாகவே நான் மொழிபெயர்க்கும் கவிஞர்கள் எனக்கு நன்றி தெரிவிக்கும்போது எனக்கு உண்மை யிலேயே மிகவும் தர்மசங்கடமாக இருக்கிறது.
ஏனெனில், அப்பழுக்கற்றதென்று அடித்துச்சொல்லவியலாத என்னுடைய மொழி பெயர்ப்புக்குத் தங்களு டைய கவிதைகளை அவர்கள் மனமுவந்து தருவதற்காக அவர்களுக்கு நான்தான் நன்றி சொல்லவேண்டும். அதுவே நேர்மையும் நியாயமும்.
//2020, MAY 3 - மீள்பதிவு//

Friday, May 1, 2026

அப்பால்….. ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 அப்பால்…..

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)

’கடவுளையே கதிகலங்கச்செய்துவிட்டது பார் கொரோனா’ என்று கெக்கலிப்பார் சிலர்.
’கடவுளே கொரோனா’ என்று கும்பிடுவார் சிலர்.
கண்பொத்தி யுள்ளே பூஞ்சையாய் ஒடுங்கிக் கிடக்கிறார் பார்’ என்பார் சிலர்.
’கணக்கற்றோரின் கனவுகளையும் கவலைகளையும்
சுமந்து சுமந்து களைத்துப்போயிருப்பார்
கொஞ்சம் களைப்பாற்றிக்கொள்ளட்டும்’ என்று
கதவடைத்திருக்கும் கோயிலின் முன் நின்று
கன்னத்தில் போட்டுக்கொண்டே வாஞ்சையோடுசொல்லிக்கொள்வார் சிலர்.
’Collective Spirit இன் முழுமையான அர்த்தத்தைப் புரிந்துகொள்ள கிடைத்த அரிய பெரிய வாய்ப்பு’
என்பார் சிலர்.
’விலங்குகளுக்கும் பறவைகளுக்குமான
விடுமுறை’ யென்பார் சிலர்.
’மனிதனின் தான் என்ற அகங்காரம் குறையவும்
திமிர் அடங்கவும்
தீ நுண்மி உதவினால் போதும்’ என்பார் சிலர்.
’உதவுமா’ என்பார் சிலர்;
’போதுமா’ என்பார் சிலர்.
’வீதிகளெல்லாம் எத்தனை சுத்தமாயிருக்கின்றன’
என்பார் சிலர்.
’மீதி நாட்களிலும் இப்படி வைத்திருந்தால் என்ன’
என்று காட்டமாய் விமர்சிப்பார் சிலர்.
முகத்திற்கான 'மாஸ்க்' தெருவின் அந்த முனைக் கடையில் பதினைந்து ரூபாயும்
இந்த முனையில் முப்பது ரூபாயும் விற்பதைப் பார்த்து
'அது அத்தியாவசியப் பொருளா இல்லையாவென
யாரிடம் கேட்க' என்று அலுத்துக்கொள்வார் சிலர்.
’இப்பொழுது உணவுக்கு வழியேயில்லையே’
என்று அழுதிருப்பார் சிலர்.
'இப்போது கிடைக்கும் உணவு எப்போதும் கிடைத்தால் எத்தனை நன்றாயிருக்கும்'
என்று நினைத்துக்கொள்வார் சிலர்.
இன்னும் ஒரு வாரத்தில் கடையைத் திறந்துவிட லாம் என்று நிம்மதிப் பெருமூச்செறிவார் சிலர்.
திறந்தபின் எதிர்கொள்ளவேண்டியவைகளை எண்ணி வருந்தியிருப்பார் சிலர்.
’இந்த கோர நாட்களில் கவிதையெழுதுதல்
சரியா தவறா’ என்று கேள்வியெழுப்புவார் சிலர்;
குற்றவுணர்வுகொள்வார் சிலர்..
’கட்டாயமாக எழுதவேண்டும்’ என்று
உறுதியெடுத்துக்கொள்வார் சிலர்…..
மனிதவோட்டத்தைக் கட்டுப்படுத்தலாம் தீநுண்மி.....
அவர் மனவோட்டப் புதிர்வட்டப்பாதைகள் என்றேனும் தட்டுப்படுமோ அதற்கு?.

//*கொரோனா காலகட்டக் கவிதை
2020 APRIL 19 - மீள்பதிவு//