LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Monday, April 14, 2014

தந்திர வணிகம், அம்பலம் _ ரிஷியின் கவிதைகள்

    ரிஷியின் கவிதைகள் 

1.  தந்திர வணிகம்


அறிவார்த்தமாய் பேசுவதான பாவனையில்
விலாவரியாய் வர்ணித்துக்கொண்டே போகலாம்
OUT OF CONTEXT_இல் வரிகளைக் கடைவிரித்தால்
விற்பனை அமோகம் தான்.
அரசுப்பேருந்தில் பெண்ணை இடிப்பவனை சாடிக்கொண்டே
அவனை இடம்பெயர்த்துவிடும்
பேராண்மையாளர்களை நிறையப் பார்த்தாயிற்று.
பெண்ணுரிமை முழக்கமிட்டு கூடவே
பெண்ணைப் பொருளாக்கும் வழக்கத்தை வலியுறுத்தும்
ஒளி-ஒலி ஊடகங்களின் இரட்டைவேடம் அருவருப்பூட்டுகிறது.
அங்கங்கே ஒப்பனை கலைந்தொழுக
அம்பலமாகிவிடும் பொய்முகங்கள்.
பொங்கியெழவும் புறக்கணிக்கவுமாய் என்றுமுண்டு
அற்பத்தனங்கள் அன்றாடம் அற்பப்பதர்கள் அனேகம்


4.   அம்பலம்

ஆரூடக்காரியல்ல நான்;
உளவியல்நிபுணரும் அல்ல தான்.
அது ஏதோ தெய்வசக்தி ஒன்றுமில்லை.
என்றாலும் சிலர் எதிரே வரும்போதே
அவர்கள் கேட்கவிருப்பதும்
அந்தக் கேள்விகளுக்குள் கரந்துகிடப்பதும்
தெளிவாகிவிடுகிறது!
காலை வைப்பதற்கு முன்பாகவே கண்வழியே
உணரக் கிடைக்கும் நீரைப்போல் எனலாமா?
வேண்டாம்- சின்னத்தனங்களுக்கும் கல்மிஷங்களுக்கும்
தண்ணீரை உவமையாக்குவது முறையல்ல.
குப்பைத்தொட்டி யிருக்குமிடத்தை நெருங்குகையிலேயே
குமட்டிக்கொண்டுவருவதைப்போல் என்று சொல்லலாமா?
துப்புரவுப் பணியாளர்களைக் கேவலப்படுத்துவதாய்
திரிக்கப்பட்டுவிடலாம். வேண்டாம்.
உள்ளுணர்வோ, பட்டறிவோ, காலமோ, கனிந்துவரும் ஞானமோ……
இன்னும் சில நாட்களில் விரியப்போகும் புத்தகத்தின்
நஞ்சுநிறை பத்திகள் அல்லது பக்கங்கள் இரண்டை
நன்றாகவே வாசிக்கமுடிகிறது என்னால் இன்றே!











0

No comments:

Post a Comment