LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Thursday, June 19, 2025

BOOKS BY ANAAMIKAA ALPHABETS.

 BOOKS BY

ANAAMIKAA ALPHABETS.

நூல்கள் வேண்டுவோர் தொடர்புகொள்ள: மொத்தமாக வாங்கினால் ரூ.500.

(உள்நாட்டுக் கொரியர் செலவு உட்பட

GPAY எண் 78455 76241






























பிரதி - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 பிரதி

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)


”எதற்கு ?
வேண்டாம் _
போதும்.”

உறவு முறிவின் அறுதிப்புள்ளியாய்
எழுத்தாளர் பிரதி;

கலவியின்பக் கிறக்கச்சிணுங்கலாய்
இருபதாயிரம் மைல்களுக்கப்பால்
சுயமைதுனஞ்செய்யும்
வாசகப்பிரதி;

கண்சிமிட்டிப் புன்சிரிக்கிறது
கவிதை.
கன்னங்களில் நீர் படிய.

ஓர் அதிசாதாரணக் கவிதையை அசாதாரணக் கவிதையாக்கும் வழிமுறைகள் சில…. 'ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 ஓர் அதிசாதாரணக் கவிதையை அசாதாரணக் கவிதையாக்கும் வழிமுறைகள் சில….

'ரிஷி’

(லதா ராமகிருஷ்ணன்)
...................................................................
தேவைப்படும் பொருட்கள்:
• கொஞ்சம் சாம்பிராணி
• நான்கைந்து ஊதுபத்திகள்
• எதிரிலிருப்பவர் முகம் தெளிவாகத் தெரியாத
அளவு நிழலார்ந்த பகுதி
• பின்னணியில் நிறைய இலைத்திரள்களுடனான பெரிய மரம் அல்லது நீண்டுகொண்டே போகும் கடற்கரை மணற்பரப்பு
கூடுதல் குறிப்புகள்:
மரம் பட்டுப்போய்க்கொண்டிருக்கும் நிலையில் உள்ளதாக இருந்தால் மிகவும் நல்லது.
அல்லது
கடற்கரை மணற்பரப்பில் ஒரு குறிப்பிட்ட தொலைவிற்குக் கண்ணெட்டும்படியாக காலடித்தடங்கள் தெரியவேண்டும் –
தெளிவாகவும், மங்கலாகவும், இரண்டும் கலந்தும்.
புரியாத மொழியில் ஒரு பாட்டு சன்னமாக ஒலித்துக்கொண்டிருக்கட்டும்.
(புரிந்த மொழி என்றால் ஒருவேளை அது உங்கள் கவிதையை விட மேம்பட்டதாகப் புலப்பட்டுவிட வழியுண்டு. எதற்கு வம்பு).
திடீர்திடீரென்று உங்கள் தோள்களில் சிறகுகள் முளைத்து நீங்கள் பறக்கவேண்டும் (பயப்படவேண்டாம். நிஜமாக அல்ல; காணொளித் தொழில்நுட்பத்தின் உதவியுடன்).
ஒரு விஷயத்தில் நீங்கள் வெகு கவனமாக இருக்கவேண்டும் _
தரையில் நின்றிருந்தாலும் சரி, அந்தரத்தில் மிதந்துகொண்டிருந்தாலும் சரி உங்கள் கண்கள் மட்டும் அரைக்கிறக்க ‘பாவ’த்தில் அண்ணாந்து பார்த்தபடியே இருக்கவேண்டும்.
ஒரு வரியை வாசித்தவுடன் அரங்கிலுள்ளோர் பக்கமாகப் பார்வையைச் சுழலவிடுவது பழைய கவியரங்க பாணி.
நீங்கள் ஒரு வரியை வாசித்துமுடித்தவுடன் கைகளைக் கோர்த்துக்கொண்டு தலைகுனிந்து மௌனமாயிருத்தல் வேண்டும்.
கைத்தட்டலுக்கான இடைவெளி பலவிதம் என்று இத்தனை வருடங்களாக வாசித்துக்கொண்டிருப் பவர்களுக்குத் தெரியாதா என்ன?
இவர்களில் சிலருக்கு இன்னும் சிலபலவும் தெரியும் என்பதுதான் இங்குள்ள சிக்கல்.
இலக்கியத்தின்பால் உள்ள மெய்யான அக்கறையோடு இருக்கும் அவர்களுக்கு
தன்னை மறந்த பாவத்தை முழுப் பிரக்ஞையோடு தாங்கி என்னதான் அழகிய ‘prop’களோடு நீங்கள் இயங்கினாலும்
உங்கள் கவிதையில் எந்த அசாதாரணக் கவித்துவமும் இல்லையென்பது உள்ளங்கை நெல்லிக்கனியாக விளங்கிவிடும்.
அதைப் பெரிதுபடுத்தி வெளியே சொல்லாமலிருக் கும்வரை அவர்களைப் பொருட்படுத்த வேண்டாம்.
சொன்னாலோ அதிசாதாரணம் என்பதில் உள்ள ’தி’, ’சா’வுக்கு பதிலாக வந்துவிட்ட அச்சுப்பிழை என்று கூறத் தெரிந்திருக்கவேண்டும் எப்போதும்.
அதைவிட எளிதாக _
இன்று இலக்கியவாதிகளிடையே பெருகிவரும் எதிர்மறை முத்திரைகளில் ஒன்றைக்
(வலதுசாரி, அதிகார வர்க்கம், சாதித்திமிர், ஃபாசிஸம், நார்ஸிஸம் அன்னபிற பிற பிற பிற….)
கொண்டு அவர்களுக்குக் கரும்புள்ளி செம்புள்ளி குத்திவிடத் தெரிந்திருந்தால் போதும்.

Tuesday, June 10, 2025

ஃபேஸ்புக் டைம்லைன் என்னும் நிலைக்கண்ணாடியும் நாடகமேடையும் - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 ஃபேஸ்புக் டைம்லைன் என்னும்

நிலைக்கண்ணாடியும்
நாடகமேடையும்

‘ரிஷி’

(லதா ராமகிருஷ்ணன்)


மிகை ஒப்பனை வரிகளின் உதவியுடன்
தன்னை அலங்கரித்துக்கொள்ள ஆரம்பித்தவர்
பெண்ணெனில் ஒரு பட்டாம்பூச்சியைத் தன் காதோரக் கூந்தலில் செருகிக்கொள்கிறார்
ஆணெனில் அதைத் தன் சட்டைப்பையில் சொருகிக்கொள்கிறார்.

பட்டாம்பூச்சி படபடவென சிறகுகளை பயத்தில் அடித்துக்கொள்வதைப் பார்த்து
ரத்தக்கண்ணீர் வடிப்பவர்
பெண்ணெனில் ஒரு சோகப்பாட்டு பாடுகிறார்.
ஆணெனில் கண்ணீரை அடக்கிக்கொள்ள உதடுகளும் தாடையும் இறுக
தலைகுனிந்து அமர்ந்தபடியிருக்கிறார்.

பெண்ணோ ஆணோ துயரத்திலாழ்ந்திருக்கும்போது தம் முகம் கோணலாகக்காணப்படவில்லையே என்ற கவலை இருவருக்குமே இருப்பது இயல்புதானே...

அந்த ஆணும் பெண்ணும் ஆளுக்கொரு கவிஞரை மறவாமல் இரண்டுநாட்களுக்கு ஒருமுறை நினைவுகூர்கிறார்கள்.
பெண் என்றால் ஆணையும் ஆண் என்றால் பெண்ணையும்
அதிகம் நினைவுகூர்வதும் இயல்புதானே.

நினைவுகூரப்படுபவர் அகில உலகம் அறிந்தவராக இருப்பதும் ஆறே ஆறு பேர் அறிந்தவராக இருப்பதும் அந்தந்த நேரத்துத் தேவையைப் பொறுத்தது.

நினைவுகூரப்படுபவர் நினைவுகூரப்படுவதாலேயே அதிகம் நினைவுகூரப்படுபவராகி அதற்கான நன்றியுணர்வில் நிர்க்கதியாகி நிற்கும் தோற்றத்தை நிலைக்கண்ணாடி பிரதிபலிக்க

தாம் ஏற்கும் பாத்திரம் அதுவேயாகிய நடை யுடை பாவனையுடன்
மேடையேறிச் செல்கிறார்.

மணியடிக்கிறது. மேலேறிச் செல்கிறது திரை.

காலவரையற்ற நாடகம் நடந்துகொண்டிருக்கிறது.

PEEPING TOMகளும் பூமிஜா(சீதா)ப் பிராட்டியும் - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 PEEPING TOMகளும்

பூமிஜா(சீதா)ப் பிராட்டியும்

‘ரிஷி’

(லதா ராமகிருஷ்ணன்)

இரவுபகலாய் இடையறாப் பட்டிமன்றங்கள் நடந்துகொண்டிருக்கின்றன.
ஐந்து நட்சத்திர விடுதிகளின் அகன்ற கூடங்களில் ஒன்றில்
ஆரண்யமாய் ஆங்காங்கே ‘பேப்பர் மஷாய்’ மரங்கள் நட்டுக் கட்டமைக்கப்பட்ட அரங்கொன்றில்
ஆன்றோரென அறியப்பட்டோர் அவைகளில்
அடுக்குமாடிக்கட்டிடத்தின் மொட்டைமாடிப் பந்தலில்
இலக்கியப் பெருமான்களுக்கிடையே
இணையவழிகளில் _
இன்னும்
ஆர்ட்டிக் அண்டார்ட்டிக் துருவப் பிரதேசங்களிலும்
புவியின் தென் அரைக்கோளப்பிரதேசங்களின்
பெங்குவின்களைப் பார்வையாளர்களாகக் கொண்டும்
‘சீதை இராவணனோடு உறவுகொண்டாளா?
கொண்டாள்!
கொண்டாளே !!
கைத்தட்டல் விண்ணைப் பிளந்தது
[அது பதிவு செய்யப்பட்ட கைத்தட்டல் என்பது
பாவம் நிறைய பேருக்குத் தெரியாது]
தன்மானத்திற்கு இழுக்கு என்றானபோது
காதலித்த ராமனையே உதறிவிட்டுச்சென்றவள்
கடத்தியவனையா வரிப்பாள்?
விஜய் Zee Sun இன்னும் நான் பார்க்காத சேனல்களின்
மெகாத்தொடர்களில்
நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய்
மாமியார் நாத்தனார், முதலாளி தொழிலாளி
மூத்த அண்ணன் இளைய அண்ணன்
வில்லியும் நல்லவளும்
ஐந்து வயதுச் சிறுமியும்
அடுத்த நாள் பிறக்கப்போகும் குறைப்பிரசவக் குழந்தையும்
மாறி மாறிச் செய்யும்
வகைவகையான சத்தியங்கள்
சடங்குகள் குறிபார்த்தல், சகுனம் பார்த்தல்
இத்தியாதிகளுக்கிடையிலிருந்து ஒரு பூக்குழியைத்
தேர்ந்தெடுத்து
கோயில் வாசலில் பரத்தி
அதில் நடந்து தன் பத்தினித்தனத்தை
நிரூபிக்கச் சொல்லும்
மெத்தப் படித்தவர்கள் மிட்டா மிராசுதாரர்கள்
மெகாத்தொடர் மாண்பாளர்களை
மெல்ல ஒரு பார்வை பார்த்து
மேலே நடக்கிறாள் பூமிஜா.
மனம்நிறை மணாளனுக்கு நிரூபிக்கவோ
மக்களுக்குப் புரியவைக்கவோ
-ஒரு முறை நெருப்பில் இறங்கி
மீண்டாயிற்று…..
முறைவைத்து மனம்பிளந்து பார்த்தவர்களாய்
மறுபடி மறுபடி
கடத்தியவனை மருவியவளாய்க்
காட்ட முனையும் குணக்கேடர்களுக்காய்
அவள் வனத்தில் தீ மூட்டினால்
அது தன்னை மட்டுமல்லாமல்
அன்னை நெருப்பையே அவமதிப்பதாகும்.
அவள் அறிவாள்தானே?
அடுத்த விளம்பரதாரர் யார் மாட்டுவார் என்று
ஆலோசித்தபடி
அய்யனார் சிலையின் காலடியில்
வில்லனும் நல்லவனும் சேர்ந்து
மெகாத்தொடர் கதாபாத்திரங்களில் ஒருவரை
(குத்துமதிப்பாக அந்தத் தங்கையாக இருக்கலாம்
அல்லது தாத்தாவாக இருக்கலாம்)
கொலைசெய்வது குறித்து காரசாரமாக
கீழ்ஸ்தாயியில் வாக்குவாதம் நடத்திக்கொண்டிருக்கும்
அரைத்தமாவுக் காட்சிகளைக்
கச்சிதமாய் வழித்தெடுத்துமுடித்துவிட்டு
வெளியேறும்போது படக்குழுவினர்
கன்னத்தில் போட்டுக்கொண்டபடி
அல்லது கிண்டலாய்ச் சிரித்தபடி
'பொறுப்புத்துறப்பு' என்ற நொறுக்குத்தீனியை
சுவைக்கத்தொடங்கியதைக் கண்டு
துன்பம் வரும் வேளையிலே சிரிக்கப் பழகியவளாய்
புன்னகைக்கிறாள் பூமிஜா.

திரௌபதியின் துகிலும் துரியோதனத் தூரிகைகளும் - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

திரௌபதியின் துகிலும்

துரியோதனத் தூரிகைகளும்


‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)


எத்தனையெத்தனை அவலங்கள்
அலைச்சல்கள்
அஞ்ஞாதவாசங்கள்
மதிப்பழிப்புகள் மரணங்கள்
மரத்துப்போக மறுக்கும் உணர்வுகள் கருவறுக்க
மடிந்துகிடந்தவர்கள் மேல் கால்படாமல்
கனத்த மனதோடு பார்த்துப்பார்த்து
நடந்துவந்த திரௌபதி
ஆங்கே யொரு கருங்கல்லில்
சாக்கட்டியால் வரையப்பட்டிருந்த
கோட்டோவியத்தில்
தன் கைகள் அண்ணாந்து
அபயம் தேடி உயர்ந்திருக்க
துகில் மறைக்காத மார்பகங்கள்
தொங்கிக்கொண்டிருக்கக் கண்டாள்
நிலைகுலைந்து குனிந்து பார்த்துக்கொண்டாள்
மார்பை மறைத்திருந்தது துகில்.
சுற்றுமுற்றும் பார்த்தாள்.
அது அரசவையில்லை.
கீழே சிதறிக்கிடந்த மனித உடலங்களை
யானை குதிரைச் சடலங்களைப்
பார்த்தாள்.
கண்ணீர் வழியத் தொடங்கியது.
தம் மக்கள் யார் மானத்தைக் காப்பாற்ற
உயிர்த்தியாகம் செய்தனரோ
அந்த மானம் அதோ கப்பலேற்றப்
பட்டிருக்கிறது.
தீட்டப்பட்டிருந்த கோடுகளின் வளைவும்
நெளிவும்
தீர்க்கமான நீட்டலும்
ஓவியனின் கைநேர்த்திக்குக் கட்டியங்கூறின.
ஆனாலுமென்ன
அவற்றில் உள்ளார்ந்து உணரக்கிடைத்த ஆணாதிக்கவெறி்
அவள் ஆன்மாவைப் பிளந்து பெருக்கிய வலி
யோலம் எட்டா வெளியில்
அதேபோல்
இன்னும் சில பாரிய ஓவியங்களுக்காகத்
தயாராகிக்கொண்டிருக்கும்
தூரிகைகள்.
1