LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Wednesday, June 27, 2012

எனக்குப்_பிடித்த_என்_கவிதைகள்_2

எனக்குப் பிடித்த என் கவிதைகள் - 2

- ரிஷி

[*முதல் தொகுப்பு-அலைமுகம்]




30.அச்சும் பண்டமும்
சிந்துபாத் பயணம்
ஆக்டோபஸ் முதுகில்.

ஆயிரங் கால்கள் வருடுவதாயறைந்தபடி.

உயிரருகும்.

பலமனைத்தும் திரட்டி சில கால் பிரித்தெடுக்க

இறுக்கும் பிறசில.

அடி முதல்  முடி வரை படர் சாட்டை வரி

வடுவாயும், கசிந்தபடியும்...

சிரசில் பதிந்தொரு கால் நிரந்தரமாய்.

கண் தின்னும் மண்.

சூரிய சந்திரன் சதுரமா செவ்வகமா?

சரியாகாது நாணலாகிவிட்டதென்று

முதுகெலும்பைச் சொல்லுவதும்.

ஆற்றுப்போக்கில் ஆங்காங்குறும் சுமைதாங்கிகளில்

சற்றே சாய்ந்து

சிரம பரிகாரம் செய்யப்போக

தாங்கிக் கல் தாவி

முதுகேறியது.

ஆக்டோபஸின் மேல்

ஆக்டோபஸ்...

மேலின் மேலின் மேலின்....


31. மொழித்துவம்

நீலம் சிகப்பு மஞ்சள் பச்சை

கருப்பு வெளுப்பு மா பூ பலா

கண் மருந்து பால் ஈ புறா

அது இது எது எது

தினம் கணம் நிரந்தரம்

மரணம்

ஜனனம் புனரபி

ஸாம்ஸன் தலைமுடி

தகர்தூணுறு[ரு] வரு[று]

தேவ தரிசனம்!

தந்தீச்சுட ரொளிர்

தேஜோமயம்!

நிர்விசாரம் பெருகும்

விரிவெளிக் கதவருகாய்

இருகைப்புலிரோஜா சிரித்திருக்க

காற்றுக்கடிகாரம் கூறும்

நாளை படித்தாயிற்றென!

நிலவூறி யினிக்கும் நா!

நதியெல்லாம் நெஞ்சுள்ளாய்!

நட்டதழிந்தோட ஓட

விட்ட இடம் விடியும்!

சிறுகாற் பெருவளத்தான் ஆட்சியில்

செக்குமாடுயர்த்திய சிறகெங்கும்

பட்டொளி வீசிப் பறக்கும் காட்சி

காணப் போதுமோ கண்கோடி?!


[சமர்ப்பணம்: குட்டித்தோழனுக்கு]



32. மனவந்தனம்


பாதிக்கிணற்றின் மேல் அந்தராத்மா பேதலித்த நாழி

காலடி பதிந்த மரப்பாலமாய்

காலந்தப்பாது வந்தடைந்ததுன் வாழ்த்துமடல்!

சாகரங் கடந்த அகர இகரங்களில்

சஞ்சீவிப்புதர்கள் செழித்திருந்தன பக்கங்களில்.

எழுதிய, எழுத்துக்கோர்த்த ஏராளங் கூடு பாய்ந்து

காடு மலை கடல் கடந்து

வரியிடை வரி வலம்புரிக்காய் மீண்டும் மீண் டும்

முழுகி மூச்சுத்திணறி நீயலைந்த கதை யுரைக்கும்

மெய் யுயிரெழுத்துக்கள் மிக நிறைய.

கடந்து வந்த பகலிரவுகளில் அதிர்ந்துதிர்ந்தது

எண்ணிறந்தது போக

இன்னமும் கனிந்த சுடராய் கூடவரும் நீ.

இரண்டனுப்பி யென்னைப் புரந்த காருண்யம்

எண்ண எண்ண

மயிலிறகின் சுமையேறிய வண்ணம்.

அச்சிறும் போல்...

பாரந் தாங்கலாற்றாமல் பதில் மரியாதை செய்யப்

பதறும் மனது.

வேறென்ன தரலாகும் _

ஒரு கற்றுக்குட்டிக் கவிதையைத் தவிர?

[சமர்ப்பணம்: தேவிக்கு]                                                                           


33. பதிலாகும் கேள்விகள்


எங்கிருந்து பிராணவாயு இந்தக் கண்ணாடிக்

கூண்டுக்குள்

எனக் கேட்பவர்களுக்கு

எப்படிப் புரியவைப்பது

வானம் நாற்புறமுமான திறந்தவெளி அரங்கிது

என்பதை?


அதிரும் செவிப்பறைகள் வேறாக

உள்மரச் சலசலப்புகளை உணர்த்துவதெவ்வாறு?


மாறும் தாகத்து மனிதர்களுக்கு

என் நதிநீர் கானலாகக் காண்பதில்

என்ன வியப்பு?


தனிமைச்சிறைத் தாழ்வாரங்களாய் தட்டுப்படுவது

உப்பரிகையிலிருந்து தாழப் பார்க்க

உன்னத ராஜா பவனிவரும் உற்சவச் சாலையாக

தெளிவதென்றுமக்கு?


நான் நீயாக நீ நானாக

நிர்பந்தம் யார் ஆக்கியது?


நியமங்கள் ஒன்றாய் ஏன்

நிறம் பலவாயிருக்க...?



34. ஆகுதி


மனதி ஒளிப்பாய்ச்சலுக்கு முன்

முட்டி போட்டு நடக்கும் உடல்

ஓடான மாடாக நுரைதள்ள

உட்பரவும் காட்டுத்தீயில்

வெளியெல்லாம் வெளிச்சக்காளியாக்கி

வியப்பும் பயமும் வார்க்கும்

ஓங்கி உலகளந்த ஜ்வாலையாய்

விரிதலையாடச் சிரித்தது அந்த வரி:

தீக்குள் விரல் வைக்கும் சிரமம் தரலாகாதென்றா

எனக்குள் தீயை வைத்தாய் நந்தலாலா?!”

வரித்துச் சேர்த்தணைகும் பெருவிருப்பு

நெருப்பைப் படரும் பெருநெருப்பாய்...

ஆள்விழுங்கப் பார்க்கும் அடர்வெப்பம்.

சுவர் சித்திர படிமம் துரத்த

தூரம் போகிறேன்

உருக்குலையாமல் உலை புகுந்து மீளும்

தருணம் பார்த்தவாறு.



குறுங்கவிதைகள்

35.விடுகவிதை


ஒன்றிரண்டுமூன்றுநான்கு

ஐந்தொன்பதிருபதாங்கு

முக்கோடி முப்பத்து பூஜ்யம் சூழ

மூவேழுலகும் எட்டு மாறும்

வகுத்துப்பெருக்கிகூட்டிக்கழி

என்கணக்காகுமென்வழி



36. காணிநிலந் தாண்டி...


ஆறு கால்களும் எட்டு கைகளும் இருந்தால் போதும்

வாழ்வை நடந்து கைக்கொண்டு விட ஏலும் போலும்.

மறவாமல் இரு பாதை பிரியவேண்டும் பார்வை.

கண்ணிரண்டு கூட வேண்டும் பின்மண்டையில்.

விரல்கள் அதிகமாக, வாரக் கூடுமோ காலத்துகள்களை?

இரவல் மனம் இருபது  வேண்டும், ஒரு நாள்

இருபத்திநானூறு மணிநேரம் வேண்டும்...

இன்னும்.... இன்னென்னவும்... இன்னும்...



37.அடையாளம்


இந்தக் கைக்கடிகாரம்

நிச்சயம் என்னுடையதுதான்.

இன்றை நேற்றாக்கி நிற்கிறது.

என்றாலும், ஓரிரண்டு நிமிடங்கள்

அதிகமாயும்,

நேரங்காட்டுகிறது

மிகச்சரியாய்!

38.பறை

நானே வாள்சுழற்றி

நானே விழுந்துபட்டு

நானே அசோக பௌத்தனாய்

ஆங்கில மொகலரசர்களுமாகி

கால் மாற்றி நிற்பதாய் மாறி மாறி

வெற்றி தோல்வி பெற்றும் பெறாமலும்

வளரும் பெரும்போர் ஆளரவமற்று.

காற்றோடு கடிதமும் வீசுஜன்னல் களமாக.





39.தோற்றம்


காற்று வீசும்

சூரியவொளி வரும்.

மழைவெயிலுக்கு நிழலாய்

மேற்கூரை.

மனிதர்களுமுண்டு

சுற்றுப்புறத்தில்....

கதவும் சாளரமும் பக்கச்சுவர்களும்

தரைப்பரப்புமாய் _

வீடு போலவே இருக்கும் சிறை.













No comments:

Post a Comment