LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Tuesday, June 30, 2026

திரைப்படம், தொலைக் காட்சி சீரியல், சமூகம் - லதா ராமகிருஷ்ணன்

 திரைப்படம், தொலைக் காட்சி சீரியல், சமூகம்

 


லதா ராமகிருஷ்ணன்

June 29, 2025 திண்ணை இணைய இதழில் வெளியானது

 

https://puthu.thinnai.com/.../%e0%ae%9a%e0%af%8a%e0%ae.../

..........................................................................................................................

இன்று ‘THUGLIFE’ படம் குறித்து (ஆங்கிலத்தில் பெயர் வைத்தாலே படத்திற்கு ஓர் உயர்தர அந்தஸ்து ஏற்பட்டுவிடு கிறது என்ற காலங் காலமான நம்பிக்கை போலும்) காரசாரமாக விவாதம் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது குறிப்பாக, இலக்கியப் படைப்பாளிகள் – வாசகர்கள் மத்தியில். இப்படி எந்தவொரு குறிப்பிடத்தக்க எழுத்தாக்கமாவது திரை உலக முன்னணி மனிதர்களால் பொதுவெளி யில் பேசப்பட்டதாகத் தெரிய வில்லை. என்றுமே.

கமலஹாஸன் – மணிரத்தினம் combo வில் உருவான படம் என்பதாலேயே ஏன் அதற்கான உங்கள் எதிர் பார்ப்பை அதிகப்படுத்தி கொள்கிறீர்கள் என்ற வாதத்தை Pro- கமல ஹாசன், Pro – மணிரத்தினம் நபர்கள் முன் வைப்பது அபத்தமாக இருக்கிறது. 37 வருடங்களுக்குப் பிறகு இணைந்தும் நாயகன் பட பாணியிலேயே, அதே கதைக்கருவைத் தான் மீண்டும் கையாள வேண்டுமா என்ற கேள்வி நியாயம்தானே.

ஆனால், யோசித்துப் பார்த்தால், தமிழ் சினிமாவின் இன்றைய ‘ஜாம்பவான்’களாகப் பார்க்கப்படுபவர்கள் இத்தனை வருடங் களில் கொஞ்சமாவது சமூகப்பிரக்ஞையோடு தங்கள் கதையைப் பயன்படுத்தியிருக் கிறார்களா என்பது கேள்விக்குறியே. சமூகப் பிரக்ஞை, மக்கள் மேல் அக்கறை என்பதெல்லாம் இவர்களுக்கு பணம் பண்ணுவதற்கான ’பாவ்லா’வாகவே பயன்பட்டி ருக்கிறது என்பதே அவலமான உண்மை. பொய்யான சமூகப்பிரக்ஞை, மனிதநேயம், பெண்ணியவாதம் என்று இவர்கள் முன்வைக்கும் சித்தரிப்புகள் பெரும் பாலும் நேரெதிரான விளைவுகளையே சமூகத்தில் ஏற்படுத்துகின்றன.

முன்பெல்லாம் சினிமாவில் நம்பியார், அசோகன் போன் றவர்கள் முரட்டுத்தோற்றத்தோடு கரகர குரல்களோடு வந்து கெட்டது செய்து கதாநாயகனிடம் அடிவாங்கிக் கொள்வார்கள். இப்போதோ கயவாளிகளாக, குடிகாரர்க ளாக கதாநாயகர்களே வந்து ஆட்டம்போடுகிறார் கள். இவ்விதமாய் சமூக சீர்கேடுகள் romanticize செய்யப்படு கின்றன.

திரைப்படங்களிலாகட்டும், தொலைக்காட்சித் தொடர் களிலாகட்டும் காதலும் கல்யாணமுமே இளைய தலைமுறையினரின் முதலும் முடிவுமான கனவும் இலட்சியமுமாகத் திரும்பத்திரும்பக் காட்டப்படு கின்றன.

பெண்ணை stalking செய்வது இன்றளவும் இயல்பான விஷயமாகவே சின்னத்திரை, பெரியதிரைகளிலெல் லாம் காட்டப்படுகிறது.

சினிமாவிலாவது 2 மணி நேரங்களோடு முடிந்துவிடுகிறது ஆனால் தொலைக் காட்சி மெகா தொடர்கள் வருடக்கணக்காக நீண்டுகொண்டேபோகின்றன. புகைபிடிக்கும் காட்சி வந்தால் ’புகை பிடித்தல் உடம்புக்கு கெடுதி’ என்ற நுண் எழுத்துக்கள் திரையில் மின்னல் வேகத்தில் ஓடி மறையும். மது அருந்தும் காட்சி வந்தால் ’குடி குடியைக் கெடுக்கும் என்ற நுண் வரி மின்னல்கீற்றாய் திரையின் அடிப்பக்கம் ஓடி மறையும். ஆனால், அந்தக் காட்சிகள் வந்தே தீரும்.

மற்றபடி, தினசரி அரைமணி நேரம் (அதில் கால்மணி நேரம் அபத்த விளம்பரங் கள் அடக்கம்) வாழ்க்கையைப் பிரதிபலிக் கிறோம். என்ற பெயரில் அவர்கள் அள்ளித்தெளிக்கும் அபத்தக் காட்சிகளுக்கும் கருத்துக்களுக்கும் இது மாதிரியான எந்த எச்சரிக்கை வாசகங் களும் தரப்படுவதில்லை எப்படித் தருவார்கள்? முட்டாள்பெட்டி என்ற பெயருக்கேற்ப தானும் முட்டாளாய், பார்ப்பவர்களையும் முட்டாளாக்குவதே குறியாய் இந்தத் தொலைக்காட்சித் தொடர்கள் கட்டமைக்கப்படு கின்றன.

இரவு 12 மணிக்கு படுக்கச் செல்லும்போதும் பெண் கதாபாத்திரங் கள் முழு மேக்கப்பும், முக்கால் முதுகு தெரியும் பூவேலைப் பாட்டுச் சட்டையும், பட்டுப் புடவையும், பளபள உதட்டுச் சாயமு மாகக் காட்சியளிக்கிறார்கள்.

தங்கை அண்ணாவைக் கொல்ல சதிசெய்துகொண்டேயிருப் பாள். அண்ணி, நாத்தனாருடைய குழந்தையை எப்படியாவது கலைக்க அவளுக்கு காப்பியிலும், பாலிலும் எதையாவது கலந்துகொடுத்துகொண்டேயிருக்கிறாள். மருமகள், மாமியார் தடுக்கி விழ (அல்லதும் மாமியார் மருமகளைத் தடுக்கிவிழச் செய்ய) மாடிப்படிகளிலோ அல்லது வேறு எங்காவது எண்ணெ யைத் தாராளமாக ஊற்றிக்கொண்டேயிருக்கிறார். இப்படி எல்லாம் செய்யலாகாது என்று எந்த எச்சரிக்கை வாசகமாவது திரையில் ஓடுமா என்ன? ஓடவே ஓடாது.

இன்று பாலியல் வன்புணர்வுக் கொடுமை, ஆள்கடத்தல் என்று பட்டி தொட்டிகளிலெல்லாம் நடந்துகொண்டிருக்கிறது. பாலியல் வன்கொடுமைக்கான முக்கியக் காரணங்களுள் ஒன்று காணொ ளிகளில் அந்தக் காட்சிகளைப் பதிவுசெய்து சுற்றுக்கு விடுதல்; அந்தக் காட்சிகளை வைத்துக்கொண்டு சம்பந்தப்பட்ட பெண் களை மீண்டும் மீண்டும் தங்களுக்கும் தங்களுக்கு வேண்டியவர் களுக்கும் இணங்கச்செய்தல். இவையெல்லாம் முன்பும் நடந்திருக்கும். அப்போது சமூக ஊடகங்கள் இல்லாததால் அவையெல்லாம் வெளிச்சத்திற்கு வரவில்லை என்று வாதிட்டு என்ன பயன்? இப்போது இவற்றை தொலைக்காட்சித்தொடர்கள் சமூகப்பிரக்ஞையோடு பேசுவதாக ‘பாவ்லா’ செய்தபடி ஆள் கடத்தல், படுகொலைகளை விதவிதமாகவும், பாலியல் வன் புணர்வு குறித்து இலைமறைவு காய்மறைவாகவும் திரும்பத் திரும்ப சித்தரிக்கவேண்டிய  romanticize செய்யவேண்டிய தேவை யென்ன?

எந்த மதத்தையும் நிந்தனை செய்யலாகாது. ஆனால், தொலைக் காட்சி தொடர்களில் கோவில்களில் எல்லா விதமான சண்டை சச்சரவுகளும் சதி வலைகளும் இடம்பெறுவதாக திரும்பத் திரும்பச் சித்தரிக்கப்படுகின்றன அவ்வப்போது சில கதாபாத் திரங்கள் புர்கா அணிந்து வந்து சரி வேலையில் ஈடுபடுவதும் நடக்கிறது நல்லவேளை – கிறித்துவ மதம், பௌத்த மதம், சீக்கிய மதம், ஜைன மதம் போன்ற சில மதங்களை விட்டு வைத்திருக்கி றார்கள்.

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் வரும் ‘நினைத் தாலே இனிக்கும்’ என்ற தொடர் மாயமந்திரக் காட்சி கள், கோவில் திருவிழாவில் தீமிதித்தல் என்றும் ஒன்று விடாமல் காட்சிகள் பல – (கிராமத்துப் பார்வையாளர் களைக் குறிவைத்தும் இருக்கலாம்) காட்டப்படுகின்றன. பலப்பல மாதங்களாக இந்த மெகாத் தொடரை ஓட்டிக் கொண்டு காசு பார்ப்பவர்கள் திடீர் திடீரென்று திரை யில் ’நாங்கள் இந்த மூடநம்பிக்கைகளை ஊக்குவிக்க வில்லை’ என்று ஆகப்பெரும் சீர்திருத்தவாதிகளாக வாசகங்களை நூல் எழுத்துக்களில் அவசர அவசியமாக ஓட விடுவார்கள்.

என்றும் கிராமப்புறங்களிலும் கோவில்களிலும் வழிவழியாக நடந்தேறும் சடங்கு சம்பிரதாயங்களை யும் ’மூடநம்பிக்கைகள்’ என்ற சொற்றொடரில் வசதியாக உள்ளடக்கி விடுவார்கள் மூடநம்பிக்கைகள் என்று அவர்கள் பேசுகின்ற சடங்கு சம்பிர தாயங்களை தினசரி காண்பித்துக் காண்பித்து காசு சம்பாதிப்பார் கள்.

ஊர்த் தலைவர், ஊர்ப் பஞ்சாயத்தில் பிராது கொடுத்தல், காலில் விழுந்து மன்னிப்பு கேட்டல் என்ற சட்டத் திற்கு புறம்பான நடை முறைகளை திரும்பத் திரும்ப காண்பித்துக்கொண்டிருக்கும் மெகாத்தொடர்களே மிகுதியாய். இது எந்த வகை சமூக சீர்திருத் தத்தில் சேர்த்தி?

சில தொடர்களில் கூட்டுப் பாலியல் வன்புணர்வு காட்சி களையும் இலைமறைவு காய்மறைவாகக் காட்டத் தொடங்கிய போது அதற்கு எதிர்ப்பு கிளம்பி உரிய தணிக்கை அமைப்பு தலையிட்டு அதை தடுத்து நிறுத்தியதாகத் தெரிகிறது. ஆனால், வாய்ப்பு கிடைத்தால் அதை வைத்தும் காட்சிகள் வகைவகை யாக அமைத்து காசு சம்பாதிக்கத் தயங்கமாட்டார்கள் நம் தொலைக்காட்சி தொடர்க்காரர்கள்.

சமீப காலமாக இரவு நேரங்களில், ஏன், பகல் நேரங் களில் கூட நெடுஞ்சாலை களில் இருசக்கர வண்டிகளில் பந்தயங்கள் நடத்துகிறார்கள். இதனால் சாலைகளில் பயணிப்பவர்களுக்கு பெரும் இடைஞ்சல் ஏற்படுகிறது விபத்துகளுக்கான வாய்ப்புக ளும் அதிகரிக்கின்றன என்ற செய்திகள் அடிக்கடி வருகின்றன. ரீல்ஸ் போடவும் youtube இல் வீரபராக்கிரமச் செயலாகப் பதி வேற்றவும் இளைஞர்கள் இப்படிச் செய்கிறார்கள் என்றும், அவர்கள் கைது செய்யப்பட்டிருப்பதையும் சிலருக்கு காவல் துறையினர் அறிவுரை கூறி திருப்பியனுப்பியிருப்பதையும்,. சில விஷயத்தில் அவர்களுடைய பெற்றோர்களை அழைத்து அறிவுரை கூறி அயனுப்பியிருப்பதையும் செய்திகள் வாயிலாக அறிகிறோம். ஆக இத்தகைய பந்தயங்கள் சட்டத்திற்கு புறம்பானவை என்பதில் இருவேறு கருத்துக்கு இடமில்லை. ஆனால், சமீபத்தில் ஒரு தொலைக்காட்சித் தொடரில் ஆட்டோ ரிக்‌ஷா ஓட்டுநராக உள்ள கதாநாயகி ’சரி நான் பந்தயத்துக்குத் தயா’ர் என்று கூறுவதாக காட்சிய இடம்பெற்றுள்ளது. நிஜத்தில் இப்படி ஆட்டோரிக்‌ஷா பந்தயங்கள் நடை பெற்ற தில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதையும் பெண் ஆட்டோ ரிக்‌ஷா ஓட்டுநராக காட்டியிருக்கிறார் கள். பெண்ணுக்கான சமத்து வத்தை பேசுவதான பாவ்லா இது.

டான்ஸ் ஜோடி டான்ஸ்’ போன்ற நடன நிகழ்ச்சிகளில் நடனம் என்ற பெயரில் மிக ஆபத்தான gymnasticsஐ நிகழ்த்திக்காட்டிக் கொண்டிருக்கிறார்கள். இத்தகைய நடன, இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் குழந்தைகளை நடுவர்கள் நல்ல மனதோடு தட்டிக் கொடுத்து, தோளைத் தழுவிக்கொள்ளும் காட்சிகள் அடிக்கடி இடம்பெறுகின்றன. இந்தக்காட்சிகளைப் பார்க்கும் சிறுவர் – சிறுமியர், வேறு யாராவது கயவர்கள் அன்பொழுகத் தொடும் போது அது good touch, bad touch ஆ என்று தரம்பிரித்துப் பார்க்க முடியாமல் திணறுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

தொலைக்காட்சி ’எண்ட்டர்டெயின்மெண்ட்’ சேனல்க ளில் இடம் பெறும் நிகழ்ச்சிகள்தான் இப்படியென்றால் செய்திச் சேனல்க ளைப் பற்றி சொல்ல வேண்டிய தில்லை. Pro – ஆளுங்கட்சி (பல) anti – ஆளுங்கட்சி (ஒப்பீட்டளவில் சில) என்ற ரீதியில் தான் செய்திகள் தரப்படுகின்றன நடுநிலையான செய்திகள் கிடைப்பது அரிது.

கோப்புக்காட்சிகளை கோப்புக் காட்சிகள் என்று குறிப் பிடாமல், அல்லது, நுண் எழுத்தில் குறிப்பிட்டு இப்போது தான் நடப்பது போல திரும்பத் திரும்பக் காட்டுகிறார்கள்.

அதுவும், சாலை விபத்துகளை, படுகொலைகளை விலாவரியாகக் காண்பிப்பதில் இந்த செய்திச் சேனல் களுக்கு அத்தனை ஆர்வம். இவற்றைக் காட்ட வேண்டிய தேவை என்ன ? இந்த கோர விபத்துகள், கொலைகளைப் பற்றி சித்தரிக்கப்பட்ட காட்சிகளோடு மர்மத்திகில் கதையைச் சொல்வதுபோன்ற குரலில் சொல்லும் நிகழ்ச்சிகளும் தவறாமல் இடம்பெறுகின் றன.

திரும்பத்திரும்ப இதுபோன்ற கோரக் காட்சிகளைக் காண்பித்தல் பார்வையாளர்களிடையே சினிமாவில் இதுபோன்ற காட்சிகளை பார்த்து ரசிக்கும் insensitivityயை வளர்க்கத்தான் பயன்படும்.

ஏற்கனவே, ‘யூட்யூப்’ வாதிகள். ’ரீல்ஸ்’வாதிகள் என்று இத்தகைய insensitivityயைப் பரவலாக ஏராளமானோர் பாடுபட்டுக்கொண் டிருக்கிறார்கள்.

விவாதங்கள் என்ற பெயரில் நடப்பவையும் பல நேரங் களில் அபத்தமாக இருக்கின்றன. பள்ளி – கல்லூரி மாணவ மாணவிய ருக்கு இருக்கும் நடைமுறைப் பிரச்சனைகள் – ராகிங் பிரச்சனை போன்றவை – அவர்க ளுக்கு இருக்க வேண்டிய, போதிக்கப்பட வேண்டிய விழிப்புணர்வு சார் விஷயங்கள் என்பதைப் பற்றி யெல்லாம் எந்த விவாதங்களும் நடத்தப்படுவதே இல்லை.

அல்லது, சமூகத்தில் நடைபெறும் சில சீர்கேடுகளைக் குறித்து – அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு நேர்ந்த கொடுமை குறித்து, போதைமருந்துக்கு மாணாக்கர்கள் அடிமையாக்கப் படுதல் குறித்து – அதுபோன்ற கொடுமைகள், அவலங்கள், தங்கள் கல்விக்கூடங்களிலும் நடக்கிறதா, என்பதைப் பற்றியெல்லாம் எந்த விவாதங்களும் நடத்தப்படுவதேயில்லை.

24*7 சேனல்களில் சில நிமிடங்களில் சில நிமிடங்களிலும் இன்றைய சமூகச் சூழலில் இளம் தலைமுறை என்ற கவனத் தில் எடுத்துக் கொள்ள வேண்டிய தற்காப்பு நடவடிக்கைகள் பற்றி ஏதேனும் கற்றுத் தருகிறார்களா? கிடையாது.

தமிழ் பண்பாடு தமிழ் கலாச்சாரம் என்று பேசுவதோடு சரி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் எல்லாம் செய்தி வாசித்தல் உட்பட நிகழ்ச்சியை நடத்தும் பெண்களும் நிகழ்ச்சியில் பங்கேற் கும் பெண்களும் புடவையில் வருவது அபூர்வமே சூப்பர் சிங்கர் போன்ற இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் சிறுமிகளுக்கு ஆடை விளம்பரம் போல் ஏன் அத்தனை இறுக்கமான சட்டையைக் கட்டாயமாக அணிவிக்கிறார்கள் – தெரியவில்லை.

எம்ஜிஆர் காலத்துப் படங்கள் போல் இன்னும் நம் செய்தி வாசிப்பாளர்களில் ஆண்கள் எல்லாம் கோட்- சூட் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். பெண்கள் பெரும்பாலும் ஆங்கிலச் செய்தி சேனல்களில் வருவது போல இறுக்கமான காற் சட்டையும், சட்டையும் அணிந்துகொண்டு அங்குமிங்கும் நடந்து செய்தி வாசிக்கிறார்கள்.

சமீபத்தில். ’ராமராஜ்’ உள்ளாடைகள் விளம்பரம் என்று நினைக்கிறேன், உள்ளாடைகளுக்கான விளம்பரத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மகன்களுக்கு நல்ல உள்ளாடை முக்கியம் என்று எடுத்துச் சொல்லி இரண்டு மகன்கள் நல்ல பனியன்கள் அணிந்திருப்பதை அவர்களுடைய அம்மா சுட்டிக் காட்டுவதாகக் காட்டுகிறது. இது மிக நல்ல அணுகுமுறை. இதுவரை காண்பிக்கப்பட்ட உள்ளாடை விளம்பரங்கள் எல்லாம் வளர்ந்த ஆண்க ளையும் பெண்களையும் இறுக்கமாக ஜட்டி, பிரா அணிந்திருப்பதாகவே உள்ளாடைகளுக்கான விளம்பரக்காட்சி களை அமைத்திருந்தன. இப்படிக் காட்டுவதன் நோக்கம் வெளிப்படை.

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில், அதிலும், என்டர் டைன்மெண்ட் நிகழ்ச்சிகளில் ஏன் இப்போதும் சமூகப்பிரக்ஞை கொண்ட அணுகுமுறையையே எதிர்பார்க்கிறீர்கள் என்று கேட்பவர்கள் இருக்கலாம். அந்தப் பிரக்ஞை இருப்பதாக பாசாங்கு செய்து கொண்டே அதற்கு நேரெதிராக நடப்பதை எதிர்க்கத் தான் வேண்டும்.

எண்ட்டர்டெயின்மெண்ட் என்ற பெயரில் எப்போதுமே அபத்தக் கருத்துகளையும், சட்டமீறல் கருத்துகளையும் அள்ளித்தெளித்துக் கொண்டேயிருக்கும் போக்கை, சட்டமீறலை ஊக்குவிக்கும் காட்சிகளை இளந்தலை முறையினருக்கே உரிய வீரசாகசங் களாகக் காட்டுவதையும் பார்த்துக் கொண்டு வாளாவிருக்க வேண்டுமா என்ன?

சமூக ஊடகங்களில் சமூகப் பிரக்ஞையோடு செயல்பட வேண்டியது மிக அவசியம்.  

சிறுசேமிப்பு - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 சிறுசேமிப்பு


‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)

இன்னும் சொல்லில் வந்திறங்காமல்
அண்ணாந்து பார்த்தால் அடையாளந்தெரியாத
வெகுதொலைவில்
அந்தரத்தில் பித்தம் தலைக்கேற சுற்றிச்சுற்றி
வட்டமடித்துக்கொண்டிருந்த
உணர்வொன்று கவிதையாகுமா ஆகாதா என்று
ஆரூடங்கேட்க/கூறத் தொடங்கினேன்.
அறிவியல் கோபத்தோடு கணினியை அணைத்துவிட
சேமிக்காத என் வரிகள் என்றுமாய் காணாதொழிந்தன.
நினைவுண்டியலைக் குலுக்கிப் பார்த்தேன்.
சன்னமாய் கேட்கும் ஒலி 
செல்லாக்காசுகளோ,
சில்லறையோ, 
சுருங்கி மடிந்த இரண்டாயிரம் ரூபாய்த் தாளோ, 
தொகை குறிப்பிடப்படாமல் கையொப்பமிடப்பட்டிருக்கும் காசோலையோ...