காலத்தின் சில தோற்ற நிலைகள்
(ரிஷியின் 4ம் கவிதைத் தொகுப்பு) [வெளியீடு: காவ்யா பதிப்பகம். முதல் பதிப்பு 2005
கவிதை 6 - 9
6. பெரியவர்களுக்கான குழந்தைக் கதை
ஏழு கடல்களையும் ஏழு மலைகளையும் எப்படியோ
கடந்தாகிவிட்டது.
வழியில் எதிர்ப்பட்ட விஷங்கக்கும் பாம்பை
வாய்கிழித்தாகிவிட்டது.
முட்ட வந்த காட்டெருமையின் கொம்புகளை முறித்தாயிற்று.
புதைகுழிக்குள் கழுத்தளவு காணாமல் போய் பிழைத்தெழுந்தாயிற்று.
வழுக்குப்பாறை உச்சிமீதிருக்கும் வீடடைந்து
உள்ளிருந்த இருபது அறைகளையும் துருவிப் பார்த்ததில்
இல்லாத இருபத்தோராவது அறைக்கூண்டில் அடைபட்டிருந்த
கிளியின் எதிரிலிருந்த கிண்ணத்து அரிசிமணிகளில்
சரியானதைப் பொறுக்கியெடுத்து அதைத்
தரையில் தேய்க்கத் தேய்க்க
கிளியுருவி லிருந்த அரக்கன் தலை சாய்ந்தது.
கூடவே அவள் தலையும்…..
7. நீளந்தாண்டுதல்
அதிகமாகிக்கொண்டே போகும் இடைவெளி.
ஊக்கமருந்து சாப்பிட்டுப்
பெறும் வெற்றி
வெட்கக் கேடு.
வலு குன்றாதிருக்கலாம் கால்க
ளெனில்
வாழ்க்கை ‘நீளந்தாண்டுதல்’
அல்லவே.
8. இரவின் ஏழு மலைகள்
இரவின் பிடியில் நான் தப்பித்தலின்றி
புறத்தே கப்பிக் கிடக்கும் இருள்
அகத்துள்ளும் தப்பாமல் கள்ளுண்டவன்போல்
அனத்திக்கொண்டிருக்கும் நினைவின் மண்டையில்
அழுத்தித் தேய்க்க இருக்க லாகுமோ
ஓர் அபூர்வத் தைலம் பயணம்
ஏழு கடல் ஏழு மலை தாண்டி யேக
வழியற்று எதையும் உறுதியாக மொழியக்
கழியா கையறு நிலையில் காலம் எனை
யின்னும் சில காதங்கள் தொலைவாக்கிடு முன்
அண்மையை இழுத்துப் பிடிக்கும் வண்ணமாய்
உருக்கொள்ளு மிவ் வரிகளுக்கா யருகில்
பொறுமையாய் காத்திருக்கும் தற்காலிகச் சாவு.
9. ஈர்ப்புவிசையும், இலையின்
அசைவும்
கரடுமுரடான செங்குத்துப் பாறையதன் பிளவொன்றில்
துளிர்த்திருந்தது அந்தச் சிற்றிலை.
கதிரொளியில் துலங்கும் அதன் நரம்புகளில்
பாறையின் தடித்த வரிகள் பிணைந்திருக்கக்
காணும்.
அத்தனை சன்னமான தளிரின் அடிப்பாகம் ஒற்றைப்புள்ளியில்
இறுகப்பற்றியிருக்கும் பாறை மீது
காற்றின் ஒவ்வொரு அசைவுக்கும்
படீரென மோதிக்கொள்ளும் இலையில்
பொத்தல்கள் சேகரமாகியபடி….
மென்மையாக முடியாமலும், வழுவழுப்பாக வழியில்லாமலும்
தன் போக்கில் பாறை….
வந்து வந்து மோதுகையில் தளிரை முத்தமிட்டோ
புண்ணாக்குகிறது….?
தெளிவான பதிலற்ற கேள்வியும் வந்து வந்து
மோத
மேலும் புண்ணாகியபடி, விட்டு விலகாதவாறு
காற்றின் விசையில் அசைந்து மோதிய
பாறையின் கரடுமுரடுகளில்
பின்னும் நெருங்கிப் பதிந்துகொள்ளும்
இலை
அலைக்கழிந்தவாறு…..
0
No comments:
Post a Comment