LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Friday, May 1, 2026

எளிய பொய்சொல்லலும் எளிதாகப் பொய்சொல்லலும் - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 எளிய பொய்சொல்லலும்

எளிதாகப் பொய்சொல்லலும்

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)
மும்முரமாகத்தலையாட்டிக்கொண்டே
சொன்னாள் சிறுமி:
“உண்மையாகவே என் குருவி பொம்மை
பறக்கும் தெரியுமா!”
இருபது வருடங்களாக ‘எழுதி’க் கொண்டிருக்கிறார்
என்று நண்பரை அவையோருக்கு அறிமுகப்படுத்தியவர்
இத்தனை காலமும் ‘இ’யைத்தான்
சரியாக எழுதப் பழகிக்கொண்டிருக்கிறார் என்பதை
பத்திரமாக மறைத்துவிட்டார்.
அவருடைய அந்த நண்பரின் பேரன்
அடிக்கடி கண்ணை விரித்துக் கையை விரித்துக்
கதை சொல்வான்.
கூடைகூடையாய் நட்சத்திரங்களைத்
தனக்கு நிலவு கொட்டியதாக.
அப்போது அந்தக் குழந்தை முகம்
தூய்மையே உருவாய் என்னமாய் மின்னும்!
இருபது வருடங்களாக எழுதிக்கொண்டிருக்கிறார்
என்று அறிமுகப்படுத்தப்பட்ட பெருமை பொங்க
மேடையேறி ‘மூத்த எழுத்தாளர்’ பதக்கம் பெற்றுக்கொண்ட
அவன் தாத்தா
இத்தனை வருடங்களில் உருவாகாத
தன் படைப்புகளை
மொத்தமாய் அள்ளிக்கொண்டார்
வெட்கங்கெட்ட கற்பனையில்.
தெரிந்தே ஒரு பொய்யை சுலபமாக
மெய்யாக்கிவிட்ட
தமது சாமர்த்தியத்தை மெச்சியபடி
இன்னமும் கைதட்டிக்கொண்டிருக்கிறார்கள்
சில இலக்கியக் காவலர்கள்.
(*25, APRIL 2025 - மீள்பதிவு)

சாபம் - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 சாபம்

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)
சமத்துவக் கனல் பறக்கும் அவருடைய வரிகளைப் படிக்கும்போதெல்லாம்
அவரை யொரு மெய்யான சமூகவுணர்வாளரென்றே எண்ணியிருந்தேன்.
அன்றொரு நாள் அவருடைய கப்பலனைய வீட்டைப்பார்க்க நேர்ந்தது.
அதுபோலவர் மாநிலத்துக்கொரு மாளிகை வைத்திருப்பதாகத் தெரியவந்தது.
காலை நடைப்பயிற்சிக்காகக் காலாற நடந்துசென்றால் சுற்றிவர ஒரு மணிநேரம் பிடிக்கும் அவரது பண்ணைவீட்டை கூகுள் மேப் காண்பித்தது.
அடித்தட்டு மக்களைப் பார்க்கப்போகும்போதெல்லாம் எளிய ஆடையணிந்துவருபவரை யொரு நாள் அவர் நேரம் கிடைக்கும்போதெல்லாம் பழிக்கும் பெரிய தொழிலதிபரின் வீட்டுத்திருமணத்தில் பட்டும் வைரமுமாய் பளபளத்தொளிர்வதை தொலைக்காட்சி சேனல்களனைத்தும் விதவிதமான கோணங்களில் காட்டி மகிழ்ந்தன.
அதிகாரமும் செல்வ வளமும் அவருக்கு அளித்திருந்த தனிச்சிறப்பான சாதி அந்தஸ்தில்
அடுத்தவரையெல்லாம் கால்கடுக்க நிற்கவைத்தவாறே பேசிக்கொண்டிருப்பவர்
ஒருமையில் அழைத்து ஏசிக்கொண்டிருப்பவர்,
எல்லோரும் இந்நாட்டு மன்னரென்றபோது
சுற்றியிருந்தவர்களின் கைத்தட்டலில் அரங்கமே அதிர்ந்தது.
வறுமைக்கோட்டின் கீழ் இருப்பவர்களை அங்கேயே இருக்கச்செய்து
அவ்வப்போது சில எலும்புத்துண்டுகளை வீசுவதே
திருத்தமான வேட்டைக்கொரு திட்டவட்டமான
உத்தி யென்பதை
மக்கள் அறியமாட்டார்கள் என்ற மேலான நம்பிக்கையில்
மேடைதோறும் உரத்த குரலில், தொண்டை கரகரக்க
அதி தூய்மையான மினரல் வாட்டரைக் குடித்தபடி
முழங்கிக்கொண்டேயிருப்பவர்களின்
கால்களின் கீழ்
எக்காலமும் நிலநடுக்கம்போலெதுவும்
நேராதோவெனக் கலங்கிநிற்குமென்
பாழ்மனம்
கைநிறைய மண்ணள்ளி யிறைத்தவாறு….
//2024, APRIL 18 - மீள்பதிவு//

பைத்தியம் ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 பைத்தியம்

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)
சிலருக்கு காதுகூசும் வசைச்சொல்.
சிலருக்கு அதுவொரு கூர் ஆயுதம்
சிலருக்கு அது எதிராளியை விழச்செய்ய
எறியும் வாழைப்பழத்தோல்.
சிலருக்கு அது தம்மை சரியென்பதாகவும் பிறரை தவறென்பதாகவும் ஸ்தாபிக்கக் கிடைத்த strategy
சிலருக்கு தன்னை அறிவாளியாகக் காட்டிக்கொள்ள
பிறருக்கு எளிதாகத் தரக்கிடைத்த ஆயத்த அடைமொழி.
சிலருக்கு எதிராளியின் மூளைக்குள் காட்டுத்தீயைப் பற்றவைத்துப்
பெரும் நாசம் விளைவிக்கக் கிடைத்த அப்பிராணி வார்த்தை.
ஒருவருக்கொருவர் இந்த வார்த்தையை எறிந்துவிளையாடி
உறவுகொண்டாடிக்கொண்டிருப்பவர் பெருந்திரளாய்.
வைத்தியம் என்ற சொல்லுக்காகவே
பைத்தியத்தைப் பிடித்துக்கொண்டிருப்பவர்களும் நிறையவே.
அவசரத்திற்கு ’த் தி ய ம் இடம்பெறும் மூன்றாவது வார்த்தை ஏதும் கிடைக்கவில்லை.
மூளையைக் கசக்கி யோசித்துப் பார்க்கையில்
நினைவுக்கு வருகிறது.
கோபிகிருஷ்ணனின் ஒரு கதாபாத்திரம்
அவ்வப்போது தன் பேச்சுக்கிடையில்
அனர்த்தமாய் உதிர்த்தவாறிருக்கும்
‘RELAXATION’
(மே 2, 2021 - மீள்பதிவு)

வீழ்ச்சி 'ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

வீழ்ச்சி
'ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)
வானுயரக் குவியலாய் மனக்கிடங்கில்
சொற்களையும் அவற்றின் பல்பொருள்களையும்
சேமித்துவைத்திருக்கும்
கானடர் கவி
நேற்று முளைத்த அரசியல் காளானின்
தோளோடு தோள் சேர்த்து நின்று
தன்னையொரு எழுத்தாளராய்
அடையாளங்காட்டி நிற்கும் படம்
காற்றுவாக்கில் என் கண்ணில் பட்ட கணம்
கிட்டத்தட்ட மரணம்.
//2 May 2021 - மீள்பதிவு//

புத்தகங்கள் ’ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 புத்தகங்கள்

’ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)



ஒரு புத்தகத்திடம் நம் பிரியத்தை எப்படிச் சொல்வது?
மயிலிறகைப் போல் மிருதுவாய்த் தடவிக்கொடுக்கலாம்.
சுற்றுமுற்றும் பார்த்தபடி சிறு முத்தம் தரலாம்.
படுக்கையில் அருகில் வைத்துக்கொண்டு தூங்கலாம்.
போகுமிடமெல்லாம் அதையொரு குழந்தைபோல் கையிலேந்திக்கொண்டிருக்கலாம்.....
புரியவைக்கமுடியுமோ புத்தகத்திடம் நம் அன்பை?
புத்தகம் உயிருள்ளதா அற்றதா?
தனக்குள் காலத்தையும் காலாதீதத்தையும் ஒருங்கே உள்ளடக்கியிருக்கும்
புத்தகத்தின் உயிர் ஒன்றல்ல, பலப்பல
என்றொரு அசரீரி ஒலிப்பது என்னுள்ளிருந்தா புத்தகத்திலிருந்தா?
வினாக்களுக்கு பதில்களையும் பதில்வினாக்களையும்
வரிவரியாய்ப் பொதிந்துதந்தவாறு _
”விலைகொடுத்துவாங்கி யென்னைப் படி
வாங்கமுடியாதவர்களுக்குப் படிக்கக்கொடு
வெறும் தாள்களிலிருந்து என்னை படைப்புநிலைக்கு உயர்த்திய
கர்த்தாவைக் கொண்டாடு.
என்னைப் படித்து சிறிதேனும் உன் மனது
திறந்துகொண்டால் போதும்
வசமாகிவிடும் உன் பிரியமெல்லாம் எனக்கு”,
என்றபடி சிரிக்கும் புத்தகத்தின்
இல்லாத கன்னத்தில் விழும் குழியை
என்றும்போல் இன்றும் அதிசயமாய்ப்
பார்த்துக்கொண்டிருக்கும் வாசக மனம்
தீராக்காதலில் வேர்விட்டபடி….
//2021 - APRIL 22 - மீள்பதிவு//

Saturday, March 28, 2026

கவிதைகளா, பாடல்களா?

 கவிதைகளா, பாடல்களா?

பள்ளி கல்லூரி நாட்களில் பிரபலமான இந்தித் திரைப் படப் பாடல்களின் மெட்டில் தமிழில் பாட்டெழுதிப் பாடுவது வழக்கம். . (அப்போதெல்லாம் நான் எனது என்று எண்ணுவதே பாவகாரியம் என்ற நினைப்பு வேறு மனதில் நெருடிக்கொண்டே யிருக்கும்!)

அப்படி எழுதிய பாடல்களில் இதுவும் ஒன்று. ‘தேரா மேரா மேரா தேரா என்று தொடங்கும் பாடலின் மெட்டில் எழுதப்பட்டது. எங்கும் எழுதிவைக்கவில்லை. ஆனால், இப்போதும் மனப்பாடமாய் சொல்லமுடிவது ஆச்சரியமாக இருக்கிறது – லதா ராமகிருஷ்ணன்.


ன்னில் உன்னை உன்னில் என்னைக்
கண்டு தினம் அன்பு செய்தால்
என்றும் நன்மையாகும் –
மனப்புண்கள் ஆறிப்போகும்.
நீயும் நானும் பூவும் நாரும்
காயும் வேரும் என்றிணைந்தால்
நம் பலம் அதிகமாகும் -
நாம் எண்ணினால் நடந்தேகும்...
(என்னில் உன்னை உன்னில் என்னைக்
கண்டு தினம் அன்பு செய்வோம்…….)
ஆதியந்தம் நாமறியோமே
வேதனைகள் நிறைய வருமாமே
பாதையிலும் காலில் முள் இடறும்
காதலிலும் தோல்வி பின் தொடரும்
அதனா லென்ன நெஞ்சமே –
பகலிரவே பிரபஞ்சமே
(என்னில் உன்னை உன்னில் என்னைக்
கண்டு தினம் அன்பு செய்வோம்…….)
ஏன் எதற்கு என்று கேட்போமே
நாண(ந)யமும் துணிவும் காப்போமே
ஆனவரை நன்மை செய்வோமே
ஆணவம் முன் அடிபணிந்திடோமே
கானம் பாடு நெஞ்சமே
மானுடமே ஆனந்தமே...!
என்னில் உன்னை உன்னில் என்னைக்
கண்டு தினம் அன்பு செய்வோம்……
//2019 , MARCH 20 - மீள்பதிவு//

இன்னொரு பாடல் இதோ!
( ‘கித்னா ப்யாரா வாதாஹே என்று தொடங்கும் பாடலின் மெட்டில் எழுதப்பட்டது.

ஏங்கித் தூங்கி யெந்நாளும் வாழ்ந்திருக்கின்றோம் - வாழ்விதா?
எத்தனை நாள்தான் இவ்வாறே வாழப்போகின்
றோம் - தோழர்காள்?
விழித்தெழுவோம் வழியமைப்போம்
விதைவிதைத்தே கதிரறுப்போம்!
போகும் பாதை யெங்கிலும்
சோதனைகள் பொங்கிடும்…..
வேதனைகள் சேர்ந்திடும்….
சோர்ந்துபோக நேர்ந்திடும்….
அட, இரவின் பின் பகல் உண்டென்றே
அறிந்திடுவோமே நாமே –
மனமே விளக்காம்-
முன்னேறுவோம்.. (ஏங்கித் தூங்கி)
தேசமெங்கும் தரித்திரம்
வேஷந் தாங்கும் நரித்தனம்
ஜோசியத்தில் திருமணம்
காசுதானே உறவினம்
அட, யோசித்தால் விசுவாசித்தால்
இம்மாசுகள் விலகாதா
வாசம் இங்கேயும் வீசாதா (ஏங்கித் தூங்கி)

கணக்கு

 கணக்கு

தமிழ்நாடே சொன்னது என்றார்__-
தானே தமிழ்நாடெனக் கொண்டார்.

வஞ்சனை சொல்வாரடீ, கிளியே… ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

வஞ்சனை சொல்வாரடீ, கிளியே…

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)




வெள்ளிப்பாத்திரங்கள் நிரம்பிய வீட்டில் பிறந்துவளர்ந்த குழந்தைகளுக்கு
வறுமையின் அவமானம் புரிய வாய்ப்பில்லை.
அல்லது புத்தரைப்போல் வீட்டைவிட்டு வெளியேறத் தோதான
கால்கள் வாய்த்திருக்கவேண்டும்.
மன்னர்களின் வரலாறுகளை மட்டுமே படித்துமுடித்த இளவரசர்கள்
மிகவும் பிரயத்தனப்பட்டு மக்களாட்சி என்ற சொல்லைப் படிக்கக் கற்றாலும்
அதை மனதில் இறக்கிக்கொள்வதில்லை.
மும்மாரி பொழிகிறதா என்பதைக்கூட குளிரூட்டப்பட்ட அறையில் திண்டுமெத்தையில் சாய்ந்து மனக்கண்ணால் பார்த்து முடிவுசெய்யப் பழக்கப்பட்டவர்கள்
வெறுங்கால்கள் கொப்புளிக்க மைல்கணக்காய் தலையில் பாறாங்கற்களைச் சுமந்துவந்தவர்களை சிந்தித்துப் பார்ப்பதில்லை.
அல்லது, அவர்கள் விசுவாசமிக்க பிரஜைகள் என்று பாராட்டுகிறார்கள்.
அவர்களை அடிமைச்சேவகம் செய்யவைத்தது தன் அரசகுலம் என்பதை மறந்தும் மறைத்தும்.
அடிக்கு அடி சேவகர்கள் காத்திருக்கும் அரண்மனைவாழ்வு வாய்த்த அரசகுடும்பத்தினர்
அரியணைகள் ஈரேழ்பிறவிக்கும் அவர்களுக்கே உரித்தானது என்று ஆணித்தரமாக நம்புகிறார்கள்.
அதனால்தான் மக்களாட்சி என்ற சொல்லின் அர்த்தத்தை அவர்களால் உள்வாங்கிக்கொள்ள முடிவதேயில்லை.
அரையடி புதையும் வெல்வெட் கம்பளம் விரித்த நடைவழியிலேயே போய்வந்து பழகியவர்கள்
அடுத்தவர் நலனுக்காய் பாலைவன சுடுமணலில் வெறுங்காலில் பயணமாகியவன்
வெப்பம் தாளாமல் ஐயோ என்று கதறியதை எள்ளிநகையாடும்
வெட்கங்கெட்டவர்களாக இருப்பதில் வியப்பதற்கு ஏதுமில்லை.
அவர்களுடைய நன்கு திட்டமிடப்பட்ட சொகுசுநடைப்பயணங்கள்
கால்களற்ற ஏழைப் பிச்சைக்காரரின் தினசரி அவலவாழ்வைக் கணக்கிலெடுத்துக்கொள்வதில்லை.
வெறுங்கால்களோடு வரப்புகளில் அவர்கள் எடுத்துவைக்கும் ஒவ்வொரு அடியும்
உலகெங்கும் வலம்வருகிறது புகைப்படங்களாய் காணொளிக்காட்சிகளாய்.
ஆபத்தான அரைவேக்காட்டு விவரங்களும் தரவுகளுமாய் கண்ணில்படும் காணிகளுக்கெல்லாம் குறுநில பெருநில மன்னர்களாகும் கனவுகளோடு
வலம்வரும் இந்த மன்னர் மாமன்னர் சக்கரவர்த்திகளும் அவர்தம் உற்றமித்ர பந்துக்களும்
எளிய மனிதர்கள் தங்களுக்கு சமமாய் அரியணையில் அமரநேர்ந்தால்
அப்படி அழுதுபுரள்கிறார்கள் ஆங்காரமாய்.
மண்ணையள்ளித் தூற்றுகிறார்கள்.
அய்யய்யோ அக்கிரமம் அராஜகம் என்று ஆயத்த மக்கள் புரட்சியாளர்களாய் அதையும் இதையும் பேசுகிறார்கள்.
அத்தனை நேரமும் அவர்களுடைய முழுமுனைப்பான எண்ணமெல்லாம்
அரியணையைக் கைப்பற்றுவதே என்ற உண்மை அவர்களுக்கு நன்றாகவே தெரியும்.
அதை அத்தனை நேர்த்தியாக மறைத்தொளிக்கும் மாபாவிகள் என அவர்கள் மனங்களுக்குத் தெரியாதா என்ன?
ஆனாலும் அவர்கள் வாழையடிவாழையாய் ஏழைபாழைகளின் புரவலர்களே யல்லாமல்
மன்னிப்புக் கேட்கும் கோழைகளல்ல என்று திரும்பத்திரும்ப சொல்லியடியே ஓடியவாறிருப்பார்கள்
நாட்டில் உலகில் மீதமுள நிலபுலன்களை உடைமைகொள்ளும் மார்க்கங்களை
அதற்கான அதிகாரபீடங்களை
நாடித்தேடி….

கவிதை

 கவிதை

வற்றாத ஜீவநதியின்

முற்றுப்பெறாத நீர்த்துளி.......

Monday, March 23, 2026

சொப்பனவாழ்வு -’ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 சொப்பனவாழ்வு

’ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)

தலைக்குள்ளாகத்
தொட்டுவிடும் தூரத்தில் இருப்பதாய்க்
காணும்
அந்த வானவில்லின்
சிறுதுளியைப் பறித்துச்
சின்ன மயிற்பீலியாய்
வாழ்வுப்புத்தகத்திற்குள் பத்திரப்படுத்தி
வைப்பதே
தர்க்கங்களுக்கப்பாலான
தூலக்கனவாய்.......

முகமூடி - ‘ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)





முகமூடி

‘ரிஷி
(லதா ராமகிருஷ்ணன்)

அதிவேகத்தில் விரையும் ரயிலின் அருகில் நின்று ஸெல்ஃபி எடுத்துக்கொண்டால் ஆபத்து.
அன்பே உருவாயொரு களங்கமில்லாக் குழந்தையாய்
என்றேனும் சிரிக்கக் கிடைத்திருந்தால்
அதை மறவாமல் ஸெல்ஃபி எடுத்துவைத்துக்கொள்ளுங்கள்.
தேவைப்படும்போதெல்லாம் அதை வெளியிட்டுக்கொள்ளலாம் -
ரத்தவெறிபிடித்த கோரமுகத்தை
உள்ளுக்குத் தள்ளி.