அம்மாவின் சித்திரம்
பிரம்மராஜன்
பதித்துவிடவே ஒத்திப்போட்டிருந்தேன்
தூரிகை எதுவும் தோதாகவில்லை
சாக்குச் சொல்லி
என் அம்மையின் படத்தை சாசனப்படுத்த
துணியும் வாக்குமூல மொழியில்
பாழுற்றுக் கிடந்த பால்யத்தின் தனிமுகம்
தாளடியில் தடுக்கும் நீர்க்கோடாய்க் கவிழ்க்கும்
பிச்சைக்காரிகளின் முகம் அவளதாய்த் தோன்றுவதாகத்
துக்கம் தவிர்ப்பது எவ்விதம்
எதற்குமில்லாதிருக்கிறது உறுதி
சாட்சாத் என் பிறவியைக் கருக்கொள்கிறேன்
அந்த நாழிகையில் என
அவள் ஊன் திளைப்பில் கவிமுகம் கண்டிருக்க
வாய்ப்பில்லை
சுழன்று சென்றுவிட்ட
வேற்றுப் பிரபஞ்சமானது
பால்யம் மாற்ருவதற்கில்லை
என்பதால்
எவரது மன்னிப்பையும்
கோருவதற்கில்லை இந்நிகழ்ப்படம்
ஓவியனின் சுருக்க ஒப்பத்துடன்
முற்றுகிறது
அம்மாவின் பிம்பங்களைத் தேடுவதில்
இவள்களிடம் சென்றிருக்கிறேன்
பிடித்தேனில்லை
சிக்கென
என் ஓவியம் எனக்குப் பிடிபடும் இச்சமய வாழ்விலும்



No comments:
Post a Comment