சுதந்திரம், சமத்துவம் சகோதரத்துவம்
(அ)
தீதும் நன்றும் பிறர் தர வாரா
சக மனிதர்களை அடிமைகளாக பாவித்து
அவர்களது வாய்களை அச்சுறுத்தல்களாலும்
அசிங்க வார்த்தைகளாலும்
அடைமொழிகளாலும் அடைத்துவைத்து
அவர்களுக்காகப் பேசுவதாக செய்யும்
பாவனையில்
அடுத்தவரின் பேச்சுரிமை எழுத்துரிமை கருத்துரிமை
எல்லாவற்றையும் கொத்துபரோட்டாவாக்கிக் கொடுத்தவண்ணம்
தங்களுடைய குடும்பத்தோடு சர்வதேச தரத்திலிருக்கும் ஐம்பது நட்சத்திர ஹோட்டல்களில்
ஐரோப்பிய ஸ்பானிய ஜப்பானிய
அயர்லாந்து நெதர்லாந்து ஆஸ்திரேலிய அமெரிக்க ஜெர்மானிய உணவு தின்பண்ட வகையறாக்களை
நாளொரு மேனி பொழுதொரு வண்ணமாக ருசித்துக்கொண்டிருக்க
அவர்களுடைய அக்கறையின் இலக்காக ’சும்மனாங்காட்டிக்கு’ அடையாளங்காட்டப்படுவோர் கலாச்சாரக் காவலர்களாய் கூழையும் களியையும் உண்டவாறே
படகுவீட்டுப் புரவலர்களுக்காய் கையிலும் எழுத்திலுமாய் கொடியுயர்த்திப் பிடித்தபடி
அவர்கள் கைகாட்டும் இடத்தில் காறித்துப்பியபடி….
அறஞ்சார் விசுவாசத்தை யல்லாமல்
அரச விசுவாசத்தைக் காட்டுவதே புலவர்பெருமக்களின்
வேலையாகிவிட்டால்
வாழ்ந்துவிடுமா மொழி
‘தீதும் நன்றும் பிறர்தர வாரா’ தமிழில் எழுதப்பட்ட
தென்றாலும்
அது உலகப் பொது வழி.
No comments:
Post a Comment