LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Thursday, June 9, 2022

இடமுணர்த்தல் - ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)

 இடமுணர்த்தல்

 

ரிஷி

(லதா ராமகிருஷ்ணன்)


ஒவ்வொன்றின் இடமும் அளவும்

ஒவ்வொன்றைக் குறிப்புணர்த்துகிறது

உணவுமேஜையில் அந்தப் பெரிய நாற்காலியின் இடம்

அதில் அமர்பவர் அந்த வீட்டுத்தலைவர்

என்பதை உணர்த்துகிறது.

அந்த மேஜையின் மீதிருந்த தண்ணீர்க்கோப்பைகள்

எல்லாமே கண்ணாடியில் செய்யப்பட்டதாயிருக்க

பிடிவைத்த செம்புக்கோப்பையிருந்த

மேசைப்பக்கமிருந்த கைப்பிடிகொண்ட நாற்காலி

வீட்டிலிருந்த பாட்டிக்கானது.

சுவற்றில் அலைபேசியை வைக்கக்கூடிய

அகலத்திலிருந்த கைப்பிடிக்கு அருகே

வைக்கப்பட்டிருந்த நாற்காலி

சதா கைப்பேசி வைத்திருக்கவேண்டிய ஸாஃப்ட்வேர் நிறுவன

உயர் அதிகாரிப் பிள்ளைக்கானது.

பளபளவென்றிருந்த இருக்கை அதிகம் சம்பாதிக்கும்

மகளுக்கானது

முதுகு சாயுமிடத்தில் நிறம் மங்கியிருந்த நாற்காலி

மூச்சு வாங்க நடந்துவரும் பெருத்த உடலுக்கானது

பெரிய நாற்காலியும் அடுத்திருக்கும் சிறிய நாற்காலியும்

விவாகரத்தான முப்பத்தியிரண்டு வயதுத் தந்தைக்கும்

அவருடைய ஆறு வயதுப் பிள்ளைக்குமானது.

அத்தனையையும் கவனித்தவாறே அங்கு வந்தவள்

உணவுமேசையைச் சுற்றியிருந்த இருக்கைகளில்

இரண்டு மட்டும்

ஒன்றையொன்று தொட்டபடிநெருக்கமாக இருந்ததைக்

கவனித்தும் கவனிக்காத பாவனையில்

விழுங்கத் தயாராய் எடுத்துவந்திருந்த

வைட்டமின் E மாத்திரை Evion 400இன் நெகிழ்வை

உள்ளங்கையில் உணர்ந்தபடி

தனக்கான இருக்கையை நோக்கிச் சென்றாள்.

 

No comments:

Post a Comment