மாறுவேடப்போட்டிகளும்
மகோன்னத ஞானவொளிகளும்
‘ரிஷி
தூதனுப்பவும் மடலனுப்பவும்
புறாக்களைத் தேடவேண்டிய தேவையில்லை.
மன்னர் மட்டும்தான் இரவில் மாறுவேடமணிந்து
நகர்வலம் வரவேண்டுமா என்ன?
சிசிடிவி இருப்பது தெரிந்தும் ஏடிஎம்களில்
கொள்ளைகள் நடந்தவாறே -
இல்லையா?
கிழக்கே போகும் ரயில்கள் திசைமாறக்கூடும் எனவும்
பாஸஞ்ஜர் ரயில்கள் துரித வண்டிகளாகிவிடக்கூடும் எனவும்
ஞானத்தைப் பெற
போதிமரங்களைத் தேடி அலையவேண்டியதில்லை.
பட்டறிவே போதுமானது.
பாதரசமொரு மகோன்னதக் குறியீடு
என்றாலும்
பூனை கண்ணை மூட இருண்டுவிடும் உலகம்போல்
சுலக்ஷணா சுவர்ணலட்சுமியாவதும்
சுத்தமாய் தன் பாலடையாளம் மாற்றிக்கொள்வதும்
பிறந்த தேதி அதுவேயாகவும்
பிறந்த மாதம் வேறாகவும்
தனக்குத்தானே புதிய பிறப்புச்சான்றிதழ் அளித்துக்கொள்வதும் –
அறிவாளிகளும் முட்டாளாகவும்
அறிவாளிகளை முட்டாளாக்கப் பார்க்கவும்
விரிவெளி அமைத்துத் தருவதற்கு
இருக்கவே இருக்கிறது ஃபேஸ்புக்.
No comments:
Post a Comment