LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Thursday, June 9, 2022

பறவையாதல் - ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)

 பறவையாதல்

ரிஷி
(லதா ராமகிருஷ்ணன்)



பறக்கக் கற்றுத்தரும் தாய்ப்பறவை
அறிவதில்லை
தன் பாப்பா எப்பொழுது
எத்தனை தொலைவாகப்
பறந்துவிடுமென்று.
பாப்பாக்களில் அதற்கு தனிப்பிரியம்
எதன் மீதாவது இருக்குமா
தந்தைப்பறவை சொல்லித்தந்ததே
யில்லையோ – தெரியவில்லை
பறவைகளில் தந்தை-தாயைக்
கண்டுபிடிப்பது
சுலபமா கடினமா
குட்டிப்பறவை தன்னால் பறக்கமுடியும்
என்று அறியுமக் கணம்
ராஜாளியாக உணருமோ
சிட்டுக்குருவியும் ஃபீனிக்ஸ் பறவைதானே
என்றாலதுவுமொரு விதத்தில் சரிதானே
கவிதையெழுதாவிட்டாலும் காயம்பட்டால்
பறவைக்கும் வலிக்குமில்லையா
வல்லூறுக்கு வானம்பாடியின் கானம்
என்னவாகும் யாருக்குத் தெரியும்
பறவை முதுகிலேறிப் பயணம்
செய்ய விழைதல்
பேதமையா பெருங்கனவா
நாமே பறவையென பாவித்தல்
பரவசமா பிறழ்மன அவசமா
உறவொரு பறவை
சிறகுகளடர்ந்து இறந்த புழுக்களைக்
கொத்தித் தின்றவாறிருக்கும்
நினைவொரு பறவை
படைத்த கவிதையுமொரு பறவை
படிக்கக் கிடைத்து
விடையறிய முடிந்த கவிதையுமொரு
பறவையாக……


No comments:

Post a Comment