LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Thursday, June 9, 2022

திரும்பத் திரும்பத் துகிலுரியப்படும் திரௌபதி - ரிஷி(லதா ராமகிருஷ்ணன்)

 திரும்பத் திரும்பத் துகிலுரியப்படும் திரௌபதி - 1


‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)
திரௌபதி துகிலுரியப்பட்டுக்கொண்டிருக்கிறாள்.
அந்த வன்கொடுமையின் தீவிரத்தை மட்டுப்படுத்த
பின்னணியில் ஒரு குத்துப்பாட்டை ஒலிக்கச்
செய்கிறார்கள்.
துரியோதனன் விழுந்தபோது திரௌபதி சிரித்தாள்
என்று
அங்கங்கே அசரீரி ஒலிக்கிறது.
போயும் போயும் கிருஷ்ணனையா காப்பாற்றச்
சொல்லிக் கேட்கவேண்டும்
என்று முகத்தைச் சுளுக்கிக்கொள்கிறார்கள் சிலர்.
ஆயர்குலப் பெண்களின் ஆடைகளை
ஆற்றங்கரையிலிருந்து
கவர்ந்துசென்றவனல்லவா அவன்
என்று குறிபார்த்து அம்பெய்துவதாய்
திரௌபதியின் காதுகளில் விழும்படி
உரக்கப்பகர்ந்து
பகபகவென்று பரிகாசமாய் சிரிக்கிறார்கள் சிலர்…
பாவம், ஊடலுக்கும் Eve Torturing க்கும்வேறுபாடு
அறியாதவர்கள்.
இரு மனமொப்பிய கூடலுக்கும்
கேடுகெட்ட வன்புணர்வுக்கும்
இடையேயான வித்தியாசத்தை
எண்ணிப்பார்க்கத் தலைப்படாதவர்கள்.
இன்னும் சிலர் ’அரசகுலப்பெண் என்பதால்
ஆளாளுக்கு அங்கலாய்க்கிறார்கள்
இதுவே அடிமைப்பெண் என்றால்?’ என்று
நியாயம் பேசுகிறார்கள்.
இப்பொழுது நான் அரசியா அடிமையா’ என்று
தனக்குத்தானே கேட்டுக்கொள்கிறாள்
திரௌபதி.
அலையெனப் புரளும் கார்கூந்தலும்
எரியும் குரல்வளையுமாய்
தலை சுற்றச் சுற்ற
உற்ற மித்ரன் பெயரை உச்சாடனம் செய்துகொண்டேயிருக்கிறாள்.
கிருஷ்ணா அபயம் கிருஷ்ணா அபயம் கிருஷ்ணா
அபயம் கிருஷ்ணா……..
திரௌபதி இடையறாது கிருஷ்ணனை கூப்பிட்டுக்கொண்டிருக்கிறாள்
அது அவள் மனதின் நம்பிக்கை
அதற்கு முன்னான அவளுடைய நம்பிக்கைகளில் நிறைய பொய்த்துப்போய்விட்டன.
ஆனாலும் நம்பிக்கை பொய்க்காது
என்ற நம்பிக்கையே
வாழ்தலுக்கான நம்பிக்கை யென
நம்பிக்கொண்டிருப்பவள் அவள்.
பொய்க்கும் நம்பிக்கைகள்போல்
பொய்க்காத நம்பிக்கைகளும் உண்டுதானே
மார்பை மறைக்கும் சீலை இழுக்கும் இழுப்பில் விலகலாகாது என்று
இருகைகளையும் குறுக்கே இறுக்கித்
தடுத்திருப்பவள்
கை சோர மெய் சோர
சோரம் போகலாகாதென்ற தீராப்
பரிதவிப்பில் கிருஷ்ணனை யழைத்துக்கொண்டிருக்கிறாள்.
எங்கிருந்தேனும் ஒரு புல்லாங்குழல் பறந்துவந்து
பாதகர்களைத்
தன் துளைகளுக்குள் உறிஞ்சிவிடலாகாதா
எங்கிருந்தேனும் ஒரு மயிற்பீலி மிதந்துவந்து
கயவர்களின் கண்களில் சொருகிவிடலாகாதா…….
'ஐந்து கணவர்கள் பார்த்ததுதானே _
அவையோர் பார்ப்பதில் அப்படியென்ன வெட்கம்'
என்று கெக்கெலித்துக் கேட்கும் குரல்
நிச்சயம் ஒரு பெண்ணுடையதாக இருக்காது
என்பதொரு நம்பிக்கை.
நம்பிக்கையே வாழ்க்கை.
தாயுமானவன் தந்தையுமானவன்
வாயுரூபத்திலேனும் வந்தென்
மானங்காக்க மாட்டானா
என்றெண்ணியெண்ணி யோய்ந்துபோகும்
இதயத்தின் நம்பிக்கை
யிற்றுவிழும்போதில்
இழுக்க இழுக்க வளர்ந்துகொண்டே போகும்
சேலை
யிங்கே என் உன் எல்லோரது நம்பிக்கையாக.

No comments:

Post a Comment