கவிதானுபவம்
ஒவ்வொன்றாய் மலையுச்சியிலிருந்து உருண்டோடி
அதலபாதாளத்தில் விழுவதையறியாமல்
இன்னுமின்னுமாய் பிரசங்கம் செய்துகொண்டிருந்தவரை
ஆதுரத்தோடு பார்த்துக்கொண்டிருந்த அவருடைய
எழுதப்படாக் கவிதை
தனக்குள் முணுமுணுத்துக்கொண்டது:
பீடமல்ல கவிதை
பாழ்மனதின் எதிரொலி
உயிர்வலி
உன்மத்தக்களி
சரீரம் கடந்த நிலை
சரணாகதி
ஒருவேளை நோயுற்றிருக்கும் மருத்துவராயிருக்கலாம்
ஆனால் மருத்துவரில்லை கவிதை
பார்க்கும் ஆடி எனில் அதற்குள் தெரியும் முகம்
இன்மைக்கும் பன்மைக்கும் இடையே
உண்மைக்கும் பிரமைக்கும் இடையே
வலியுணர்ந்து வாழ்வுணர்ந்து
வாக்கின் வலுவுணர்ந்து
உணர்ந்ததை உட்குறிப்பாய் உணர்த்துவதே கவிதையென்றுணர்.
அடிக்குறிப்பாய்_
இதுவும்கூடக் கவிதையில்லையென்றுணர
முடிந்தால்
இனி நீயெழுதுவது கவிதையாகும்,
அறிவாய்."
No comments:
Post a Comment