கவிதை வாசிப்புக் காணொளிகளும் கவிதையும்
‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)
மசாலா சினிமா பாணியில் கிசுகிசுக்கும் குரலொன்று வாசித்துக்கொண்டிருக்கிறது……
கவிதைக்குள் இருக்கும் சோகம் அந்தக் குரலின்
மிகையுணர்ச்சியில் எரிச்சலூட்டும் அவலமாக மாறுகிறது.
ஆனால் 'அடடா என்ன அருமை!'களும் 'Woo hoo!' களும்
’வாரே வா’க்களும்
அனேகரிடமிருந்து எழுந்தவண்ணமே.
அந்தக் கவிதையை எழுதியவர் உட்பட.
இடையிடையே கவிதை வாசிக்கும் குரல் விடும் பெருமூச்சுகள் கவிதைக்குள் கேட்கவில்லையே
என்று
எவரொருவரும் கேட்கலாகாது.
எவருக்கும் எவரொருவருக்குமிடையேயான அர்த்தபேதங்களைப்பட்டியலிடத் தொடங்கும்
அந்தக் குரல்
ஏழுக்குப் பிறகு பத்தைச் சொல்லும்போது
அதில் கிளம்புமொரு (எத்தனை நன்றாகப் படிக்கிறேன் பார்த்தாயா) குழந்தைத்தனமான பெருமையில்
கவிதைக்குள்ளிருக்கும் தத்துவமும் குறியீடும்
காணாமல் போய்விடுகின்றன.
ஒப்பனைக்கண்ணீர்விட்டு அழுதபடியே வாசிக்கும் குரலில்
என் கண்களிலிருக்கும் குளங்கள்
ஒரேயடியாக வறண்டுபோகின்றன.
கவிதையின் பாதியில் தூரத்தே ஒரு ரயில் போய்க்கொண்டிருப்பது காட்டப்படுகிறது.
அத்தனை தொலைவாக விரைந்துகொண்டிருக்கும் அதில் எப்படி ஏறிக்கொள்வது என்று புரியாமல்
அலங்கமலங்க விழிக்கிறது கவிதை
வாசிக்கும் குரல் கவிதை நேசிக்கப்படவேண்டியது
என்று குறிப்புணர்த்துவதாய்
ஒரு மாதிரி உயர்ந்துதாழ்கிறது.
ஒரு கணம் அந்தரத்தில் அறுந்து தொங்குவதா
யுணர்ந்து
அஞ்சி நடுங்குகிறது கவிதை.
வாசிக்கும் குரல் கவிதையை இழைபிரித்துத்
தருவதான நினைப்பில்
துண்டுதுண்டாகக் கடித்துப் போட _
வாசிப்பு முடிகிறது.
குதறப்பட்டுக் கிடக்கும் கவிதை
அந்த வாசிப்பையும்
அதை ரசித்துக் குவிந்தவண்ணமிருக்கும்
லைக், கமெண்ட், ஷேர்களையும் கடந்துபோய்க்கொண்டிருக்கிறது
தனக்கான மௌ(மோ)ன வாசகரைத் தேடி....
தனியறையொன்றில் நகம் கடித்தபடி
எழுதிக்கொண்டிருக்கும் கவியை நாடி.....
No comments:
Post a Comment