LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Monday, May 2, 2022

சித் ஸ்ரீராமின் குரல் - தொடுவானை எட்டித்தொட்டு மாயாஜாலம் நிகழ்த்துவது!

 சித் ஸ்ரீராமின் குரல் - 

தொடுவானை எட்டித்தொட்டு 

மாயாஜாலம் நிகழ்த்துவது!

லதா ராமகிருஷ்ணன்

எனக்கு கர்நாடக சங்கீதம் தெரியாது. நல்ல பாடல்களை, ராகங்க ளைக் கேட்டால் ரசிக்க முடியும். எனக்குத் தெரிந்ததெல்லாம் நல்ல சினிமாப் பாடல்கள். எம்.ஜி.ஆ ரின் பாசம் படப் பாடல் ‘உலகம் பிறந்தது எனக்காக, ஓடும் நதிகளும் எனக்காக, சுமைதாங்கி பாடல் - மனிதன் என்பவன் தெய்வமாகலாம், வாரி வாரி வழங்கும்போது வள்ளலாகலாம், கங்கைக் கரைத் தோட்டம், கன்னிப்பெண்கள் கூட்டம், பிதாமகனின் இளங்காற்று வீசுதே, முதல் மரியாதை ராசாவே உன்ன நம்பி, சமீபத்திய நெற்றிக்கண் பாடல் இதுவும் கடந்து போகும்..... இப்படி பல. இவற்றில் சித் ஸ்ரீராமின் சினிமாப் பாடல்களும் அடக்கம்.
சித் ஸ்ரீராம் கர்ணன் படப்பாடலைப்பாடியதற்கு ஃபேஸ்புக் முழுக்க அவரைத் திட்டித்தீர்த்தார்கள். படிக்கக் கஷ்ட மாக இருந்தது. ஏற்கெனவே கர்நாடக இசையின் அடிப்படையில் அமைந்திருந்த அந்தப் பாடலை அவர் ஆலாபனை முதலியவற்றோடு பாடிப் பார்த்திருந்தார். அது ஒரு முயற்சி. மூல பாடகரை, பாடலை மதிப்பழிக்கும் நோக்கம் அவருடைய முயற்சியில் இல்லை என்பதை அவர் அனுபவித்துப் பாடியிருந்ததைப் பார்க்கும்போதும், கேட்கும்போதும் உணர முடிந்தது. அவரைப் பற்றி ஒரு கவிதை எழுதி பதிவேற்றியிருந் தேன்.
பொதுவாக என் கவிதைகளை நான் மொழிபெயர்ப்ப தில்லை. இன்னொரு முறை மூல கவிதையை எழுதுவதுபோல், வலிகூடிய, பரவசமான நினைவின் பின்னணியில் எழுதப்பட்டதெனில் அதை எழுதிய நினைவுகளுக்குள் மீண்டும் காலத்தால் அந்நியமாக்கப் பட்ட நிலையில் , நிராதரவாய் நுழைவதைப்போல், அல்லது அந்நியனாய் நுழைவதுபோல்.... எதன் காரண மாய் எழுதினோம் என்பது மறந்துபோய்விட்டால் அதுவும் ஒருவித வலி தரும். எதற்கு வம்பு?
இன்று மயிலை கபாலீஸ்வரர் கோயிலில் சித் ஸ்ரீராமின் கச்சேரி. என் கவிதையை அவருடைய இசைஞானத்திற் குச் செய்யும் எளிய மரியாதையாக அவரிடம் தரவேண்டும் என்று விரும்பினேன். சித் ஸ்ரீராமுக்கு தமிழ் படிக்கத் தெரியுமோ என்ற கேள்வியெழ என் கவிதையை ஆங்கி லத்தில் மொழி பெயர்த்து தமிழ் -ஆங்கிலம் இரண்டை யும் நாணயத்தின் இரண்டு பக்கங்களாய் இருபுறமும் ஏ4 பக்கத்தில் லேமினேட் செய்து என்னோடு எடுத்துக்கொண்டு போனேன்.
அம்மாவும் நானும் போயிருந்தோம். அம்மா - 80+ நான் 60 + வயது. 60+ வயதாகிவிட்டால் மனதிலுள்ள ரசிகை முடங்கிவிட வேண்டுமா என்ன? உடலின் வயதும் மனதின் வயதும் வேறுவேறு தானே!
முழுக்க முழுக்க பக்திப்பாடல்கள்தான் பாடினார். சந்நதம் வந்தது போல் பாடுகிறார். பாட்டினுள் முழுவதுமாக அடைக்கலமாகி விடும் நிலை; சரணாகதி நிலை. அதே சமயம் அடுத்த பாட்டு குறித்த விழிப்போடு இருக்கவேண்டும். சந்நத நிலையும், முழு விழிப்பு நிலையும் இரண்டறக்கலந்த நிலை ஒருவித உச்சமனநிலையென்றே சொல்லலாம். வாத்தியக்காரர்களுக்கு நிறைய நேரம் ஒதுக்கி வாய்ப்பளித்தார். அவர்களை முதல் ரசிக ராகப் பாராட்டினார்.
சினிமாப்பாடலெதுவும் பாடவில்லை. நிறைய இளைய தலை முறையினர் வந்திருந்தார்கள். ஆனால், கூச்சல் கும்மாளம் போடாமல் சித் ஸ்ரீராமின் ஆலாபனை, உச்சஸ்தாயி, இரண்டு மணி நேரம் தளராத பாட்டுத்திற மையை பிரமிப்போடு பார்த்துக் கொண்டிருந்தார்கள். உண்மையில் அத்தனை முனைப்பான பயிற்சியில்லாமல், அதற்கான நேரத்தையும், மனதையும் ஒதுக் காமல் இப்படியெல்லாம் பாட முடியாது.
என் கவிதை அவருடைய சினிமாப்பாடல் இசைநிகழ்ச் சியை யூட்யூபில் பார்த்த அனுபவத்தைப் பேசுகிறது. அதில் மேடை யெங்கும் தாவிக்கொண்டிருந்தார்! இங்கே இடத்தை விட்டு நகர வில்லை. குரல்மட்டும் தொடுவானை எட்டித்தொட்டு எட்டித் தொட்டு மாயா ஜாலம் நிகழ்த்திக்கொண்டிருந்தது!

நிகழ்ச்சி முடிந்தது. சில இளைஞர்கள் அவர் பின்னால் ஓடினார் கள். எனக்குள் இருக்கும் யுவதி ஓடச்சொன்னாலும் பேசாமல் என் கவிதையோடு வீடு திரும்பிவிட்டேன்!

அந்தக் கவிதைகளை இங்கே தந்துள்ளேன்.



No comments:

Post a Comment