LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Monday, May 2, 2022

கூடுவிட்டுக்கூடுபாய்ந்து…. ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 கூடுவிட்டுக்கூடுபாய்ந்து….

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)


(சமர்ப்பணம் : சக கவிஞர்களுக்கு)

[*வாசகராகவோ மொழிபெயர்ப்பாளராகவோ கவிதைகளை வாசிக்கும் போதெல்லாம் ஒரு கட்டத்தில் அத்தனை கவிகளும், கவிதைக்குள்ளிருப் பவர்களும் கவிதைகளின் புரிந்தும் புரியாமலுமான அர்த்தார்த்தங் களும் நானேயாகிவிடுவது நேர்ந்துவிடுகிறது!
ஒவ்வொரு கவிதையும் கதவைத் திறந்து நம்மை உள்ளே அனுமதிப்பதற்கு சற்று நேரமெடுத்துக் கொள்வதைப் போலவே நமக்குப் பிரியாவிடை கொடுத்து வழியனுப்பிவைக்கவும் நேரமெடுத்துக்கொள்கிறது.
இடைப்பட்ட நேரத்தில் நாமே அந்த வீடும் விருந்தாடியுமாய்….
அப்படி இந்த மாத ‘INSIGHT’-இல் பதிவேற்றியிருக்கும் கவிதைகளில் நான் கூடுவிட்டுக் கூடுபாய்ந்த உணர் வைக் கவிதையாக்க முயன்றிருக்கிறேன். _ ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்]
..........................................................................................................
கூடுவிட்டுக்கூடுபாய்ந்து….
‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)
பிழையான எண் எது என்ற புதிருக்கு
விடைதேடும் பிரயத்தனத்தில்
பேசாத அறுவரிலொருவர் சன்னமாய்
கவிமனதில் பேசத்தொடங்குகிறார்!
பார்த்துக்கொண்டேயிருக்கையில்
மரத்திலிருந்து விழும் இலையைப் பிடிக்க
சாக்கடையிலிருந்து கரங்கள் எழும்பிக்
குவிகின்றன கிண்ணமாய்!
எதுவென்றே தெளிவாகத் தெரியாமல்
மூச்சுத்திணற வைத்துக்கொண்டிருந்த
தோல்விகள் அந்தர மரத்திலிருந்து
விழுதுகளாய்த் தொங்க _
அனந்தகோடி கரங்களால் அவற்றைப்
பற்றிக்கொண்டு
ஆனந்தமாய் அப்படியுமிப்படியும்
ஆடும் கவியைப்
பார்த்துக் புன்சிரித்துக் கண்சிமிட்டுகிறான்
கடவுளாகிய சாத்தான்!
வறண்டிருந்த வாக்கியவியல் தொட்டிக்குள்
சிலந்தி வரிகளைப் புனைந்தவாறிருக்க
கவியின் அறைபிளந்துவரும் கடல்
அவன் கையைப் பிடித்திழுக்கிறது
தன்னோடு நடனமாடச் சொல்லி!
’கீச்சி’யும் ’டாமி’யும் கடலுக்குள்ளிருந்து
துள்ளிக்குதித்துவந்து
கவியின் இருதோள்களிலும் அமர்ந்து
கொள்கின்றன.
நிரம்பிவழியும் தீராப்பள்ளங்களில் அவற்றைத்
துள்ளிக்குதிக்க விடுகிறான் கவி!
விலகச் சொல்லலும் விலகிச் செல்லலுமே வாழ்க்கையென
விளங்கிக்கொள்ள முயலுபவள்
மூலைக்கு மூலை கடவுளைக் காண்கிறாள்
மீண்டும் மீண்டும் கடவுளாகிறாள்!
பெருநேசச் செழிப்புக்கு வழிசொல்லும்
பெண்ணுக்கு
சிறகுகள் கிடைத்துவிடுகின்றன!
தீர்ந்துவிடும் இரவின் துளிகளை
தீராத்தாகத்தோடு எண்ணிக்கொண்டிருக்கிறான்
ஒரு கவி.
புற்றினை மறுபடியும் தீண்டும் தருணத்திற்காய்
வேண்டிக்கொண்டிருப்பதே வாழ்வாக
நெகிழி போத்தலாய் இறுகத்திருகிய மூடியோடு
மிதந்துகொண்டிருக்கும் உடலை
கரை மீதமர்ந்து கண்காணித்துக்
கொண்டிருக்கிறான் கவி!
தேனீரை மலரச்செய்யும் ரசவாதம் அறிந்தவன்
அந்தரத்தில் நீண்ட கோடொன்றில்
அந்தராத்மாபோல் ஒன்றை தரிசிக்கிறான்.
அலைபேசியில் விரியும் ரோஜாக்காட்டில்
கவியின் சிட்டுக்குருவி மூக்கு நுகரும் வாசம்
சுவாசமாக _
பூமிக்குத் திரும்பவே மனமற்ற பறவைக்குத்
தன் எல்லையற்ற மனவெளியில்
இடமளிக்கிறாள் ஒரு கவி!
யசோதரையை நினைவுகூர மறக்கும்
வரலாறுகளைப் பிடித்திழுத்துவந்து
கூண்டில் நிறுத்துகிறாள் வேறொரு கவி!
வரலாறு மறந்தாலென்ன
அமைதியை விழுங்கிய பேரமைதிக்குள்
வருவோர் போவோரெல்லாம் அவளேயாக
இரங்கற்பா பாடிக்கொண்டிருக்கிறாள்
இன்னொரு கவி!
கவி வீசிய நான்காம் கல்லில்
நிறைசூலியாய் நிறைந்துவழிகிறது குளம்!
தன் ஆயிரமாயிரம் முத்தங்களை
வழியெங்கும் வீசிச்சென்றவன்
பின்னும் அட்சயபாத்திரமாய் பெருகியவற்றை
வரிகளாக உருமாற்றிவிட்டான்!
தன் கண்ணுக்குள் வசிக்கவந்திருப்பவளிடம்
என்ன வாடகை கேட்பது என்று புரியாமல்
அவளை ஏறிட்டுப்பார்த்து
அத்தனை அன்போடு வாலாட்டுகிறது நாய்க்குட்டி!
உடும்பாக மாறும் ரோஜாவை
எடுத்துக்காட்டுபவன்
இருளின் பசிக்கும் இருள் மீதான பசிக்கும்
இடையே
வேற்றுமை இருக்கிறதா இல்லையா
என்று தன்னைத்தானே கேட்டுக்கொண்டிருக்கிறான்!
பி.கு: எல்லோரும் நானாகி நானெல்லோருமாகியதோர்
சொல்லவல்லாய நல்வினைப்பயனைச்
சொல்லிச்சொல்லி நெகிழுமென்
சொப்பனக்கிளி.


No comments:

Post a Comment