LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Sunday, May 30, 2021

வலியின் நிறம் ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 வலியின் நிறம்

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)

சரேலென்று அத்தனை அகங்காரமாக
சிறிதும் ஒலியெழுப்பாமல் திரும்பிய கார்வண்டியின் சக்கரங்கள்
சிறுவனொருவனை ரத்தக்கிளறியாக்கிவிட்டுச் சென்றதைக்
காணப்பொறாமல் கண்டித்துப்பேசினால்
அதற்குள் அவனுடைய சாதியையும்
கார்க்காரனின் சாதியையும்
எப்படியோ துப்பறிந்து
அன்றொரு நாள் இன்னொரு காரோட்டி இன்னொரு சிறுவனை இப்படிச் சிதைத்தபோது யாரும் ஏதும் பேசாததற்குக் காரணம் அவன் வர்க்கத்தால் ஏழையென்பதும்
சாதியால் அடித்தட்டிலிருப்பதும்தானே
என்று ஏனையோரைக் குற்றவாளிகளாக்கித்
தங்களை உத்தமசீலராக்கிக் கொண்டுவிடுவது
எப்போதுமே எளிதாக இருக்கிறது சிலருக்கு.
இப்போதைய காரோட்டியின் செயலை பிறப்பின் பெயரால் சிலர் நியாயப்படுத்தத் தொடங்குகிறார்கள்.
பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாகும் பெண்களின் அகபுற வலிகளையெல்லாம்
அவரவர் கைவசமிருக்கும் இவையனைய எடைக்கற்களால்
அளந்துபார்த்துக் கடைவிரிக்கும் மொத்த வியாபாரிகளும்
சில்லறை வியாபாரிகளும் உண்டு
உலகமயமாக்கலுக்கு முன்பும் பின்பும்.
நலிந்தழிந்து இதோ
குற்றுயிரும் குலையுயிருமாகக் கிடக்கும் ஒரு சிறுவனின்
தலைமாட்டில் நின்றுகொண்டு
காலாதிகால வர்த்தமானங்களைப் பேசிக்கொண்டிருக்கிறார்கள்.
சிறுவன் இறந்துவிட்டால் இன்னும் நிறையப் பேச முடியும்.
ரணவலியின் மீதேறி நின்று வெறுப்புமிழ் பிரசங்கம் செய்தபின்
அங்கிருந்து ஒரே தாவலில் சென்றுவிடுவார்கள்
அவரவர் ‘IVORY TOWER'களுக்கு’




குறுமூக்குச் சிறுமதியாளர்களுக்கு ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 குறுமூக்குச் சிறுமதியாளர்களுக்கு

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)
மன்னிக்கவும்
கல்விக்கூட வகுப்புகளைக் கடந்து
வாழ்க்கை வகுப்புகளினூடாய் கற்றவாறே
போய்க்கொண்டிருக்கிறேன்....
நிறைய கேட்க முடியும் _
நாணயத்திற்கு மட்டுமா இரண்டு பக்கங்கள்
நாணயத்திற்குக்கூட இரண்டு பக்கங்கள் மட்டும்தானா?
நாணயத்திற்கு இரண்டுபக்கங்கள் எவ்வாறிருக்க முடியும்?
நாணயமும் நாநயமும் ஒருசேர வள்ளுவர் சொல்லிச்சென்றதைத் தாண்டி நம்மால் சொல்லிவிட முடியுமா என்ன?
வாய்மையெனப்படுவது யாதெனில் என்று சொல்லத்தொடங்கினாலே
’நான் சொல்வது மட்டுமே’ என்று நீங்கள் சொல்லி அதற்கு நான் ’ஆமாம் சாமி’ போடவேண்டும் என்று எதிர்பார்ப்பது என்ன நியாயம்?
எனக்கு அரசியலை அரிச்சுவடியிலிருந்து கற்றுத்தர முயல்வது வீண்விரயம்.
உங்களுக்கு மாணாக்கர்கள் எப்போதுமே தேவை; தெரியும்.
கற்றுத்தருவதாலேயே ஒருவர் ஆசிரியராகிவிட முடியாது என்று சொன்னால் உங்களுக்குப் புரியுமோ?
எனது கடிவாளப்பார்வையென்றால் உங்களுடைய கண்பட்டைகளுக்கு என்ன பெயர்?
அறிவு, அறியாமை யனைத்தையும் அகராதியில் உள்ளபடியா அளக்கிறோம் நாம்?
உண்மையில் உங்களுக்குத் தேவை மாணாக்கர்கள்கூட அல்ல;
தன்மதிப்பிழந்த அப்பட்ட சீடர்கள்.
சுயசிந்தனையைப் பறிகொடுத்ததில் பெருமிதங்கொள்வோர்
ஆத்திக பக்தர்கள் அல்லது நாத்திக பக்தர்கள்
அருள்பாலிக்கவேண்டி யும்மை அண்டியிருப்பவர்கள்…..
ஆனால், ’உங்கள் தேவை எனது சேவை’ என்ற விளம்பர வாசகத்தை
நான் எதற்காக வழிமொழியவேண்டும், கூறுங்கள்?
அதற்கு வேறு ஆளைப் பாருங்கள்.’



தன்மானம் சுயபுத்தி மனசாட்சி கண்டதே காட்சி……. ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 தன்மானம் சுயபுத்தி மனசாட்சி கண்டதே காட்சி…….

‘ரிஷி’

(லதா ராமகிருஷ்ணன்)
சக மனிதர்கள்பால் நம்பிக்கை குறைந்துவிட்டது என்று
யார் சொன்னது?
தனக்குப் பிடித்த ஒருவர் சொல்லும் எல்லாவற்றையும்
நம்பி ஏற்கத் தயாராயிருப்போர்
எண்ணிக்கையில் பெருகிக்கொண்டே....
பாருங்களேன் _
நேற்று ஒருவர் சூரியன் சதுரவடிவில் உதித்ததாகச்
சொன்னதைப் படித்து
சற்றும் தாமதியாமல் ‘லைக்’ போட்ட
அவருடைய அதிவிசுவாசி
அன்று பார்த்து தான் நேரங்கழித்து எழுந்ததற்காகத்
தன்னையே செருப்பாலடித்துக்கொண்டார்.
அதை அலைபேசியில் படம்பிடித்துப்
பதிவேற்றிய இன்னொருவர்
முன்னவர் அணிந்திருந்தவை ரப்பர் காலணிகள் அல்ல என்றும்
பூட்சுகள் அல்லவென்றாலும்
பூட்சுகளுக்கொப்பான கனமானவை என்றும்
அடர் அச்சுருவில்
அடிக்கோடிட்டுக்காட்டியிருந்தார்.
பாறை நுனியில் சப்பணமிட்டு அமர்ந்தபடி
தன் வெறும் காலை கஷ்டப்பட்டு உயர்த்திக்கொண்டுபோய்
முன்நெற்றியில் அடித்துக்கொள்வதைக்
காணொளியாய் பதிவேற்றியிருந்த இன்னொருவரைப் பார்த்து
இருவரில் யாருடைய அபிமானமும் விசுவாசமும்
அதிக ஆழமானது
என்று ZOOMஇல் ஆரம்பித்த விவாதம்
கொரோனாவுக்கு திட்டவட்டமாய் மருந்து கண்டுபிடிக்கப்படும்வரை
தொடரும் என்றே தோன்றுகிறது.

வாசகப்பிரதியின் வால் ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 வாசகப்பிரதியின் வால்

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)
தன்னை நேர்த்தியாக எழுதியமைக்காக மகிழ்ந்த கவிதை
தன் அன்பைக் கவிஞரிடம் தெரிவிக்க விரும்பியது.
கவிதையில் இடம்பெற்றிருந்த வால் என்ற சொல்லுக்கு உயிர்கொடுத்து
அதை ஒருநாள் மட்டும் பயன்படுத்தலாம் என்று சொல்லி கவிஞர்க்கு அளித்தது.
கவிதையை இன்னும் கொஞ்சம் நன்றாக எழுதியிருக்கலாமே என்றுதான் எப்பொழுதும்போலத் தோன்றியது கவிஞருக்கு.
என்றாலும் நன்றாயிருக்கிறது என்று கவிதையே பரிசளித்ததில் நிறைவுணர்ந்தது மனம்.
அதேசமயம் இழப்பையும்.
தன்னிலிருந்து உருவான கவிதை
இனி தனக்கு உரிமையில்லாததாய்…..
திறந்தமுனைக் கவிதையெழுதும்போதுகூட
இத்தனை குழம்பியதில்லை –
கையில் தரப்பட்ட வாலை அதன் வழக்கமான இடத்தில்தான் பொருத்திக்கொள்ளவேண்டுமா
அல்லது வேறு எங்கு வேண்டுமானாலுமா
என்று திணறியது மனம்.
கண்ணுக்குத் தெரியாத கடவுள்போல்
அதைத் தன் பின்பக்கம் பதித்துக்கொள்ளப் பிடிக்கவில்லை.
நீளம் மிகக் குறைவாயிருந்த வால் நாய்க்குட்டியினுடையதா
யானையினுடையதா
அல்லது வேறு ஏதாவதா
என்பதே தெளிவாகவில்லை.
அணிலுடையதல்ல என்றே தோன்றியது.
ஆடிமுன் நின்று அந்த வாலை கை கால் இடுப்பு என்று பொருத்திப் பார்த்துத் திருப்தியுறாமல்
ஒருவேளை கவிதையில் ஏதேனும் துப்பு கிடைக்குமோ என்று தன் கவிதையைத் தானே யொரு வாசகராய்ப் படித்தபோது
’இறுக மூடியிருந்த கரிய பெரிய விழிகளுக்குள் ளாகக்கண்ட கொடுங் கனாவால்’
என்று ஆரம்பித்த 16 வரிக்கவிதையின் இறுதிவரியில்
‘பேனாவால் எழுதப்பட்டவையெல்லாம் பேரிலக்கியமாகிடாது’ என்பது
பே நா வால் என்று அச்சாகியிருப்பது புலப்பட்டது.


ஒரு குரலை ஒடுக்குவதற்கான வழிகள் ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 ஒரு குரலை ஒடுக்குவதற்கான வழிகள்

‘ரிஷி’

(லதா ராமகிருஷ்ணன்)
உரத்து ஒலிக்கும் குரல் அடுத்திருப்பவர்க்குக் கேட்காதபடி
தொலைக்காட்சிப் பெட்டிக்குள்ளிருந்தெழும் மிகையுணர்ச்சி வசனங்களின் ஒலிகூட்டிவிடவேண்டும்.
உடனே விரைந்தோடி வாங்கவரும்படி வீறிட்டுக்கொண்டிருக்கும் விளம்பரங்களை நம்புவது உத்தமம்.
உண்மைக்காக அலறிக்கொண்டிருக்குமொரு குரலுக்குரிய முகத்தில்
கண்மையோ, கரியோ, தாரோ கொண்டு கருப்பைத் தீற்றிவிடவேண்டும்.
துடைத்தெடுக்க நேரமெடுக்கும்படியாக அழுத்தமாக அப்புவது
எப்பொழுதுமே நேரிய பலனளிக்கும்.
அதைவிட எளிதாக, அக்குரலை நகலெடுத்துப் பேசிக்காட்டி அதன் உள்ளடக்கத்தை நகைச்சுவையாக்கிவிடலாம்.
நம்மூரில் மட்டுமல்ல எங்கேயுமே நகைச்சுவைக்கு மவுசு அதிகம்தான்.
ஒற்றைக்குரல்தானே என்று சற்றே அலட்சியமாயிருந்துவிட்டால் ஆபத்து.
அற்றைத்திங்களில் அப்படியிருந்தது அதன்பிறகு பெருவெள்ளமாகப் பீறிட்டதெல்லாம் வரலாறு.
சற்றைக்கொருதரம் முற்றுப்புள்ளிவைக்க மறக்கலாகாது.
குரலின் நிறபேதங்களாக தங்களுக்குத் தோன்றியவற்றையெல்லாம்
தொல்பொருளாராய்ச்சி முடிவுகளாகத் தரத் தெரியவேண்டும்.
குறிப்பிட்ட ஒரு குரலை ஒடுக்குவது அறச்செயலெனவும்
குரலின் பொருளில் சாரமிருந்தாலும் அதன் தொனி அரதப்பழசு என்பதாய்
பெரிய பெரிய வார்த்தைகளில் பூடகமாய்ப் பேசவேண்டும்.
கவிதையில் இருண்மையைப் பழிப்பது வேறு.
காற்றுள்ளபோதே தூற்றிக்கொள் என்பார் காற்றைத்தூற்றுவதாகக் கூறு
முடிந்தால் வழக்குப் போடப் பாரு.
சேற்றில் முளைத்த செந்தாமரையென்று சொல்லாமல்
சொல் செந்தாமரை முளைத்த சேறு.
சிற்றுலா வருமோ இனி மாடவீதியில் தேரு ….
_ இன்னும் நூறு நூறு
சம்பந்தமில்லாமல் பேசி சத்துள்ளதைப் பேசுவதை
வெத்துக்குரலாக்கி மொத்தமாய் வீசியெறியக்
கற்கவேண்டும் கசடற.
சிதறுதேங்காயைக்கூடப் பொறுக்க விடலாம்
உண்மைக்காய் கதறுங்குரலை
ஒரு கணமும் பிறர் உற்றுக்கேட்பதைப் பொறுத்துப்போகலாகாது.
இறுதிமுயற்சியாக, அல்லது, இடையிலேயே கூட
உறுத்தும் குரலை அறுத்தெரியவேண்டியது அவசியம்.
ரகசியமாகவோ அல்லது பட்டப்பகலிலோ
அதன் குரல்வளையை இறுக நெரிக்கவேண்டும்.
உயிர் பிரியாமல் பார்த்துக்கொள்வது முக்கியம் –
கொலைக்குற்றத்திற்கு ஆளாகிவிடக்கூடாதல்லவா….
இதுபோலுமிங்கே இருத்தலியல்.
இன்னும் நீண்டுகொண்டே போகும் பட்டியல்.

இறப்பரசியல் ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 இறப்பரசியல்


‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)
இருந்தாற்போலிருந்து ஒரு காலை இறந்துகிடந்தவன்
தன்னைத்தான் கொலைசெய்துகொண்டான் என்று திரும்பத்திரும்ப உருவேற்றப் பார்த்தவர்களைப் பார்த்து
’பாருங்கள் அந்தக் குரல்வளை நெரிக்கப்பட்டிருப்பதன்
அடையாளங்களைப் பாருங்கள்’ என்று சுட்டிக்காட்டியவன்
நேரத்தை வீணாக்குவதாய் கரித்துக்கொட்டப்பட்டான்.
எரிக்கப்பட்ட சடலத்தின் சாம்பலைக் காட்டி
காட்டும் படங்களெல்லாம் சித்தரிக்கப்பட்டவை யென்றவர்கள்
மாட்டேன் ஒப்புக்கொள்ள மாட்டேன் என்பவனைக் காட்டப்பார்த்தார்கள்
பித்தனாய்
பின் எத்தனாய்
உன்மத்தனாய்
ஊரின் உறக்கத்தை ஒட்டுமொத்தமாய்க் கெடுப்பவனாய்.
படுத்தால் தூங்கவிடாமல்
மனசாட்சியின் கதவைத் தட்டிக்கொண்டேயிருக்கும் கைகளை வெட்டிவிடவேண்டும் என்று பரபரத்த
கைகள் பல
இறந்தவனின் பிரதிபோல் ஒன்றை உருவாக்கி
எடுத்துவந்து
’இறக்கவேயில்லை யாரும்’
என்று ஒருசேரக் குரல்கொடுத்தன.
இதுவல்லவே இறந்தவன் என்று முணுமுணுத்த சிலரின்
கதை முடிக்கவும்
இதுவே அவன் இதுவே அவன் என்று பெருங்குரலில் முழக்கமிடச் சிலரையும்
ஒரே சமயத்தில் கணிசமான எண்ணிக்கையில் ‘ரோபோ’க்களைத்
தயாரித்து
ஊருக்குள் அனுப்பியதில்
செத்தவன் சாகவேயில்லை என்ற முத்திரை வாசகம்
தெருத்தெருவாய் நட்டுவைக்கப்பட்டது.
செத்துவிட்டானே ஐயோ என் மகன் செத்துவிட்டானே என்று
பேரோலமாய் கதறிக் கத்திக்கொண்டிருந்த பெரியவர் முகத்தில்
ஓங்கியொரு குத்துவிடப்பட
அவசர அவசரமாய் அங்கிருந்து அகன்றவர்கள்
முத்திரை வாசக அட்டையைக் கையில் தாங்கிச் சென்றார்கள்
தத்தமது வழியில்.
இறந்தவனின் வளர்ப்புநாய் மட்டும்
மறுபடியும் மறுபடியும்.அவன் அறைக்குள்ளே நுழைந்து
இறுதியாகக் அவன் கிடந்த படுக்கைப் பக்கம்
வாலைக் குழைத்தபடி கலங்கிநின்றது.

குகைமனம் ‘ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)

 குகைமனம்

‘ரிஷி
(லதா ராமகிருஷ்ணன்)

கதவுள்ள குகையெதுவும் கிடையாதென்றே நினைக்கிறேன்.
சில குகைகளுக்கு வாயில்போல் திறப்பு இருக்கும்
உள்ளே சற்றே அகன்றிருக்கும்
சில குகைகள் மலைகளில்
சில கடலாழங்களில்
சுற்றிலும் சூழ்ந்திருந்த நீர் உள்ளே வரா
நதியடி பாறைப்பிளவுக் குகையொன்றில்
பதுங்கியிருந்த சேங்கள்ளனை
உடலெல்லாம் எண்ணெய் தடவி அவன் கையிலகப் படாமல்
சிறைப்பிடித்த தன் பாட்டனாரின் பெருமையை
இன்னும் அவ்வப்போது என் தாய் சொல்லக் கேட்டுக்கொண்டிருக்கிறேன்.
சில குகைகளுக்குள் சூரியக்கதிர்கள் உள்நுழையும்
சிலவற்றில் அனுமதி மறுக்கப்படும்.
உள் அப்பிய இருட்டில்
அடுத்த அடியில் அதலபாதாளம்போல்
அச்சம் நிறைந்ததில் அரைக்கணம் விக்கித்துநின்று பின்
ஆர்வம் அதைவிட நிறைக்க அடியடியாய் நகரும் கால்களில்
இடறாத பொருளெல்லாம் இடறும்போல்
படக்கூடும் நீண்டகைகள் பொக்கிஷப்பெட்டகம் மீது
ஐயோ காலைச்சுற்றுவது என்ன கந்தல் கயிறா? கருநாகமா?
காட்டுராஜாவின் உறுமலா அது? அல்லது நான் மூச்சுவிடும் ஓசையா?
இருளின் ஒளியில் எனக்குத் தெரியக்கூடும் இருபுறமுமான இறுகிய பாறைச்சுவர்களில் இல்லாத சித்திர எழுத்துகள்.
குகையின் மறு ஓரம் யாரேனும் சங்கிலியால் பிணைக்கப்பட்டிருக்கிறார்களோ?
எத்தனை காலமாய்?
ஒருவேளை சற்றே எக்கினால் மேற்புறம் என் தலை தொடும் இடத்தில்
தேவதையொன்று எனக்காகத் தன் இறக்கைகளைக் கழற்றிவைத்திருக்கலாம்.
தேடிப்போகாமலேயே குகைகளுக்குள் புகுந்துபுறப்படும் வாழ்வில்
தேடித்தேடிச் சரண்புகும் குகைகளாய் கவிதைகள்.

ஒப்பனைகள் பலவிதம் ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 ஒப்பனைகள் பலவிதம்

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)


அதுவொரு அதி இனிமையான பாடல்.
கருப்பு-வெள்ளைக்காலத் திரைப்படத்தில்
திரும்பத்திரும்பக் காதலியைத் திரும்பிப் பார்த்தவாறே விலகிப்போய்க்கொண்டிருந்தான் காதலன்.
கண்களில் நீர்ப்படலத்தோடு மரத்தைஇறுகக் கட்டிக் கொண்டு
போகிறவனையே ஏக்கத்தோடு பார்த்துக்கொண்டிருந்த காதலியின்
பின்புறம் வெகு கவனமாக ஒருபக்கமாய்த் துருத்தி நீண்டிருந்தது ஒயிலாய்.
அழுதாலும் அழகாக அழத்தெரிந்தவரே அதிக நாள் வெற்றிகரமான கதாநாயகியாக வலம்வர முடியும்....
கண்பொத்திக் காதால் பாட்டைக் கேட்ட பின்
அருகிலிருந்த இலக்கிய இதழைப் பிரித்தால்
அங்குமொரு எழுத்தியவாதி
தருவிக்கப்பட்ட ஒயிலை
இயல்பென்ற பெயரில் இடுப்பில் தாங்கி
புகைப்படத்தில் புன்னகைத்துக்கொண்டிருந்தார்……
இப்போது முதலில் கண்ட ஒலி-ஒளிப் பாடற்காட்சியை
பார்த்தால்
அத்தனை ஒவ்வாமையுணர்வு தோன்றாதென்றே தோன்றுகிறது.

போக்குவரத்து ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 போக்குவரத்து

‘ரிஷி’

(லதா ராமகிருஷ்ணன்)

ஆட்டோவில் விரையும்போதுதான்,
அதன் அதிரடி வளைவுகளின்போதுதான்
அதிகம் நினைக்கப்படுகிறார் கடவுள்.
ஆனாலும் அதன் அதிவேகத்தில்
வீதியோரத்தில் படுத்துக்கிடக்கும் அந்த
முன்னாள் மெக்கானிக் இந்நாள் பிச்சைக்காரர்
என் பார்வைக்குப் படாமல்போவது
எத்தனை பெரிய ஆறுதல்.
வண்டிகள் ஓடாத மாதங்களில்
அந்தப் பேருந்துநிறுத்த அமர்விடம்
மெலிந்தொடுங்கிய முதியவரொருவரின்
திண்டுமெத்தை திண்ணைவீடு தென்னந்தோப்பு….
இன்று….
தேட முற்படும் கண்கள் கையறுநிலையில்
திரும்பிக்கொள்கின்றன மறுபக்கம்.
நாளை மற்றுமொரு நாளுக்கும்
இன்று புதிதாய் பிறந்தோமுக்கும்
இடையில்
நடைப்பயணம் மனக்கால்களில்.
கடையிருந்தால் காசில்லை,
காசிருந்தால் கடையில்லை.
மடைதிறந்த வெள்ளத்திற்கும்
உடைப்பெடுத்த அணைநீருக்குமுள்ள
ஒற்றுமை வேற்றுமை என்னென்னவெனும்
கேள்வியின் அர்த்தனர்த்தங்கள்
விடைக்கப்பாலாக
அடைமழை வருவதற்கான அறிகுறியாய்
புறத்தே கருமை அப்பியிருக்க,
வெறுமை நிரம்பிய கூடத்திலிருக்கும்
இருக்கையொன்றில்
அருவமாய் அமர்ந்திருப்பவருக்கு
நான் எவ்வாறு வணக்கம் தெரிவிக்க?

அவரவர் உயரம் ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 அவரவர் உயரம்

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)
உயரத்தில் உங்களை உட்கார்த்தத் தயார்
உங்களுக்குத்தான் அதற்கான உத்வேகம் இல்லை
யென்பவரிடம்
உயரம் என்றால் என்ன என்று கேட்க
உன்மத்தம்பிடித்தவரைப் பார்ப்பதுபோல்
அரையடி பின்வாங்கி
உற்றுப்பார்க்கிறார்.
பின் பயம் நீங்கி பரிகாசம் பொங்க
’உருப்பட்டாற்போல்தான்’ என்றுகூறி
படபடவென்று கைதட்டிக் கெக்கலிப்பவரைப் பார்த்து
ஒன்றும் புரியாமல் நிலம்படர்ந்தபடி
அத்தனை இயல்பாய் நகர்ந்துகொண்டிருக்கின்றன
ஆகாயமும்
அந்திச் சூரியனும்.