ஆசை – பேராசை – நிராசை
ஆசைக்கு அளவில்லை.
ஆசையே அலைபோலே நாமெல்லாம்
அதன்மேலே......
அத்தனையும் அவர் அறிந்ததே.
ஆனாலும் –
ஆயிரம் கட்டுரைகளை எழுதிய
அபூர்வ சிந்தாமணியான அவர்
இன்னொருவர் எழுதிக்கொண்டிருந்த
இருபது கதைகளையும்
அதற்கு அவருக்குக் கிடைக்கும்
அமோக வரவேற்பையும் பார்த்து
தானும் எழுதத் தொடங்கினார்.
அதுவும் அவரைவிடப் பெரியாளாகப்
புலப்படவேண்டும் என்ற
ஆறா வெறியோடு
அவரைக் கீழிறக்கவேண்டுமென்ற
குறிப்பான இலக்கோடு.
பானை வனைபவரைப்பார்த்து ஏன் இப்படி
போட்டியிடத் தோன்றவில்லையெனக்
கேட்டபோது
பல்லைக் கடித்துக்கொண்டு
பொறுக்கியெடுத்த
கெட்டவார்த்தைகளைக்
கொட்டித்தீர்த்தார்.
தனது கதைகளை யாரும் கண்டுகொள்ளவே
யில்லையென்பதைப் பார்த்து
ஆத்திரத்தின் உச்சாணிக்கொம்பில்
ஏறிநின்றவரை
வேடிக்கைபார்த்தவாறே
கடந்துசெல்கிறது
இன்று


No comments:
Post a Comment