LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Sunday, November 30, 2025

சிறுகதை - எதுவும் கடந்துபோகும் _ அநாமிகா

 சிறுகதை

எதுவும் கடந்துபோகும்


_ அநாமிகா

(*October 2025 திண்ணை இணைய இதழில் வெளிவந்தது)

 

க்கா, இவனுக்கு அடுத்த மாதம் கல்யாணம். யாருன்னு தெரியறதா?

தெரியவில்லை. இந்த முகத்தைப் பார்த்த, இந்த இளைஞனோடு பேசிய ஞாபகமில்லை.

அந்த இளைஞனின் அம்மாவும் வந்திருந்தார். நான் தங்கையின் வீட்டுக்குப் போயிருந்தேன்.

தங்கையிடன் பத்திரிகையை நீட்டிய அந்தத் தாய் ஒரு புன்னகையோடு என் பக்கம் திரும்பி, “நீங்களும் அவசியம் வாங்க” என்றாள். “இன்னும் நிறைய வீடு பாக்கியிருக்கு” என்று கூறியபடி வேகவேகமாக அவள் போக பின்னால் அந்த இளைஞனும் போனான்.

”என்னக்கா இது, யாருன்னு தெரியலை?”

“இல்லையே”

“தினேஷ்க்கா – மறந்திட்டியா?”

”ஓ! பசங்க சீக்கிரமே வளந்துடுவாங்க – தோற்றமே மாறிடும். அதுவும், இவனைப் பாத்து 15 வருஷத்துக்கு மேலாகியிருக்குமே – அதான் சுத்தமா நினைவுக்கு வரலை”

”ஆனாலும்..... சின்னப்பையனா இருக்கறப்ப அது தன் வீட்டிலே இருந்ததை விட நம்ம வீட்டிலே, அதுவும் உங்கூட இருந்ததுதானே அதிகம்.... சரிக்கா, நான் பக்கத்துக் கடையிலே போய் பால் வாங்கிட்டு வந்திடறேன். உனக்கு சூப்பரா ஒரு டிகாக்‌ஷன் காப்பி போட்டுத்தரேன். உன்னைச் சாக்கு வச்சு நானும் குடிக்கலாம்!”

படியிறங்கி அவள் போனாள்.

அந்த இளைஞனுக்கு நம்மை நினைவில்லை என்று தெரிந்து நிம்மதியா யிருந்தது தினேஷுக்கான நல்வாழ்த்துப் பிரார்த்தனை தன்னிச்சையாக மனதில் எழுந்தது.

ல வருடங்களுக்கு முன்பு, அருகிலிருந்த குடியிருப்பு வளாகத்தில் தான் அம்மா, நான், அப்பா, தங்கை எல்லோரும் இருந்தோம். பக்கத்துவீட்டில் வாடகைக்குக் குடிவந்தார்கள். அந்த இளம்பெண்ணின் கையைப் பிடித்து நின்றுகொண்டிருந்த சிறுவன் துறுதுறுவென்று அங்கேயிங்கே பார்த்துக் கொண்டிருந்தான். ஆனால், கேட்ட கேள்விகளுக்கு பதில் எதுவும் தரவில்லை.

கேட்டதற்கு, “டீச்சர் சொல்றாங்க – யாராவது அவங்கிட்டே பேச்சுக் கொடுத்துக் கிட்டே இருக்கணும்னு. ஆனா, வீட்டிலே எக்கச்சக்கமா வேலை கெடக்கு. எப்படிங்க இவங்கிட்டே பேசிக்கிட்டேயிருக்கறது... ”

அவள், அவளுடைய கணவர், வயதான மாமியார், நான்கு வயதுக் குழந்தை தினேஷ், அவனுடைய அண்ணன் ஏழு வயது ரவி. வேலைக்கு ஆள் வைத்திருக்கிறார்கள்.

***   ***   ***

சின்னக் குழந்தைக்கு உறவுமுறைகள் தெரியாது. அதனிடம் யார் அன்பு செலுத்துகிறார்களோ, அதற்காக நேரம் செலவழிக்க யார் தயாராக இருக்கிறார்களோ – அவர்களிடம் அது அப்படி ஒட்டிக்கொள்ளும்.

தங்கை வேலைக்குப் போவதால் அவளுடைய குழந்தையை எங்கள் வீட்டில் விட்டுவிட்டுப் போவாள். மாலை அழைத்துப்போக வரும்போது அவளுடைய பிள்ளை சரவணன் அப்படி அழும். என்னை விட்டுப்போக மாட்டேன் என்று அடம்பிடிக்கும். அப்போது தங்கையின் கண்களில் ஒருவித பயமும் குரோதமும் சூழ்வதைப் பார்த்திருக்கிறேன்.

“நான் லலிதா வீட்ல தான் இருப்பேன்...”

“அடிக்கக் கையோங்குவாள் தங்கை “பெரியம்மான்னு கூப்பிடுடா – லலிதாவாமே லலிதா_

“”புஷ்பா – நாங்க இரண்டு பேரும் ஃப்ரெண்ட்ஸ். நான் தான் அவனை பேர் சொல்லிக் கூப்பிடச் சொல்லியிருக்கேன்”

“இது என்ன பழக்கம்க்கா – மத்தவங்களையும் இப்படியே மரியாதையில்லாம கூப்பிடப் பழகிடுவான்”

”அவன் பாட்டியை பாட்டின்னு, அப்பாவை அப்பான்னுதானே கூப்பிடறான். அப்படியெல்லாம் ஒண்ணும் ஆகாது – கவலைப்படாதே”

வீட்டிலிருந்தபடியேதான் நான் வேலைபார்த்துவந்ததால் ‘குழந்தையைப் பார்த்துக்கொள்வதாகச் சொல்லியும் பிடிவாதமாக தொலைவில் உள்ள பள்ளிக்கு மாற்றி அங்கேயே ஒரு குழந்தைக் காப்பகத்தில் அவள் வரும்வரை இருக்கும்படி செய்தாள். சரவணன் அழுததைப் பார்க்க வருத்தமாக இருந்தது. ஒருநாள் அவளும் குழந்தையுமாக வந்திருந்தபோது நான் செய்துகொடுத்த உப்புமாவை சரவணன் ஆசைஆசையாக சாப்பிட்டதைப் பார்த்து “இதென்ன. உப்புமாவை இப்படிச் சாப்பிட்டா உடம்புக்கு என்னாகும்? அப்புறம் டாக்டர்கிட்டே தூக்கிட்டுப்போய் நானில்லே அல்லாடணும்” என்று ஆங்காரமாய் தங்கை குழந்தை முதுகில் அறைந்து அவன் வாயிலிருந்த உப்புமாவை வாயிலெடுக்கவைத்ததில் விஷயம் விளங்கியது.

மனதளவில் நான் எந்த உறவிடமும் விலகியே இருப்பேன். அது இயல்பாகி விட்டது. வலிகள், ஏமாற்றங்கள், உடைமையுணர்வு, போட்டி, பொறாமை யெல்லாம் அண்டாது...

கொஞ்சங்கொஞ்சமாக, குழந்தையைக் கூட்டிக்கொண்டுவருவது குறைந்தது. “நிறைய ஹோம்வர்க் கொடுக்கறாங்கக்கா” என்றாள் தங்கை. இன்னொருநாள், “இப்பல்லாம் உன்னைக் கேட்கறதேயில்லை தெரியுமா? நான் தான் பெரியம்மாகிட்டே போன்லயாச்சும் பேசுடான்னு அப்பப்ப சொல்வேன் - கேட்டாத்தானே” என்று குறைசொல்வதுபோல் உள்ளூர மகிழ்ச்சியும் நிம்மதியு மாகச் சொன்னாள்.

“குழந்தைகள் வளர வளர அவர்கள் உலகம் விரிகிறது..... புது நண்பர்கள், புது சூழல், புது விளையாட்டுகள் – “ என்று நான் உண்மையிலேயே நிம்மதியாக சிரித்துக்கொண்டே சொன்னதை அவள் அவ்வளவாக ரசிக்கவில்லையென்று தோன்றியது.

 

***   ***   ***

தினேஷின் அம்மா வேலைக்குப் போகவில்லையானாலும் குழந்தை என் னோடு ஒட்டிக்கொண்டு எங்கள் வீட்டிலேயே இருக்க ஆரம்பித்தான். அம்மா அடித்தாலும் வாயை இறுக மூடிக்கொண்டு அடம்பிடிப்பவன் இங்கே ஏதாவது கதையை இட்டுக்கட்டிச் சொல்லிக்கொண்டே ஊட்டிவிட்டால் கொஞ்சம் அதிகமாகவே சாப்பிட்டான். மொட்டை மாடிக்குக் கூட்டிச்சென்று மேகம், நிலா, நட்சத்திரம் என்று காட்டினேன். வார்த்தைகளைச் சொல்லி திருப்பிச் சொல்லச் சொன்னேன். எங்கள் குடியிருப்பு வளாகத்தின் வெளி வாயிலுக்கு அழைத்துச்சென்று கார், பஸ், ஆட்டோ, சைக்கிள் என்றெல்லாம் சொல்லி, சொல்லச் செய்தேன். அவனுடைய வகுப்பில் அவன் இப்போ தெல்லாம் அருமையாகப் பேசுவதாகவும், கேள்விகளுக்கு டக்டக்கென்று பதிலளிப்பதாகவும் அவனுடைய அம்மா பெருமைபொங்கத் தெரிவித் தாள்.

அவன் அம்மாவுக்கோ, பாட்டிக்கோ குழந்தை என்னிடம் ஒட்டிக்கொண்டிருப் பதில் எந்த பதற்றமுமிருக்கவில்லை என்பது நிம்மதியாயிருந்தது. ஆனால், வீட்டுவேலையெல்லாம் முடித்து என்னுடைய கணினிவேலையைச் செய்ய லாமென்றால் அப்போது பார்த்து தினேஷின் பாட்டி கதவைத் தட்டுவாள். “பையன் உங்களைப் பார்க்கணும்னு அழறான். அடம்பிடிக்கிறான்”, என்று கூற தினேஷ் பின்னாலிருந்து எட்டிப்பார்க்கும். “உள்ள வா!” பிறகென்ன – இருவரு மாக கணினியில் எல்லாக் கார்ட்டூன்களையும் பார்த்துக்கொண்டிருப்போம். சிறுவன் கைதட்டிச் சிரித்து ஆர்ப்பரிக்கும்!

ஒருநாள் கதவின் அந்தப்பக்கம் கிசுகிசுப்பாய் தினேஷின் அம்மாவினுடைய குரல் கேட்டது. “தினு, கதவைத் தட்டு – லலிதா வந்தாச்சு! “

குழந்தை கதவைத் தட்ட, திறந்ததும் “நானும் மாமியாரும் கடைக்குப் போறோம். இவன் வர மாட்டேன் – உங்கவீட்லதான் இருப்பேன்னு அடம் பிடிக்கிறான்..... நாங்க சீக்கிரமே வந்திடுவோம்” என்று சிரித்துக்கொண்டே கூறினாள் அவன் தாய்.

போனவர்கள் நான்கு மணிநேரம் கழித்துத்தான் திரும்பினார்கள்..

இன்னொரு நாள் கடைப்பக்கம் போன போது கடைக்காரர் சொன்னார் – “ உங்க பக்கத்துவீட்டுக்கார அம்மா இப்பத்தான் வந்துபோனாங்க.  குழந்தை யைப் பத்திக் கேட்டேன். அவங்க குழந்தையைப் பாக்கலைன்னா பரிதவிச்சுப் போயிடிறீங்களாமே – அதான், அவங்க குழந்தையை எப்பவும் உங்ககிட்டேயே விட்டுவச்சிருக்காங்களாம்...’

”என்னம்மா – இப்பல்லாம் ஆன் -லைன் வேலையைக் குறிச்ச நேரத்திலே முடிக்க மாட்டீங்கறேங்க  - உடம்பு சரியில்லையா?“ என்று கொஞ்சம் அக்கறையும் நிறைய உள்ளடக்கிய கோபமுமாகக் இரண்டு மூன்று முறை கேட்டார் என் முதலாளி.

***   ***   ***

தினேஷ் கதவைத் தட்டியபோது திறக்காமலிருந்தேன். இன்னும் அழுத்தமாக அவனுடைய பாட்டி தட்டியபோது திறந்து, இல்லைங்க – முடிக்கவேண்டிய வேலையிருக்கு”

“அவன் பாட்டுக்கு விளையாடிக்கிட்டிருக்கட்டும். நீங்க வேலையைப் பாருங்க!” என்று அந்தப் பெண்மணி அலட்சியமாகக் கூறியபோது அழுத்தமாக மறுத் தேன். “இல்லைங்க, அப்படிச் செய்யமுடியாது. குழந்தைன்னா அதுங்கிட்ட தான் முழு கவனமும் இருக்கணும். கூட்டிக்கிட்டுப் போயிடுங்க”

’என்னைக் கைவிட்டுவிட்டாயே’ என்பதுபோல் குழந்தை என்னைப் பார்த்த பார்வை என்னைக் குற்றவாளியாக உணரவைத்தது. விரும்பும் எல்லோருக் கும் கொடுக்க நம்மிடம் போதிய நேரமில்லை என்பதே உண்மை என்று எனக்கு நானே சொல்லிக்கொண்டேன். கொஞ்சங்கொஞ்சமாக தினேஷ் எங்கள் வீட்டில் இருக்கும் நேரத்தைக் குறைத்தேன். “வீட்டுக்குப் போ ராஜா – இல்லேன்னா அம்மா தினேஷைக் காணோமேன்னு அழுவாங்க” நான் சொல்வதை குழந்தை நம்பவில்லை என்பது தெரிந்தது.

பின் அடுத்தடுத்த வகுப்புகள். பையனுக்கு அதிகதிக வீட்டுப்பாடங்கள். கராட்டே, வாலிபால் பயிற்சிகள். அதே குடியிருப்பு வளாகத்தில் சற்றே பெரிய வீட்டுக்கு அந்தக் குடும்பம் குடிபெயர்ந்தது. அடுத்த இரண்டு வருடங்களில் நான் வீடு மாறினேன்.

அவர்களின் வேலை மும்முரத்தில் அந்தச் சிறுவர்கள் என்னை மறக்க, என் வேலை மும்முரத்தில் நான் அவர்களை, சில சமயம் பிரக்ஞாபூர்வமாகவும், சில சமயம் பிரக்ஞையற்றும், மறக்க _

காலம் எபொழுதும்போல் அதன்பாட்டில் போய்க்கொண்டிருக்கிறது.

 

*

 

 

 

 

 

 


No comments:

Post a Comment