LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Monday, December 1, 2025

சந்திரமுக சகமனுஷி - சிறுகதை - அநாமிகா

 சிறுகதை

 சந்திரமுக சகமனுஷி

_ அநாமிகா

(*திண்ணை இணைய இதழில் வெளியானது)


  நீண்ட நேரமாக அந்த நடைவழி சுவர் ஒரமாகவே நின்றுகொண் டிருந்தாள். பெண் என்றும் சொல்ல முடியாத பெண்மணி என்றும் சொல்ல முடியாத 30 வயதின் விளிம்பைத் தொட்டிருப்பவளாகத் தோன்றியது, கதையில், கவிதையில் ,நிலா முகம், என்று வாசிக்கநேரும்போதெல்லாம் மனதில் அறிவுபூர்வ, தர்க்கபூர்வ சிரிப்பாய் ஒன்று தோன்றும். அதெப்படி அத்தனை திருத்தமான வட்டமாய் ஒரு முகம் இருக்க முடியும்? அதுவும், நிலவின்இரண்டறக் கலந்த’ அம்சமான கறையும் இருக்க வேண்டுமே - அதுவும் அழகா என்ன....’

அறிவு என்பது எல்லாவற்றின் சகலவிதமான சாதிப்பாடுகளுக்கும் தன்னை திறந்துவைத்திருப்பது. இறுக மூடிக்கொண்ட நிலையில்இதுதான், இது மட்டும்தான் இங்கே சாத்தியம்; சாத்தியமாகும்; சாத்தியமாக வேண்டும்’ என்று மண்டையின் உள்ளெங்கும் கணமேறி அதன் விளைவாய் இறுதியில் கவிழ்ந்தே யாகவேண்டி ருப்பதா அறிவு....

 

  ”ஒரு சேர், இல்ல, ஸ்டுல் தரவா உட்காந்துக்க?”

 சட்டென்று முகத்தில் நெகிழ்வு ததும்ப என்னை நோக்கித் திரும்பி புன்சிரித்தாள். நிலவின் கறை போல் இடது கன்னத்தில் தேமல் படலம் இருந்தது போல் தோன்றியது. நடைவழியின் இந்த முனையில் இருந்த எங்கள் வீட்டில் இருந்து அந்த முனைக்கு அருகில் இருந்த அவளை பாதி நிஜ உருவாகவும் பாதி நிழல் உருவாகவும்தான் காண முடிந்தது அவள் புன்சிரித்தபோது வரிசைப்பற்கள் ஜொலித்தன. A THING OF BEAUTY IS A JOY FOR EVER’ என்ற வரி இருந்தாற் போலிருந்து ஞாபகம் வந்தது.

  ”பரவாயில்ல, வேண்டாம்மா”

  ”ரொம்ப நேரமா நிக்கிறீங்களே....”

  ”பரவாயில்லீங்கம்மா”, என்று மீண்டும் அதே  புன்சிரிப்போடு கனிவாய் மறுத்து மறுபுறம் திரும்பி, கால்மாற்றி நின்று கொண்டாள்.

  அந்தப் பக்கமாக வந்து செக்யூரிட்டி சிவநாதன் மெல்லிய குரலில் என்னிடம் கூறினார்: “வேலையிலிருக்கையில சித்தாள் உட்காரக் கூடாதுமா - மேஸ்திரி கோவிச்சுக்கவாரு”

  ’அதற்காக எத்தனை நேரம் இப்படி கையில் சிமெண்ட் சட்டியோடு கால் கடுக்க நின்றுகொண்டிருப்பது மாதவிலக்கு நாட்களிலுமா...? அந்தி சாய்ந்து வீடு திரும்பிய பின் கணவருக்கும், குழந்தை களுக்கும், குடும்பத்தைச் சேர்ந்த வேறு உறுப்பினர்கள் இருப்பின் அவர்களுக்குமாக சுடச்சுட சமைத்துப்போட்டு.... இரவில் கணவன் தினமும் உடலுறவுக்குக் கட்டாயப்படுத்துவானோ.... சே, ஏன் எல்லாவற்றையும் எதிர்மறையாகவே எண்ணவேண்டும்? வீதி யின் இருமருங்கிலும் எத்தனை சுடச்சுட பிரியாணி _ பரோட்டா கடைகள்! கணவன் எல்லோருக்குமாக அன்போடு வாங்கிவரக் கூடும்... நாளும் உழைத்துக் கனிந்த கட்டுடல்களாக இருக்கும் கணவனும் மனைவியும்செம்புலப் பெயனீர்போல அன்புடை நெஞ்சமும் தேகமுமாக கூடலில் திளைக்கக்கூடும்... அப்படியே இருக்கட்டும்.....’

அவள் இன்னமும் நின்றவாறிருந்தாள்.  அவ்வப்போது கால் மாற்றிக் கொண்டபடி. நான்கு மாடிக் கட்டிடத்தின் மேலடுக்கு சாரத் தில் இருந்து மேஸ்திரி சிமெண்ட் நிரம்பிய சட்டியை அனுப்பச் சொல்லிக் கேட்டால்கூட பரவாயில்லை என்று தோன்றியது....

இப்போதெல்லாம் சிறிது நேரம் அப்படியே நின்றுகொண்டிருந் தால், அல்லது, தெருவின் முனைவரை நடந்தால் கால்கள் மரத்துப்போய், மிதப்பது போல் தள்ளாட ஆரம்பிக்கிறது. அடுத்த அடி எடுத்துவைத்தால் அதல பாதாளத்தில் விழுந்து விடுவது போல் உணர்வு. எதையாவது பிடித்துக்கொள்ள வேண்டும், எங்காவது அமரவேண்டும் போல் ஒரு பரிதவித்து; இயலாமை. SCIATICA NERVE PROBLEM என்றார் மருத்துவர். பின்னால் முதுகுத்தண்டின் கீழிருந்து ஆரம்பித்து, கிளை பிரிந்து இரண்டு பின்தொடைகள் வழியாய் நீண்டு பாதங்கள் வரை படர்ந்திருக்கும் பெரிய நரம்பு மண்டலமாம்... இதுவரை கேள்விப்பட்டதே யில்லை. இந்த நரம்பில் பிரச்சனை என்றால் ரத்த ஓட்டம் கால்களுக்கு செல்வதில் தடங்கல் ஏற்படுமாம் விட்டமின் D3 குறைவாம். ஸியாட்டிக்காவா, ஸ்கியாட்டியாக்காவா? கூகுள் ஸியாட்டிக்கா என்று தெளிவுபடுத்தியது.

 பல நாட்களுக்குப் பிறகு மருத்துவரிடம் சென்றதில் அவர் படுக்கச் சொல்லி காலை உயர்த்தச் சொன்னபோது புடவை கட்டிக்கொண்டி ருந்த கால் கூசியது. பாவம், அவர் பக்கவாட்டில்தான் நின்று கொண்டிருந்தார். இரண்டு மூன்று மாதங்களுக்கு வெளியே எங்கும் தனியாக நடந்து செல்ல வேண்டாம் என்றவர் சில மாத்திரை மருந்துகளை எழுதித்தந்தார். ’மருத்துவர் முன்னிலை யில் நாம் முழுமையான கையறுநிலையில் இருக்கிறோம் என்று முன்பு ஒரு நண்பர் கூறியது மிகவும் உண்மைதான்... என் உடலைப் பற்றியே எனக்கு பெரிதாக ஒன்றும் தெரியாமலிருப்பது, என் உடலே என் கட்டுக்குள் அடங்காமல் இருப்பது எத்தனை நிராதர வான நிலை... கால்களின் வலி வழக்கம்போல் ‘வலி மட்டுமே அவரவருக்கேயானது; பங்குபோட முடியாதது’ என்று நினைக்கச் செய்தது.  

’மருத்துவர் கூறியது போல் இது தற்காலிகமானதுதானா...? அல்லது வயதின் காரணமான NEW NORMALஆ..? போகப்போகத் தெரியும்.... பூவின் வாசனை இயல்பே போல் வாடி வதங்கலும் இயல்புதானே என்று மனம் தத்துவம் பேசும்போதெல்லாம் கூடவே எதிரொலிக்கிறது ‘EASIER SAID THAN DONE’.... மனம் ஒரு மாபெரும் சொற்களஞ்சியம்... நினைவகராதி... நீள்பயண வழித்தடங்களின் அகழ்வாராய்ச்சித் தளம்.... ஆங்காங்கே எல்லாமேBERMUDA TRIANGLE’ போல ஏதோ ஒன்றில் மாயமாகிவிடக்கூடும்....’

 அம்மா _”

 அழைப்பு நினைவோட்டத்தைக் கலைக்க, திரும்பிப் பார்த்தேன். அந்த சந்திரமுக சக மனுஷிதான்! தயங்கித்தயங்கிக் கேட்டாள்: “ “அம்மா,கடுகு, உளுத்தம்பருப்பு சீரகம்லாம் போடறாப்பல ரெண்டு மூணு சின்ன பிளாஸ்டிக் டப்பி தாங்களேன்”

 கைவசம் ஒரு பிளாஸ்டிக் அஞ்சறைப்பெட்டி தான் இருக்கிறது அங்கேயிங்கே தேடிப் பார்த்தால் அவள் கேட்டது மாதிரி சில குட்டி டப்பிகள் கிடைக்கலாம்.

“நாளைக்கு வாங்களேன் - தேடிப்பார்த்து எடுத்துவக்கறேன்” என் றேன் சந்திரனுக்கு அன்பளிப்பு தரப் போகும் சந்தோஷத்தில் மனது நிறைந்து நிகழ்ந்தது

 மறுநாள் தயாராக சில குட்டி டப்பிகளை எடுத்துவைத்திருந்தேன் அவள் வரவில்லை. அதற்கு அடுத்த நாளும்.இல்லை’ என்று சொல்வதை அப்படிச் சொன்னதாக அர்த்தப்படுத்திக்கொண்டிருப் பாளோ... அதனால் தான் அவள் முகம் அப்படி ஏமாற்றத்தை மூடுமந்திரமாய் வெளிப்படுத்தியதோ... அத்தனை நேரம் நின்று நின்று உடம்புக்கு முடியாமல் போய்விட்டதோ... எத்தனை நம்பிக்கையோடு என்னிடம் கேட்டாள்....

 நான் இருப்பது வாடகை வீடு என்று அவளுக்குத் தெரிய வழி யில்லை.வெள்ளையாக இருப்பவர்கள் எல்லோருமே பணக்காரர் கள் என்று நினைப்பவர்களே அதிகம்’ தாத்தா இருபது வருடங்க ளுக்கு முன் 103 வயதில் இறந்தபோது அவரிடம் ஆஸ்தி என்று நயாபைசா கிடையாது அதற்கு முன் திருவல்லிக்கேணி ஆலங் காத்தாப்பிள்ளைத் தெருவுக்கு அருகிலிருந்த மூத்திர சந்து வாடகை வீட்டில் இருந்தபோதெல்லாம் ஆறு குழந்தைகளைப் படிக்க வைக்க ஆகும் செலவுக்கு, மாதாந்திர வீட்டுச்செலவுக்கு என அதிகாலை 4:30 மணிக்கு தலையில் முண்டாசு கட்டிக் கொண்டு பால் வாங்கச் செல்லும்போது அப்படியே அங்கே உள்ள சில வீடுகளின் கதவுகளைத் தட்டிக் கடன் கேட்பது அவருடைய தினசரி வாழ்க்கையின் தவிர்க்கமுடியாத அங்கமாக இருந்தது.  ஆனால்,  வெள்ளைத்தோலர்களிலும் வர்க்க பேதங்கள் உண்டு; செல்வந்தர்க ளிலும், கடுமையாக உழைத்து சம்பாதித்து சொத்து சேர்த்தவர்கள்,  ஏழை மக்களின் பணத்தை சுருட்டிக்கொண்டு, தில்லுமுல்லு செய்து, சக மனிதர்களைச் சுரண்டி சொத்து சேர்த்த வர்கள் என இரண்டு வகை உண்டு... ஆனால், இந்த பேதங்களைக் கணக்கிலெடுத்துக்கொள்ளாமல் மட்டையடி அடிப்பதுதான் இன்றைக்கு TRENDING ஆகிக்கொண்டேபோகும் அணுகுமுறை....

செக்யூரிட்டியிடம் கேட்டபோது கூறினார்: ”இங்க அவங்க வேலை முடிஞ்சிடுத்தும்மா – இனிமே ஏன் வரப்போறாங்க? சாரக்கட் டெல்லாம் நேத்தே பிரிச்சாச்சே – பாக்கலையா?”

 

***

 

No comments:

Post a Comment