பெர்ட்ராண்ட் ரஸ்ஸல் - மகிழ்ச்சியைக் கையகப்படுத்துதல் - தமிழில் லதா ராமகிருஷ்ணன் -
அத்தியாயம் 3
தான் தப்பிக்க வழியே இல்லாத ஓர் இயந்திரநுட்பத்தின் பிடியில் சிக்கிக் கொண்டிருக்க வில்லை. மாறாக, தம்மை முன்னேற்றம் அடையச் செய்ய வழியற்ற ஒரு உடற்பயிற்சி
இயந்திரத்தின் மீது தாமே விரும்பித் தங்கியிருக்கிறார்கள் என்பதை அவர்கள் உணர்வதேயில்லை. காரணம் அது தம்மை மேம்பட்ட நிலைக்கு உயர்த்துவதில்லை என்பதை அவர்கள் கவனிப்பதில்லை. இங்கே நான் தொழில்துறையில் ஏற்கனவே மேற்படிகளில் இருப்பவர்களை பற்றித்தான் சிந்தித்துக்கொண்டிருக்கிறேன். ஏற்கனவே நல்ல வருமானம் ஈட்டிக்கொண்டிருப்பவர்கள், அவர்கள் மனம் வைத்தால் தங்களிடம் இருப்பதைக்கொண்டு வாழ முடிந்தவரைப் பற்றியே இங்கே நான் பேசுகிறேன். ஆனால், அப்படி வாழ்வது அவர்களுக்கு அவமானகரமான விஷயமாகத் தோன்றும். எதிரிப் படையின் முன்னிலையில் தங்களுடைய ராணுவத்தைக் கைவிட்டு ஓடிவிடுவதைப் போல் தோன்றும். ஆனால் அவர்கள் தங்களுடைய வேலைகளால் என்ன பொதுநல காரியத்தைச் செய்கிறார்கள் என்று அவர்களைக் கேட்டால் விளம்பரங்களில் கடுமையான
வாழ்க்கை குறித்துக் காணப்படும் வழக்கமான வாசகங்களைப் பேசிமுடித்த பின் எந்தவொரு
பதிலும் அவர்களுக்கு இருக்காது.
அத்தகையதொரு மனிதனின் வாழ்க்கை எப்படியிருக்கும் என்று எண்ணிப் பாருங்கள். அவருக்கு ஒரு அழகான வீடு இருக்கும் என்று நாம் அனுமானித்துக்கொள்ளலாம். மனைவியும் குழந்தைகளும் இருப்பார்கள். அவருடைய குடும்பத்தினர் உறங்கிக் கொண்டிருக்கும் காலைவேளையில் அந்த மனிதர் சீக்கிரமாக எழுந்துகொண்டு தனது அலுவலகத்திற்கு விரைகிறார். அங்கே அவருடைய கடமை ஒரு மகத்தான நிர்வாக அதிகாரியாக தனது தகுதித் திறனாற்றல்களை வெளிப்படுத்துவது. அவர் ஒரு இறுகிய முகவாயைத் தரித்துக்கொண்டு திட்டவட்டமான தொனியும் தோரணையுமாய் உறுதியாகப் பேசி எல்லோரையும் கவரும்படியான - அலுவலக கடைநிலைப் பணியாள் தவிர்த்து - அதற்கென கணக்காக திட்டமிடப்பட்ட ஒருவகை விவேகமான தோற்றத்துடன்
இருப்பதை வழக்கமாக்கிக்கொள்வார். அவர் கடிதங்களைச் சொல்லச்சொல்ல
உதவியாளர் எழுதுகிறார்; அவர் வர்த்தகச்சந்தையை கவனமாகப் பார்க்கிறார். ஏதாவது ஒரு வர்த்தக ஒப்பந்தத்தை செய்துகொள்ளப்போகும் அல்லது செய்துகொள்ள விரும்பும் நபருடன் மதிய உணவு உட்கொள்கிறார். பல முக்கியமான நபர்களுடன் தொலைபேசியில் உரையாடுகிறார். இதேவிதமான நியமங்களுடன் அவருடைய மதியம் கழிகிறது. இரவு சாப்பாட்டுக்கு உடைதரிக்கும் நேரத்தில் சோர்வாக வீடு திரும்புகிறார். உணவு மேஜையில் அவரைப் போன்று களைத்து வீடு திரும்பும் வேறு சிலரும் தங்களோடு உணவருந்தும் பெண்களின் – அவர்கள் களைத்திருக்க எந்தக் காரணமும் இல்லை - வருகையும் அருமையும் தங்களை மகிழ்விப்பதாக பாசாங்கு செய்யவேண்டும். இந்தச் சடங்கு எத்தனை நேரம் நீடிக்குமோ – சொல்லமுடியாது. எப்போது தப்பிக்க முடியுமோ தெரியாது. அதை முன்னூகிக்க முடியாது. இறுதியில் ஒரு வழியாக அவர் தூங்குகிறார். சில மணி நேரங்கள் இறுக்கம் தளர அவர்
இளைப்பாறுகிறார்.
.jpg)
No comments:
Post a Comment