சரிநிகர்சமானமாய்
பீடங்களில்தான் எத்தனையெத்தனை வகைகள்!
வெளிப்படையான பீடங்கள் தகதகத்தொளிரும்
தங்கத்தால் செய்யப்பட்டிருக்கும்
அதில் ஆரோகணித்திருப்பவரின் அகங்காரமும்
அடங்காப்பிடாரித்தனமும்
அராஜக அட்டூழியங்களும்
அப்பட்டமாய்க் காணக்கிடைக்கும்.
அதைக்கண்டு பிரமித்துப்பார்ப்பதும்
பயப்படுவதும்
ஒதுங்கிப்போவதும்
எளிது.
புல்நுனிப்பீடங்களும் உண்டு
காற்றின் கனிவோடு நம்மைக் கைப்பிடித்து அழைத்துச்செல்லுமவை
வெகு கவனமாய் நம்மை
விருப்பத்தோடு மண்டியிடவைக்கும்.
நம் விடுதலைக்காகக் குரல்கொடுப்பதாய் அவை
நம்மை நம்பச்செய்து
நடக்கமுடியும் தனியாக என்பதையே மறக்கச்செய்து
நீளும் அவர் கையைப் பெருவரமாகப் பற்றிக்கொள்ளச் செய்யும்.
அந்தக் கை இழுத்த இழுப்புக்கெல்லாம் போகச்செய்யும்.
”நீ பரிதாபத்திற்குரியவள் நீ பலியாடாக்கப்பட்டவள்
(நாம் பரிதாபத்திற்குரியவர்கள் நாம் பலிகடாவாக்கப் பட்டவர்கள் )
என்று சொல்லிச்சொல்லியே
நான் கருணைமிக்கவன், நான் உனக்கு சாபவிமோசனம் தருபவன்
(நாங்கள் கருணைமிக்கவர்கள், நாங்கள் உங்களுக்கு சாபவிமோசனம் தருபவர்கள்)
என்று தன் மேலாண்மையை உறுதியாய்
நிறுவிக்கொள்ளும்.
அதுவேயாகுமாம் திட்டவட்டமாய்
சக கவிஞரைப் பாலின அடைமொழிக்குள்ளிட்டுக்
கட்டுடைத்தலும்.

No comments:
Post a Comment