கவியும் கவிதையும்
’முன்னாடி’ யென்றொருவர் எழுதியதைப் பரிகசித்து மூன்று பக்கங்கள் எழுதியவர்
’பின்னாடி’ யென்றொருவர் எழுதியதைப் பத்து பக்கங்கள் பகடி செய்தபின்
’அன்றொருநாள்’ என்று முன்னாடி யொருவர் எழுதியதையும்
’இன்றொரு நாள்’ என்றொருவர் பின்னாடியெழுதியதையும்
எண்ணியெண்ணிச் சிரித்துக்கொண்டேயிருக்கிறார்.
ஓடி யோடி தேடித்தேடி யிளைக்கும் மனதை ரோடுரோடாய் ஆடியாடி என்றவர் கலாய்ப்பதைக் கேட்டு
இதில் சிரிப்பதற்கு என்ன இருக்கிறது என்று கேட்க நினைத்தும் நினைக்காமலும்
இன்னுமின்னுமென சிரித்துக்கொண்டிருக்கிறார்கள் இவர்களுமவர்களுமெவர்களும்.
கண்ணாடிவீட்டுக்குள்ளிருந்து கல்லெறிந்துகொண்டிருக்கிறவரைக்
கவலையோடு பார்த்துக்கொண்டிருக்கின்றன
சொற்களும்
கவிதையும்.

No comments:
Post a Comment