வீரவணக்கம்!
போர்க்களமென்ற திட்டவட்டமான நிலவரையறை களில்லாமல்
நியதிகளில்லாமல், நெறிகளென்று எதுவுமே யில்லாமல் _
காலாட்படை, குதிரைப்படை, தேர்ப்படையென்று விதவிதமாய் காசைக்கொண்டு கட்டமைத்த படைகள், வியூகங்கள், ஆயுதங்களைக் கைக்கொண்டு _
அறவான் அப்பிராணியாய் போய்க்கொண்டிருப்போர்தம்
முதுகையே மார்பாக்கி மூர்க்கமாய் குத்திக்கிழித்து _
மன்னர் மாமன்னர் மகாசக்கரவர்த்தியாய் முடிசூடிக்கொள்ளும் அற்பப்பதர்களை அடித்து வீழ்த்தி
அதிகம் பதறச்செய்யுமோர் வீரனை
வெள்ளித்திரையிலோ சின்னத்திரையிலோ பார்த்தாலே
விஸிலடிக்கத்தோன்றும்; மனம் விகசித்துப்போகும்!
நாம் வாழுங்காலத்தே நகமும் சதையுமாய்
நம்மைப்போல் ஒருவரை யத் திறமா யிங்கே
காணக்கிடைப்பதொரு நல்வினையாக.....
அன்னார் பெயர் விக்கிரமனோ வேதாளமோ ஆலாலசிங்கமோ ஆதித்தநல்லனோ…..என்னவாயிருந்தா லென்ன….!
’நாமார்க்கும் குடியல்லோம் நமனை யஞ்சோம்’ என
நியாயத்தின் பால் நின்று, அக்கிரமக்காரர்களை யெவர் எதிர்த்தாலும்
அவர் வணக்கத்திற்குரியவர்!
இறுதிவார்த்தை யெனதென்ற மமதையில் அரியாசனத்திலிருக்கும்_
எதிர்க்கத் துணிபவரை நிலவறையிலடைத்து, அல்லது
கழுவேற்றி அல்லது கூலிப்படையை ஏவி நையப்புடைத்து
கைகாலைக் காணமலாக்கி, சித்திரவதை செய்தபடி,
சிரத்சேதம் செய்தபடியிருக்கும் _ கொடுங்கோலனைப் பார்த்து
சரிசரியெனத் தலையாட்டாமல், சிரி சிரியென
வயிறுவலிக்கச் சிரிப்பதோடு மட்டுமல்லாமல் _
இறுதித்தீர்ப்பு கொடுங்கோலனுடையதாக இருக்கலாகாது
நியாயத்திற்காக நிற்கும் ஒரு சாதாரணனுடையதே அது
என நிறுவ பகலும் இரவும் அழுக்குப்பழிச் சேறுதாங்கி
வழுக்குப்பாறை பல விழச் செய்தும் தளராமல் _
ஏழு கடல் ஏழு மலைகளைத் தன்னந்தனியாய்க்
கடந்துபோய்க்கொண்டிருக்கும் சகவுயிரைக் காண
என்ன தவம் செய்தனையோ என் நெஞ்சே! என் நெஞ்சே!
No comments:
Post a Comment