LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Sunday, March 9, 2025

அலைபேசி - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 அலைபேசி

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)
ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்த அலைபேசிக்குள் சிக்கிக்கொண்டுவிட்ட
சில ‘மிஸ்டு கால்கள்’ முணுமுணுக்கத் தொடங்கின.

“என் விளம்பர வாசகங்களுக்கு வழிவிடலாகாதென்றே அலைபேசியை இந்த நேரமாய்ப் பார்த்து அணைத்துவைத்திருப்பாள்” என்று
001 2 000 என்று நீளும் எண்ணிட்ட அழைப்பு குறைப்பட்டுக்கொள்ள _

“சமத்துவம் பற்றிய எனது கொள்கை முழக்கத்தைக் கேட்கப்பிடிக்காமல்தான்
சட்டென்று அணைத்திருப்பாள்” என்று
ஆயிரம் ஏக்கராக்களுக்குக் குறையாமல் அந்த குடிசைவாழ்ப்பகுதிக்கு அருகில் மாளிகைகளும் பிரம்மாண்ட மளிகைக்கடைகளுமாக கொழித்திருக்கும் கட்சியின் தலைவருடைய பதிவுசெய்யப்பட்ட குரலில் புகார் கூறியது _
0003 என்று முடியும் எண்.

“சாப்பிட்டுமுடித்த பின் இன்னும் மெல்ல ஏதேனும் கிடைக்குமா என்று நான் நம்பிக்கையோடு சுழற்றும் சில பல அலைபேசி எண்களில் இவளுடையதும் ஒன்று.என்பதைக் கண்டுகொண்டவளல்லவா?” என்று
கோபத்தோடு கூறியது இன்னொரு எண்.

மஸாஜ் செய்யவேண்டுமா என்று கேட்கும் எண் 9453--------------32;
ஆண் நண்பர்களைப் பெற ஆசையாயிருக்கிறதா என்று
ஆசையாசையாகக் கேட்கும் 78456------0 எண் ;
ஆண்டுகள் இருபதுக்குப் பின் திடீரென்று
மீண்டும் தொடர்புகொண்டு
என் அரிய நேரத்தை வீணடிக்க
நெருங்கிய நட்பினர் பாவனையை தாங்கிவரும்
999555----எண்ணின் அழைப்புகள் குறைந்தபட்சம் இரண்டு….

'ஆன்' செய்யும்வரை அலைபேசிக்குள்ளேயே குந்திக்கொண்டிருப்பவர்கள்
ஆன் செய்தவுடன் தொப் தொப்பென்று வேகமாய் குதிப்பார்கள்.

அவர்களிடமிருந்து தப்பிக்கும் வழியறியாமல்
ஆஃப் பொத்தானை அழுத்தியும் அழுத்தாமலும் அலைக்கழிந்துகொண்டிருக்கும் மனம்…..

No comments:

Post a Comment