LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Wednesday, March 12, 2025

சொல்வதும் செய்வதும் - லதா ராமகிருஷ்ணன்

 சொல்வதும் செய்வதும்

- லதா ராமகிருஷ்ணன்

//2017, MARCH 12 இல் வெளியானது - மீள்பதிவு//

Beauty lies in the eyes of the beholder(அழகு என்பது பார்ப்பவர் கண்களில் இருக்கிறது). மிகவும் உண்மை. அதேசமயம், அழகு என்பது உருவேற்றப்பட்ட ஒன்றாக இருக்கிறது என்பதும் அதேயளவு உண்மை.

வெள்ளையாக இருப்பதுதான் அழகு என்று குழந்தை முதலே திரும்பத்திரும்ப உருவேற்றப்பட்டுவருகிறது.
இது குறித்து கண்டனம் தெரிவிப்பதோடு நின்றுவிடாமல் சில முயற்சிகளையும் மேற்கொள்ளவேண்டியது முக்கியம்.
ஒளி-ஒலி ஊடகங்களின் உரிமையாளர்கள் இந்த நோக்கில் முனைப்பாய் செயல்பட முடியும்; செயல்படவேண்டும். நிறம் சார்ந்து உயர்வு, தாழ்வுகளைக் கண்டித்துவருவோர் குறைந்தபட்சம் தங்கள் ‘சானல்’களிலாவது அந்த ’உயர்வு-தாழ்வு’க் கண்ணோட்டங்களை வலியுறுத்தும் விளம்பரங்களை வெளியிடாமலிருக்கலாம்.
நடிகை ராதிகா இடம்பெறும் ‘அத்திகா’ gold விளம்பரத் தில் அவரை வெள்ளையாகக் காட்ட எதற்கு அத்தனை பிரயத்தனம்? அரசியலில் உள்ளவர்களிலும் நிறைய பேர் இப்படி ‘நிறம் மாறவேண்டிய’ தேவையில்லையென்றே தோன்றுகிறது.
தந்தி தொலைக்காட்சியில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக வரும் இளம் பெண் ஒருவர் (வர்ஷினி என்பது பெயரின் பின்பாதி. முழுப்பெயர் சட்டென்று நினைவுக்குப் பிடிபடவில்லை) உதட்டுச் சாயம் கூடப் பூசாமல் இயல்பாகத் தோன்றுவது வரவேற்கத்தக்கது. மக்கள் தொலைக்காட்சியிலும் அப்படி சிலரைப் பார்க்க முடிகிறது. இந்தப் போக்கு இன்னும் பரவலாக இடம்பெறவேண்டியது அவசியம்.
நந்திதா தாஸ் போல் இயல்பான தேன்நிறத்தில், அல்லது திராட்சை நிறத்தில் பெண்கள் (ஆண்களும்) ஏன் விளம்பரங்களில் இடம்பெறலாகாது? தொலைக்காட்சி அலைவரிசைகள் இந்த ‘நிறம் சார் சமத்துவத்தை’ ஒரு தொழில்முறைக் கோட்பாடாகக் கடைப்பிடிக்கலாமே.
இதில் இன்னும் மோசம் – ‘சன்’ குழுமத் தொலைக்காட்சி களில் ஒன்றில் இடம்பெறும் குட்டீஸ்-சுட்டீஸ்’ என்ற குழந்தைகளுக்கான நிகழ்ச்சியை நடத்துபவர் (அந்த நிகழ்ச்சியில் குழந்தைகளிடம் வேண்டாத பல கேள்விகள் கேட்கப்படுகின்றன என்பது ஒருபுறமிருக்க - உதாரணமாக – உனக்கு அம்மா பிடிக்குமா, அப்பா பிடிக்குமா, உன் அப்பா உன் அம்மாவை அடிப்பாரா? அல்லது உன் அம்மா உன் அப்பாவை அடிப்பாரா?) திரும்பத் திரும்ப “என்னை மாதிரி கருப்பா?”, ”என்னை மாதிரி ரொம்பக் கருப்பா?” என்று, நிகழ்ச்சியில் இடம் பெறும் குழந்தைகளிடம் கேட்பதை வழக்கமாகக் கொண்டிருப்பது. இத்தகைய சூழலில் வளரும் குழந்தைகள் ‘வெள்ளைநிறம்தான் அழகு’ என்ற எண்ணத்தையே வளர்த்துக்கொள்ளும்.
சின்னத்திரை சீரியல்ராணி என்று சீராட்டும் பாராட்டும் பெற்றுவரும் நடிகை ராதிகாவின் உலகப்புகழ் வாணி-ராணி மெகாதொடர் (இதை ‘ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்’ என்று அனைத்து சீரியல்களுக்கும் பொதுவாகவும் கொள்ளலாம்) வழக்கறிஞர்களையும், காவல்துறையின ரையும் எத்தனை முட்டாள்களாகக் காட்டமுடியுமோ அத்தனை அறிவிலிகளாகச் சித்தரிக்கிறது. (குடும்பத்தாரை எத்தனை வில்லத் தனமாகக் காட்டமுடியுமோ அத்தனை வில்லத்தனமாக என்று சொல்லிச் சொல்லி அலுத்துவிட்டது).
இந்தத் தொடர்நாடகத்தில் இடம்பெறும் ஒரு படித்த இளம்பெண் கதாபாத்திரம், ஆஸ்திரேலியாவில், அவருடைய கணவர் கடத்தப்பட்ட நிலையில் அன்று இரவு முழுவதும் சாலையிலேயே குளிரில் முடங்கி அமர்ந்திருக்கிறாள். அரைகுறை ஆங்கிலம் தெரிந்திருந் தால்கூட அல்லது சைகையிலேயேகூட யாரிடமாவது தன் நிலையை எடுத்துச்சொல்லி உதவிகோர முடியும். ஆனால், அவள் அதைச் செய்வதில்லை.

ஆஸ்திரேலியாவில் மக்கள் ஆங்கிலம் பேசுகிறார்களா அல்லது ஸ்பானிய மொழி அல்லது சீன மொழி மட்டுமே பேசுகிறார்களா, தெரியவில்லை. (81% மக்கள் ஆங்கிலம்தான் பேசுகிறார்கள் – ஆஸ்திரேலிய – ஆங்கிலம் – என்று விக்கீபீடியா தெரிவிக்கிறது).

பகுத்தறிவு என்பது கடவுளை மறுப்பது மட்டும்தானா? பேயை வரவேற்கலாமா? பல முக்கிய தொலைக்காட்சி சானல்களில் பேய் பிசாசு பாம்பு தொடர்கள் வெகு முனைப்பாக இடம்பெற்று வருவதைப் பார்க்கும்போது இந்தக் கேள்வி எழுவதைத் தவிர்க்கமுடியவில்லை.

(குடி குடியைக் கெடுக்கும் என்று பேருக்குப் போடுவதுபோல் ‘நாங்கள் இந்த பகுத்தறிவுக்கொவ்வாத கருத்துகளை ஆதரிக் கவில்லை என்று ஒரு வரியை அவ்வப்போது திரையில் ஓடவிட்டுக்கொண்டே திரும்பத்திரும்ப பேய்க்காட்சிகளைக் காட்டிக்கொண்டேயிருக்கிறார்கள்.

ஒளி-ஒலி ஊடகங்களின் அசுர வளர்ச்சியில், அவற்றின் விளம்பரங்கள் – தொடர்களில் வரும் சூப்பர்-மேன், சூப்பர் – வுமன், சூப்பர் – ஹீரோ, சூப்பர் – வில்லன் இவர்களே இனி இளம்பருவத்தினருக்கு( ஏன், முழு வளர்ச்சியடைந்த மனிதர்களுக்குக்கூட) ரோல்-மாடல்களாக இருப்பார்கள், சாதாரண மனிதர்களான பெற்றோர்கள் அவர்கள்மீது தாக்கம் செலுத்த இயலாதுபோகும் என்று பத்துப் பன்னிரெண்டு வருடங்களுக்கு முன்பே ஒரு திறனாய்வாளர் ஒளி-ஒலி ஊடகத்தின் எதிர்மறைத் தாக்கம் குறித்து விரிவாக எழுதியிருந்ததைப் படித்தது நினைவுக்கு வந்தது.





No comments:

Post a Comment