காலவைரஸ்
குனிந்தால் ஸெல்ஃபி
நின்றால் ஸெல்ஃபி
நடந்தால் ஸெல்ஃபி
படுத்தால் ஸெல்ஃபி
பால் குடித்தால் ஸெல்ஃபி
பஸ் பிடித்தால் ஸெல்ஃபி
கிஸ் கொடுத்தால் ஸெல்ஃபி
எனப் பாதையெங்கும் நடுகற்களாய் நட்டுவைத்திருந்தாள்
ஸெல்பிகளை.
முளைவிட்டு விசுவரூபமாய் வளர்ச்சிகண்டு
அவளுடைய வாழ்வின் வரைபடத்தில்
நதிகளாய் நாடுகளாய் மலைகளாய் காடுகளாய்
விலங்குகளாய் மனிதர்களாய்
இடி மின்னல் மழை மேகமாய்
கடிகார முட்களாய்
காத்தாடிமாஞ்சாவாய்
நீத்தார்புகழாய்த் துலங்கிக்கொண்டிருந்தது ஸெல்ஃபி.
’சர்வம் ஸெல்ஃபி மயம்’ என்ற சமகால சுலோகத்தை
அல்பகல் உச்சாடனம் செய்தவாறிருந்தாள் அவள்.
உதடுகளும் பற்களும் நாக்கும் உள்நாக்கும் யாவும்
அடைக்கலம் ஸெல்ஃபிக்குள்.
மடாக்குடிகாரருக்கும் மேலாய்
நடுங்கி உதறும் அவள் கைவிரல்கள்
தடாலெனத் தன் கழுத்துத் திரும்புவதை
ஸெல்ஃபியில் அமரத்துவமெய்தவைக்கும் தவிப்பில்.
திடீரென அலைபேசி பழுதடைந்துவிட்டால் என்செய்வது
என்ற பீதியோடு
அலையாய் அலைந்து ஆயிரத்தேழு ரகக் கைபேசிகளை
வாங்கிக்கொண்டுவந்தாள்
தள்ளுபடியற்ற தள்ளுபடி விலையில்.
அள்ள அள்ளக் குறையாததாய்
அவள் நிரப்பிக்கொண்டவற்றின்
பாரம் தாங்காமல் ஒருநாள் அவையாவும் ஒருசேர
வெடித்துச் சிதறியதில்
வெளியே தெறித்துவிழுந்த ஸெல்ஃபிகள்
வலியையும் பொருட்படுத்தாமல்
விடுதலை நாடி விழுந்தடித்துக்கொண்டு ஓடிவிட்டன.
அலங்க மலங்க விழித்தாள் அவள்.
அடியோடு நிலைகுலைந்துபோனவள்
அனத்திக்கொண்டிருக்கிறாள்:
"எல்லோருக்குமே மறைகழண்டுவிட்டது
என்னைத் தவிர".
No comments:
Post a Comment